நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள்  பற்றி 10 கேள்விகள் (Post.16,081)

Written by London Swaminathan

Post No. 16,081

Date uploaded in London – 12 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது- என்ற புகழ்பெற்ற பாடலை யாருக்காக எழுதினார் நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கம்?

 2

தமிழ் இனத்தையும் அவன் குணத்தையும் பாராட்டி கவிஞர் எழுதிய பாடல் என்ன ?

3

சூரியனும் சந்திரனும் சுற்றி வருவது இறைவனால்தான்; அவனுக்கு வெவ்வேறு மத த்தில் வெவ்வேறு பெயர்கள் உண்டு என்று கவிஞர் எழுதியது என்ன?

4

கைத்தொழிலின் பெருமையை கவிஞர் எப்படிப் பாடினார் ?

5

தமிழா தலை நிமிர்ந்து நில் என்று அவர் சொன்னதற்கு என்ன காரணங்களை இயம்பினார் ?

6

குஜராத்திக் கவிஞர் நரசிம்ம மேத்தா பாடிய வைஷ்ணவ ஜனதோ காந்திஜிக்கு மிகவும் பிடித்த பாடல் ; அதை கவிஞர் எப்படி மொழிபெயர்த்தார் ?

7

 பாரதி பற்றி கவிஞர் பகிர்வது என்ன ?

8

நவகாளியில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டது கவிஞரை எப்படிப் பாதித்தது?

In October 1946, the Noakhali riots took place in the Noakhali and Tipperah districts of undivided Bengal (now in Bangladesh). Muslim mobs carried out a wave of systematic massacres, rapes, arson, looting, and forced religious conversions targeting the local Hindu minority. The violence resulted in widespread displacement and a massive refugee exodus

 9

கவிதை என்றால் என்ன? என்று கவிஞர் கருதுகிறார் ?

10

திரைப்படங்களில் இடம்பெற்ற கவிஞரின் பாடல்கள் எவை ?

**********************************

விடைகள்

1.கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்றுவருகுது கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! . .(கத்தி)

ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே

மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே! .(கத்தி)

குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே

எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் . .(கத்தி)

கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே

பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே . .(கத்தி)

கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட! . .(கத்தி)

காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி

மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே .

****

2.தமிழன் என்றோர் இனமுண்டு

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்

அறிவின் கடலைக் கடைந்தவனாம்
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்

கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்

சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கே சொல்
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்

மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க் காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேல் எனப் பேசிடுவான்

****

3.சூரியன் வருவது யாராலே ?

சந்திரன் திரிவதும் எவராலே ?

காரிருள் வானில் மின்மினிபோல்

கண்ணிற் படுவன அவைஎன்ன ?

பேரிடி மின்னல் எதனாலே ?

பெருமழை பெய்வதும் எவராலே ?

யாரிதற் கெல்லாம் அதிகாரி ?

அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

அல்லா வென்பார் சிலபேர்கள் ;

அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;

வல்லான் அவன்பர மண்டலத்தில்

வாழும் தந்தை யென்பார்கள் ;

சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’

என்றும் சிலபேர் சொல்வார்கள் ;

எல்லா மிப்படிப் பலபேசும்

ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.

எந்தப் படியாய் எவர்அதனை

எப்படித் தொழுதால் நமக்கென்ன ?

நிந்தை பிறரைப் பேசாமல்

நினைவிலும் கெடுதல் செய்யாமல்

வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;

வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்

***

4.கைத்தொழில்

 கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

எத்தொழில் எதுவும் தெரியாமல்

 இருந்திடல் உனக்கே சரியாமோ    

உழவும் தொழிலும் இல்லாமல்

உலகில் ஒன்றும் செல்லாது

விழவும் கலையும் விருந்துகளும்

வேறுள இன்பமும் இருந்திடுமோ    

****

5. தமிழன் பாட்டு

பல்லவி

தமிழ னென்று சொல்லடா!

