
Written by London Swaminathan
Post No.7671
Date uploaded in London – 9 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நாட்டிய தாரகையின் 5 நிபந்தனைகள்; மாந்தோப்பு அழகியுடன் புத்தர் சந்திப்பு (Post.7671)
2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா எப்படி இருந்தது என்பதை சம்ஸ்கிருத நூல்களும், பாலி மொழி நூல்களும் காட்டுகின்றன. இதில் மிகவும் சுவையான விஷயம் மாந்தோப்பு அழகி பற்றிய நான்கு செய்திகளாகும்.
1.அவளுக்கு ஆம்ர பாலி (பாலி மொழியில் அம்பா பாலி ) ‘மாந் தோப்புக்காரி’ என்று பெயர் வந்தது ஏன்?
2.புத்தர் பிரான் ஏன் அவள் வீட்டுக்குப் போய் சாப்பிட்டார்?
3.அவளுடன் ஒரு நாள் படுக்க, அவள் போட்ட ஐந்து நிபந்தனைகள் என்ன?
4.மகத சாம்ராஜ்ய சக்ரவர்த்தி பிம்பி சாரன் அவளுடன் படுக்க செய்த தந்திரம் என்ன?

2600 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் பிரான் அடிக்கடி சென்ற இடம் பீஹார் மாநிலம் ஆகும். அந்த மாநிலத்தில் வைசாலி என்னும் புகழ்மிகு நகரம் சீ ரும் சிறப்புடனும் திகழ்ந்தது. அதில் சாக்கிய குல பிரபு ‘மஹாநாமா’ வாழ்ந்து வந்தார். அவருக்கு குழந்தைகள் கிடையாது. ஒரு நாள் அவர் மாந்தோப்பில் உலவச் சென்றபொழுது ஒரு பெண் குழந்தை கேட்பாரற்றுக் கிடந்தது. அதை எடுத்து மனைவியிடம் கொடுக்கவே அவளுக்குப் பேரானந்தம் கிட்டியது. செல்வச் சீமாட்டி போல அவளை வளர்த்தார்கள். அவள் பருவத்துக்கு வந்தபோது பேரழகியாகத் தோன்றினாள் . மாந்தோப்பில் கிடைத்த பெண் ஆதலால் அவள் பெயரும் அம்பா பாலி என்றே நிலைபெற்றுவிட்டது (சம்ஸ்கிருத மொழியில் ஆம்ர என்றால் மாமரம். அது பேச்சு வழக்கு மொழிகளான பாலி /பிராக்ருதத்தில் ‘அம்பா’ ஆகிவிடும்).

பெண்ணுக்குக் கல்யாணம் கட்ட வேண்டிய தருணம் வந்தவுடன் பெற்றோருக்கு கவலையும் வந்தது. ஏனெனில் லிச்சாவி குல வழக்கப்படி அந்த ஜாதியில்தான் மணம் முடிக்க வேண்டும். ஆகையால் லிச்சாவி சபை கூட்டப்பட்டது . எல்லோரும் மண்டபத்தில் கண்களை அகலவிரித்து காத்திருந்தனர். பேரழகி அம்பா பாலி உள்ளே புகுந்தாள் . அனைவரும் ஆச்ச ரியத்தில் மூழ்கினர். இதயம் ‘படக் படக்’ என்று துடித்தது. இவள் எனக்குத்தான் என்று எல்லோரும் ஏகமனதாக தீர்மானம் போட்டுக்கொண்டனர். அறைக்குள் யுத்தம் வெடிக்கும் அளவுக்கு போட்டா போட்டி; காட்டா குஸ்தி. சபைத் தலைவர்கள் ஒரு சமாதானத் தீர்மானம் போட்டனர் . இவளை ‘பொது மகளாக்கி’ எல்லோரும் அனுபவிப்போம் என்று தீர்மானம் போட்டனர். தந்தை தாய் மனம் துடித்தது; ஒப்புக்கொள்ள மறுத்தனர்.
வீட்டில் நுழைய ஐந்து நிபந்தனைகள்
ஆனால் பெரும் சண்டை நிகழ்வதைத் தடுப்பதற்காக அந்த புத்திசாலிப் பெண் ஒரு அறிவிப்பைப் பிரகடனம் செய்தாள் . உங்கள் தீர்மானத்தை நான் ஏற்கிறேன் . நான் போடும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்கவேண்டும் என்று சொல்லிப் புல்லட் பாயிண்டு (Bullet Points )களில் பட்டியல் போட்டாள் –
1. ஒவ்வொரு நாளும் ஒரு ஆண்மகன் மட்டுமே என் வீட்டுக்குள் நுழையலாம்
2. அவர் ஒரு இரவு என்னுடன் படுக்க 500 ‘கார்ஷா பணம்’ தரவேண்டும்; (இந்தப் பழங்கால நாணய முறை இன்று வரை தமிழில் கூட ‘காசு’ ‘பணம்’ என்று வழங்கப்படுகிறது )
3.என் வீட்டுக்குள் வந்து போவோரை யாரும் கண்காணிக்கக் கூடாது
(நல்ல வேளையாக அக்காலத்தில் சி சி டி வி C C T V cameras, காமெராக்களும் கிடையாது; கூகுள் வாட்ச் Google Watch-ம் கிடையாது)
4.எனக்கு நகரத்தில் முக்கிய இடத்தில் பெரிய வீடு கொடுக்க வேண்டும்.
5.எந்தக் காரணத்துக்காகவாவது அரசாங்க அதிகாரிகள் என் வீட்டை சோதனை போடவேண்டுமானால் எனக்கு ஏழு நாள் நோட்டிஸ் (Seven Day Notice) கொடுத்து அதற்குப்பின்னரே என் வீட்டுக்குள் அதிகாரிகள் வரவேண்டும் .
இந்த ஐந்து நிபந்தனைகளையும் சபை ஏற்றுக்கொண்டது.

