
Written by London Swaminathan
Post No. 16,164
Date uploaded in London – 4 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

Source:
வெற்றிவேற்கை
(ஆசிரியர் : அதிவீரராம பாண்டியன்)
உரையும் கதைக்குறிப்பும்
வாழ்குடை, சுப்பிரமணிய சர்மா
மூன்றாவது பதிப்பு
ஆர். கணபதி அண்டு கம்பெனி,
பிரம்பூர், சென்னை.
1919 , 3rd edition
All Rights Reserved.)
(விலை அணா 5.
P.R. Rama Iyar and Co, Printers, Madras
————–
PROJECT MADURAI WEBSITE HAS THE FULL BOOK WITH NOTES AND 100 STORIES.
வெற்றிவேற்கை
1
அதி வீர ராம பாண்டியன் யார் ?
2
அவர் எத்தனை நூல்களை எழுதினார் ?
3
‘வெற்றிவேற்கை’ நூலில் அவர் பெண்களுக்கு கூறும் புத்திமதிகள் என்ன ?
4
66. முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து
அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் என்ன? நூலாசிரியர் நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?
5
உபநிஷத்தில் ஆலமரத்தின் விதையை வைத்து போதிக்கிறார் ஒரு ரிஷி; பஞ்ச தந்திரக் கதையில் ஆலமரத்தின் அழகான வருணனை வருகிறது; நமது புலவர் அதி வீர ராம பாண்டியன் என்ன சொல்கிறார் ?
6
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்- என்பது சம்ஸ்க்ருதத்தில் மாதா பிதா குரு தெய்வம் என்ற வாக்கியத்திலும் ஆசார்ய தேவோ பவ என்ற வேத வாக்கியத்திலும் வருகிறது . ஆனால் எழுத்து அறிவித்தவன் சிவன் என்ற புதிய விளக்கம் தருகிறார் 1919 ஆம்1919 ஆண்டு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா அது என்ன விளக்கம் ?
7
பயணிகளுக்கு அதி வீர ராம பாண்டியன் சொல்லும் அறிவுரைகள் என்ன ?
8
வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.
பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே! மெய்போ லும்மே!- இதற்கு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?
9
தறுகண் யானை தான் பெரி தாயினும்
சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு என்ன பொருள் ?
10
பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து
நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு என்ன பொருள் ?
*********************************


விடைகள்
1.இவர் பாண்டி நாட்டிலுள்ள தென்காசியில் அரசு செலுத்தினவர். சந்திரவம்சத்துச் சிற்றரசர். சைவ சமயத்தினர். இவர் சகோதரர் வரதுங்கராம பாண்டியன். தென்காசியின் சிலாசாசனத்தினால் இவர் காலம் சாலிவாகன சகம் 1485 (1564–1604 ce) என்று தெரியவருகிறது. கொற்கை யென்னும் பட்டணத்தில் இவரிருந்து அரசு நடத்தவில்லை. அஃது ஒருசமயம் இவரைச் சேர்ந்ததாக விருந்திருக்கலாம்.
***
2.’வெற்றிவேற்கை’, புத்தகத்துக்கு ‘நறுந்தொகை’ என்ற பெயருமு ண்டு. வெற்றிவேற்கை யென்பது புத்தகத்திலுள்ள தொடர்மொழி. அதிவீரராம பாண்டியன் செய்த வேறு நூல்கள் நைடதம், கூர்ம புராணம், காசிகாண்டம் என்பன. இவா சகோதரர் செய்த நூல் பிரமோத்தரகாண்டம். சிலர், கருவை வெண்பவந்தாதி கருவைக் கலித்துறையந்தாதி, கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி யென்ற மூன்று அந்தாதிகளை யும் இவர் செய்தாரென்று சொல்லுகின்றனர்.
***
3.பெண்களுக்கு கூறும் புத்திமதிகள்
12. பெண்டிர்க் கழகெதிர் பேராதருத்தல்.
பெண்டிர்க்கு – பெண்களுக்கு, அழகு – அழகாவது ஏன், எதிர் பேசாது – (கணவர் மொழிக்கு) எதிர்த்துப் பேசாமல், ஒருத்தல் – அடங்கியிருத்தலாம்.
14. குலமகட் கழகு தன் கொழுநனைப் பேணுதல்.
