
Written by London Swaminathan
Post No. 16,174
Date uploaded in London – 7 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

சங்க காலம் முதல் தற்காலம் வரை மூன்று முதல் ஆறு அவ்வையார்கள் இருந்ததாக நூல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பகுதியில் சங்க கால ஔவையார் பற்றிக் காண்போம்.
1
சங்க கால ஔவையார் எத்தனை பாடல்களைப் பாடினார்?அந்தப்பாடல்கள் எந்தெந்த நூல்களில் இடம்பெற்றுள்ளன?
2
இந்தப் புலவர் ஔவையார் சந்தித்த அல்லது பாட்டிய பெரியோர்கள் அல்லது அரசர்கள் யார் யார் ?
3
நெல்லிக்காயின் மகிமை குறித்து ஆயுர்வேத நூல்கள் விதந்து ஓதுகின்றன. ஆல்பெருனி என்ற யாத்ரீகனும் நெல்லிக்காயைப் புகழ்ந்துள்ளான் ; சுவாமி சிவானந்தாவின் தெய்வ நெறிக்கழகம் ஸ்யவனப் பிராஸ் என்னும் நெல்லிக்காய் லேகியத்தின் புகழைப் பரப்பியது; அவ்வையாருக்கும் நெல்லிக்காய்க்கும் என்ன சம்பந்தம் ?
4
புலவர்ககள் அஞ்சாநெஞ்சர்கள்; எந்த அரசனுக்கும் முன்னால் நின்று உள்ளதை உள்ளபடி சொல்லத் தயங்க மாட்டார்கள் ; இரு மன்னர்களிடையே நடக்க விருந்த போரினை ஔவையார் எவ்வாறு தவிர்த்தார் ?
5
இந்தப் புலவர் பற்றிய முக்கிய நூல்கள் என்ன ?
6
அவ்வைப் பிராட்டி பற்றி பாரதியார் என்ன சொன்னார் ?
7
சங்க காலத்தில் தமிழ் நாட்டில் அவ்வையார் கண்ட அதிசயக் காட்சி எது ?
8
பொகுட்டெழினி குறித்து பாடிய அவ்வையார், பயன்படுத்தும் அருமையான உவமை என்ன ?
9
நாஞ்சில் வள்ளுவன் குறித்து புலவர் என்ன பாடினார்?
10
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (187)– இந்த புறநானூற்று பாடலின் பொருள் என்ன ?
*********************

விடைகள்
1. பாடல்களின் விவரங்கள்:
- புறநானூறு: 33 பாடல்கள்
- அகநானூறு: 4 பாடல்கள்
- நற்றிணை: 10 பாடல்கள்
- குறுந்தொகை: 12 பாடல்கள்
- மொத்தம்: 59 பாடல்கள் (புறத்திணைப் பாடல்கள் 33, அகத்திணைப் பாடல்கள் 26)
****
2.அதியமான் நெடுமான் அஞ்சி; தொண்டைமான் (காஞ்சி அரசன்); சேர, சோழ, பாண்டிய ஆகிய மூவேந்தர்களும் (சேரமான் மாரிவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி) நண்பர்களாக ஒன்றாக அமர்ந்திருந்த அரிய காட்சியைக் கண்டு வியந்து, அவர்களை வாழ்த்திப் பாடியுள்ளார். அதியமான் மகன் பொகுட்டெழினி, நாஞ்சில் வள்ளுவன் பற்றியும் ஔவையார் பாடியுள்ளார்.
***
3.ஔவையாரின் மிக நெருங்கிய நண்பர் மற்றும் கடையேழு வள்ளல்களில் ஒருவர்அதியமான் நெடுமான் அஞ்சி:.ஆவார். இவர் ஔவையாருக்குச் சாகா வரம் தரும் அரிய கருநெல்லிக்கனியைப் பரிசாக அளித்தவர். இவருக்காகவே ஔவையார் அதிக பாடல்களைப் பாடியுள்ளார்.
***
4.அதியமானுக்கும் காஞ்சி அரசனான தொண்டைமானுக்கும் இடையே போர் மூளவிருந்த போது, ஔவையார் தொண்டைமானின் அரண்மனைக்குத் தூது சென்றார். தொண்டைமானின் ஆயுதக் கிடங்கைப் பார்த்து, அவனது போர் ஆசையை அடக்கும் விதமாகச் சாதுரியமாகப் பாடிப் போரைத் தடுத்தார். “அடடா உன்னுடைய ஆயுதக் கிடங்கினக் காட்டினாய்; எல்லாம் புத்தம் புதியனவாக பள பளவென்று இருக்கின்றனவே ; அந்த அதியமான் இருக்கானே; அவன் பல போர்களைச் செய்ததால் எல்லா ஆயுதங்களும் கருத்தும் கறைப்பட்டும் உள்ளன” என்றார் ; தொண்டமானுக்குப் புரிந்துவிட்டது; அதியமான் மாவீரன் பல போர்களில் வெற்றிவாகை சூடியவன்; நீயோ நேற்று முளைத்த காளான்; உனக்கு அனுபவம் கிடையாது என்று அவ்வையார் நாசூக்காக எச்சாரித்ததால் போர் செய்வதைக் கைவிட்டான்.
