Written by London Swaminathan
Post No. 16,153
Date uploaded in London – 1 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
நளவெண்பா நூலை இயற்றியவர் யார் ? அந்த நூலில் யார் கதையை அவர் கூறினார் ?
2
அந்த நூலில் உள்ள பகுதிகள் எவை? பாடல்கள் எத்தனை?
3
புகழேந்திப் புலவர் எந்தக் கடவுளின் பக்தர் என்பதை நளவெண்பா காட்டுகிறது ?
4
இந்தப் பாடலுக்கான மூலக் கதையை அவர் எங்கிருந்து பெற்றார் ?
5
ருது பர்ணனுக்கு தேரோட்டியாக இருந்த நளன் ஓட்டிய தேரின் வேகம் என்ன ?
6
நூலாசியரை யார் சிறையில் அடைத்தார் ?அப்போது புலவர் இயற்றிய நூல்கள் யாவை ?
7
கம்பன் அவரை ஆதரித்த சடையப்ப வள்ளலை ஆங்காங்கே பாடலில் குறிப்பிட்டு நன்றிக் கடன் செலுத்தினான். நமது புலவரை ஆதரித்தவர் யார்? அவரைபுகழேந்தி எப்படிப் புகழ்ந்தார் ?
8
யுதிஷ்டிரன் என்னும் தர்மனைப்போல நளனும் சூதாட்டத்தில் நாட்டை இழந்தான். பின்னர் எப்படி சூதாட்டத்தின் மூலம் நாட்டினைத் திரும்பப்பெற்றான் ?
9
தமிழ் இலக்கியத்தில் பறவைகளையும் தேனீக்களையும் காதலிகள் தூது விடுவதைப் படித்திருக்கிறோம் ;அதற்கெல்லாம் முன்னதாக நளனும் தமயந்தியும் காதல் தூதுவிட்ட பறவை எது?
10
நளவெண்பாவில் இலக்கிய நயம் உள்ளது; சூரியன் மாலைப்பொழுதில் மறைந்ததை எப்படி வருணிக்கிறார் ?
*******************
விடைகள்
1.நளவெண்பா என்ற நூலினை வெண்பாவிற்குப் புகழேந்தி என்று தமிழ் அறிஞர்கள் போற்றிய புகழேந்திப் புலவர் இயற்றினார் ; அவர் தொண்டை நாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டில் வேலை செய்து, சோழநாட்டுக்குச் சென்று சிக்கலில் மாட்டினார். அவர் வாழ்ந்த காலம் காலம்: 12-ஆம் நூற்றாண்டு .அவர் இயற்றிய நூலில், நளன்- தமயந்தி காதலையும் அவர்கள் கலி புருஷனால் பட்ட துன்பங்களையும், இறுதியில் இருவரும் மீண்டும் சேர்ந்து, துயர் நீங்கியதையும் பாடல் வடிவில் கொடுத்துள்ளார் .
****
2.இந்நூல் மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது:சுயம்வர காண்டம் (171 வெண்பாக்கள்)கலிதொடர் காண்டம் (155 வெண்பாக்கள்)கலிநீங்கு காண்டம் (94 வெண்பாக்கள்); பாயிரம் மற்றும் நூல் வரலாறு உள்ளிட்டவை சேர்த்து மொத்தம் 427 வெண்பாக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
***
3.புகழேந்திப் புலவர், விஷ்ணு பக்தர் ஒவ்வொரு காண்டத்திலும் விஷ்ணுவைப் புகழந்து பாடியுள்ளார் ஆயினும் நூலின் துவக்கத்தில் பிள்ளையார், முருகன், சிவன் ஆகியோரையும் பாடியுள்ளார் ; நம்மாழ்வாரையும் இவர் போற்றித் துதித்துள்ளார்.
ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் – வேதத்தின்
முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப
என்என்றான் எங்கட் கிறை.- என்ற பாடலில் வராக அவதாரம், நரசிம்மவதாரம், கஜேந்திர மோட்சம் மூன்றினையும் குறிப்பிட்டு விஷ்ணுவைத் துதிக்கிறார் .