குலமகட்கு – நற்குலத்தில் ( உசித்த) பெண்களுக்கு, அழகு – அழகாவது, தன் – தன்னுடைய, கொழுநனை – நாயகனை, பேணுதல் – காப்பாற்றுதலாம்.
23. கொண்டோ ரெல்லாம் பெண்டிரும் அல்லர்.
கொண்டோர் எல்லாம் – (மணஞ் செய்து) கொண்ட மனைவிகள் யாவரும், பெண்டிரும் அல்லர் – நன்மனைவிகள் ஆகமாட்டார்கள்.
****
4. முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து
அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் – நூலாசிரியர் சொல்லும் கதை :
உள் முதல் – தன்னிடத்துள்ள முதலால், பண்டம் – பொருள்களை, கொண்டு – வாங்கி வைத்துக்கொண்டு, வாணிபம் செய்து – வர்த்தகம் செய்து, அதன் பயன் – அதனால் வரும் லாபத்தை, உண்ணா – அநுபவியாத, வணிகனும் – வைசியனும், பதர்-பதராவான். எ – அசை .
மைசூரில் சங்கரராவ் என்று ஒருவர் இருந்தார். அவருக்குப் பிதிரார்ஜிதமாக நாற்பது ஏகர் நிலம் இருந்தது. அவர் காலமறிந்து பயிர் செய்யத் தெரியாமல் வீண் செலவு செய்து கடன் பட்டுப் பாதி நிலத்தை விற்றுவிட்டார். மற்ற நிலங்கள் குத்தகையில் இருந்தன. தாசப்பா என்றவன் அவற்றை வைத்துக் கொண்டிருந்தான். ஒருநாள் தாசப்பா சங்கரராவைக் கண்டு ‘ஐயா! தாங்கள் நிலங்களை விற்கப்போவதாகச் சொல்கிறார்கள்; அது மெய்யாயின் அவற்றை எனக்கு விலைப்படுத்துங்கள் ! நான் பணம் கொடுக்கிறேன்’ என்றான். அவர் ஆச்சரியப் பட்டுத் தாசப்பா! எனக்கு எல்லா நிலங்களும் இருந்தும் செலவுக்குப் பற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை விற்றுக்கொண்டு வருகிறேன். நீ பாதி நிலத்தைக் குத்தகை யெடுத்து கொண்டு நிலம் வாங்குவதற்குப் பணம் சம்பாதித்திருக்கிறாய்; பணம் எப்படிச் சேர்த்தாய்? அதனை எனக்குச் சொல் ‘ என்று கேட்டார்.
அவன் ‘ஐயா! நீங்கள் எல்லாவற்றிற்கும் போ! போ!’ என்கிறீர்கள். நான் ஒவ்வொன்றுக்கும் ‘வா! வா!’ என்கிறேன். இதுதான் வித்தியாசம். அதாவது, நீங்கள் வேலையாட்களைப் போய் வேலை செய்யுங்கள்!’ என்கிறீர்கள். நான் ‘வாருங்கள்! வேலைக்குப் போகலாம்’ என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய் அவர்களோடு வேலை செய்து வருகிறேன். அதனால், எனக்கு அதிக லாபம் கிடைக்கின்றது’ என்று சொல்லி அந்நிலங்களை விலைக்குப் பெற்றுக்கொண்டான். ஆதலால், காலத்தில் பயிர் செய்து லாபம் சம்பாதிக்கத் தெரியாதவன் நெற்பதர் போலப் பயன்பட மாட்டான்.
— கதாவாசகம்.
***
5. தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும், அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.
தெள்ளிய – தெள்ளி யெடுக்கத்தக்க, ஆலின் – ஆலமரத்தின், சிறுபழத்து – சிறிய பழத்தினுடைய, ஒருவிதை – ஒருவிதையானது, தெள் – தெளிந்த, நீர் – நீரையுடைய, கயத்து – குளத்திலுள்ள, சிறு மீன் – சிறிய மீனின், சினையினும் – முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே – சிறியதே. ஆயினும் – ஆனாலும், அண்ணல் – பெருமை பொருந்திய, யானை – யானையும், அணி – அழகிய, தேர் – தேரும், புரவி – குதிரையும், ஆள் – காலாள்களுமாகிய, பெரும் – பெரிய, படையொடு – சேனைகளோடு, மன்னர்க்கு- அரசருக்கும், இருக்க (வெயிலில்) தங்கியிருக்க, நிழல் ஆகும் – நிழலைத் தரும். ஏ- அசை.