தலைநி மிர்ந்து நில்லடா! (தமிழா)

சரணங்கள்

அமுத மூறும் அன்பு கொண்டிங் கரசு செய்த நாட்டிலே

அடிமை யென்று பிறர்ந கைக்க முடிவ ணங்கி நிற்பதோ!

இமயம் தொட்டுக் குமரி மட்டும் இசைப ரந்த மக்கள்நாம்

இனியும் அந்தப் பெருமை கொள்ள ஏற்ற யாவும் செய்குவோம்.       (தமிழா)

குஞ்சைக் காக்கும் கோழி போலக் குடியைக் காத்த மன்னர்கள்

கோல்ந டத்த அச்ச மின்றி மேல்நி னைப்புக் கொண்டுநாம்

பஞ்ச பூத தத்து வங்கள் பக்தி யோடு முக்தியைப்

பார்சி றக்கச் சொன்ன நாமும் சீர்கு றைந்து போவதோ?       (தமிழா)

உலகி லெங்கும் இணையி லாத உண்மை பாடும் புலவர்கள்

உணர்ச்சி தன்னை வானைத் தாண்டி உயரச் செய்யும் நாவலர்

கலக மற்றுக் களிசி றக்கக் கவிதை சொன்ன நாட்டிலே

கைகு வித்துப் பெயர்கள் பாடிக் காலந் தள்ளல் ஆகுமோ?       (தமிழா)

கங்கை யோடு பெருமை கொண்ட காவி ரிப்பொன் னாட்டிலே

கவலை யின்றிச் சோறி ருக்கக் கலைக ளெண்ணி வாழ்ந்தநாம்

மங்கி மங்கி வறுமை மிஞ்ச மதிம யங்கி மாய்வதோ!

மாநி லத்தில் சோற்றுப் பஞ்சம் மறையு மாறு மாற்றுவோம்.       (தமிழா)

சித்தி ரத்தில் மிகஉ யர்ந்த சிற்ப நூலின் அற்புதம்

சின்னச் சின்ன ஊரிற் கூட இன்னு மெங்கும் காணலாம்;

கைத்தி றத்தில் ஈடி லாத கல்வி தந்த தமிழர்நாம்

கைந்நெ றித்து வேலை யின்றிக் கண்க லங்கி நிற்பதேன்?       (தமிழா)

எண்ண மற்றும் விசன மற்றும் எங்கும் செல்வம் பொங்கவே

எந்த நாளும் ஆடல் பாடல் எழில ரங்கம் ஓவியம்

பண்ண மைந்த சூழலும் யாழும் பக்க மேளம் யாவையும்

பாருக் கீந்து மகிழ்ச்சி யின்றி நாமி ருத்தல் பான்மையோ!       (தமிழா)

விண்ம றைக்கும் கோபுரங்கள் வினைம றக்கும் கோயில்கள்

வேறு எந்த நாட்டி லுண்டு வேலை யின்வி சித்திரம்?

கண்ணி றைந்த காவ ணங்கள் கனிகள் மிக்க சோலைகள்

கண்ட போது பண்டை யெங்கள் நாக ரீகம் காட்டுமே.       (தமிழா)

மனித வாழ்வில் இன்ப மென்று சொல்லு கின்ற யாவையும்

மற்ற வாழ்வில் உதவு மென்று நம்பு கின்ற ஞானமும்

தனிமை யான முறையில் யார்க்கும் தந்த திந்தத் தமிழகம்

தட்டி டாது தெய்வ மின்னும் கிட்டி நம்மைக் காக்குமே.       (தமிழா)

————

6. வைஷ்ணவன் என்போன் யார்?