அம்பாலிக்கு பெரிய வீடு கிடைத்தவுடன் சிறந்த ஓவியனைக் கூப்பிட்டு வீட்டுச் சுவர்களில் மன்னர்கள், பிரபுக்கள், பெரிய வியாபாரிகள் ஆகியோரின் ஓவியங்களை வரைய ச் சொன்னாள் . அதில் மகத சாம்ராஜ்யத்தின் மாமன்னன் பிம்பிசாரனின் படமும் இருந்தது. அதைப் பார்த்தவுடன் அவளுக்கு காதல் மலர்ந்தது. இந்தச் செய்தி மன்னன் காதிலும் விழுந்தது . அவனும் அம்பாபாலியின் புகழ் பரவுவதை அறிந்து அவள் வீட்டுக்குப் புறப்படத் தயாரானான். ஆனால் அதில் ஒரு சிக்கல் . மகதப் பேரரசுக்கும் லிச்சாவிகளுக்கும் இடையே உரசல் நிலவியது. அமைச் சர்கள் வைசாலி நகருக்குள் நுழைவது ஆபத்து என்று எச்சரித்தனர் . பிம்பி சாரன் மாவீரன் ; ராணுவ தளபதி கோபன் என்பவனைப் பாதுகாப்புக்கு அழைத்துக்கொண்டு மாறு வேடத்தில் வைசாலி நகருக்குள் போய் அம்பாபாலியுடன் ஆறு இரவுகள் தங்கினான்.
இதற்குள் நகர அதிகாரிகளுக்கு பராபரியாகத் தகவல் கிடைக்கவே எதிரி நாட்டு மன்னனைப் பிடிக்க வீடு வீடாக சோதனை போடத் துவங்கினர். அம்பா வீட்டுக்கும் வந்தபோது அவள் 7 நாள் நோட்டிஸ் நிபந்தனையைச் சுட்டிக்காட்டியவுடன் அவர்கள் போய்விட்டனர். மன்னன் பிம்பிசாரனும் மாறுவேடத்தில் தப்பித்துச் சென்றான்.
பிம்பிசாரன் விடைபெற்றுச் செல்லும் முன்பாக அம்பாபாலிக்கு ராஜமுத்திரை பதித்த மோதிரத்தை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து எப்போதும் தன் அரண்மனைக்கு வரலாம் என்றான். அவளும் ஒன்பது மாதத்தில் ஒரு பிள்ளையைப் பெற்றாள் .அவன் பள்ளிப்பருவம் எய்தியபோது எல்லோரும் அவனை ‘யாருக்குப் பிறந்தவனோ’ என்று ஏசினர் . உடனே அவனை அம்பா , அரண்மனைக்கு அனுப்பிவைத்தாள். அங்கே அவன் விமல கொண்டன்னா என்ற பெயருடன் வளர்ந்து பிற்காலத்தில் புத்த பிட்சுவாக மாறினான். காலம் உருண்டோடியது .

புத்தர் வருகை
வைசாலி நகருக்கு அருகில் உள்ள கொடிகாம என்னும் ஊரில் புத்தர் தங்கியிருப்பதை அறிந்து அம்பாவும் அவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்றாள் அவருடைய சொற்பழிவைச் செவிமடுத்தாள் ;அதே நேரத்தில் லிச் சாவி குலத் தலைவர்களும் அங்கே வந்தனர். புத்தர் பிரானை சிஷ்யர்கள் புடைசூழ தம் இல்லத்துக்கு விருந்துண்ண அவள் அழைத்தாள் ;லிச் சாவி குலத் தலைவர்களும் புத்தரை அழைத்தனர். அனால் புத்தர் பிரான் அம்பாவின் அழைப்பை ஏற்று அவள் வீட்டுக்குச் சென்று விருந்துண்டார். இது லிச்சாவி குலத் தலைவர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது . புத்தர் பிரான் சாப்பிட்டு முடித்தவுடன் தனது பெரிய மாந்தோப்புகளையும் வீடுகளையும் புத்த சங்கத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் .
நாளடைவில் தனது உடலைத் தானே பார்த்து வருத்தமுற்றாள் . உலகையே ஈர்த்த அழகான தோல், இப்போது சுருங்கிப்போய் அவளுக்கே பார்க்க அருவருப்பாக இருந்தது. அந்த நேரத்தில் புத்த பிட்சுவாக மாறிய தனது மகன் விமல கொண்டன்னா உபன்யாசம் செய்வதை அறிந்து காது குளிர கேட்டாள் ; வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தாள்; நித்யானந்தம், பேரானந்தம் பெரும் வழி புத்தரின் வழி என்று அறிந்து புத்த பிக்ஷுணி ஆனார். அதில் அர்க்கத் என்ற பெரிய நிலையை அடைந்து பெரும்பேறு பெற்றாள் ; மகத சாம்ராஜ்யத்தின் மாமன்னனான பிம்பி சாரனும் புத்த மதத்துக்குப் பேராதரவு நல்கினான்.

TAGS- அம்பபாலி ,பிம்பி சாரன், புத்தர், நாட்டிய தாரகை
–சுபம்—