நெடுங்காலத்துக்கு முன்னர்க் காசிபர் என்ற முனிவருக்கு இரணியகசிபு என்று ஒரு புத்திரன் பிறந்தான். அவன் மிகவும் பெரிய வடிவத்தைக் கொண்டவன். உதயகிரி அஸ்தமனகிரி என்ற இரண்டு மலைகளையும் அவன் தன் காதுக்குக் குண்டலங்களாக அணிந்து திரிந்ததுவே அவன் பெரிய வடிவத்தைப் பிரசித்தியாக்கும். அவன் ஒருவரும் பெறமுடியாத உயர்ந்த வரத்தைப் பிரமதேவரிடத்தில் பெற்றிருந்தான். அவன் வரம் இது:- ‘ இரவிலும், பகலிலும், உயிருள்ளவற்றிலும், உயிரில்லாதவற்றிலும், உள்ளிலும் வெளியிலும், தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன நிற்பன என்ற எழுவகைத தோற்றத்திலும் தான் இறக்கலாகாது’ என்பதாம். அவனைப்போல யோசித்து வரம் பெற்றவர் ஒருவரும் இல்லை. பெரும்பாலும் அவன் வரமடைந்ததற்கு இறவாமலேயே இருந்திருக்கவேண்டும். அவனுக்குப் பிடிவாதமும் பெருங்கோபமும் அதிகம். கருவம் அவன் நெஞ்சத்தில் குடி புகுந்தது. அதனால், அவன் கடைசியில் கொஞ்சமும் அறிவில்லாமல் எல்லாரும் தன்னையே கடவுள் என்று கொண்டாடும் வண்ணம் கட்டாயப்படுத்தத் தொடங்கினான். அறிவுள்ளவர் பலரும் அதனைச் சிறிதும் அங்கீகரிக்க வில்லை. உலகத்தில் அவன் உபத்திரவமும் பயமும் அதிகமாக வளரத்தொடங்கின. அப்புறம் ஸ்ரீ மகாவிஷ்ணு நரசிங் காவதாரம் செய்து அவனை உபாயமாகக் கொன்று உலகத்தின் பயத்தை நீக்கினார். ஆதலால், உருவத்தில் பெரியவர்களான அனைவரும் அறிவிலும் பெரியவர்களாக முடியாது.
— பாகவதம்.
*****
6.எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
a. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (நமக்குக்) கற்பித்தவன், இறைவன் – கடவுளுக்குச் சமானமாக, ஆகும் – (வணங்கத்தக்கவன்) ஆவான்.
b. முற்காலத்தில் பாணினி என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் வடமொழியில் நிகரற்ற பண்டிதர். அவர் அப்பாஷைக்குத் தாம் ஓரிலக்கணம் செய்யவேண்டும் என்று பனிமலைச் சாரலில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யத் தொடங்கினார். அப்பொழுது சிவபெருமான் அவருக்குத் தரிசனம் கொடுத்துத் தமது இடக் காத்திலிருந்த டமருகம் என்ற வாத்தியத்தை ஒலிக்கப் பண்ணினார். அவ்வாத்தியத்திலிருந்து பதினான்கு வகையான அக்ஷா சப்தங்கள் உண்டாயின. பாணினி முனிவர் அச்சப்தங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு இலக்கண சூத்திரங்களை உண்டு பண்ணினார். அதற்குப் பாணினி வியாகர்ணம் என்று பெயர். அப்புறம் பதஞ்சலி என்ற வேறொரு முனிவர் அதற்குப் பாஷியம் (உரை) எழுதி விளக்கினார்.
முன்பு இமயவரசன் புத்திரியான பார்வதிதேவிக்குப் பனிமலையில் திருக்கலியாணம் நடந்தது. அதற்கு உலகத்திலுள்ள எல்லாத் தேவர்களும் எல்லா முனிவர்களும் ஒன்றாகத் திரண்டு வந்திருந்தார்கள். அதனால், உலகத்தின் வடக்குத் திசையில் பளு அதிகமாயிற்று. அந்தப் பாரத்தைத் தாங்கமாட்டாமல் அத்திசை தாழ்ந்து தெற்குத் திசை உயர்ந்து போயிற்று. சிவபெருமான் அதன் காரணத்தை உணர்ந்து தெற்கில் சென்று உலகத்தின் பளுவைச் சமன் செய்யும்படி முனிவரிற் சிறந்த அகஸ்தியருக்குக் கட்டளை யிட்டனர்.
