
WRITTEN BY S NAGARAJAN
Post No.7772
Date uploaded in London – – 2 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
வர பலம் தவறினாலும் சர பலம் தவறாது!
ச.நாகராஜன்

கம்பனின் சுந்தரகாண்டம் அற்புதமான பாடல்களைக் கொண்ட ஒரு பாடல் களஞ்சியம்.
அனுமனின் ஆற்றலை இதில் காண முடியும்.
கிட்கிந்தா காண்டத்தில் அனுமப்படலத்தில் இராமனிடம் தன்னை யார் என்று தேர்ந்தெடுத்த சொற்களால் அறிமுகப்படுத்திக் கொண்ட அனுமனை ‘யார் கொல் இச்சொல்லின் செல்வன்’ என வியந்து இலக்குவனிடம் கேட்கிறான்
இராமன்! (பாடல் 33)
சுந்தர காண்டத்தில், சொல்லின் செல்வன் என்று இராமனால் வியந்து புகழப்படும் அனுமன் இராவணனைச் சந்திக்கின்ற போது அவனது சொல்லின் ஆற்றலைக் கண்டு வியக்க முடியும்.
சொல்வலன்
சோர்வில்லான்
யார்க்கும் அஞ்சான்
இப்படிப்பட்ட அருங் குணமுடைய அனுமன் – ராம தூதன் – இராவணனைச் சந்திக்கிறான்.
அவன் இராவணனிடம் பேசுவதை பிணி வீட்டு படலத்தில் விவரிக்கிறான் கம்பன். பிணி வீட்டு படலம் சுமார் 140 பாடல்கள் கொண்டது. அநுமன் பிரம்மாஸ்த்ரத்திலிருந்து விடுபட்டு ராவணனை நேருக்கு நேர் சந்திப்பதை இந்தப் படலம் விவரிக்கிறது.
சொல்லின் செல்வன் பேசுகிறான் என்பதால் தேர்ந்தெடுத்த சொற்களை கம்பன் உபயோகிக்கிறான்.
அனுமனை உயர்த்துவதோடு தானும் உயர்கிறான்.
அநுமன் இராவணனோடு பேசும் நீண்ட உரையாடலில் ஒரு பகுதியாக ஒளிர்கிறது 16 கவிகள்.

அவற்றில் சிலவற்றை இங்குப் பார்ப்போம்:
பாரைஞ் ஞூறுவ பற்பல பொற்புயல்
ஈரைஞ் ஞூறு தலையுள வென்னினும்
ஊரைஞ் ஞூறுங் கடுங்கன லுட்பொதி
சீரைஞ் ஞூறவை சேமஞ் செலுத்துமோ
பாடலின் பொருள் : பாரை நூறுவ பல்பல் பொன்புயம் – உலகை அழைக்க வல்ல பற்பல அழகிய புயங்களும்
ஈர் ஐ நூறு தலை உள என்னினும் – ஆயிரம் தலைகளும் உனக்கு உள்ளன என்றாலும்
சேமம் செலுத்துமோ – அவை உனக்கு நல்லதை உண்டாக்குமா (ஆக்காது)
அவை ஊரை நூறும் சுடுக் கனல் உன் பொதி – அவை ஊரையே அழிக்கும் கொடிய கனலினை உள்ளே பொதிந்து பத்திரப்படுத்தி வைத்த
நூறு சீரை – நூறு சீலைகளே ஆகும்.
பிராட்டி என்னும் கனலின் முன் குவித்து வைத்த கந்தைத் துணி போல நீ அழிந்து போவாய் என அற்புதமாக அநுமன் ராவணனுக்குக் கூறுகிறான்.
அடுத்த பாடல் அற்புதமானது.
அதில் சங்கரனிடமிருந்து பெற்ற வரபலம் தவறாது; அதன் மூலம் ராமனின் சர பலத்தைத் தவறச் செய்யலாம் என எண்ணுகிறாயா; அது நடக்கவே நடக்காது; ராமனின் சரம் தவறாது, (ஆகவே நீ பிழைக்க மாட்டாய்) என்கிறான் அநுமன்.
இதில் அற்புதமான ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் இராவணன் கைலை மலையையே அடியோடு தூக்க முயற்சிக்கும் போது கோபம் கொண்ட சிவபிரான் தன் காலை அவன் தலையில் அழுத்த இராவணன் மலையின் கீழ் நசுங்கி அழுது புலம்பினான். பின்னர் தன் தலை ஒன்றை அறுத்து கை நரம்புகளை எடுத்து அதை யாழாக அமைத்துச் சாம கானம் பாட ஆரம்பித்தான். இதனால் மகிழ்ந்த சிவ பிரான் அவனை விடுவித்து வரமும் அருளினார்.
சிவனிடமிருந்து ஒரு வாளைப் பெற்றான். முக்கோடி வாழ்நாளையும் பெற்றான். (மூன்றரை கோடி) எவராலும் வெல்லப்படமாட்டாய் என்ற வார்த்தையையும் பெற்றான்.
முக்கோடி வாழ் நாள் , முயன்றுடைய பெருந்தவம், சங்கரன் கொடுத்த வாள், நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நா என இப்படிக் கம்பன் இராவணனை ஏற்றம் தந்து பிறிதோரிடத்தில் பேசுவான்.
அநுமன் இராவணனின் இந்த வரலாற்றை அவனுக்கு நினைவூட்டி சங்கரன் கொடுத்த வரபலம் இருக்கிறது என்று மகிழாதே. ராமனின் சரபலத்தை நீ தாங்க மாட்டாய் என்கிறான்.
பாடல் இதோ:
புரம்பி ழைப்பருந் தீப்புகப் பொங்கியோன்
நரம்பி ழைத்தன பாடலி நல்கிய
வரம்பி ழைக்கு மறைபிழை யாதவன்
சரம்பி ழைக்குமென் றெண்ணுதல் சாலுமோ

