கர்ம பலனும் கடவுளின் கருணையும்! (Post.16,165)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,165

Date uploaded in London – 5 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கர்ம பலனும் கடவுளின் கருணையும்!

ச. நாகராஜன்

ஶ்ரீ ஓம்கார்நாத் தேவ் அவர்களின் புத்தகம் ‘கேபர் ஜூலி’யிலிருந்து

ஒரு சம்பவம்.

‘ராம ராம’ என்ற நாமத்தை ஜெபித்தால் மோசமான ஒரு சம்பவம் கூட நல்லதாக ஆகிவிடும்.

ஒரு நாள் கேபா (வங்காளத்தில் இறைபக்தியினால் ஊக்கமூட்டப்பட்ட ஒருவருக்கான சொல்) தெய்வ பக்தியில் திளைந்திருந்த போது ஒரு வயதான பெண்மணி அழுதவாறே அவர் அருகில் வந்ததைக் கண்டார்.

அவள், “ஓ! என் மகனே! எங்கே போனாய் நீ? எனக்கு இப்போது யாருமே இல்லை. என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? யார் எனக்கு உணவளிப்பார்கள்? உனக்காக நான் எல்லாவற்றையும் இழந்தேன். இப்போது நான் பிச்சை எடுத்துத் தான் வாழ வேண்டும்” என்று கூறிக் கதறினாள்.

கேபா அந்தப் பெண்மணி தன் ஒரே மகனை இழந்து விட்டாள் என்பதைப் புரிந்து கொண்டார். அவர் உள்ளம் இரக்கத்தால் நிரம்பியது. ‘எப்படி இது அவளுக்கு நல்லதாக ஆக முடியும்?’ என்று எண்ணிய அவர் அந்தப் பெண்மணியை நோக்கி, “கடவுள் எது செய்தாலும் அது நல்லதற்காகவே இருக்கும்” என்றார்.

தாங்க முடியாத துக்கத்தை அனுபவிக்கும் போது இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெண்மணி மௌனமாக கேபாவைப் பார்த்தாள்.

கேபா மௌனமாக உடகார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.

அவர் முன்னே ஒரு காட்சி விரிந்தது.

ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் அவர் பார்த்தார்.

“என்னிடமிருந்து வாங்கிய ஒவ்வொரு பைசாவையும் அதற்கான வட்டியுடன் சேர்த்துக் கொடு. இல்லையேல் பெரிய துரதிர்ஷ்டம் உனக்கு வந்து சேரும்” என்றான் அவன்.

அந்தப் பெண் சொன்னாள் :”எப்படி என்னால் தர முடியும்?என்னிடம் ஒன்றுமே இல்லை. பிச்சை எடுத்துத் தான் நான் வாழ்கிறேன். இந்தச் சமயத்தில் என்னால் உனக்கு எப்படி பணம் தர முடியும்?”

அதற்கு அவன் சொன்னான்: “அது பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்குச் சேர வேண்டிய பணம் வரும் வரையில் நீ என்னிடமிருந்து தப்பிக்கவே முடியாது! ஒவ்வொரு பைசாவையும் வட்டியுடன் உன்னிடமிருந்து நான் கறப்பேன். என்னை நீ அழ வைத்தது போல நான் உன்னை அழ வைப்பேன்.”

“என்னிடம் ஒன்றுமே இல்லாமல் இருக்கும் போது எப்படி என்னிடமிருந்து நீ உன் பணத்தை மீட்பாய்?” என்றாள் அந்தப் பெண்மணி.

அதற்கு அவன் கூறினான்: “எனது அடுத்த பிறவியில் நான் உன் மகனாகப் பிறப்பேன். நீ உன் ரத்தத்தால் அனைத்தையும் தியாகம் செய்து என்னை வளர்ப்பாய். உனது அனைத்துச் செல்வமும் இதில் போய் விடும். மொத்த பணமும் வட்டியுடன் தீரும் போது  நான் என் உடலை விடுவேன். எனது பணத்திற்காக இப்போது நான் வருந்துவது போல என்னை இழந்ததற்காக நீ வருந்துவாய்”.

காட்சி இத்துடன் முடிந்தது.

‘ராம ராம’ கடன் மொத்தமும் கொடுத்தாகி விட்டது. கடவுள் எதைச் செய்தாலும் அது நல்லதற்காகவே தான் இருக்கும்” என்று கூவினார் கேபா.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி கேபாவின் காலில் விழுந்து அவரை நோக்கி, “பெரியவரே! கடன் கொடுத்தாகி விட்டதா? இதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டாள்.

“என் காலை விடு! நான் ஒரு வெறும் பக்தன் தான். நான் ஒரு காட்சியைக் கண்டேன். உனது மகன் கடன் கொடுத்தவன். நீ கடனாளி. அவன் உன்னிடம் கடனை வசூலிக்க வந்தான்.” என்றார் கேபா.

பிறகு தான் கண்ட காட்சியை விளக்கினார்.

“நீங்கள் சொல்வதே சரி. நான் கடனாளி தான். அவன் தான் எனக்கு அனைத்தையும் கொடுத்தான். இப்போது நான் என்ன செய்வது?” என்றாள் அந்தப் பெண்மணி.

கேபா வானத்தை நோக்கிப் பார்த்தார், பின்னர் அந்தப் பெண்மணியிடம் கூறினார்: “இந்த பிரபஞ்சமே அவனுடையது தான். ராம ராம என்று ஜபி. அவனை அழை” என்றார்.

ராம ராம என்று ஜபிக்க ஆரம்பித்த அந்தப் பெண்மணி சாந்தியை அடைந்தாள். கடவுள் எது செய்தாலும் அது நல்லதற்குத் தான்; அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

கடவுளின் கருணையால் அவளது தீய கர்மம் தீர்க்கப்பட்டது!

*

நன்றி : கல்கத்தா வார இதழ் ட்ரூத் -தொகுதி 94 இதழ் 19 தேதி:21-8-2026

**

Leave a comment

Leave a comment