
Written by London Swaminathan
Date: 25 October 2017
Time uploaded in London- 11-09 am
Post No. 4334
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
நம் எல்லோருக்கும் ராமாயணம் தெரியும். காலத்தால் அழியாத காவியம்! எங்கெங்கெல்லாம் ஒரு மனிதன் எளிதில் திசை மாறிப்போக முடியுமோ அங்கெங்கெல்லாம் ராமன் என்னும் ஒரு மாமனிதன், ஒரு க்ஷத்ரிய அரசன்- தவறாத, நேரான பாதையில் சென்றான். ஆகையால் உலகம் முழுதும் வாழும் நல்லோர் மனதில் எல்லாம் நீங்காத இடம் பிடித்தான். வால்மீகி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய காவியம்தான் உலகின் ஆதி காவியம். இவர் ராமரின் சம காலத்திய முனிவர். 24,000 ஸ்லோகங்கள் 48,000 வரிகளில் அருமையான் நீதிநெறிகளை ராமன் வாயிலாகவும் ஏனைய கதா பாத்திரங்களின் வழியாகவும் முத்து முத்தாக உதிர்த்துச் செல்கிறார்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” (குறள் 50) என்று வள்ளுவன் சொன்னதிலிருந்தே ராமன், கிருஷ்ணன் ஆகிய புருடர்கள் தெய்வம் என்பதை உணரலாம்.
தனது தாயான கைகேயி செய்த தவற்றை உணர்ந்த பரதன்—
அமைச்சர்களும், குருமார்களும் படைகளும், புடை சூழ கானகம் ஏகுகிறான். அங்கே ராமனைச் சந்திக்கிறான்.
“அண்ணா! தாயும் தந்தையும் தவறு செய்துவிட்டனர். உன்னை காட்டிற்கு அனுப்பியது தர்ம விரோதம்”– என்று ராமனிடம் வாதிடுகிறான். ராமனோ ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்பது சான்றோர் வாக்கு. ஆக நான் இருவரின் ஒப்புதலுடன் இங்கே வந்தேன்; 14 வருடம் கழித்து அயோத்தி மாநகருக்கு வந்து ஆட்சியை ஏற்றுக் கொள்வேன் என்கிறான். பரதன் விடவில்லை. சாம, தான, பேத, தண்டம் என்பதில் பல உபாயங்களைக் கையாளுகிறான்
“நாம் காலாகாலமாக வணங்கும் குருமார்கள் என்னுடன் வந்துள்ளனர் அமைச்சர்கள் வந்துள்ளனர். அவர்கள் எல்லாம் நான் சொல்லுவதை ஆ மோதிக்கின்றனரே” என்கிறான். அதற்கும் ராமபிரான் மசியவில்லை.
“அண்ணா, அண்ணா! ப்ளீஸ்! நான் சின்னப்பையன், என் மீது இவ்வளவு பெரிய ராஜ்ய பாரத்தைச் சுமத்துவது முறையோ, தகுமோ?” என்று கெஞ்சிப் பார்க்கிறான். உலகில் சத்தியத்தை நிலை நாட்ட வந்த ராமன், அசையவில்லை.
திடீரென சொற்சிலம்பம் மூலம் ராமனை விழுத்தாட்டல்லாம் என்று எண்ணுகிறான் பரதன்.
“அண்ணா மகன் என்றால் அபத்யம் என்று சம்ஸ்கிருதத்தில் சொல்வார்களே; இதன் பொருள் “கீழே விழாமல் தடுப்பவன்” என்பதுதான் உனக்குத் தெரியுமே. வயதான காலத்தில் கிழவர்களுக்கு புத்தி தடுமாறும் என்று சம்ஸ்கிருத்தில் முதியோர் சொன்ன பழமொழி உளதே.
அந்தகாலே ஹி பூதானி முஹ்யந்தீதி புரா ஸ்ருத்: 2-106-13
நம் அப்பாவும் கிழ வயதில் புத்தி தடுமாறி உன்னை காட்டுக்கு அனுப்பிவிட்டார். பெண் வயப்பட்டோ அல்லது கைகேயிக்குப் பயந்தோ இப்படிச் செய்திருக்கலாம். தவறு செய்தவர்கள் நரகத்தை அடைவார்களே. ஆகையால் நம் அப்பா, வாழ்க்கையில் தவறி விழுந்துவிட்டார். அவர் கீழே விழாமல் தடுக்க, நரகத்தில் விழாமல் தடுக்க நீ உதவலாமே? அபத்யனாக இரு”.
பிதுர்ஹி சமதிக்ராந்தம் புத்ரோ ய: சாது மன்யதே 2-106-15
ததபத்யம் மதாம் லோகே விபரீதமதோ அந்யதா 2-106-16
மா பவான் துஷ்க்ருதம் பிது: (அப்பா போட்ட தவறான உத்தரவை பின் பற்றாதே)-2-106-16
முதலில் கெஞ்சிய பரதன், இப்பொழுது அண்ணனுக்கே அறிவுரை சொல்லப் புறப்பட்டுவிட்டான். ராமன் விடுவானா?
