
எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1033 ; தேதி:- 10 மே 2014
சுமேரிய நாகரீகத்தில் துவக்க காலம் முதலே இரு மொழி பேசுவோர் வசித்தனர். இதே போல சிந்து சமவெளியிலும் பல மொழி பேசுவோர், பல தெய்வங்களை வழிபடுவோர் இருந்திருக்கலாம். எழுத்து ஒன்றாக இருந்தாலும் மொழி வேறுபட முடியும். இனம் ஒன்றாக இருந்தாலும் மதம் (வழிபாடு) வேறுபட முடியும். இன்றைய இந்தியா எப்படி இருக்கிறதோ அதே போல இருந்திருக்க வாய்ப்பு உண்டு. சிந்துவெளி பிரதேசத்தில் பிராமணர் செல்வாக்கு எவ்வளவு இருந்தது என்பதை ஆராய்வதே இக்க் கட்டுரையின் நோக்கம்.
சிந்து சமவெளி என்றும் சரஸ்வதி நதி தீர நாகரீகம் என்றும் அழைக்கப்படும் மொஹஞ்சதாரோ ஹரப்பா நகர நாகரீகம் யாருடையது என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அதனுடைய எழுத்துக்களும் இன்று வரை எல்லோரும் ஏற்கும் முறையில் படித்தறியப்படவில்லை. ஐம்பதுக்கும் மேலான வகையில் படித்துக் காட்டி இருக்கிறர்கள். ஆனால்– ‘’சாண் ஏறினால் முழம் சறுக்கி விழுந்த’’– கதையாக எல்லோரும் மண்னைக் கவ்விவிட்டார்கள்.
ஆரம்பத்தில் இரண்டு தவறுகள் நடந்ததால் இதை ஆராய்வோர் மூளை எல்லாம் மழுங்கிவிட்டது. ஹரப்பாவைத் தோண்டுவதற்கு நூற்றாண்டுக்கு முன்னரே இருந்து வந்த ‘ஆரிய- திராவிட’ வாதத்தை இதில் புகுத்தியதால் முறையான ஆராய்ச்சிக்கு வழி இல்லாமல் போனது. எல்லோரும் சேணம் கட்டிய குதிரை போல பார்வை குறைந்து போனார்கள். ஆனால் இவை எல்லாம் இப்போது “பொய்யாய் பழங்கதையாய்” போய்விட்டன. புதுப் புது தடயங்களும் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட சரஸ்வதி நதி தீரப் படங்களும் பழைய வாதங்களை தவிடுபொடி ஆக்கிவிட்டன.
இரண்டாவது தவறு சில சோவியத்-பின்னிஷ் “ஆராய்ச்சியாளர்கள்” அறிக்கை வெளியிட்டு இது ‘திராவிட மொழி அமைப்பு போல’ இருக்கிறது என்று கூறினார்கள். இது நடந்து அறுபது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இதில் எள்ளளவாவது உண்மை இருந்திருந்தால் கம்ப்யூட்டர்கள் போன்றவற்றைக் கொண்டு மகத்தான முன்னேற்றம் கண்டிருப்பார்கள். ஆனால் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆக அதுவும் “பொய்யாய் பழங்கதையாய்” போய்விட்டது!
நாற்பது ஆண்டுகளாக இது பற்றி ஏறத்தாழ முப்பது புத்தகங்களை மீண்டும் மீண்டும் படித்த பின்னர் என் மனதில் பட்டதைச் சொல்லுகிறேன்:

