
Written by London Swaminathan
Post No. 16,100
Date uploaded in London – 17 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஏற்கனவே இந்த பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய நீண்ட கட்டுரைத் தொடரைப் படித்தவர்கள் எளிதில் விடை சொல்ல முடியும் .
1
கொங்கு மண்டல சதகம் என்ற நூலினை எழுதியவர் யார் ?
2
கொங்கு நாடு என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வரும் மன்னர்கள் யார் ?
3
கொங்குநாட்டின் புலவர் சபை பற்றிக் கார்மேகப் புலவர் என்ன சொல்கிறார்?
4
வாலிபன் மூலிகை கலந்த சோற்றினைச் சாப்பிட்டு இளைஞன் ஆனா அதிசயத்தை எந்தப் பாட்டலில் காணலாம் ?
5
சிதம்பரம் கோவிலுக்குப் பொன் வேய்ந்தது எப்படி என்று கவிஞர் விளக்குகிறார் ?
6
கொங்கு மண்டலத்தில் ஓடும் நதிகள் யாவை ?
7
புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு புலிக்கு இரையாகச் சென்றவருக்கு என்ன நடந்தது ?
8
படிக்காசுப் புலவரை வாதில் வென்ற கொங்குமண்டலப் புலவர்கள் என்ன செய்தார்கள் ?
9
அவ்வையார், பவணந்தி, வில்லிப்புத்தூரார் முதலியோரை கொங்கு நாடு எப்படிப் போற்றியது ?
10
கரிகால் சோழன் மகளுக்கு வந்த வலிப்பு நோயைக் கொங்கு மண்டல மருத்துவர்கள் எப்படிக் குணம் ஆக்கினார்கள் ?

*******************

விடைகள்
1.கார்மேகக் கவிஞர் இதை எழுதினார்; பின்னர் வாலசுந்தரக் கவிராயர், கம்பநாதசாமி ஆகியோர் இதே பெயரில் நூல்களை இயற்றினார்கள்.
***
2.செங்குட்டுவன் போன்ற சேர
வேந்தரது திறமையான ஆட்சியும் காரி, ஓரி, அதியன் முதலாய புகழ்
பெற்ற குறுநில மன்னர்களின் வரலாறும் கொங்குநாட்டின் புகழைக் காட்டும்.
***
3.கொங்குப் புலவர் சபை ஒன்று அக்காலத்தில் இருந்தமையை (பக். 30)
இத்தொகுதியால் அறிய முடிகின்றது. ‘பழந்தமிழ் ஐவாணர்’ என்று கார்மேகக்
கவிஞரின் பாடல் (31) ஒன்று கூறும். ஐவாணர்கள் யார்யார் என்பதனை
உரையாசிரியர் பின்வருமாறு விளக்குவர்.
இதனைக் கொங்கு வேளாளர் கல்யாணத்தில் பாடும் மங்கலவாழ்த்து என்று நாளும் பாராட்டப்படும் நூலில் காணலாம் :
“பட்டன் புலவன் பண்பாடி தக்கையன்
திட்டமாய்ச் சோபனஞ் செப்பிமுன் னேவர
அரம்பை மேனமை அணிகொள் திலோத்தமை
திரம்பெறு மூர்வசித் தெரிவையர்க் கொப்பாய்
வண்மைசேர் கூத்தி வகைபெற நின்று
நன்மை சேர்பரத நாட்டிய மாடிட”
என்ற வரிகளால் காணலாம்.
இங்கு பட்டன் – தலைவனை புகழை அவன் முன்னே நின்று பாராட்டுவோன்.
புலவன் – இயற்றமிழால் பாடல் பாடிப் புகழ்வோன்
பண்பாடி – இசைத் தமிழ் பாடுவோன்
தக்கைகொட்டி – தக்கை என்னும் ஒரு வகை வாத்தியத்தை வாசிப்பவன்
கூத்தாடி – நாடகத் தமிழை நடத்துவோன்.
***

4.இந்த அரிய சம்பவத்தைக் கொங்கு மண்டல சதகம் தன் 69வது பாடலில் கூறிப் போற்றுகிறது.
பாடல் இதோ:
உலையி லமுது படைத்துண்டு சீட னொளித்திருப்பத்
தலையின் மயிருங் கருக்கக் கண் டேயவன் சற்குருவும்
நிலையுடன் கக்குவித் துண்டடைந்த் தானன் னெறியிற்
கஞ்சமலையி லதிசயங் கண்டது வுங்கொங்கு மண்டலமே.
இப்பாடலின் பொருள் :உலை வைத்துச் சமைத்துச் சாப்பிட்டுத் தன் உருவம் மாறி விட்டதால் சீடனுடைய முன் உருவம் தெரியாமல் நரைதிரை நீங்கி இருக்கக் கண்ட அவனது சற்குரு, (உண்மை அறிந்து) தன் சீடன் அருந்தியிருந்த உணவைக் கக்கச் செய்து அதைத் தானும் அருந்தி குமரன் ஆனதுவும் கொங்கு மண்டலமேயாம்.
***