அம்முனிவர் கடவுளை வணங்கித் ’தலைவரே! தங்கள் திருக்கலியாணம் காண உலகத்தில் உள்ள அனைவரும் வந்து ஒன்றாகத் திரண்டிருக்கின்றனர். நான் மாத்திரம் அதனைக் காணாமல் அகல்வது நியாயமாகுமா? அதனுடன் தெற்குத்திக்கு திராவிட தேசம். எனக்கு அந்தப் பாஷை கொஞ்சமும் தெரியமாட்டாது. நான் சென்று அங்கு எப்படியிருப்பேன் ?’ என்று சொன்னார். சிவபெருமான் ’அன்பனே! கவலையுறாதே ; எமது திருமணக்கோலத்தை நீ விரும்பும் ஒவ்வொரு சிவதலந்தோறும் உனக்குக் காண்பிக்கிறோம். திராவிட பாஷையில் உனக்குச் சிறந்த ஞானம் உண்டாகும் வண்ணம் அநுக்கிரகம் செய்கிறோம். உன் பெயரால் இலக்கணமியற்றி நீ அந்தப் புராதன பாஷைக்குத் தலைவனாக விளங்கிவா!’ என்று திருவாய்மலர்ந்து,
அவருக்குத் தமிழ்ப்பாஷையையும் அதன் இலக்கணத்தையும் உபதேசம் செய்தனர். உடனே முனிவர் கடவுளிடம் விடை பெற்றுக்கொண்டு தென் திக்கை அடைந்து பொதிகை மலையில் தங்கித் தமது பெயரால் அகத்தியம் என்று ஒரு பெரிய இலக்கணமியற்றித் தமிழ்ப் பயிரை வளர்த்தார். ஆதலால், வடமொழி தென்மொழி யென்ற இரண்டு பாஷைகளுக்கும் முதலில் இலக்கணத்தை அறிய வித்தவர் சிவபெருமானே யாவர்.
— திருவிளையாடற் புராணம்.
———-
எழுத்தறிவித்தவன் இறைவ னாகும்.
b. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (உலகத்துக்கு) முதலில் கற்பித்தவன், இறைவன் ஆகும் – கடவுள் ஆவார்.
2. முன்னர்ச் சொன்ன பட்டணத்தைச் சார்ந்த மைலாப்பூரில் திருவள்ளுவர் என்று ஒரு தமிழ்ப்புலவர் இருந்தார். அவர் தமிழ்ப்பாஷையைத் தெளிவாகக் கற்றவர். நல்லொழுக்கம் நிறைந்தவர். இல்வாழ்க்கையில் இயைந்தவர். முனிவர்களைப்போல முக்காலத்தையும் அறிந்து சொல்கின்ற ஞானக்கண் பெற்றவர். அவர் திருக்குறள் என்று மிகவும் சிறந்த நீதி நூலொன்று இயற்றி அதனை மதுரைப் பட்டணத்துக்கு எடுத்துக் கொண்டு சென்று அங்கிருந்த தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார். அதன் பொருள் இணையற்றதென்று எல்லா மதத்தவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மிகவும் சிறிய வாக்கியங்களில் பெரிய விஷயங்களை அடக்கித் தெளிவாகச் சொல்லியிருக்கும் நீதி நூல் தமிழ்ப்பாஷையில் அஃதொன்றேயாகும் அந் நூல் அவர்கள் திறமையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல உணர்த்துவது மல்லாமல், படிப்பவர் மனத்தைப் பாகுபோல வுருக்கிப் பயன் பெறவும் செய்கின்றது. ஆதலால், திருவள்ளுவரைப் போலக் குற்றமும் சந்தேகமும் இல்லாமற் சொல்வது தான் ஒருவன் கற்ற கல்விக்கு அழகாகும்.
— புலவர் புராணம்.
****
7.பயணிகளுக்கு அவர் சொல்லும் அறிவுரைகள் :
76. சுழியா வருபுனல் இழியா தொழிவது.
சுழியா – சுழித்துக்கொண்டு, வரு – வருகின்ற, புனல் – வெள்ளத்தில், இழியாது- இறங்காமல், ஒழிவது – நீங்கவேண்டும்.
76. துணையோ டல்லது நெடுவழி போகேல்.