பிராமண நாகரீகமா?
பிராமணர்களுக்கும் இந்த நாகரீகத்துக்கும் தொடர்பு அதிகம் இருப்பது போலத் தோன்றுகிறது. எதையும் ஆதாரம் இல்லாமல் எழுதினால் நான் எழுதுவதை படிப்பதையே நிறுத்திவிடுவார்கள் என்பது தெரியும். ஆகவே நான் சேகரித்த ஆதாரங்களைக் கொடுக்கிறேன்:
1.மனுஸ்ருதி எனப்படும் மனுதர்ம சாஸ்திரத்தில் “இரண்டு தெய்வீக நதிகளான சரஸ்வதிக்கும் திரிஷத்வதிக்கும் இடைப்பட்ட இடம் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்றும் இதற்கு பிரம்மாவர்த்தம் என்று பெயர் என்றும் கூறுகிறார்.(மனு 2-17) இது சிந்து/சரஸ்வதி நதி தீரப் பிரதேசம். ஆக சிந்து சமவெளி நாகரீகம் தெய்வ பூமியில் உருவான நாகரீகம். ஆகையாலதான் ஏராளமான முத்திரைகளில் இதுவரை இனம் காணப்படாத ஒரு வடிகட்டி காணப்படுகிறது. இது சோம ரசத்தை வடிகட்டின சின்னமாக இருக்கலாம்.
2.சூதாட்டம் என்பது இந்தியா முழுதும் இருந்ததை ரிக் வேதமும் , மஹாபாரதமும் சங்க இலக்கியமும் (புறம் 43 காண்க), திருக்குறளும் (சூது என்னும் அதிகாரம் காண்க) உறுதி செய்கின்றன. இதை பிராமணர்களும் ஆடியது சங்க இலக்கியம், வேதம் வாயிலாகத் தெரிகிறது. சிந்து சமவெளியில் சூதாட்டக் காய்கள் கிடைத்திருக்கின்றன. சாருதத்தன் என்ற பிராமணன் சூதாட்டத்துக்கு அடிமையானதை வடமொழி நாடகங்கள் கூறுகின்றன.
3.உலகின் மிகப் பழமையான சமய நூல் ரிக் வேதம். அதில் பத்தாவது மண்டலத்தில் வரும் ஒரு பாடல் அம்பரீஷன் மகனான சிந்துத்வீபனால் பாடப்பட்டது. (எழுதப்பட்டது அல்ல) அது முழுக்க முழுக்க நீரின் சிறப்பைப் பாடுவது. இதை தினமும் பிராமணர்கள் மூன்று வேளைகளிலும் சொல்லி தலையில் நீரைப் ப்ரோக்ஷணம் (ஆபோஹிஷ்டா மயோ புவ:) செய்து கொள்கிறார்கள். ஆக சிந்துவெளியில் ஒரு வேதகால ரிஷி இருந்ததும் அவருடைய மந்திரம் இன்றுவரை பிராமணர் வீடுகளில் பயன்படுத்தப்படுதுவதும் தெரிகிறது.
4.சிந்து சமவெளியில் கிடைத்த எள் மர்மம் பற்றி தனிக் கட்டுரை எழுதி இருக்கிறேன். எள்+நெய் (எண்ணை) என்பதை உலகமே பயன்படுத்தலாம். ஆனால் அந்த எள்ளை பிராமணர்கள் மட்டுமே நீத்தார் நினைவாக இன்றுவரை பயன் படுத்துகின்றனர். இதன் மூலமாக சிந்து வெளி—எள்—பிராமணர் தொடர்பு தெரிகிறது.

5. இதே போல சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சர்க்கரை பெயரில் (இக்ஷ்வாகு= கரும்பு வம்சம்) ஒரு வம்சமே இருப்பதையும் எழுதி இருக்கிறேன்.
( சிந்துவெளி நாகரீகம் பற்றி நான் இதுவரை எழுதிய எல்லா கட்டுரைத் தலைப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)
6.அரசமரம் (போதி) புத்தர் மூலமாகப் பிரபலமானது. ஆயினும் அவர் அந்த மரத்துக்கு அடியில் போய் உட்காரக் காரணம் அது இந்துக்களின் புனித மரம் என்பதே. புத்தருக்கும் முன்னதாக பிப்பலாடன் (அரசமரத்தான்) என்ற பெயரில் ரிஷிகள் இருந்தனர். பிராமணர்கள் பூணூல் போட்டவுடன் இளம் வயதில் இருந்தே அரசங் குச்சிகளைப் பயன் படுத்தியே ஹோமம் (சமிதாதானம்) முதலான காரியங்களை செய்கின்றனர்.
7. நதிக் கரைகளில்தான் முக்கால் வாசி நாகரீகங்கள் உருவாயின. ஆயினும் பிராமணர்கள் நீரைப் பயன்படுத்தும் அளவுக்கு வேறு யாரும் சமயச் சடங்குகளில் பயன்படுத்துவது இல்லை. சிந்துவெளியில் பெரிய குளம் அதனருகில் குளியல் அறைகள் இருப்பது சமயச் சடங்குகளை நினைவுபடுத்துவதாக உள்ளது.
8.சிந்து சமவெளி குரு: பிராமணர்கள் இடது தோளில் பூணூல் அணிந்திருப்பர். வேத பாடசாலைகளிலும், யாக சாலைகளிலும் அவர்கள் துண்டு அணிவதும் இதே போல இடது தோளிலேயே இருக்கும். சிந்து சமவெளி குருவின் முத்திரையும் ஒரு வேத கால ரிஷியை நினைவுபடுத்துகிறது. மெக்காவில் காபாவைச் சுற்றும் முஸ்லீம்களும் பிராமணர் போல வெள்ளை வேஷ்டி அணிந்து இடது தோளில் துண்டு போட்டு சுற்றுவதை இன்றும் காணலாம். ஆனால் அவர்கள் வலமாகச் சுற்றுவதில்லை. இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னரே மெக்கா வழிபாட்டுத் தலமாக இருப்பதால் பழைய வழ்க்கத்தை அந்த மத ஸ்தாபகர் அப்படியே பின்பற்றி இருக்கக்கூடும்.
9 சிந்து சமவெளி முத்திரைகளில் இனம் தெரியாத ஒரு சின்னம் இருக்கிறது. இது சோம யாகத்தில் சோம ரசம் வடிக்கப் பயன்பட்ட வடிகட்டியாக இருக்கக்கூடும்.