பல்லவி

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்

வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்)

சரணங்கள்

பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்

பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ;

உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்

உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;

உறவென மனிதர்கள் உலகுள யாரையும்

வணங்குவன் உடல்மனம் சொல்இவற்றால்

அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்

அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள்.       (வைஷ்)

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை

விளங்கிட ஆசைகள் விட்டவனாய்

ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென

உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்

உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோ தும்அவன்

ஊரார் உடைமையைத் தொடமாட்டான்

வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ

அவனே உண்மை வைஷ்ணவனாம்.       (வைஷ்)

மாயையும் மோகமும் அணுகா தவனாய்

மனத்தினில் திடமுள வைராக்யன்

நாயக னாகிய சிறீரா மன்திரு

நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து

போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்

பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்

ஆயன யாவையும் அடங்கிய சேத்திரம்

ஆகும்அவனே வைஷ்ணவனாம்.       (வைஷ்)

கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்

காம க்ரோதம் களைந்தவனாய்த்

தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்

தரிசிப் பவரின் சந்ததிகள்

சுபமுடை வார்கள் எழுபத் தோராம்

தலைமுறை வரையில் சுகமுறுவர்

அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்

அலைகடல் நீந்திக் கரை சேர்வார்.       (வைஷ்)

***

7.ஸ்ரீ சுப்பிரமண்ய பாரதி

பல்லவி

சுதந்தர ஞானத்தின் சுடரொளி தீபம்

சுபசிறீ சுப்பிரமண்ய பாரதி நாமம்.

அநுபல்லவி

நிதந்தரும் கவலையை நீக்கிடும் சூத்திரம்

நிச்சய புத்திதரும் அட்சய பாத்திரம்       (சுதந்)

சரணங்கள்

அச்சம் எனும்பிணியை அகற்றிடும் மருந்து

ஆற்றலைக் கொடுத்திடும் அமுதத்தின் விருந்து

கொச்சை வழக்கங்களைக் கொளுத்திடும் நெருப்பு

கொடுமையை எதிர்த்திடக் கூரிய மறுப்பு!       (சுதந்)

தெய்வத் தமிழ்மொழியில் புதுமைகள் சேர்த்துத்

தீரம் விளங்கச்சுத்த வீரமும் வார்த்து

வையம் முழுதும்அதை வணங்கிடச் செய்யும்

வாய்மையும் தூய்மையும் வளர்த்திடும் ஐயன்!       (சுதந்)

பெண்ணின் பெருமைகளைக் காத்திடும் கோட்டை

பேதையர் என்பதனைக் கடிந்திடும் சாட்டை

உண்மை அறிவுகளை உணர்த்திடும் போதம்

உத்தம தத்துவங்களை ஒலித்திடும் கீதம்!       (சுதந்)

————

8. வடநாட்டில் கொடுமை*

கோபமும் கொதிப்பும் குமிறிடும் படிபல

கொடுமைகள் நடக்குது வடநாட்டில் ;
தாபமும் தவிப்பும் தந்திடும் ஆயினும்

தமிழா! உன்குணம் தவறிடுமோ?

அன்னிய மதமென அடிக்கடி பழகிய

அயலுள மக்களைக் கொல்லுவதை
என்னென உரைப்பது ஏதென வெறுப்பது

எண்ணவுங் கூடத் தகுமோதான்?

வேறொரு மதமென அண்டையில் வசிப்பவர்

வீட்டினைக் கொளுத்துதல் வீரமதோ?
ஆறறி வுடையவர் மனிதர்கள் என்றிடும்

அழகிது தானோ? ஐயையோ!

பிறிதொரு மதமெனப் பெண்மையைக் கெடுப்பதும்

பிள்ளையை மடிப்பதும் பேய்செயுமோ?
வெறிதரும் நெறிகளை விலக்கிய உன்குணம்

விட்டிடப் படுமோ? தமிழ்மகனே!

அங்குள வெறியர்கள் அப்படிச் செய்ததில்

அவசரப் படுத்திடும் ஆத்திரத்தால்
இங்குள சிலர்எதிர் செய்ய நினைப்பதை

எப்படித் தமிழ்மனம் ஒப்பிடுமோ?

தீமையைத் தீமையால் தீர்க்க நினைப்பது

தீயினைத் தீயால் அவிப்பதுபோல்
வாய்மையின் தூய்மையின் வழிவரும் தமிழா!

வஞ்சம் தீர்ப்பதை வரிப்பாயோ?

அடைக்கலம் புகுந்தன அன்னிய மதம்பல

அன்புள நம்தமிழ்த் திருநாட்டில்
கொடைக்குணம் மிகுந்ததம் குலத்தவர் காத்தனர்

கொள்கையை நாம்விடக் கூடாது.