5.நடராஜர் ஆனந்த தாண்டவம் புரியும் சிதம்பரத்தைக் கனக சபையாகச் செய்ய நினைத்த ஆதித்தன் என்னும் அரசன் அதற்கான தங்கத்தை எங்கிருந்து, எப்படி பெற்றான்?
இதற்கான பதிலை கொங்கு மண்டல சதகத்தின் 29ஆம் பாடல் தருகிறது.
பற்றறுத் தாளும் பரமனா னந்தம் பயினடஞ்செய்
சித்தம் பலத்தைப்பொ னம்பல மாகச் செயச்செலும்பொன்
முற்றிலுந் தன்னகத் தேவிளை வாவதை மொய்ம்பிறையுண்
மற்றும் புகழக் கொடுத்ததன் றோகொங்கு மண்டலமே
இந்தப் பாடலின் பொருள் : சிவபிரான் ஆனந்த தாண்டவம் புரிந்தருளும் சிதம்பரத்தைக் கனகசபையாக்கத் தேவையான தங்கம் அனைத்தையும் தன்னிடத்தே விளைந்த பொன்னைக் கொடுத்து அரசனும் வியக்கப் புகழை அடைந்ததும் கொங்கு மண்டலமே. (முழுக்கதை வேண்டுவோர் பிளாக்கில் முன்னம் வெளியான கட்டுரைகளைக் காண்க.)
***
6.திருமணி தொப்பைபூங் காவேரி வானியுஞ் செய்யநதி
தருமணி காஞ்சி பொருனைநள் ளாறொடு சண்முகமுங்
குருமணி பாலை நதிவாழை காரி குடவனதி
வருமணி சண்பகஞ் சிற்றாறு சூழ்கொங்கு மண்டலமே.
– பாடல் 6
திருமணிமுத்தாறு – தொப்பையாறு – பவானியாறு - செய்யாறு – நொய்யலாறு – ஆம்பிராவதி – நள்ளாறு – சண்முக நதி - பாலையாறு – வாழையாறு +பாரத்துவாசநதி – குடவனாறு – சண்பக நதி - சிற்றாறு சூழ்ந்துள்ளது கொங்குமண்டலம் என்பதாம்.
***
7.பாரியூரில் செட்டி பிள்ளையப்பன் என்ற பெரிய கொடையாளி ஒருவர் இருந்தார். அவர் மீது கவிபாடிக் கொண்டு புலவர் ஒருவர் வந்தார். கொடுத்துக் கொடுத்துக் கையில் ஒன்றுமில்லாமல் இளைத்திருந்த செட்டி பிள்ளையப்பன் சற்று வருத்தத்துடன் சிந்திக்கலானார்.ஆகவே அருகில் உள்ள புலித்தூறிற் புகுந்து அங்கிருக்கும் புலிக்கு உணவாவதே சாலச் சிறந்தது.இப்படி எண்ணிய செட்டி பிள்ளையப்பன் புலி உறையும் இடத்திற்குச் செல்லலானார்.
அப்போது அங்கு கொள்ளையடித்த பொற்குவியல்களை பங்கு போட்டுக் கொண்டிருந்த திருடர்கள் அவரைப் பார்த்து பயந்து அவற்றை அப்படியே விட்டு விட்டு ஓடினர்.இதனால் மகிழ்ந்த செட்டி பிள்ளையப்பன் அவற்றை எடுத்து வந்து புலவருக்கு உரிய முறையில் பரிசுகளை வழங்கினார்.
கொங்கு மண்டல சதகம் 99வது பாடல் செட்டி பிள்ளையப்பனைப் போற்றுகிறது.
கவியின் மெலிந்த புகல்கவிக் கீயக் கயிலின்மையால்
புலியி னுழைபுக்குக் கள்வர்கள் பங்குப் பொருட்டிரளை
மலிய வெடுத்தப் புலவனுக் கீந்த வடகரையான்
வலியன் கனவாளன் செட்டிபிள் ளான்கொங்கு மண்டலமே
இதன் பொருள் : வறுமையால் தளர்வுற்ற காலத்தில், கூறிய பாட்டைக் கேட்டு அவருக்குப் பொருள் கொடுக்க கையில் ஒன்றும் இல்லாததால், புலி வாழுமிடத்தில் புகவே, அங்கு திருடர்கள் பங்கிட்டுக் கொண்டிருந்த பொற்குவியலை அடைந்து கவி பாடிய புலவனுக்குக் கொடுத்த வடகரை நாட்டினனான செட்டி பிள்ளான் என்பவனும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே!
***
8.படிக்காசுப் புலவர், ராமநாதபுர சமஸ்தானத்தில் இரகுநாத சேதுபதியின் சமஸ்தான வித்வானாக இருந்து பெரும் புகழ் பெற்றார்.ஒரு சமயம் தல யாத்திரையை மேற்கொண்ட அவர் கொங்கு மண்டலம் வந்தார்.கவசை நகரில் கல்வி கேள்விகளில் வல்லவராயும் வள்ளன்மையில் சிறந்தவராயும் இருந்த மசக்காளி மன்றாடி தலைமையில் தமிழ்ப் புலவர் சபை ஒன்று கூடிற்று.அதில் வண்ணப் பாக்கள் சொல்வது பற்றிய வாதம் ஒன்று நடந்தது.அதில் படிக்காசுப் புலவர் எடுத்துக் கொடுத்தபடி முடிக்கவில்லை என்று சொல்லி அவர் கொண்டு வந்த பல்லக்கு முதலியவற்றை கொங்கு மண்டலப் புலவர்கள் எடுத்துக் கொண்டனர்.
படிக்காசுப் புலவர் தனது ஆடை முதலியவற்றைச் சுமந்து கொண்டு பாடலைப் பாடினார்:
“அஞ்சாலி மக்களுஞ் சாணாகும் பாணரு மம்பட்டருஞ்
செஞ்சாயக் காரரும் வேசையர் மக்களுஞ் செந்தமிழைப்
பஞ்சாகப் பன்னி யொருகாசுக் கோர்வண்ணம் பாடலுற்றார்
நஞ்சாகப் போச்சுதை யோவென் றமிழ்கொங்கு நாடெங்குமே”
பின்னர்உடல்நலம் குன்றி , திருச்செங்கோட்டுக்கு வந்து அர்த்த நாரீஸ்வரர் மீது பதிகம் பாடி, தேக சுகத்தை அடைந்து உமைபாகப் பதிகம் பாடினார். பின்னர் சமீபத்தில் உள்ள மோரூர்க்குச் சென்று பாம்பலங்காரர் மீது வருக்கக் கோவை பாடி அரங்கேற்றினார். அதற்காகக் குமாரசாமிக் காங்கேயன் சன்மானம் தர அதை ஏற்றார்.
***