பாடலின் பொருள் ; புரம் – திரிபுரத்திலும்
பிழைப்பு அரும் தீ புக – எவரும் தப்ப முடியாத பெரும் தீ புகுந்து எரிக்குமாறு
பொங்கியோன் – கோபம் கொண்டு பொங்கிய சிவபிரான்
நரம்பு இழைத்தன பாடலில் நல்கிய – நரம்புகளைக் கொண்டு நீ பாடிய பாடல்களுக்காக மனமுவந்து உனக்குக் கொடுத்தருளிய வரமானது
பிழைக்கும் – நீ மறைநெறி தவறியதால் தவறிப் போனாலும் போகும்
மறை பிழையாதவன் சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ- வேத மார்க்கம் தவறாத ராமபிரானது அம்பு தவறிப் போகும் என்று நீ நினைப்பது தகுமா . தகாது!
தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது என்று கூறி அநுமன் வாயிலாக ராமாயணத்தின் உயிர் சாரத்தை இங்கு வைக்கிறான் கம்பன் இன்னொரு பாடலில். அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது தான் கம்பனின் – உயிரோட்டமான பிரதான செய்தி – theme!
இராவணன் சிவனின் கீர்த்தியைத் தனது கையின் அழகிய நரம்புகளைக் கொண்டு பாடிய செய்தியை இதற்கு முன்னர் வரும் படலமான ஊர்தேடு படலம் பாடலிலும் (178) கம்பன் இப்படி அழகுற எடுத்துரைக்கிறான்:
“கூடி நான்குயர் வேலையுங் கோக்க நின்று
ஆடினான் புகழ் அங்கை நரம்பினா
நாடி நற்பெயரும் பண்ணும் நயப்பு உறப்
பாடினான்”
இராவணனுக்கு தனது வருகை கடைசி வாய்ப்பு – Last Chance- என்று துணிச்சலுடன் அநுமன் சொல்வது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரிய பாடல்.

இன்று வீந்தது நாளைச் சிறிதிறை
நின்று வீந்த தலாலிறை நிற்குமோ
ஒன்று வீந்தது நல்லுணர் வும்பரை
வென்று வீக்கிய வீக்கம் விதியினால்
இன்று வீந்தது – இன்றைத்தினம் என்பது அழிந்ததே ஆகும்
நாளை – நாளைய தினம் என்று சொல்லப்படுவது
சிறிது இறை நின்று வீந்தது அலால் – சிறிது நேரம் நின்றதாய் இருந்து அழிவதே ஆகுமல்லாமல்
இறை நிற்குமோ – சிறிது நேரம் நிலை பெற்றிருக்குமோ?
(நிலை பெற்றிருக்காது)
நல் உணர்வு உம்பரை – நல்ல அறிவுடைய தேவர்களை
வென்று வீக்கிய வீக்கம் ஒன்று -வெற்றி கொண்டு தேடித் தொகுத்து வைத்த
உன் வாழ்வின் பெருமையாகிய ஒன்று
விதியினால் வீந்தது – உனக்கு ஏற்பட்டுள்ள விதியின் கொடுமையால் அழிந்து போயிற்று
இந்தப் பாடலை பல்வேறு விதமாகப் பொருள் கொள்ள முடியும்.
“தேவர்களை அக்கிரமமாக வென்ற போதே உன் பெருமை போயிற்று. இராம தூதனாகிய் என் வருகையில் உனக்கு மிச்சமிருந்ததில் பெரும்பாலான பெருமையும் போயிற்று; இன்னும் கொஞ்சம் ஏதேனும் பாக்கி இருந்தால் அது நாளை ராமபிரான் வருகையால் போய் விடும்” என்றும் பொருள் கொள்ள முடியும்.
அருமையான இந்த சுந்தர காண்டத்த்தின் பிணி வீட்டு படலம் அற்புதமான பாடல்களைக் கொண்டதாகும்.
இந்தப் படலத்தில் பகவத்கீதையை அப்படியே மொழி பெயர்த்துக் கம்பன் தருவதையும் இராம பிரானின் உண்மைத் தன்மையையும் அநுமன் கூறுவது மெய்சிலிர்க்க வைக்கும்.
அது அடுத்த கட்டுரைக்கான பொருள். அதை அடுத்துக் காண்போம்


tags — வர பலம், சர பலம், கம்பன் , சுந்தரகாண்டம்,
***