

Written by London Swaminathan
Post No. 16,109
Date uploaded in London – 20 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(ராமலிங்க சுவாமிகளின் பொன்மொழிகள் என்ற தலைப்பில் நூறு பொன் மொழிகளை இந்த பிளாக்கில் மூன்று மாத காலண்டர்களில் (Year 2021) காணலாம்).
1
திருவருட்பா நூலைப் பாடியவர் யார்? எப்போது பாடினார்?
2
திருவருட்பா நூலில் என்னென்ன கடவுளின் துதிகள் உள்ளன ?
3
சிவன் மீது அவர் பாடிய 100 பாடல்கள் உள்ள தொகுப்புக்கு என்ன பெயர் ?
4
தெய்வமணிமாலை என்ற பாடலில் என்ன உள்ளது ?
5
தாயை மகன் மறந்தாலும் மகனைத் தாய் மறந்தாலும் சிவ பெருமானை நான் மறக்க மாட்டேன் என்ற புகழ்பெற்ற பாடல் எது ?
6
மாமிச உணவு பற்றி வள்ளலார் என்ன சொன்னார் ?
7
வடிவுடை மாணிக்கமாலை (இரண்டாம் திருமுறை) என்ற பாடலை எந்த ஊர் அம்பிகையின் மீது பாடினார் வள்ளலார் ?
.8
நிறைய பாடகர்களால் பாடப்பட்ட ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும் — என்ற பாடலின் முழு வடிவம் என்ன ? திரைப்படத்தில் இடம்பெற்ற வள்ளலார் பாடல்கள் எவை ?
9
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி
என்ற பாடலின் மொத்தக் கருத்து என்ன ?
10
அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் பற்றி வள்ளலார் (ராமலிங்க சுவாமிகள்) என்ன சொல்கிறார் ?
****



விடைகள்
1.ராமலிங்க சுவாமிகள் பாடினார்; அவர் வாழ்ந்த காலத்தில் பாடினார். ராமலிங்க சுவாமிகள் (வாழ்ந்த காலம் அக்டோபர் 5, 1823 முதல் ஜனவரி 30, 1874 வரை ஆகும்).
***
2.பெரும்பாலும் சிவன், முருகன் பற்றிய துதிகள் உள்ளன. பிள்ளையார் பற்றியும் அவர் பாடியுள்ளார். அம்பிகையையும் ராம பிரானையும் பல பாடல்களில் போற்றியுள்ளார். இராமநாமப்பதிகம் என்று பத்து பாடல்களும், வீரராகவர் போற்றிப் பஞ்சகம் என்ற பெயரில் ஐந்து பாடல்களும் பாடினார். திருவொற்றியூயூர் வடிவுடை அம்மனைப் பாடினார். ஆங்காங்கே கலைமகளையும் திருமகளையும் துதித்துள்ளார்
****
3.சிவபெருமான் மீது வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் பாடிய மஹாதேவ மாலையில் நூறு பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் சிவ பெருமானின் போற்றுதலை விட தத்துவ வசனங்களே அதிகம். பஜனைகளில் பாடக்கூடிய தாளத்துடன் வரக்கூடிய சிவ நாமாவளி அம்பலத் தரசே என்று துவங்கும் பாடல் ஆகும்.
****
4.தெய்வமணிமாலை என்பது இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) இயற்றிய திருவருட்பாநூலில் ஐந்தாம் திருமுறையில் இருக்கிறது .சென்னை கந்தகோட்டத்தில் உள்ள முருகப்பெருமான் (சண்முகப் பெருமான்) மீது பாடிய பாடல்கள் இதில் உள்ளன;
தெய்வமணி மாலையில் 31 பாடல்கள் உள்ளன ; எல்லா பாடல்களும் சென்னையில• கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே….. என்று முடியும். இராமலிங்க வள்ளலார், சென்னை, ஏழுகிணறுப் பகுதியில் உள்ள வீ ராசாமிப் பிள்ளைத் தெருவில் வாழ்ந்திருந்த காலத்தில், சென்னை, கந்தகோட்டம் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமானை வழிபட்டுப் பாடியது தெய்வமணி மாலை. . இந்தப் பாடல்களை இராமலிங்க வள்ளலார், தனது ஒன்பதாம் வயதில், பள்ளியில் படிக்கும் காலத்தில் இறையருளால் பாடியதாகக்சொல்லப்படுகிறது.
****
5.இரண்டாம் திருமுறையில் வரும் கீழ்கண்ட பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆகும்; இதையும் எம் எஸ் . உள்பட நிறைய சங்கீத வித்துவான்கள் பாடியுள்ளனர் . இது திருவருட்பா நூலில் இடம் பெற்றுள்ளது.