வேற்றுமை பலவிலும் ஒற்றுமை கண்டிடும்

வித்தையிற் சிறந்தது தமிழ்நாடு.
மாற்றொரு மதத்தையும் போற்றிடும் பெருங்குணம்

மதமெனக் கொண்டவர் தமிழர்களே.

எம்மதம் ஆயினும் சம்மதம் என்பதை

ஏந்தி நடப்பது தமிழ்நாடு.
அம்மன உணர்ச்சியை அறமெனக் காப்பதில்

அசைந்திட லாமோ தமிழறிவு?

மதமெனும் பெயரால் மக்களை வதைப்பதை

மாநிலம் இன்னமும் சகித்திடுமோ?
விதவிதம் பொய்சொல்லி வெறுப்பினை வளர்த்திடும்

வெறியரைத் தமிழர்கள் முறியடிப்போம்.

* நவகாளி அட்டூழியம் கேட்டுப் பாடியது

நவகாளியில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டது கவிஞரை எப்படிப் பாதித்தது?

In October 1946, the Noakhali riots took place in the Noakhali and Tipperah districts of undivided Bengal (now in Bangladesh). Muslim mobs carried out a wave of systematic massacres, rapes, arson, looting, and forced religious conversions targeting the local Hindu minority. The violence resulted in widespread displacement and a massive refugee exodus.

***

9.கவிதை என்றால் என்ன?

அசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,
அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி,
இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி,
நன்மை தீமையை நன்றாய் விளக்க
இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே
மனக்கண் முன்னால் மலரச் செய்தே
இருக்கிற ஒன்றையும் இல்லாத தேபோல்
மனத்தை விட்டு மறையச் செய்து,
வாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்
ஊக்கம் கொள்ளும் உறுதியை ஊட்டப்
பாடு படாமல் பாடம் பண்ணவும்,
நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
இணைத்த சொற்களே ‘கவிதை’ எனப்படும்.
‘கவிதை’ என்பது கற்பனை உள்ளது ;
கூட்டியும் பேசும் ; குறைத்தும் கூறும் ;
பொய்ம்மையும் வாய்மையே போலப் பொலிவுற
அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்.
எதுகை மோனை இலக்கணம் பார்த்தும்
பதங்களை அடுக்கிப் பாட்டெனச் செய்தும்
உள்ளதை உள்ளதே போல உரைக்கும்
கதையோ பாட்டோ கற்பனை யில்லையேல்
ஐந்தும் மூன்றும் ஆறு என்கிற
கணக்கே யாகும் ; கவிதையா காது.
கற்பனை மிகுந்த கவிதைகள் மிகுந்தது
தமிழ்மொழிக் குள்ள தனிப்பெரும் சிறப்பு!

****

10.நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையின் பல பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெற்று தமிழரிடையே பெரும் புகழ்பெற்றன. அவற்றுள் எம்.ஜி.ஆர் நடித்த ‘மலைக்கள்ளன்’ மற்றும் ‘கடவுளின் குழந்தை’ ஆகிய திரைப்படங்கள் மிக முக்கியமானவை ஆகும்.திரைப்படப் பாடல்கள் விவரம்எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே – எம்.ஜி.ஆர் நடிப்பில் 1954-ல் வெளியான மலைக்கள்ளன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் நாமக்கல் கவிஞரின் வரிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா – 1960-ல் வெளிவந்த கடவுளின் குழந்தை திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் தமிழினத்தின் சுயமரியாதையைப் போற்றும் வகையில் அமைந்தது.இளந்தமிழா உன்னைக் காண இன்பம் பெருகுது – இம் பாடலும் கடவுளின் குழந்தை (1960) படத்தில் கவிஞரின் படைப்பாக இடம்பெற்றது.கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் – இச்சமூக சீர்திருத்தப் பாடலும் அதே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

–subham—

Tags நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, பாடல்கள்  ,10 கேள்விகள், தமிழன் என்றோர் இனமுண்டு, கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்

Leave a comment

Leave a comment