***
4.மகாபாரதத்தில் ஆரண்ய காண்டத்தில் நளோபாக்கியானம் உள்ளது; அதுவே மூலக்கதை; தர்மபுத்திரனுக்கு வியாச பகவான் இதைக்கூறி, நீ மட்டும் வனவாசத்தில் துன்புறுவதாக நினைக்காதே உன்னையும் விடத் துன்பங்கள் அடைந்து, பின்னர் இன்பத்தை அனுபவித்ததை பார் என்று நளன்-தமயந்தி கதையைச் சொல்லி ஆறுதல்படுத்துகிறார்.
****
5.நளன், தன் பெயரை பாகுகன் என்று மாற்றிக்கொண்டு ருதுபர்ணன் என்னும் மன்னனிடம் வேலை செய்கிறான். தமயந்தி நளனைக் கண்டுபிடிப்பதற்காக, போலியாக இரண்டாவது சுயம்வரத்தை அறிவிக்கிறான்; அதற்கு ருதுபர்ணன் செல்ல விரும்பியபோது ஒரே நாளில் தேரில் அவரை நிடத நாட்டுக்கு அழைத்துவருகிறான். அப்போது தேரின் வேகத்தைக் காட்டுவதற்கு சுவையான ஒரு பாடலைப் புகழேந்திப் புலவர் நமக்கு அளிக்கிறார்.
நளவெண்பா பாடலில் தேரின் வேகம் குறித்து புகழேந்தி பாடியது:
“மேலாடை வீழ்ந்ததெடு என்றான் அவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே — தோலாமை
மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக்க லிச்சூதில்
மால்கொண்டான் கோல்கொண்ட மா”
பொருள் :
“எனது மேலாடை விழுந்துவிட்டது, தேரை நிறுத்தி அதை எடு” என்று மன்னன் இருதுபன்னன் கூறி முடிப்பதற்குள், நளன் செலுத்திய குதிரைகள் இருபத்து நான்கு காதம் தூரம் (நாலாறு காதம்) கடந்து முன்னேறிச் சென்றுவிட்டன. (ஒரு காதம் என்பது சுமார் 10 முதல் 14 கிலோமீட்டர் தூரத்தைக் குறிக்கும்; எனவே 24 காதம் என்பது மிக நீண்ட தூரமாகும்)
****
6.இவர் பாண்டியமன்னன் பேரவையில் தலைமைப் புலவராக இருந்தபோது குலோத்துங்கசோழன் பேரவைப் புலவராகிய ஒட்டக்கூத்தர், சோழமன்னனுக்குப் பெண் கேட்பதற்கு பாண்டியன்பால் வந்தார். அப்போது புகழேந்தியாருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் வாக்குவாதம் நிகழ, இருவரும் தம்தம் அறிவின் ஆற்றலைக் காட்டினர். அதில் ஒட்டக்கூத்தர் தோற்றுப்போனார். பின்னர்ப் பாண்டியன் புதல்வியைச் சோழமன்னனுக்கு திரு மணம் செய்தனர் ; அதற்கு மகட்கொடை (சீதனம்) ஆகக் கொடுத்த பொருள்களுடன், புகழ்ந்தியாரையும் விடுத்தனன் எனவும், ஏற்கெனவே நிகழ்ந்த உரையாடலினால் ஆத்திரம் கொண்ட ஒட்டக்கூத்தர், இவரைச் சிறைப்படுத்தினர் எனவும், அது காலையே ‘அல்லியரசாணி மாலை,’ ‘பஞ்சபாண்டவர் வனவாசம்,’ போன்ற அம்மானை நூல்கள் பாடினாரென்றும் கூறுவர்.
****
7. புலவரை ஆதரித்த சிற்ரசனின் பெயர் சந்திரன் சுவர்க்கி. சந்திரன் சுவர்க்கி யென்னும் இவன், சோழ நாட்டுச் சிற்றரசன். இவன்றன் வேண்டுகோட்கிசைந்தே இந் நூலைப் பாடி அரங்கேற்றினார். இவன் நீதி தவறாது குடிமக்கள்பால் அன்பு காட்டி நாட்டை ஆண்டான் என்பதை ‘மாமனு நூல் வாழ வரு சந்திரன் சுவர்க்கி’ என்னும் தொடரினால் காட்டுகின்றார்.