9.வில்லிபாரதத்தைத் தமிழில் பாடும்படி செய்வித்த ஆட்கொண்டான் என்பவனும் கொங்கு மரபினன் என்று சதகநூல் கூறுகின்றது. அதற்குச் சான்றாக வில்லிபுத்தூராரின் மகனார் வரந்தருவார் பாடிய பாயிரத்தைக் காட்டுவார்.
ஒளவையாருக்குப் பொன்னிலை பரப்பி அன்னமிட்டு விருந்துபசரித்தான் கொங்கு நாட்டைச் சார்ந்த அசதி என்பான் (50) என்று பிறிதொரு பாடல்
கூறும். ‘கங்கக் குரிசில் உவக்க நன்னூலைக் கனிந்து புகல் துங்கப் புலமைப் பவணந்தி’ கொங்கு மண்டலத்தைச் சார்ந்த சனகாபுரம் என்னும் ஊரினர் (54) என்பர். ‘பண்பார் சிவப்பிரகாசரைப்’ போற்றியது கொங்கு மண்டலமாகும் (57). ஆணூர்ச் சர்க்கரை புலவர்களைப் போற்றிப்புரந்த செயல்
வியப்பிற்குரியதாகும். புலவர்கள் அவனைப் பற்றிப் பாடிய அழகிய பாடல்
வருமாறு:
செங்குன்றை யெல்லாநின் செங்கைக் கொடையதனுக்
கெங்கெங்குந் தேடியிணை காணேங் – கொங்கதனிற்
சர்க்கரையைப் பாடலாம் தண்டமிழ்க்கொன் றீயாத
எக்கரையாம் பாடோ மினி.
புலவருக்காகக் காய்ச்சிய நெய்யில் கையிட்டுச் சத்தியம் செய்தவன்
ஆணூர்ச்சக்கரையாவன் (63).
****
10. அறுவைச் சிகிச்சையில் தேர்ந்த மருத்துவப் பெண்டிர் அக்காலத்தில் விளங்கியிருந்தமையைக் கொங்கு மண்டல சதகப்பாடல் ஒன்று கூறுகிறது. வயிற்றைக் கீறிக் குழந்தையை எடுக்கும் இம்முறையை அக்காலத்திலேயே பின்பற்றியுள்ளனர் கரிகாலர் சோழன் மகளுக்கு வந்த வலிப்பு நோயை ஒரு குலாலன் மட்பாவை செய்து குறிபார்த்துச் சுட அவ்வலிப்புநோய் நீங்கியது எனப் பாடல் கூறும் C-section (caesarean operation/section) normally takes about 40 to 50 minutes from start to finish.
கரிகாலச் சோழன் மகளுக்கு வந்த கனவலிப்பு
மெரியா மூடலை மயக்கமட் கோவ னிறைமகளைப்
பரிபா லனஞ்செய மட்பாவை யிய்குறி பார்த்துச்சுட
மரியாம லவ்வலி யேகிய துங்கொங்கு மண்டலமே. 89
–subham—
Tags- கொங்கு மண்டல சதகம் , 10 கேள்விகள், மருத்துவச் செய்திகள், படிக்காசுப்புலவர், அவ்வையார், கார்மேகக் கவிஞர்