10. சிந்து சமவெளி வீடுகளில் அக்னி வைக்கப்பட்ட இடங்கள் என்று சில இடங்களை அடையாளம் கண்டுள்ளனர். சில ஆய்வாளர்கள் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
11.பிராமணர்கள் தெய்வமாக வணங்கிய பசுமாட்டின் முத்திரை எங்குமே இல்லை. ஆனால் காளைமாடு மட்டும் முத்திரைகளில் உள்ளன. 4000–க்கும் மேலான முத்திரைகளில் பசுக்களே இல்லை என்பது மிக மிக அதிசயமான ஒரு விஷயம். பசுவை தெய்வமாகப் போற்றியதால் இப்படிச் செய்தார்களோ என்று எண்ண வைக்கிறது.
12. சிந்து பகுதியில் மிகப் பழைய நகரமான ஒரு நகரத்துக்கு பிராமணாபாத் என்று பெயர். இந்தியாவில் (இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது) ஜாதிப் பெயரில் இருந்த ஒரே நகரம் இதுவாகத்தான் இருக்கும்! சிந்துவெளியில் இது இருப்பதும், அந்தப் பகுதியில் பிராமண ஜனபதம் (நாடு) இருந்ததும் வியப்பான விஷயமே. ஏனெனில் பிராமணர்கள் நாடாளுவது பற்றிய விதிகள் எந்த ஸ்மிருதியிலும் (சட்டப் புத்தகம்) இல்லை.
13. பிராமணர்களுக்குரிய மலர் தாமரை என்றும் மிருகம் யானை என்றும் பிற்கால சம்ஸ்கிருத நூல்கள் கூறுகின்றன. இவை இரண்டும் சிந்து வெளியில் உள்ளன.

