
WRITTEN BY S NAGARAJAN
Post No.7484
Date uploaded in London – 23 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ச.நாகராஜன்
இது பட்டிமன்றத் தலைப்பு இல்லை. மனிதனின் வாழ்க்கைத் தத்துவத்தை ஒரு அலசு அலசிப் பார்க்க உகந்த தலைப்பு இது! பார்ப்போமா?!
*
பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்லும் ‘பேரறிஞர் உலகம்’ சுத்தமானதாகவும் இல்லை; நல்ல விதத்தில் ஆச்சரியப்படும்படியாகவும் இல்லை.
மெத்தப் படிப்பு படித்த பேரறிஞர்கள் பலர் தனிப்பட்ட வாழ்க்கையில் வேசிகள் துணையில்லாமல் இருந்ததே இல்லை.
பால்வினை நோய்கள் வரும் என்று தெரிந்தும் இவர்கள் ரெட் லைட் ஏரியாவைத் தனக்கு க்ரீன் லைட் ஏரியாவாக ஏன் மாற்றிக் கொண்டார்கள்?
இவர்களுக்கு சாய்ஸ் இருக்கும் போது இவர்கள் தேர்ந்தெடுப்பது ரெட் லைட் ஏரியாவைத் தான்! ஏன்?
போதுமான சொத்து ஏழு தலைமுறைக்கு இருந்தும் ஏன் பேரறிஞர்கள் கொள்ளையடிக்கிறார்கள்?
லாஸ்வேகாஸில் சூதாடும் காஸினோக்களில், அடடா, என்ன ஒரு கூட்டம்! க்யூவில் நின்று தான் பணத்தை இழக்க வேண்டி இருக்கிறது.
(நான் லாஸ்வேகாஸில் இந்த ‘பகுத்தறிவு மனிதர்கள்’ தொடர்ந்து பணத்தை “சந்தோஷமாக” இழப்பதை வியப்புடன் நள்ளிரவில் பார்த்து நின்று கொண்டே இருந்தேன்)
புகைபிடித்தல் கெடுதல் என்று ஆயிரம் முறை சொல்லியும் ஏன் மனிதர்கள் புகை பிடிக்கிறார்கள்? குடிக்கிறார்கள்? ட்ரக் அடிக் ஷனுக்கு உட்பட்டு ஜோம்பி போலத் திரிகிறார்கள்? (ஜோம்பி – செத்த பிணம் எழுந்து நடமாடுவது தான் ஜோம்பி)
ஒன்றுமே தெரியாத அடிமுட்டாள் நமக்கு மேலதிகாரியாக இருந்து ஏன் நம் கழுத்தை அறுக்கிறான்? இவனை மேலதிகாரியாக ஆக்கியதன் லாஜிக் தான் என்ன?
இந்த காதலைத் தான் எடுத்துக் கொள்ளுங்களேன், அந்தப் பேரழகி இந்த அவலட்சணத்தைக் காதலிக்கிறாள், ஏன்? இந்தப் பேரழகன் அந்த அழுமூஞ்சியை விழுந்து விழுந்து காதலிக்கிறான். ஏன்?
அட போங்க சார்! அலசிப் பார்த்து விட்டேன். மனிதர்கள் முட்டாள்களே!
முட்டாள்களே தான்!
*

யாரையா அது நாக்கூசாமல் மனிதர்களை முட்டாள்கள் என்று சொல்வது?
மனித குல சரித்திரத்தை ஒரு அலசு அலசிப் பார்த்தால் வியந்து போவாய் நீ!
பார்ப்போமா?
மனிதகுல சரித்திரம் பத்து லட்சம் வருடங்கள் கொண்டது. இந்த பத்து லட்சம் வருடங்களை ஒரு வருடமாக சுருக்கிக் கொள்வோம்.
அப்போது மூவாயிரம் ஆண்டுகள் ஒரு நாளில் ஓடி விடும்.
அதாவது இரண்டு வருடங்கள் ஒரு நிமிடத்தில் கழிந்து விடும்!
இந்த சுருக்கப்பட்ட நமது வருடத்தில் நமது மூதாதையர் வசந்த காலத்தில் ஏதோ ஒரு நாளில் தான் தீ என்பதையே கண்டு பிடித்தார்கள்.
இந்த அரிதான கண்டுபிடிப்பிற்குப் பின்னரும் கூட முன்னேற்றம் என்பது சற்று மெதுவாகத் தான் இருந்தது.
இதோ நமது சுருக்கப்பட்ட வருடத்தில் அக்டோபர் மாதம் வந்து விட்டது. இன்னும் மனிதர்கள் கற்கால ஆயுதங்களைத் தான் கையில் வைத்திருக்கிறார்கள்.
இப்போது நாம் கூறுகிறோமே மனிதன் என்ற இனம் – உயிரியல் தத்துவப்படி – நவம்பர் நடுவில் தான் தோன்றுகிறது.
டிசம்பர் 19. சற்று நாகரிகம் இலேசாகத் தோன்றுவது தென்படுகிறது.
குகையில் சித்திரங்களைக் காண்கிறோம். மனிதனைப் புதைப்பது ஆரம்பிக்கிறது.
டிசம்பர் 27. மனிதன் ஊசி கொண்டு தைக்க ஆரம்பிக்கிறான். ஈட்டி ஆயுதத்தைக் கையில் கொண்டிருக்கிறான், அட, வில்லும் அம்பும் கூட அவனிடம் இருக்கிறது.
இன்னும் வருடம் முடிய நான்கு நாட்கள் தான் இருக்கிறது. அவனது புதுமைக் கண்டுபிடிப்பும் வளர்ச்சியும் அபாரமாக இருக்கிறது.
இன்று டிசம்பர் 30. 24 மணி நேரத்திற்கு முன்பு இருந்ததை விட, அவனது பொருளாதார வளர்ச்சி பத்து மடங்கு அபாரமாக ஆகி வளர்ந்திருக்கிறது!
இந்த கால கட்டத்தில் தான் எகிப்திய பாரோக்கள் அரசாளுகிறார்கள்.
பேரரசான சீனா டிசம்பர் 31இல் பெரும்பாலும் இருக்கிறது. ஆனால் ரோம சாம்ராஜ்யமோ வீழ்ந்து பட்டு அழிகிறது. இப்போது உலக பொருளாதாரம் இன்னும் பத்து மடங்கு அதிகரித்து விட்டது! இதோ, புது வருடம் இன்னும் சில மணி நேரங்களில் வரப் போகிறது. இப்போது மணி இரவு 7.30
சரியாக இதே நேரத்தில் தான் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து விட்டார்.
உலக பொருளாதாரம் 7.30 மணியிலிருந்து இரவு 11.20க்குள் இன்னும் பத்து மடங்கு அதிகரித்து விட்டது. அட, சரியான இந்தத் தருணத்தில் தான் முதலாம் உலக மகா யுத்தம் ஆரம்பித்து விட்டது.
பிரம்மாண்டமான கண்டு பிடிப்புகள், அறிவியல் வளர்ச்சி, ஆஹா, ஊஹூ என்று புகழும் பொருளாதார வளர்ச்சி எல்லாம் கடைசி நாற்பது நிமிடங்களில் தான் ஏற்பட்டிருக்கிறது.
பத்து லட்சம் வருடங்கள்! அதில் கடைசி நாற்பது நிமிடங்கள்!!
பொருளாதாரம், அறிவியல் வளர்ச்சி தற்செயலானதா, தேக்கமடைந்து வளர்ந்ததா, அதிர்ஷ்டமா, இல்லை முயற்சியா?
நன்கு யோசித்துப் பார்த்தால் மனிதன் புத்திசாலி தான் இல்லையா!
எப்படி இருந்தவன் இப்போது இப்படி ஆகி இருக்கிறான்!
இன்னும் சந்திரனில் குடியிருப்பு அமைப்பான். செவ்வாய்க்குப் போவான்.
இன்னும் … அடுத்த பத்து லட்சங்களைப் பார்ப்பான்!
அப்போது எழுதுவோம் முடிவை முத்தாய்ப்பாகச் சொல்லும் இன்னொரு கட்டுரையை!
மனிதர்கள் முட்டாள்களே, இல்லை, இல்லை புத்திசாலிகளே என்று!
***
Tim Harford எழுதிய The Logic of Life அக்கு வேறு ஆணி வேறாக மனிதனை அலசுகிறது. கண்டிக்கிறது, வியக்கிறது, புகழ்கிறது!
நன்றி டிம் ஹார்போர்ட், நன்றி!
***********
You must be logged in to post a comment.