
Written by London Swaminathan
Post No. 16,024
Date uploaded in London – 27 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

1
கந்த புராணத்தின் மூலம் எது? அதை எழுதியவர் யார்? அதைத் தமிழ் மொழியில் தந்தவர் யார்?
2
இந்தப் புராணத்தின் முதல் செய்யுள் என்ன?
3
அரங்கேற்றம் செய்யும் பொது எழுந்த ஆட்சேபம்/ எதிர்ப்பு என்ன?
4
அதற்கு அவர் கூறிய விளக்கம் என்ன?
5
இதை நிரப்புக – கந்தப் புராணத்தில் இல்லாதது……………
6
கந்தபுராணம் எவ்வளவு பெரியது?
7
இதை எப்படிப் பிரித்துள்ளார்கள்?
8
கந்த புராணத்தில் சுவையான, அதிசய விஷயங்கள் இருக்கின்றனவா?
9
சைவர்கள் நடத்தும் கூட்டங்களில் நிகழ்ச்சியை முடிக்கும் தருணத்தில் “மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்” என்று பாடி முடிப்பார்கள் ? அது எங்கே உளது ?
10
கந்த புராணம் ஸ்காந்தம் முதலிய நூல்களுக்கும் முன்னதாக முருகன் வரலாற்றைப் பாடியவர் யார் ?
XXXXXXXXXXXXXXXXXXXXXX


விடைகள்
1.ஸ்காந்தம் என்ற பெயரில் வியாசர் எழுதியதைக் கச்சியப்ப சிவாச்சாரியார் தமிழ் நமக்கு கந்த புராணமாகத் தந்தார்
**
2.திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். ……
***
3.காஞ்சீபுரத்தில் கந்தபுராண நூலை அரங்கேற்ற கச்சியப்பர் வந்தபோது முதல் செய்யுளே இலக்கணப் பிழையுடையதென்று அறிஞர்கள் சிலர் ஆட்சேபித்தனர். மறு நாள் விளக்கம் தருவதாகச் சொன்ன கச்சியப்பர் அதற்கான இலக்கண விதியைக் காணாமல் பரிதவித்தார். இரவில் முருகப் பெருமானே கனவில் வந்து வீரசோழியத்தில் அதற்கான விளக்கம் இருப்பதாகச் செய்யுளைக் காட்டியவுடன், மறு நாள் அவர் அதற்கு விளக்கம் தந்து வெற்றி கரமாக அரங்கேற்றினார்.
***
4.திகட சக்கரச் செம்முக மைந்துளான் விளக்கம் :
“திகடச் சக்கரச் செம்முக மைந்துளான்” என்பது கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்த புராண நூலின் முதல் கடவுள் வாழ்த்துப் பாடலின் தொடக்க வரியாகும்.
இதன் பொருள்: திகழ்கின்ற பத்து கரங்களையும் (தசக்கரம்), ஐந்து சிவந்த முகங்களையும் (செம்முகம் ஐந்து) உடைய விநாயகப் பெருமானின் திருவடிகளைப் போற்றுவோம் என்பதாகும்.பாடலின் முதல் வரி விளக்கம்
திகழ் + தச= திகட
5.தமிழில் ஒரு பழமொழி உண்டு: “எந்தப் பொருளும் கந்தப் புராணத்திலே!”
அல்லது
கந்தப்புராணத்தில் இல்லாதது வேறு இந்தப் புராணத்திலும் இல்லை
ஏன் இப்படிச் சொல்லுகின்றனர்?
மஹாபாரதம் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்: இதில் சொல்லாத பொருள் உலகில் இல்லை என்று; அதில் வியப்பில்லை; ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட மஹாபாரதம் உலகிலேயே பெரிய காவியம்; ஆகையால் எல்லாம் இருக்க வாய்ப்புள்ளது. வியாசர் தனது காலத்தில் இருந்த அத்தனை விஷயங்களையும் பாண்டவர் கதைக்குள் அழகுபடப் புகுத்திவிட்டார். அதே போல கந்தப் புராணத்தில் பல உபகதைகளும் உள்ளன ; அளவிலும் பெரியது.
***
6.கந்த புராணத்திலே 10346 செய்யுட்கள் உள்ளன. “காந்தம் என்னும் பெருங்கடல்” — என்று அருளினார். 10,346 பாடல்களை ஆறு காண்டங்களாகவும் 94 படலங்களாகவும் அவர் பிரித்தார். சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஸ்காந்தம் 18 புராணங்களில் மிகப் பெரியது. 81,000 ஸ்லோகங்கள் உடைத்து.