துணையோடு – துணையினோடு, அல்லது – அல்லாமல், நெடுவழி – தூரமான வழியில், போகேல் – (நீ செல்லாதே.
77. புணைமீதல்லது நெடும்புனல் ஏகேல்.
புணைமீது- தெப்பத்தின்மேல், அல்லது-அல்லாமல், நெடும் புனல் – பெரிய நீரில், ஏகேல்- (நீ ) நீந்திச் செல்லாதே.
79. வழியே யோக வழியே மீளுக.
வழியே – (ஒருவன் இல்லற) வழியிலே, ஏகுக – செல்லக் கடவன்; வழியே – (பின்னர் ) அவ்வழியிலிருந்து, மீளுக – (துறவற வழியில்) திரும்பக்கடவன். இன்னுமொரு பொருள் : போன வழியை நினைவு வைத்துக்கொண்டு அதே வழியில் திரும்புக. பலரும் சுற்றுலா செல்கையில் வழித்தவருவது இயற்கை.
***
8. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.
பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே! மெய்போ லும்மே!
வாய் – வாயானது, பறை ஆகவும் – தம்பட்டம் என்ற பறை வாத்தியமாகவும், நா – நாவானது, கடிப்பு ஆகவும் – அடிக்கும் கோலாகவும் கொண்டு, சாற்றுவது – கொட்டித் தெரிவிப்பதாகிய, ஒன்றை – ஒரு காரியத்தை, போற்றி – ஆதரவுடன், கேண்மின் – கேளுங்கள். பொய் உடை – பொய் பேசுதலையுடைய, ஒருவன் – ஒருமனிதன், சொல் பேசுகின்ற, வன்மையினால் உறுதிப்பாட்டினால், மெய்போலும் – (அவன் பேசிய பொய்ச் சொற்கள் ) மெய்யே போலத்தோன் றும்; மெய்போலும் – மெய்யேபோலத் தோன்றும். ஏ – இரண்டும் அசைகள்.
71. முன்னொரு காலத்தில் சத்திராஜித்து என்று ஒரு உயர்ந்த அரசன் இருந்தான். அவன் சூரியனைக் குறித்துத் தவம் செய்து ஸ்யமந்தகமணி யென்ற ஒரு சிறந்த இரத்தினத்தைப் பெற்றான். அம்மணி நாள் தோறும் ஒரு பாரம் எடையுள்ள தங்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு சமயத்தில் கிருஷ்ணன் என்பவன் தனக்கு அந்த மணியைத் தரும்படி கேட்டதற்குச் சத்திராஜித்து மன்னவன் கொடுக்கமுடியாதென்று சொல்லிவிட்டான். பிற்பாடு அவன் தம்பி பிரேசனன் அம்மணியைக் கழுத்தில் தரித்துக்கொண்டு ஒருநாள் காட் டில் வேட்டையாடப் போனான். அவனை ஒரு சிங்கம் கொன்றுவிட்டு அத்தெய்வ மணியை எடுத்துக்கொண்டு போயிற்று. அதனைக்கண்ட ஜாம்பவான் என்னும் கரடி அச்சிங்கத்தைக் கொன்று தான் அம்மணியை அடைந்தது.
சத்திராஜித்து தம்பியும் மணியும் காணாமற்போன தனால் கிருஷ்ணன் தன் தம்பியைக் கொன்று ஒருவருமறியாமல் மணியை அபகரித்துக் கொண்டு விட்டான்’ என்று பலரும் கேட்க அவதூறு பேசத்தொடங்கினான். கிருஷ்ணன் அத்தெய்வமணியைத்தான் அப்கரிக்க வில்லையென்று பலர் முன்னிலையில் பலவிதமாகச் சொல்லியுங்கூட அவன் நம்பவில்லை. சத்திராஜித்து மன்னவனைச் சாந்தவர்களும் அவனைப் போலவே அவதூறு சொல்லிக் கிருஷ்ணனைத் தூற்றத் தலைப்பட்டார்கள். பின்பு கிருஷ்ணன் ஜாம்பவானைத் தேடிச் சென்று அவனோடு சண்டை செய்து ரணகளத்தில் அவனை வென்று அம்மணியைக் கொண்டுவந்து சத்திராஜித்து மன்னவனிடம் கொடுத்த பிற்பாடுதான் அவன் சொல் உண்மையாயிற்று. ஆதலால், சில சமயங்களில் மெய்ச் சொற்களும் பொய்ச் சொற்களாக மாறிப் போகின்றன.