’இவ்வே
பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே!
அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ! என்றும்
உண்டாயின் பதங்கொடுத்து
இல்லாயின் உடனுண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே! (95)
***
5.ஒளவை வரலாற்றை எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை ’நீதி நூல் திரட்டு’ என்ற நூலின் கண் 1906 -இல் ‘ஒளவையார் சரித்திரம்’ என்ற பெயரால் 78 பக்கங்களில் ஒரு முன்னுரை எழுதியுள்ளார். அது தனிநூலாகவும் வெளிவந்துள்ளது. ’சைவ இலக்கிய வரலாறு’ எழுதிய ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை போன்ற பலர் ஒளவையார்கள் பற்றிய வரலாறுகளை விரிவாகத் தந்துள்ளனர். முனைவர் ந. சுப்பிரமணியன் 1992இல், சங்க இலக்கியத்தில் காணப்படும் 59 பாடல்களையும் உரையுடன் பதிப்பித்து, அதில் சங்க கால ஒளவையின் வரலாற்றை ஆராய்ச்சி முன்னுரையாகத் தந்துள்ளார்.
ராஜாஜி ஆங்கிலத்தில் அவருடைய பாடல்களை மொழிபெயர்த்து சிறிய நூலினை வெளியிட்டார் . டாக்டர் தாயம்மாள் அறவாவாணன் எழுதிய “அவ்வையார் அன்றுமுதல் இன்றுவரை ” (புதுச்சேரி ) என்ற புஸ்தகத்தில் சங்க காலம் முதல் இன்றுவரை குறைந்தது ஆறு அவ்வையார்கள் இருந்தனர் என்று சொல்கிறார்.இறைவனை நாடும் முதிய பெண்களுக்கு ‘அவ்வை’ என்ற பெயர் சூட்டப்பட்டது என்பதை ஆராய்ச்சி மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். இந்திய இலக்கியச் சிற்பிகள் – ஒளவையார்- தமிழண்ணல், © சாகித்திய அக்காதெமி முதல் பதிப்பு 1998- இந்த நூலினை Project Madurai ப்ராஜெக்ட் மதுரை வெப்சைட்டில் படிக்கலாம்.
***
6.”தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஒளவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?” என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், ‘மற்ற செல்வங்களை யெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்’ என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.–[*] பாரதியார் கட்டுரைகள், பக். 160-161
அவ்வையாரை இமிட்டேட் செய்து புதிய ஆத்திச் சூட்டி எழுதியத்திலிருந்து எந்த அளவுக்கு அவ்வாயார் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதையும் அறியலாம் . இன்னொரு பாடலில் “சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல்அமிழ்தம் என்போம்” என்கிறார் பாரதி. ஔவையார் தனது தனிப்பாடலில், “சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்” என்று பாடினார். அதாவது, உலகில் நல்ல காரியங்களைச் செய்யும் கொடையாளிகள் (இட்டார்) மற்றும் செய்யாதவர்கள் (இடாதார்) என இரண்டே சாதிகள்தான் உள்ளன என்று ஔவை கூறினார். தமிழ் மகள் என்று போற்றி அவள் சொல் அமுதம் என்றார் பாரதி.