14.வேதத்தில் வேறு எல்லா நதிகளையும் விட அதிகமாகப் போற்றப்படுவது சரஸ்வதி நதியாகும். அந்த நதியின் பெயரில் ‘சாரஸ்வத்’ பிராமணர்கள் என்ற ஒரு பிரிவே உண்டு. அவர்கள் இன்று நாடு முழுதும் உள்ளனர். சிந்துவெளிக்கும் (சரஸ்வதி சமவெளி) பிராமணர்களுக்கும் உள்ள தொடர்பை இதுவும் பறை சாற்றுகிறது.
15. பிராமணர்கள் சுப காரியங்களிலும் அசுப காரியங்களிலும் பயன்படுத்துவது பருத்தியால் ஆன வேஷ்டிகளே. சிந்து சமவெளியிலும் பருத்தி கிடைத்திருக்கிறது. இது சமயப் புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளது.
16.அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அந்தணர் இருவர்தான் குல குருக்கள். இதை சங்கத் தமிழ் இலக்கியமும் புராணங்களும் உறுதி செய்கின்றன. ஆரிய- திராவிட வாதம் பேசுவோருக்கு இந்த சங்க காலச் செய்யுட்கள் செமை அடி கொடுக்கின்றன. வெளி நாட்டு அறிஞர்கள் அசுரர்ககளையும், ராக்ஷசர்களையும் திராவிடர்கள் என்று கூறுவர். ஆனால் தமிழ் இலக்கியமோ பஞ்ச திராவிடர்களை பிராமணர்கள் ( ஐந்து தேச பிராமணர்கள்) என்றும் அசுரர்களுக்கு, பிராமணனாகிய சுக்ரனே குரு என்றும் சொல்லுகின்றன.
இதற்கும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் என்ன தொடர்பு என்று சிலர் எண்ணலாம். தேவர்களுக்கு குருவான வியாழன் (குரு கிரகம்) சிந்து தேச அதிபதி என்று நவக் கிரக துதிகள் பாடுகின்றண. அசுரர் குருவான சுக்ராச்சாரியார் காப்பியக் குடியின் தலைவர். அதாவது தொல்காப்பியரின் குடி. சிந்துவெளியில் சுக்கிரனும் குறிக்கப் படுவதாக பின்னிஷ் ஆய்வாளர் கூறுகின்றனர். ஆக அந்தணர் இருவர்தான் ஒரு தாய் வயிற்றில் பிறந்த அசுரர், தேவர்களுக்கு ‘குரு’க்கள் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர்.
‘’நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து,
அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்’’–(கலித்தொகை 99-1/2)

திருமுருகாற்றுப்படையிலும் ‘’இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி’’ (178) என்ற வரி வருகிறது. ஆனால் இங்கே தொல்குடி என்பதை தொல்காப்பியக் குடி என்று சிலரும் அகத்தியர் வசிட்டர் வழியில் தோன்றிய குடிகள் என்றும் தாய், தந்தையர் என்றும் பல விளக்கங்கள் கூறுவர்.
மணிமேகலையில் ‘’அந்தணர் இருவர்’’ என்ற வரி வருகிறது. ஆனால் அங்கே பிரம்மாவின் புத்திரர்கள் என்ற விளக்கமும் பாடலில் வருவதால் அது வசிட்டர், அகத்தியர் வழிவந்த பிராமணர்களைக் குறிக்கும் என்று உரைகரர்கள் கூறுவர். ஆகையால் அதை இப்பொழுது சிந்து சமவெளியுடன் தொடர்புபடுத்த முடியாது.
17. சிந்துவெளி முத்திரைகளில் பல கொம்புகளுடன் உடைய உருவங்கள் கிடைக்கின்றன. இப்படிக் கொம்பன் பற்றிப் பேசும் ஒரே இலக்கியம் வேத இதிஹசங்கள்தான். சத்வாரி சிருங்கா: என்று அக்னியையும் விஷ்ணுவையும் போற்றும் மந்திரங்கள் இருக்கின்றன. இதே போல ஏக ஸ்ருங்கி என்பதும் வடமொழியில் உண்டு. சிந்து முத்திரையில் ஒற்றைக் கொம்பு (ஏகஸ்ருங்கி) நிறைய உண்டு. பிராமணர்கள் தினமும் வழிபடும் அக்னி, ரிக்வேதத்தின் முதல் மந்திரத்திலும் கடைசி மந்திரத்திலும் இருப்பதே இதன் முக்கியத்தைக் காட்டும்.

18. சிந்து சமவெளியில் இறை வழிபாடு இருந்தது. ஆனால் கோவில் இல்லை. இது போலவே வேத காலத்திலும் வழிபாடு உண்டு. ஆனால் இன்று நாம் காண்பது போல உயர்ந்த கோவில்கள் இல்லை. மற்ற நதிக்கரை நாகரீகங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பெரிய வேறுபாடு இது.
சிந்து சமவெளியும் கந்தர்வர்களும்
19. நான் முன்னரே ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். சிந்துவெளியில் இன்றைய இந்தியாவைப் போலவே பல்வேறு தரப்பினர் ஒரே நேரத்தில் இருந்திருக்கலாம். புத்தர் காலத்திலும் கூட இப்படி பல பிரிவினர் இருந்ததை நாம் அறிவோம். ஆக ராமனின் மகன்கள் லவனும் குசனும் கந்தர்வர்களிடம் இருந்து சிந்துவெளி நகரங்களைக் கைப்பற்றியதை நான் ராமாயண ஆதாரங்களோடு எழுதினேன். இதை மகாபாரதமும் உறுதி செய்கிறது. சந்தனுவுக்கும் சத்யவதிக்கும் சித்ராங்கதன் என்று ஒரு மகன் இருந்ததாகவும் அவன் அகந்தையால் அழிந்தான் என்றும் சரஸ்வதி நதிதீரத்தில் கந்தர்வர்களுக்கும் அவனுக்கும் நடந்த யுத்தத்தில் அவனுடைய பெயர் உடைய ஒருவனே அவனைக் கொன்றான் என்றும் மகாபாரத ஆதி பர்வம் கூறும் (1-101). ஆக சிந்துவெளியை கந்தர்வர்கள் ஆட்சிபுரிந்ததை இரு இதிஹாசங்களும் உறுதி செய்கின்றன. மகா பாரதம் ஜெயத்ரதன் என்ற மன்னனையும் சிந்து தேச அரசன் என்றே குறிப்பிடுகிறது. பிராமனர்கள் நாகரீகமாக இருந்தபோதிலும் கந்தர்வர் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.