— பாகவதம்.
***
9. தறுகண் யானை தான் பெரி தாயினும்
சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு பொருள்:
தறுகண் – அஞ்சாமையை உடைய, யானை – யானையானது, தான் பெரிது ஆயினும் – தான் (எல்லா மிருகங்களையும் விட உருவத்தால்) பெரியதா யிருந்தாலும், சிறுகண் – சிறிய கணுக்கள் (உள்ள), மூங்கில் கோல்கு – மூங்கிற் கோலுக்கு, அஞ்சும் – பயப்படும்.
முன்னாளில் சூரியன் புத்திரனாகிய சுக்கிரீவன் என்ற குரங்குத்தலைவன் ரிசிய மூக மலையில் வாசம் செய்து வந்தான். அநுமான் முதலான அறிவில் மிகுந்த வாநரர்கள் அவனுக்கு மந்திரிகளாகி அப்பொழு தப்பொழுது ஆகுங் காரியங்களை அறிந்து சொல்லிவந்தார்கள். வாலி அவ்விடத்துக்கு வந்தால் இறந்து போவான் என்பதை அவன் அறியாமலிருக்கவில்லை. மதங்கர் என்ற முனிவர் வாலிக்கு அவ்வாறு சாபமிட்டிருந்தார். ஆனாலும், சுக்கிரீவன் இரவும் பகலும் வாலியை நினைந்து பயந்து நடுங்கிக் கொண்டேயிருந்தான். இராமன் வந்த பிற்பாடுதான் அவ னுக்கு அந்தப்பயம் நீங்கிற்று. ஆதலால், எவ்வளவு பத்திரமான இடத்திலிருந்தாலும் பெரிய சத்துருக்களுக்கு அனைவரும் பயப்படுவார்கள்.
— இராமாயணம்.
***
10. பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து
நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு பொருள்:
பெற்றமும் – பசுக்களும், கழுதையும் – கழுதைகளும், மேய்ந்த – மேய்ந்து கொண்டிருந்த, அ பாழ் – அந்தப் பாழ் (நிலமானது), பொன் தொடி – பொன்னாலாகிய வளையல்களை (யணிந்த), மகளி ரும் – பெண்களும், மைந்தரும் -புருஷர்களும், செறிந்து – நிறைந்து, நெல் பொலி – நெல்லின் (குதிர்கள் ) விளங்குகின்ற, நெடுநகர் – பெரிய பட்டணம், ஆயினும் – ஆகும், ஆனாலும் – ஆகும்.
நெடுநாளைக்கு முன்பு கவுதமா என்ற முனிவர் தம் மனைவி அநசூயையோடு நைமிச வனத்தில் தவம் செய்துவந்தார். அப்பொழுது உலகத்தில் பன்னிரண்டு வருஷம் வரையில் மழை பொழியாமல் பெரும் பஞ்சம் பாவிப் பீடித்து வந்தது. வனத்திலிருந்த முனிவர்களும் நாட்டிலுள்ள அந்தணர்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வகையில்லாமல் கவுதமாச்சிரமத்துக்கு வந்து அவரைத் தஞ்சமடைந்தார்கள். கவுதம முனிவர் தமது உயர்ந்த வேத பாராயணத்தினாலும், சிறந்த தவவொழுக்கத்தினாலும் கோதுமைப் பயிர் செய்து அதிகமான தானியங்களை விளைத்து அத்தனை பெயரையும் குறைவில்லாமல் காப்பாற்றி வந்தார். பின்னர் இரண்டாவது தடவை நேர்ந்த அவ்விதமான மற்றொரு பஞ்சத்திலும் அவர் திரியம்பகம் என்றவிடத்தில் இருந்து கொண்டு தமது வேத பாராயண மகிமையினால் பிடி நெல்லை விதைத்துப் பயிர் செய்து விளைத்து எல்லாம் அந்தணர்களையும் பஞ்சம் தெளியும் வரையில் காப்பாற்றி வந்திருக்கிறார். அம்முனிவரைப்போல வேதமோதுவதும் அடுத்தவர்களை ஆதரிப்பதும் அந்தணர்களுக்குச் சிறந்த தருமமாகும்.– சிவபுராணம்.
–subham—
Tags- அதிவீர ராம பாண்டியன் நூல்கள், 10 கேள்விகள், வெற்றிவேற்கை, கதைகள் , சுப்பிரமணிய சர்மா