24. மாமனுநூல் வாழ வருசந் திரன்சுவர்க்கி
தாமரையாள் வைகும் தடந்தோளான் – காமருபூந்
தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி.
இவன் இவர் போன்ற பல புலவர்களை ஆதரித்து வேண்டுவன நல்கிப்புரந்து வந்த அருளாளன் என்பதைக் கலிநீங்கு காண்டத்து, நளனைப் பற்றியிருந்த கலி அறவே நீங்கிச் சென்றுவிட்டதைக் குறித்து உவமையாக,
‘வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்
தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி – கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி’ (48)
‘சந்திரன் சுவர்க்கி வேந்தனாற் கொண்டாடப்படுகின்ற பாவலன்பால் நின்ற பசிப்பிணி அறவே இல்லாமல் போவதுபோல், நளவேந்தன்பால் நின்ற கலி நீங்கினான்’ என்று எவ்வளவு சிறப்பாகத் தம் நன்றி மறவாத நலத்தையும், தம்மைப் புரந்த அரசன் புகழையும் நிறுவிக் காட்டுகின்றார்.
***
8.அசுவஹிருதயம் மந்திரம்: நளன் குதிரைகளை மிக அதிவேகமாக செலுத்தும் ‘அசுவஹிருதயம்‘ என்ற அரிய கலையை அறிந்தவர். அவரது அசாத்திய தேரோட்டும் திறமையைக் கண்டு ருதுபர்ணன் வியப்படைந்தார். தமயந்தியின் இரண்டாம் சுயம்வர செய்தி கேட்டு, ருதுபர்ணனை ஒரே நாளில் விதர்ப்ப நாட்டிற்கு நளன் தேரில் அழைத்துச் சென்றார். அந்தப் பயணத்தின் போது, நளன் தனது தேரோட்டும் கலையை (அசுவஹிருதயம்) ருதுபர்ணனுக்குக் கற்றுக் கொடுத்தார். அதற்குப் பதிலாக, சூதாட்டத்தில் வெல்வதற்குக் காரணமான எண்கணித வித்தையான அக்ஷஹிருதயம் (பகடை ரகசியம்) என்ற கலையை ருதுபர்ணனிடம் இருந்து நளன் கற்றுக் கொண்டார்.ருதுபர்ணனிடம் இருந்து பகடை வித்தையை நளன் கற்றுக் கொண்ட அடுத்த கணமே, அவரைப் பிடித்திருந்த கலி புருஷன் அவரிடமிருந்து நீங்கினான். மீண்டும் சூதாடி புஷ்காரன் என்பவரிடமிருந்து நாட்டை பெற்றார்.
***
9.இருவரும் அன்னப் பறவையை தூதுவிட்டுக் காதல் செயதிகளை பரிமாறிக்கொண்டனர்.
****
10.வையம் பகல்இழப்ப வானம் ஒளிஇழப்ப
பொய்கையும் நீள்கழியும் புள்இழப்பப் – பையவே
செவ்வாய் அன்றில் துணைஇழப்பச் சென்றடைந்தான்
வௌவாய் விரிகதிரோன் வெற்பு (நளவெண்பா 104)
மாலையில் பகற்பொழுதும் வானத்து ஒளியை இழக்க, பொய்கை கடற்கரை உப்பங்கழிகள் பறவைகளை இழக்க(அவை கூடடைந்ததால்) அன்றில் பறவைகள் பிரிவை இழக்கக்(தத்தம் துணையோடு கூட்டினை அடைய) காரணமாய் இருந்த சூரியன், தன் கதிர்களை மறைத்து மேற்கு மலையை அடைந்து மறைந்தான்.
-subham-
Tags- நளவெண்பா, 10 கேள்விகள், புகழேந்தி, ஒட்டக்கூத்தர்