தமிழர்களுக்கு தொடர்பு உண்டா?
இந்த நாகரீகத்துக்கும் தமிழர்களுக்கும் “ஸ்நானப் பிராப்தி” கூட கிடையாது. சங்க இலக்கியத்தின் 27,000 வரிகளில் சிந்து நதி பற்றிய பேச்சே இல்லை. வடமேற்கு இந்தியா பற்றிய பிரஸ்தாபமும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் புனித கங்கை நதியும் இமய மலையும் தான். பஞ்சாப் பகுதியில் இருந்து வந்த யவனத் தச்சரைப் பற்றிய குறிப்புகள் உரைகளில் காணப்பாட்டாலும் யவன, தச்சர் என்ற இரண்டுமே வடமொழிச் சொற்கள் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்.
சிந்து சமவெளியில் காணப்படும் புலிப் பெண், பேய் முத்திரை, பசுபதி முத்திரை, சப்த மாதா முத்திரை, வடிகட்டிச் சின்னம், நர பலி இவைகளுக்குச் சங்கத்தமிழ் இலக்கியத்தில் விளக்கம் கிடையாது. மேலும் பசுபதி முத்திரை சிந்து சமவெளிக்கு மட்டும் உரித்தானது அல்ல. உலகம் முழுதும் கிடைத்துள்ளது. இதே போல, காளை பிடித்தலும் (மஞ்சு விரட்டு) கண்ணபிரானின் யாதவ குல விளையாட்டு. கலித் தொகையிலும் அவ்வாறே சித்தரிக்கப் பட்டுள்ளது. இது தவிர, ஆரியர்கள் இவர்களை ஓட ஓட விரட்டி இருந்தால் இலக்கியத்தில் எங்காவது ஒரு இடத்திலாவது குமுறி இருப்பார்கள்—குதறி இருப்பார்கள் அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை. ஹரப்பா, மொஹஞ்சதாரோ செங்கல் என்பதும், தமிழர்கள் பயன்படுத்தியதற்கான பழம் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆக தமிழர்களுக்கும் இந்த நாகரீகத்துக்கும் தொடர்பு ஒரு கேள்விக் குறியாகவே தொக்கி நிற்கிறது

(Seal from Bahrain surrounded by animals(Pasupati)
INDUS VALLEY CIVILIZATION
என்னுடைய முந்தைய 30 கட்டுரைகள்: Read my other 30 posts on Indus:
சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
கொடிகள்: சிந்து சமவெளி- எகிப்து இடையே அதிசய ஒற்றுமை
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)
‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14

Picture of Roman Orpheus surrounded by animal (Pasupati)
Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
Ghosts in Indus Seals and Indian Literature
Flags: Indus Valley- Egypt Similarity
Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?
Indra on Elephant Vahana in Indus Valley
Indus Script Deciphered
Human sacrifice in Indus Valley and Egypt 0ct.31, 2012
Indus Valley Cities in Ramayana Dec.18, 2012
Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013
Change ‘’Indus’’ valley civilization to ‘’Ganges’’ valley civilization! Ulta! 29-3-2014
Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013
‘Sex Worship’ in Indus Valley

Picture of mysterious symbol (Somarasa Filter?)
Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)
The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012
Fall of Brahmin Kingdoms in Pakistan and Afghanistan 23-3-14
contact :– swami_48@yahoo.com