அபத்யன் என்பது நரகத்தில் விழாமல் தடுப்பவன் என்று பொருள்; அதாவது புதல்வர்களைப் பெற்றால் அவர்கள் செய்யும் திதி முதலியவற்றால் மேலுலகம் சென்றோர் நரகத்தில் விழாமல் தடுப்பர். ஆனால் பரதன் அதைத் தவறாக வியாக்கியானம் செய்தவுடன், அவனை ராமன் ஒரு பிடி பிடிக்கிறான்.

கயா க்ஷேத்ர மஹிமை
ச்ரூயதே ஹி புரா தாத ச்ருதிர்கர்தா யசஸ்வினா
கயேன யஜமானேன கயேஸ்வேவ பித்ரூன் ப்ரதி 2-107-11
“தம்பி! முன்னொரு காலத்தில் கயா என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் கயா என்ற புனிதத்தலத்தில் சிரார்த்தம் (திதி) செய்து முன்னோர்களைக் கடைத்தேற்றினான். அவன் பல விதிகளைச் செய்திருக்கிறான். ‘புத்’ என்னும் நரகத்தில் இருந்து விழாமல் தடுப்பவனே ‘புத்ரன்’ எனப்படுவான்.
புத்ராம்னோ நாரகாத்யஸ்மாத்பிதரம் த்ராயதே சுத:
தஸ்மாத் புத்ர இதி ப்ரோக்த: பித்ரூன் ய: பாதி சர்வத: 2-107-12
அப்பா சொல் எனக்கு மட்டும்தானா? பார், என்னை காட்டுக்குப் போ என்று சொன்னார்; நான் காடேகினேன்; உன்னை ஆட்சி செய் என்றார். நீ ஏன் ஆட்சி செய்து அவர் சொல்லைக் காப்பாற்றக் கூடாது? என்னை ‘அபத்யன்’ ஆக இரு என்றாய். நீ என் ‘புத்ரனாக’ இருக்கக்கூடாது? என்று ராமன் செப்பினான்.
பவானபி ததேத்யேவ பிதரம் சத்யவாதினம்
கர்துமர்ஹதி ராஜேந்த்ர க்ஷிப்ரமேவாபிஷேசனாத் 2-107-9
‘அபத்ய, புத்ர’ என்ற இரண்டு சொற்களுமே புதல்வன், மகன் என்றே பொருள்படும். ஒருவன் பல மகன்களை ஈன்றெடுத்தால் அதில் ஒருவனாவது கயாவுக்குச் சென்றோ செல்லாமலோ திதி/ சிரார்த்தம் செய்து முன்னோர்களை ‘புத்’ என்னும் நரகத்தில் விழாமல் தடுப்பான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இது தமிழில் புற நானூற்றிலும் சம்ஸ்கிருதத்தில் மானவ தர்ம சாத்திரம் என்பப்படும் மனு நீதி நூலிலும் உளது.

கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர்துறக்க உடகார்ந்த பந்தலில் தனக்கும் இடம் தா என்று பொத்தியார் என்னும் புலவர் வந்தார். ஆனால் சோழன் இடம் தரவில்லை. நீ திருமணமானவன்; இன்னும் உனக்குக் குழந்தை பிறக்கவில்லை. (ஈமக் கடன் செய்து உன்னை நரகத்தில் விழாமல் காக்க) ஒரு புதல்வன் பிறந்த பின்னர் வருக என்று சொல்லி அனுப்பினான் சோழ மன்னன். புறநானூற்றின் 222ஆவது பாடலுக்கு வியாக்கியானம் செய்த பெரியோர்கள், புதல்வன், புத் என்னும் நரகம் பற்றி விரிவுரை எழுதியுள்ளனர்.
ராமனை மடக்கிப் பிடிக்க வந்த பரதனை ராமன் கிடுக்கிப் பிடி போட்டு வீழ்த்திவிட்டான். ராமன் மற்போர் வீரன், விற்போர் வீரன்; சொற்போரிலும் வீரன்.
வால்மீகி, கம்பன் எழுதிய காவியங்களை நுணுகிப் படிக்க ஒரு வாழ்நாள் போதாது. இன்றே படிக்கத் தொடங்குங்கள்; பாடல் பாடலாக’ ஸ்லோகம் ஸ்லோகமாக பதம் பிரித்துப் படியுங்கள்.
Translated by London swaminathan
Source: LECTURES ON THE RAMAYANA, THE RT.HON. V S SRINIVASA SASTRI, 1949, REPRINTED 1994, MADRAS SAMSKRIT ACADEMY
–Subham–




































