
Post No. 8414
Date uploaded in London – – –28 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
தமிழ் மொழி வரலாறை எழுதிய வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார் தமிழறிஞர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்.
அவர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தன் பெயரை பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டவர்.
கலாவதி, ரூபாவதி, தமிழ்மொழியின் வரலாறு, மான விஜயம், பாவலர் விருந்து, தனிப்பாசுரத் தொகை, நாடகவியல், மதிவாணன், தமிழிப் புலவர் சரித்திரம், தமிழ் வியாசங்கள், மணியசிவனார் சரித்திரம், சித்திரகவி விளக்கம் உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர்.
தனிப்பாசுரத் தொகை என்பது இவரது அரிய புதிய முயற்சியாக அமைந்த ஒன்று.
ஆங்கிலத்தில் 14 அடிகள் கொண்ட ஸானெட் (Sonnet) என்ற கவிதை அமைப்பைத் தமிழில் அறிமுகப்படுத்தும் விதமாக அவ்வப்பொழுது ஒவ்வொரு பொருளைக் குறித்து இவர் 14 அடிகளில் எழுதிய கவிதைகளை ஞானபோதினி என்னும் மாத இதழில் பரிதிமாற் கலைஞன் என்ற பெயரில் வெளியிட்டு வந்தார்.
ஸானெட் என்பது இத்தாலியப் புலவர்கள் பாடிய ஸானெட்டோ (Sonnetto) என்னும் பாடல் அமைப்பைப் பின்பற்றி ஆங்கிலப் புலவர்கள் பாடிய பாடல்களாகும்.
ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை தோற்றுவாய், வளர்ச்சி, முடிவு என மூவகைப் பகுதிகளாகப் பிரித்துப் பாடுவது ஸானெடி.
பரிதிமாற்கலைஞர் தாம் பாடிய பாடல்களில் 43ஐத் தொகுத்து 1-8-1901 இல் நூலுக்கு முகவுரையும் எழுதி தனிப்பாசுரத் தொகை என்ற பெயரில் வெளியிட்டார்.
1933இல் வெளியான மூன்றாம் பதிப்பில் இன்னும் இரு பாடல்கள் சேர்க்கப்பட்டன.
இந்தத் தனிப் பாடல்களைப் படித்து மகிழ்ந்த ஜி. யு. போப் (G.U. Pope) இதை ஆங்கிலத்தில் பொருள் மாறாமல் மொழிபெயர்த்தார்.
11, ஜூலை, 1901 தேதியிட்டு ஒரு பாராட்டு முகவுரையையும் அளித்தார்.
நூலில் இடம் பெறும் கவிதைத் தலைப்புகள் வருமாறு:-
- கடவுள் 2) அறிவு 3) வாய்மை 4) அன்பு 5) காதல் 6) இசை 7) கல்வி 8) நூல் 9) குரு 10) மாணவன் 11) மனன் 12) உடல் 13) மனிதன் 14) மாதர் 15) அழகு 16) வரைவு 17) கணவன் 18) மனைவி 19) கற்பு 20) இல்லறம் 21) தொழில் 22) நிலன் 23) கடல் 24) பரிதி 25) மதி 26) விண்மீன் 27) மலை 28) யாறு 29) வளி 30) முகில் 31) காலை 32) இரவு 33) துயில் 34) பொழில் 35) மலர் 36) புள் 37) காமம் 38) வரைவின் மகளிர் 39) வெகுளி 40) மயக்கம் 41) திருவள்ளுவர் 42) போர் 43) எறும்பு
அழகு என்ற தலைப்பில் பரிதிமாற் கலைஞர் இயற்றியுள்ள கவிதை இது:-
அழகி னியலினை யநுபவித் தறியார்
பழகினர் போன்று பலபடப் பகர்ந்தனர்;
வண்ணமே வனப்பென வகுத்தனர்; அதான்று;
வடிவே யெழிலென வரைந்தனர்; அதான்று;நற்
குணனே கவினெனக் கூறினர், அதான்று;
பயனுடைப் பண்பெனப் பரிந்தனர்; அதான்று;மற்
றின்னும் பலவா யியம்பினர்; அவையல.
என்னே! அழகி னியலம் மம்ம!!
எல்லா நலனு மினிமையிற் கலந்து
கண்டவர் மனத்தைக் கணத்தினிற் பிணித்துத்
தன்வயப் படுக்குந் தன்மைத் தன்றோ?
அறத்தி னீங்கிய வழகு முண்டுகொல்?
மறத்தொடு படுமேன் மாண்பன்
றின்பஞ் செய்யு மியல்பா தலினே
அழகு பற்றி ஆராய்கிறார் கவிஞர். இதைப் பலரும் பலவிதமாகக் கூறுகின்றனர்.சிலர் நிறம் (வண்ணம்) என்கின்றனர்; அது இல்லை!
சிலர் அழகு (வனப்பு) என்கின்றனர்; அது இல்லை! நல்ல குணம் என்றனர். அது இல்லை. மற்றவர்க்கு நன்மை செய்யும் பண்பு என்று பகர்ந்தனர்; அது இல்லை.
எல்லா நலனும் இனிமையுடன் கலந்து காண்பவர் மனதைக் கணத்தினில் கட்டிப் போட்டுத் தன் வயத்தில் இழுக்கும் தன்மையே அழகு. அதுவும் அறத்தினுடன் சேர்ந்ததே அழகு!மறத்தொடு பொருந்துமாயின் அது அழகு அல்ல!
ஏனெனில் அழகு அறத்தைப் போல இன்பம் செய்வதே இயல்பு.
இது போல அனைத்துப் பாடல்களும் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் இனிய தமிழ்ச் சொற்களால் புதிய கருத்தை புதிய பாணியில் கூறுகிறது தனிப்பாசுரத் தொகை.
43 பாடல்களும் கவிதை நுகர்வோருக்கு நல் விருந்து!
பரிதிமாற் கலைஞரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு விட்டதால்
அவரது அனைத்து நூல்களையும் தமிழ் மக்கள் படிக்கக் கூடிய நல் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட இணையதளத்தில் அவரது நூலைப் படிக்கலாம்:-

TAG– பரிதிமாற் கலைஞர்