***
7.சங்க காலத்தில் சோழன் பெருநற்கிள்ளி இராஜசூய யாகம் செய்தான். அப்போது அவ்வையாருக்கு SPECIAL INVITATION ஸ்பெஷல் இன்விடேஷன் — சிறப்பு அழைப்பிதழ் — அனுப்பியிருந்தான் . எல்லோருக்கும் புதிர் போடும் அவ்வையாருக்கு பெரிய புதிர் அங்கே காத்து இருந்தது ; கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளொடு முன்தோன்றிய முத்த குடி தமிழர் இனம் . 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தமிழ் மன்னனை மற்றொரு தமிழ் மன்னன் அடித்துக் கொன்ற அசுரர் இனம். அப்படிப்பட்ட இனத்தைச சேர்ந்த சேர, சோழ , பாண்டிய மன்னர் மூவரும் ராஜசூய யக்ஞ மேடையில் ஒருங்கே அமைந்திருந்தனர். பெரு நற் கிள்ளி வளவனுடன், சேரமான் மாரி வெண்கோவும் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தனர். அதைக் கண்டு வியப்புற்ற ஔவையார் ((உடனே, லண்டனிலுள்ள GUINNESS BOOK OF RECORDS கின்னஸ் புஸ்தக அலுவலத்துக்குப் போன் செய்து, உடனே போட்டோகிராஃபரை அனுப்புங்கள்; அரிய காட்சி ; போனால் கிடைக்காது; பொழுதுவிடிந்தால் இருக்காது என்று சொல்லவே அவர்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு குடுமி பிடிச்சண்டை போட்ட தமிழினத்தின் முதல் ஒற்றுமைப் புகைப்படம் இது என்று வெளியிட்டனர்.;அவ்வையாரும் ஒரு ‘ரிக்கார்ட்’ RECORD இருக்கட்டும் என்று)) புறநானுற்றுப் பாடல் 367-ல் நீங்கள் மூவரும் இன்று போல் என்றும் வாழ்க. உங்களது வாழ்நாள் பெருக வேண்டும். வானத்து மீன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருக வேண்டும். மழையில் உள்ள நீர்த்துளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருகவேண்டும்- என்று வாழ்த்திவிட்டுப் போனார் ஒவ்வொரு தமிழனும் புறனானூறு பாடல் 367-ஐப் படிக்க வேண்டும் .
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா;
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப்
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, 5
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது 10
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த (Brahmins)
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இதுவே: வானத்து 15
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கு மா மழை உறையினும்,
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே! –புறநானூறு 367
***
8.அதியமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியை ஒளவை பாடியனவா கவும் மூன்று பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன. அஞ்சி போலவே அவனும் பேராற்றலும் கொடைத்திறனும் மிக்கவனாகத் திகழ்ந்துள்ளான்.
உமணர்கள் உப்பேற்றிய வண்டிகளை ஓட்டிக் கொண்டு, நெடுஞ்சேய்மைக்குச் செல்வார்கள். எருதுகள் இளமையாய் இருந்து, பண்டம் மிகக் கூடுதலாக ஏற்றி பள்ளம் மேடுகளில் வண்டியை ஓட்டிப் போகும் பொழுது எதுவும் நேரலாம்தானே? அதனால் உமணர்கள் தம் வண்டிகளில் அச்சு மரத்திற்குக் கீழே வேறு ஒரு சேம் அச்சினைக் கட்டி எடுத்துக்கொண்டு செல்வார்களாம். பொகுட்டெழினி தன் தந்தை எழினிக்கு (அஞ்சிக்கு) அத்தகை யவனாக விளங்குகின்றான் என்று மிக அரிய நுட்பமான உவமை ஒன்றைத் தேடிப் பிடித்துச் சொல்கிற ஒளவையின் புலமையும் பட்டறிவும் நம்மை வியக்க வைக்கின்றன. உமணர்கீழ்மரத்து யாத்த சேமவச்சு அன்ன நெடியோய் (புறநானூறு 102) என்பது அவர் வாக்கு. இன்று காருக்குச் சேமச் சக்கரம் (Stepney) தேவைப்படுவதை இது நினைவூட்டுகிறது..
***
9.அஞ்சியைத் தவிர நாஞ்சில் வள்ளுவன் என்னும் குறுநிலத் தலைவனை மட்டுமே ஒளவையார் பாடியுள்ளார். தாம் உண்ண விரும்பிய அடகு (கீரை) உணவுக்குத் துணையாகச் சிறிது அரிசி வேண்டிய பொழுது, நாஞ்சிற் பொருநன் மிகப் பெரிய யானையைப் பரிசளித்தானாம். அவன் என்னை நினையாமல், தன்னை நினைத்துக் கொண்டு இதைச் செய்துள்ளான்’ என வியந்தும் பெரியோர்களிடம் இத்தகைய கொடை மடமும் உண்டு போலும்’ எனப் புகழ்ந்தும் பாடுகின்றார் ஒளவையார் (புறநானூறு 140)
***
10.புறநானூறு 187 பாடற் பொருள் :
நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், தாழ்ந்த நிலமாக (அவலாக) – பள்ளமாக – இருந்தாலும், மேடான நிலமாக (மிசையாக) இருந்தாலும், எவ்விடத்தில் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்வாய், நிலமே !
(ஆடவர் என்பதை மக்கள் என்றும் ஆண்கள் என்றும் பொருள் கொள்ளலாம்) .

–subham—
Tags –சங்க கால, ஔவையார் பாடல்,10 கேள்விகள் ,