***
7.கந்த புராணத்தில் உள்ள ஆறு காண்டங்கள் :
உற்பத்தி காண்டம், அசுர காண்டம் , மஹேந்திர காண்டம் , யுத்த காண்டம் , தேவ காண்டம், தக்க காண்டம் என்று ஆறு காண்டங்கள்.
இவற்றில் அறுமுகக் கடவுளின் அவதாரம், தேவரை அசுரர்கள் சிறை செய்த வரலாறு, சூரபன்மனை முருகன் வென்ற வரலாறு, வள்ளி, தெய்வயானை திருமணம், முதலியன உடைத்து.
***
8.ஆம். யுத்த காண்டத்தில் 108 பூத கணத் தலைவர்கள் பெயர் உள்ளது. அசுர காண்டத்தில் காச்யபர் உபதேசம், மாயாதேவி உபதேசம், சுக்கிராச்சாரியார் உபதேசம் உள்ளன. கஸ்யபருக்கு மாயைபால் தோன்றிய சூர பன்மன் , வீர வேள்வி செய்து, சிவனிடம் வரம் பெற்று 1008 அண்டங்களை 108 யுகங்களுக்கு ஆள வரம் பெற்றதையும் காணலாம். தட்ச காண்டத்தில், தக்கன் புதல்வர்களை, நாரதர் தவ வழியில் செலுத்தல், ததீசி முனிவர் பதில் கூறல், வீரபத்திரர், பத்திர காளி தோற்றம், யாக சங்காரம் ஆகியன ஆழ, ஊன்றிப் படித்தற்குரியனவாம். கந்தன் தொடர்பான விரதங்களும் நல்ல தகவல் தருவன.
கந்தபுராணத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியை, முசுகுந்த சக்ரவர்த்தி கொண்டு வந்து, திருவாரூரில் பிரதிஷ்டை செய்த வரலாறும் ஆறு மூர்த்திகளை ஆறு ஸ்தலங்களில் பிரதிஷ்டை செய்த வரலாறும் அறிய வேண்டிய விஷயங்கள்.
***
9.வான்முகில்வழாதுபெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம். …..
இது கந்த புராணத்திலுள்ள வாழ்த்துப் பாடல் ; சம்ஸ்க்ருதத்தில் காலே வர்ஷது பர்ஜன்ய என்ற ஸ்லோகத்தையோ அல்லது ஸ்வஸ்திப் ப்ரஜாப்ய என்ற ஸ்லோகத்தையோ சொல்லி வாழ்த்தி முடிப்பது போன்றது இது.
காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ருத்வீ ஸஸ்ய-சாலிநீ |
தேசோயம் க்ஷோப-ரஹிதோ ப்ராஹ்மணா: ஸந்து நிர்பயா: ||
பொருள்
காலே வர்ஷது பர்ஜன்ய: – மேகங்கள் உரிய காலத்தில் சரியான அளவு மழை பொழிய வேண்டும்.
ப்ருத்வீ ஸஸ்ய-சாலிநீ – பூமி எங்கும் பயிர்களும் தாவரங்களும் செழித்து வளர வேண்டும்.
தேசோயம் க்ஷோப-ரஹிதோ – இந்த நாடு எந்தவிதக் கலக்கமும் பயமும் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
ப்ராஹ்மணா: ஸந்து நிர்பயா: – அறிவுடையோரும் ஆன்மீகத்தில் சிந்திப்போரும் அச்சமின்றி வாழ வேண்டும்.
ஸ்வஸ்தி ப்ரஜாப்ய:, பரிபாலயந்தாம்
ந்யாயேன மார்கேன மஹிம் மஹீசா:|
கோ ப்ராம்மணேப்ய: சு பம் அஸ்து நித்யம் ,
லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து
உலகத்திலுள்ள எல்லோரும் சுகமாக இருக்க வேண்டும் என்று மங்களம் பாடி உபன்யாசகர்கள் சொற்பொழிவினை முடிப்பார்கள் . இதையே ஞான சம்பந்தரும்
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே! —என்று பாடினார்.
***
காளிதாசன் என்னும் உலக மகா கவிஞன் குமார சம்பவம் என்னும் நூலில் கந்தனின் பிறப்பை வருணித்தார்; அவர் 2100 ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரமாதித்தன் சபையில் புலவராக இருந்தார் ; அவரது நூல் காரணமாக, பரம வைஷ்ணவர்களாக இருந்த குப்த வம்ச மன்னர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்கந்த குப்தன், குமார குப்தன் என்று பெயர் சூட்டினார்கள்!
–SUBHAM—
TAGS:— கந்தபுராணம், கச்சியப்ப சிவாச்சாரியார், திகடச்சக்கர, ஆறு காண்டங்கள்