பிரகலாதனின் உபதேசம்! – 2 (Post No.16,065)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,065

Date uploaded in London – 8 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பிரகலாதனின் உபதேசம்! – 2 

ச. நாகராஜன் 

சர்வதேசங்களிலும், சர்வகாலங்களிலும் மூன்று வகையான தாபங்களால் மன வருத்தமுற்றிருந்தும் குடும்பத்தில் மனம் தாழ்ந்து சம்சாரத்தில் யாருக்கும் வெறுப்பு உண்டாவதில்லை.

பரதிரவ்யத்தைப் பறிக்கும் புருஷனுக்குப் பரலோகத்தில் வரும் நரகானுபவ தோஷமான தோஷத்தையும் இகலோகத்தில் ராஜதண்டனை உள்ளிட்ட ரூபமான தோஷத்தையும் அறிந்தவன் என்றாலும் கணம்தோறும் பணத்தில் பேராசை கொண்டு இந்திரியங்களை ஜெயிக்காமையால் காமம் அடங்கப் பெறாமல் பெரும் குடும்பியாகி மற்றவர் சொத்தையும் பறிக்கிறான்.

 ஓ, மகன்களே! இப்படியாக சம்சாரத்தின் தோஷத்தை அறிந்தும் குடும்பத்தை போஷிக்க முயன்று ஆத்ம ஸ்வரூபத்தை ஆராயாமல். ‘இது நம்முடையது, இது பிறருடையது’ என்னும் பேத புத்தியை பாராட்டிக் கொண்டிருப்பவன் நரகத்தையே அடைவான்.

 ப்ரக்ருதி, புருஷ, ஈஸ்வரர்களின் உண்மையை அறிந்தவன் தான் என்றாலும் தனது பிறருடையது என்னும் பேதம் நீங்காமல் குடும்பத்தையே போஷிப்பதால் ஒன்றும் தெரியாத மூடனாக நரகத்தையே அடைவான். முக்தியைப் பெற மாட்டான். 

அறிந்தவன் கதியே இது என்றால் அறியாதவன் கதியைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

 எவனேனும் இல்லறவாழ்க்கையில் பற்று கொண்டிருப்பானென்றால் அவன் சப்தாதி விஷயங்களில் மிகவும் விருப்பம் கொண்டு மனக் களிப்பற்று கண்ணழகிகளான மங்கையருக்கு விளையாட்டு மிருகம் போல இருந்து மென்மேலும் சம்சார பந்தம் நீங்கப் பெறாமல்  வருந்துவானே தவிர, எக்காலத்திலும் எவ்விடத்திலும் தன்னை விடுவித்துக் கொள்ள வல்லவனாக மாட்டான்.

 ஓ, குமாரர்களே! ஆகையால் அஸத்துகளின் தொடர்பைத் துறந்து சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்னும் விளையாடலைப் செய்யப் பெற்றவனும் தன் தேஜஸினால் திகழ்பவனும் ஶ்ரீ நாராயணன் என்னும் பெயர் பெற்றவனுமான பகவானைச் சரண் அடைவீர்களாக!

 பற்றற்றவர்கள் அந்த பரம புருஷனையே பரம புருஷார்த்தமான முக்திக்குக் காரணம் என்று சொல்லுகிறார்கள். தன்னை அடைந்தவர்களைக் கைவிடாத அந்த பரம புருஷனை வழிபடுபவர்களுக்கு அதிக வருத்தம் வராது.  அவன் எல்லா பிராணிகளுக்கும் அந்தராத்மாவாகவும் உங்கள் இதயத்திலும் நிறைந்திருக்கிறான். நீங்கள் அவனைத் தேடிப் போக வேண்டிய அவசியமில்லை. சுவர்க்கம் போன்ற பலன்களைப் போல அவனை நாம் சாதிக்க வேண்டியதில்லை. அனைவருக்கும் அவன் தானாகவே சித்தமாக இருக்கிறான். அவன் இதயத்தில் இருப்பதை அறிந்தால் மட்டும் போதும்.

அவன் அனைத்திலும் சேதனங்களையும் அசேதனங்களையும்  சரீரமாகக் கொண்டு இருக்கிறான்.

ஜீவாத்மாக்களை அவரவர் கர்மத்திற்குத் தக அவன் நியமிப்பவன்.

இது என்று நிரூபிக்க முடியாதவன்.

ஜாதி, குணம் ஆகியவை அற்றவன்.

தன்னைத் தவிர இன்னொரு ஈஸ்வரன் இல்லாதவன்.

தன் மாயையால் லோகத்தில் வாழ்பவர்களுக்கு அறிய முடியாதவன்.

சதாசார்யர்களுடைய உபதேசத்தினால் அறியத் தகுந்தவன்.

இப்படி அவனை அறிந்து பணிவார்களேயானால் அவன் அவர்களிடத்தில் அன்பு பாராட்டுவான்.

ஆகையால் பிராணிகளுக்கு துரோஹம் செய்யும் உங்கள் அசுர சுபாவத்தை விட்டு விட்டு எல்லா பிராணிகளிடமும் அவற்றின் மேன்மை, தாழ்வுக்குத் தக தயையும் சினேகத்தையும் செய்வீர்களாக.

அதனால் பரம புருஷன் சந்தோஷம் அடைவான்.

பிறகு எதுதான் அடைய முடியாதது?

நமது ஆசார்யர்கள் கூறும் தர்க்க வித்யா, வேதத்தின் பூர்வபாகம், நீதி சாஸ்திரம், தண்ட சாஸ்திரம் க்ருஷி முதலான ஜீவன்களை அறிவிக்கும் சாஸ்திரம் ஆகியவை எனக்குத் தெரியும்.

என்றாலும் பரமபுருஷனின் பாதாரவிந்தங்களில் ஆத்ம சமர்ப்பணம் செய்வதே வேதாந்தம் கூறும் பொருள்.

அதுவே அழிவில்லாத புருஷார்த்தம் என்று நான் நினைக்கிறேன்.

இந்த ஞானத்தை நான் நாரதரிடம் கேட்டேன்.

இதுவே பாகவதம் என்று கூறப்படுகிறது. இது பரிசுத்தமானது. 

இவ்வாறு பிரகலாதன் தன் பிள்ளைகளுக்கு உபதேசிக்கிறார். 

ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் ஸர்க்கம்

** முற்றும்

Leave a comment

Leave a comment