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
****
6 .”கொல்லா நெறியே குருவருள் நெறி எனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச் சிவமே”
இவ்வரிகளால் புலால் தவிர்த்தலே குருவருளைப் பெறுவதற்கான வழி என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
வடலூரில் பெருமனார் அமைத்த சத்திய ஞானசபையின் நுழைவு வாயிலில் ” புலை கொலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே நுழையவும் “என்ற அறிவிப்பு உள்ளது. இதன் மூலம் வள்ளல் பெருமனாரின் ஞான மார்க்கத்திற்குப் புலால் தவிர்த்தல் அடிப்படை தகுதி என்பது உறுதியாகின்றது.
*உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்; அவர் புற இனத்தார். அவர்களுக்குப்
பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக; பரிந்து மற்றைப் பண்பு உரையேல்….*
என்று வள்ளல் பெருமனார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் 607 -ஆம் பாடலில் பாடியுள்ளார்.
****
7.அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகள் திருவொற்றியூரில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார். அங்கு தியாகராஜருடன் கோவில் கொண்ட வடிவுடை அம்மனைப் போற்றி 101 பாடல்களைப் பாடினார். ஒரு பாடலில் என் குல தெய்வமே என்று அம்மனைப் பாடிப் பரவுகிறார்
****
8.கொஞ்சும் சலங்கை (1962): இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்” என்ற வள்ளலாரின் பாடல் பிலஹரி ராகத்தில் அமைக்கப்பட்டு சூலமங்கலம் ராஜலட்சுமி அவர்களால் பாடப்பட்டது.கோகிலவாணி (1956): இத்திரைப்படத்திலும் வள்ளலாரின் திருவருட்பா பாடல்கள் சில பின்னணியில் இடம்பெற்றுள்ளன/
1988 ஆம் ஆண்டு வெளிவந்த சர்க்கரைப் பந்தல் திரைப்படத்தில் ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) எழுதிய வரிகளில் இடம்பெற்ற பாடல் “அன்பென்னும்” என்ற பாடலாகும். இப்பாடலை சுனந்தா பாடியுள்ளார், இளையராஜா இசையமைத்துள்ளார்.
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
****
9.”வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்” என்பது இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) இயற்றிய திருவருட்பா பாடலாகும். ஆன்மீக அனுபவத்தின் உச்ச நிலையில் மாயைக் காட்சிகள் நீங்கி, மெய்யான ஓம்கார நாதம் வெளிப்படுவதை விளக்கும் உயர்ந்த ஆன்மீகப் பாடலாகும். திருவருட்பாவின் ஆறாம் திருமுறையில் இடம்பெற்ற இப்பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பாடி பரப்பியுள்ளனர். வானத்தில் ஆடிய மயில் குயிலாக மாறியது என்பது ஆன்மீகத்தில் மனம் ஒடுங்கி, பேரின்த நாதம் உண்டாவதைக் குறிக்கும் குறியீடாகும்.
1. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி
மயில்குயில் ஆச்சுதடி.
2. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
வள்ளலைக் கண்டேனடி – அக்கச்சி
வள்ளலைக் கண்டேனடி.
3. சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேனடி – அக்கச்சி
சோதியைக் கண்டேனடி.
4. பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேனடி – அக்கச்சி
ஐயரைக் கண்டேனடி.
****
10.வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே– என்று மாணிக்கவாசகரைப் போற்றுகிறார் .
**
வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக்
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறு மென்னிலிங்கு நான்அடதல் வியப்பன்றே.
அப்பர் பெருமானையும் அவரை மீண்டும் சைவ நெறிக்கு அழைத்துவந்த திலகவதியாரையும்
அருள்வழங்கும் திலகவதி அம்மையார் பின்
அவதரித்த மணியே சொல்லரசே — என்று போற்றுகிறார்.
**
மூன்று வயதில் உமாதேவியின் ஞானப்பாலுண்டு கவி மழை பொழிந்த ஞான சம்பந்தரை ,
ஏரார் பருவம் மூன்றில் உமை இனிய முலைப்பால் எடுத்து ஊட்டும் இன்பக் குதலை மொழிக் குருந்தே — என்றும்
பேரார் ஞான சம்பந்தப்பெருமானே நின் திருப்புகழைப் பேசுகின்றார் மேன்மேலும் பெருஞ்செல்வத்தில் பிறங்குவரே– என்றும் பாடி மகிழ்கிறார் .–subham—
Tags– திருவருட்பா நூல்,10 கேள்விகள் ,ராமலிங்க சுவாமிகள் , வள்ளலார், தெய்வமணிமாலை , பெற்றதாய்தனை மக, ஒருமையுடன் நினது, வனத்தின் மீது மயில், வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை