HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 75; இந்து மத கலைச்சொல் அகராதி- 75 (Post.15,928)

Picture– 63 Nayanmars

Written by London Swaminathan

Post No. 15,928

Date uploaded in London –29 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

N words continued…………………..

நாயன்மார் / நாயனார்

சிவ பெருமானை வழிபட்ட 63  பெரியோர்கள் நாயன்மார் அல்லது நாயனார் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களில் மூவர் பெண்கள்; இவர்களுடைய கதைகளை சேக்கிழார் என்ற புலவர் அறிஞர் பெரியபுராணம் என்னும் நூலில் பாடியுள்ளார் ; இவர்களுடைய சிலைகளை பெரிய சிவன் கோவில்களின் பிரகாரத்தில் காணலாம். இந்த 63 பேரில் மாணிக்கவாசகர் இல்லாதது ஏன் என்று இன்று வரை விவாதிக்கப்பட்டுவருகிறது. 12 ஆழ்வார்களைப் போலவே இவர்களிலும் பல ஜாதிகளைச் சேர்ந்தோர் உள்ளனர் ; அப்பர் என்னும் திருநாவுக்கரசர் (600 CE) மற்றும் ஞான சம்பந்தர் காலம் நமக்குத் தெரிவதால் இவர்கள் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை பரப்பியது உறுதியாகிறது; இவர்களுடைய பாடல்களை பன்னிரு திருமுறைகளில் படிக்கலாம் . 63 பேரில் கண்ணப்ப நாயனார் என்ற வேடரின் கதை மிகவும் பிரபலமானது.

***

நாரதர்

தேவரிஷி என்று பெயர் பெற்றவர் நாரதர் ; பூலோகத்துக்கும் மேலோகத்துக்கும் இடையே பயணம் செய்த முதல் விண்வெளி வீரர் திரிலோக சஞ்சாரி என்று பெயர்பெற்றவர் ; கலகம் விளைவிப்பதில்மன்னன்; ஆயினும் நாரதர் கலகம்  நன்மையில் முடியும் என்ற வசனமும் பிரபலமானதே ; தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரத்தில் முதல் தடவையாக இவர் பெயர் வருகிறது ; இவர் வீணை என்னும் இசைக்கருவியைக் கண்டுபிடித்தால் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ இவரை நாரதர் வீணை என்று பாடியிருக்கிறார்; வீணையும் நாராயண நாராயண என்ற சொற்களும் இவரை அடையாளம் காட்டிவிடும்; பெரிய விஷ்ணு பக்தர் ; மஹாபாரதத்தில் வனவாசம் செய்த பாண்டவர்களை அவ்வப்போது கண்டு, தைரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியவர்;  துரியோதனனை அடக்கி வையுங்கள் என்று திருத ராஷ்டிரனுக்கும் அறிவுரை வழங்கினார். பிரம்மாவின் மனதில் உதித்த பத்து ரிஷிகளில் ஒருவர் ; பிரபஞ்த்தின் முதல் பிரம்மச்சாரி; இவர் போதித்த பாகவதத்தை வியாசர் அவருடைய பிள்ளையான சுகருக்குச் சொல்லிக்கொடுத்தார் ; நாரதர் பெயரில் பல நூல்கள் உள்ளன. இவர்கள் தேவரிஷி நாரதர் அல்ல ; நாட்டிய சாஸ்திரத்தைப் பரத முனி 6000 சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் பாடியபோது இவரும் இருந்ததாக நாட்டிய சாஸ்திரம் பகர்கிறது ;

நாரத பக்தி சூத்திரம்

பக்தியின் இலக்கணத்தை விளம்பும் நாரத பக்தி சூத்திரம் என்ற நூலை சம்ஸ்க்ருத மொழியில் இவர் இயற்றினார். பக்தி என்றால்  என்ன, பக்தரின் நடை உடை பாவனை எப்படி இருக்கும், பக்தியால்  விளையும் நன்மைகள் என்னென்ன என்ற 84 சூத்திரங்களை உடைய நூல் நாரத பக்தி சூத்திரம் ஆகும்.

***

நரகாசுரன்

கிருஷ்ண பரமாத்வாலால் வதைக்கப்பட்ட அசுரர்களில் ஒருவன் ; பிரக் ஜோதிஷம் என்னும் அஸ்ஸாம் பகுதியை ஆட்சி செய்தவன் ; 16, 000 பெண்களை சிறை வைத்தவன்; இவன் இறந்த நாளை நரக சதுர்த்தி என்ற பெயரில் தீபாவளியாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். பூமாதேவியின் புதல்வன் வராஹ அவதாரத்தில் தர்த்தி என்ற பெயர்; தன்னுடைய புதல்வனுக்கு நீண்ட ஆயுளும் அதிக சக்தியும் கொடுக்கவேண்டும் என்று விஷ்ணுவிடம் பூமாதேவி வேண்டினாள்; மேலும் எந்த ஆண் மகனும் இவனைக் கொல்லமுடியாத சக்தி தர வேண்டும் என்றாள்; விஷ்ணுவும் இவன் அடுத்த யுகம் வரை வாழ்வான் என்று சொல்லி வரமளித்தார் . அவனோ பாணாசுரனுடன் சேர்ந்து அதிகார மமதையில் எல்லோரையும் கொடுமைப்படுத்தி வந்தான் ; சொர்க்க லோகத்தையும் வசப்படுத்த எண்ணினான் ; விஷ்ணுவானவர் கிருஷ்ணனாக அவதரித்தபோது  அவருடைய எட்டு மனைவிகளில் ஒருவரான சத்யபாமா பூதேவியின் அவதாரம் ஆக வந்தாள்; கிருஷ்ணர் அவளையும் அழைத்துக்கொண்டு நரகாசுரனுடன் மோதியபோது பூ தேவி ( சத்யா பாமா) அம்பினாலேயே அவன் அழிந்தான் ; கிருஷ்ணன் 16,000 பெண்களையும் துவாரகைக்கு அழைத்துச் சென்றார்

***

நிகும்ப

பல ராக்ஷஸர்களுக்கு இந்தப் பெயர் உண்டு

மஹாபாரத நிகும்பன் சுந்த–உபசுந்த என்ற ராக்ஷஸர்களுக்கு தந்தை; அவ்விரு ராக்ஷஸர்களும் திலோத்தமை என்ற தேவ லோக அழகி விஷயத்தில் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொன்று அழிந்தனர்.

வால்மீகி ராமாயணத்தில் வரும் நிகும்பன், வஜ்ரமாலா- கும்பகர்ணன் தம்பதியருக்குப் பிறந்தவன் . அவனுடைய அண்ணன் பெயர் கும்பன்; ராமாயணத்தில் அனுமனால் கொல்லப்பட்டான்

ராவணனுடைய படைத்தளபதிகள் ஒருவனுக்கும் இதே பெயர் ; புராணங்களில் பேய் பிசாசுகளுடன் தொடர்புடையது நிகும்ப வனம்; ராவணனின் மகன் மேகநாதன் என்னும் இந்திரஜித் இலங்கையிலுள்ள நிகும்ப வன குகையில் எதிரிகளை ஒழிக்கும் ஆபிசார யாகத்தை நடத்த முனைந்தபோது அதை அறிந்த லெட்சுமணன் அங்கு சென்று யாகத்தை நடைபெறாதவாறு தடுத்தான்.

***

நிமி 

தத்தாத்ரேயரின் புதல்வன்; அவருடைய மகன் இறந்தவுடன், அவன் சாந்தி அடைவதற்கான பல சடங்குகளை நிமி செய்தார்  ; அவைதான் இப்போது செய்யப்படும் சிராத்தம் என்னும் சடங்குகளுக்கு அடைப்படையாக அமைந்தது .

***

நிவாதக்கவச்ச, நீவாடகவச்ச The nivatakavachas (Sanskrit: निवातकवच,)

நிவாதக்கவச்ச என்றால் ஆயுதம் துளைக்க முடியாத கவசங்களை அணிந்தவர்கள் என்று பொருள் ; இப்போது அரசியல் தலைவர்கள் அணிந்து செல்லும் புல்லெட் ப்ரூப் சட்டை போன்றது; மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் நீவாடகவசர்கள் கடலுக்கு அடியில் வாழும் அசுர இனத்தவர், இவர்களை அர்ஜுனன் இந்திரன் உதவியுடன் போரிட்டு வென்றான்.

மஹாபாரதத் தகவல்

இதன் விவரமாவது; இவர்கள் தேவர்களுக்கு எதிரான தானவர்கள் ; தேவர்களின் நகரத்தை இவர்கள் ஆக்ரமித்தவுடன் சண்டை துவங்கியது; இவர்களின் எண்ணிக்கையோ முப்பது லட்சம்; அர்ஜுனன் விண்வெளியில் / சொர்க்க லோகத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தான்; பிரிவுபசாரத்தின் போது தானவர்களை அழித்து விட்டுச் சென்றால் அதுவே பெரிய நன்றி என்று இந்திரன் பகர்ந்தான் ; ஸ்பேஸ் ஷட்டில் என்னும் விண்கலத்தின் பைலட் மாதலியுடன் அர்ஜுனனை பூலோகத்துக்கு அனுப்பினான் ; அர்ஜுனன் விண்வெளியில் கிடைத்த நவீன (லேசர்) ஆயுதங்களை பயன்படுத்தி தானவர்களை அழித்தான்.  அர்ஜுனன் போர் முழக்கத்தை தேவ தத்தம் என்ற சங்கினை முழக்கித் துவங்கினான் ; தானவர்கள் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிப் போனான் ; அப்போதுதான் ஸ்பேஸ் ஷட்டில் பைலட் மாதலி, ஏன் தெய்வீக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று வினவினான். அதன்பேரில் அர்ஜுனன் தேவலோக ஆயுதங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றான் .

ராமாயணத்தில் வரும் தகவலின் படி இவர்கள் பிரம்மாவிடம் பெற்ற வரத்தால் ராவணனாலும் இந்திரஜித்தாலும் தோற்க முடியாவார்களாக விளங்கினார்கள் ; இறுதியில் பிரம்மா தலையிட்டு சமரசம் செய்து வைத்தார் ; இந்த தானவர்கள் தலைநகர் மணிமதீ ; இவர்கள் காலகேயர் என்னும் அசுரர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டனர்.

****

நர நாராயண

PICTURE OF NARA NARAYANA

நர நாராயணர்கள் என்போர் விஷ்ணுவின் இரட்டை அவதாரம் என்றும் இரட்டையர் ரிஷிகள் என்றும் புராணங்கள் செப்புகின்றன;

இதன் கருத்து என்னவென்றால் தர்மத்தை நிலைநாட்டுவதற்கு மனித முயற்சியும் தெய்வீக அருளும் தேவை என்பதாகும்.

தட்சனின் மகளான மூர்த்திக்கும் தர்மத்துக்கும் பிறந்தவர்கள் இவர்கள் ;பத்ரிநாத்தில் நீண்ட காலம் தவம் இயற்றினர்

மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் என்னும் நரன் ஆகவும் கிருஷ்ணன் என்னும் நாராயணன் ஆகவும் தோன்றினார்கள்

சிற்பங்களில் நரனை இரு கைகள் உடையவராகவும் நாராயணனை நான்கு கைகள் உடையவராகவும் காட்டியுள்ளனர்.

