
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,927
Date uploaded in London – 29 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உங்கள் கே.பாக்யராஜின் பதில்கள்!
ச.நாகராஜன்
என் எதிரே கட்டு கட்டாக இருப்பவை பாக்யா இதழ்கள்.
பாக்யா இதழை எடுக்கும்போதெல்லாம் ஆவல் மீதூற குதூகலத்துடன் அதை எடுத்து ஒவ்வொரு பக்கத்தையும் படிப்பது வழக்கம்.
ஆனால் இன்று பாக்யா இதழ் கட்டுகளைப் பார்க்கும் போது மனம் கனக்கிறது.
இவற்றை உருவாக்கியவர் இல்லையே என்ற ஏக்கம் சூழ்கிறது.
அவரைப் பற்றிய நினைவுகள் சூழ்கின்றன.
லட்சக்கணக்கான வாசகர்கள் பாக்யா இதழைப் படித்து வாழ்க்கையின் அர்த்தங்களையும் மர்மங்களையும் புரிந்து கொண்டனர்.
பாக்யா இதழில் வாராவாரம் வாசக அன்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அற்புதமாக பதிலைத் தருவார் பாக்யராஜ்.
அவை ஏனோ தானோ பதில்கள் அல்ல. மிகுந்த ஆராய்ச்சியின் பேரில் வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கும் பதில்களாகவே இருக்கும்.
இதுவே அவரது பதில்களின் தனிச் சிறப்பு.
உதாரணத்திற்காக இந்தக் கட்டுகளில் கைக்குக் கிடைத்த இதழில் உள்ள கேள்வி- பதிலை இங்கே தருகிறேன்.
அப்போது பாக்யராஜ் என்ற மாமனிதரின் சிந்தனைப் போக்கு நமக்குத் தெரியும்.
18-3-2016 இதழ்
கேள்வி :ஜி.சிவகுரு, அறந்தாங்கி
வழக்கமான கேள்வி! தேர்தலில் யாரைத் தேர்ந்தெடுப்பது?
பதில் : காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில் இடது பக்கத்தில் போட்டு இருந்தார். உடனே பத்திரிகையாளர்கள் “துண்டு மாற்றி போட்டுள்ளீர்கள். எதுவும் விசேஷமான்னு கேட்டாங்க. காமராஜர் ஒண்ணும் இல்லை. சும்மாதான் போட்டுள்ளேன்’னாரு.
பத்திரிகையாளர்கள் விடவில்லை. துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்னன்னு துளைக்க ஆரம்பிச்சுட்டாங்க. உடனே காமராஜர், “ஒண்ணும் இல்லைய்யா, இடது பக்கம் சட்டை லேசா கிழிந்துள்ளது. அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை மாற்றிப் போட்டுள்ளேன். வேணும்னா பாருங்கள்”னு துண்டை எடுத்து கிழிந்த சட்டையைக் காண்பித்தாராம். இவர் தான் உண்மையான மக்கள் தொண்டர். இந்த மாதிரி ஆளுங்களைத் தேடிக் கண்டுபிடித்து தேர்ந்தெடுங்க.
22-4-2016 இதழ்
கேள்வி: எஸ்.ராஜசேகர், கம்பம்
தொட்ட நெகிழ்வு – கொடை வள்ளல் வாழ்விலே?
பதில் : எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தப்போ சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே புதிய சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. விழாவில் எம்.ஜி.ஆர் கலந்துட்டு சுரங்கப் பாதையை திறப்பார்னு அறிவிக்கப்பட்டபடிருந்தது. குறிப்பிட்டபடி விழாவுக்கு எம்.ஜி.ஆர் போனார்.
திறப்பு விழா நேரத்தில் சுற்றும் முற்றும் பார்த்துட்டு உதவியாளரிடம் காதில் ஏதோ கிசுகிசுத்தார். அவர்கள் சென்று ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தவரை அழைச்சுட்டு வந்து எம்.ஜி.ஆரிடம் நிறுத்தினாங்க. அவர் பெயர் ஏழுமலை. எம்.ஜி.ஆரை வணங்கிவிட்டு ஏதும் புரியாமல் படபடப்புடன் நின்று கொண்டிருந்தவரின் கையில் கத்தரிக்கோலைக் கொடுத்து, சுரங்க நடைபாதை திறப்புவிழாவுக்கு அடையாளமாக ரிப்பனை வெட்டச் சொன்னார் எம்.ஜி.ஆர்.!
கண்களில் நீர் மல்க ரிப்பனை வெட்டி திறந்து வைத்த ஏழுமலை தான் அந்த சுரங்கப் பாதையை கட்டிய மேஸ்திரி!
6-5-2016 இதழ்
கேள்வி: ஆர்.சியாமளன், திருமயம்
ரசித்த வரிகள்?
பதில்: கீரை விற்ற கிழவியிடம்
பேரம் பேசி சேமித்தான்…
ஒரு ரூபாய் பணமும்…
ஒரு மூட்டை பாவமும்!
பாக்யராஜ் அவர்களின் பதில் பற்றி வாசகர்கள் என்ன நினைத்தார்கள்?
வாசகர் தீர்ப்பு என்று வாரம் தோறும் வரும் வாசகர் கடித பகுதியில் ஒரு கடிதம் இதோ:’
இதழ் 29-4-2016
க. அருச்சுனன், செங்கல்பட்டு
பாக்யாவில் எனக்கு மிகவும் பிடித்தது கே. பாக்யராஜ் சாரின் பதில்கள் பகுதி. இதழ் வாங்கியவுடன் முதலில் படிப்பது அப்பகுதி தான். அவரின் படித்ததில் பிடித்தது மிக அருமையாக இருக்கும். எப்படியெல்லாம் ஆசிரியர் இவைகளை இனம் கண்டு தொகுக்கிறார் என்று படித்துப் பார்த்து வியப்படைவேன்!
அருச்சுனனின் கருத்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் எண்ண பிரதிபலிப்பு தான்!
**