***

நரசிம்ம/  நரசிம்மவாதாரம்

நரசிம்மவாதாரம் விஷ்ணுவின் நாலாவது அவதாரம் ஆகும்; விஷ்ணு பக்தனான பிரஹலாதன் என்னும் சிறுவனைக் காப்பாற்றுவதற்காக சிங்க முகமும் மனித உடலும் எடுத்து அவதரித்தார் . ஹிரண்யகசிபுவை கடவுளாக வணங்க மறுத்த பிரஹலாதன் கடவுள் அணுவிலும் மேரு மலையிலும் தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்று சொன்னான் ; மன்னன் ஹிரண்யகசிபு அரண்மனைத் தூணை எட்டி உதைத்து  கடவுளைக் காட்டு என்றான் ; பிரஹலாதன் என்ற சிறுவன் பிரார்த்திக்கவே தூண் வெடித்துப் பிளந்து சிங்க முகப் பெருமாள் வெளியே வந்து, ஹிரண்ய காசிபுவின் உடலைக் கிழித்து எறிந்தார். இந்தச் சிற்பமும் ஓவியமும் நிறைய கோவில்களில் உள்ளன  ; பக்தர்கள் அதை வழிபட்டு வருகின்றனர் ; முதல் மூன்று அவதாரங்களுக்கு அத்தகைய சிறப்பு இல்லை .

***

நாளந்தா

தற்போதைய பீஹார் மாநிலம் முற்காலத்தில் பாரத்தின் வலிமை வாய்ந்த மகத சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது; அதிலிருந்த நாளந்தா  உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தது ; பாட்னா என்னும் பாடலிபுத்ரத்திலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த இடம் இப்போது யுனெஸ்கோ பாரம்பர்ய கேந்திரமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

தட்சசீலம், விக்ரமசீலம் முதலிய பல்கலைக்கழகங்களின் மாதிரியில் அமைக்கப்பட்ட இது புத்த விஹாரமாகவும் இருந்தது; சீனா, ஜப்பான் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மாணவர்கள் பயின்றனர்; வேதம் முதல் பெளத்தம் வரையான நூல்கள் பல்லாயிரக்கணக்கில் சேகரித்து வைக்கப்பட்ட உலகின் பிரம்மாண்ட லைப்ரரியும் இருந்தது; விஷ்ணு பக்தர்களான குப்தர்கள் பேராதரவு நல்கினார்கள் ; ஐந்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுவரை கொடிகட்டிப் பறந்தது .

துருக்கிய ஆப்கானிய தில்லி சுலதான் வம்ச மதவெறியன் பக்தியார் கில்ஜி (Bakhtiyar Khilji of the Delhi Sultanate  ) படையெடுத்து வந்து பல்கலைக்கழகத்தை இடித்து நூலகத்துக்கு தீ வைத்தான் ; அந்த நூலகம் மூன்று மாதங்களுக்கு எரிந்து கொண்டிருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்தனர் ; பல்லாயிரக்கணக்கான சம்ஸ்க்ருத நூல்களின் பெயர்களை இன்று உரைகளில் காண்கிறோம்; ஆனால் நூல்கள் கிடைக்கவில்லை ;எல்லாம் அங்கே சாம்பலாயின.

Eyewitness Accounts: Tibetan monk Dharmasvamin visited the site in 1234 CE, nearly 40 years after Khilji’s campaign. He found the institution heavily ruined but still functioning, with a small fraction of about 70 monks being taught by a 90-year-old abbot.

பக்தியார் கில்ஜி தீவைத்து அழித்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தர்ம சுவாமி என்னும் திபெத்திய புத்த பிட்சு அங்கே வந்து கண்ட காட்சியை நமக்கு எழுதிவைத்துள்ளார் . 90 வயத்துக்கிழவனார் ஒருவர் பாடம் கற்பிக்க 70 மாணவர்கள் இருந்தனர் என்றும் பலக்லைக்கழகம் பயங்கர சேதம் அடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்   அதற்குப்பின்னர் அதை புனருத்தாரணம் செய்யும் முயற்சிகள் பலிக்க வில்லை; காரணம் மேலும் மேலும் முஸ்லீம்கள் படையெடுத்து அங்கிருந்த செல்வங்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர்; இப்போது அதே பேரில் புதிய பல்கலைக்கழகம் தோன்றியுள்ளது.

Tags- நாளந்தா, நரசிம்ம, நிவாதக்கவச்ச, நரகாசுர, நீவாடகவச்ச, நாயன்மார் , நிகும்ப,  HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 73; இந்து மத கலைச்சொல் அகராதி- 75, நாரதர், நரகாசுரன்

To be continued……………………

Leave a comment

Leave a comment