திருமுருகாற்றுப்படை பற்றி 10 கேள்விகள் (Post.16,018)

Written by London Swaminathan

Post No. 16,018

Date uploaded in London – 26 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

திருமுருகாற்றுப்படை எந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது ?

2

இதை நக்கீரர் எழுதியதன் பின்னணி என்ன ?

3

சங்க இலக்கியத்திலுள்ள வேறு ஆற்றுப் படை நூல்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு ?

4

அறுபடை வீடுகள் பாற்றிப்படிய நக்கீரர் முதலில் எந்தத்தலத்தை வைத்தார் ?

5

இந்த நூலின் துவக்கப் பாடல் வரிகளின்  சிறப்பு என்ன?

6

சூரியனைச் சுற்றிவரும் குள்ள முனிவர்கள் பற்றி நக்கீரர் என்ன சொல்கிறார் ?

7

நூலாசிரியர் இந்த நூலில் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் என்ன ?

8

திருமுருகாற்றுப்படை நூலில் முருகனுக்கு வரும் வேறு பெயர்கள் என்ன ?

9

இந்த நூலினில் எத்தனை அடிகள் இருக்கின்றன ?

10

நூல் பற்றிக் கூறும் கதைக்கு வேறு ஆதாரம் ஏதும் உள்ளதா ?

***

விடைகள்

1.சங்க இலக்கியம் என்பது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் அடங்கிய பதினெண் மேல் கணக்கு நூல்கள் ஆகும். பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்து கிடையாது; இந்த நூல்தான் கடவுள் வாழ்த்து; இது பன்னிரு திருமுறை என்னும் 12 சைவ நூல்களில் 11 ஆம் திருமுறையில் உள்ளது.

**

2. கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்ற சந்தேகம் பாண்டிய மன்னுக்குத் தோன்றியது. யாராலும் திருப்தியாக பதில் சொல்ல முடியவில்லை ; தருமி என்ற ஏழைப் பிராமணனுக்கு சிவபெருமான் கவிதை எழுதிக்கொடுத்தார் ; அதைப் பாண்டிய மன்னன் ஏற்று தங்கம் வைக்கப்பட்ட பொற்கிழியை எடுத்துக்கொள் என்றார் ; தலமைப் புலவர் நக்கீரர் பொருள் குற்றம் உள்ள கவிதை என்று ஆட்சே பித்தவுடன், சிவ பெருமானே வந்து பத்மினி வகைப்பெண்களுக்கு இயற்கை மணம் உண்டென்றார் ; நக்கீரர் அதை ஏற்காமல் சண்டைபோட்டவுடன் சிவ பெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்தார் ; நக்கீரருக்கு வெப்பு நோய் ஏற்படவே கயிலாயம் சென்றால் தீரும் என்றார் . போகும் வழியில் திருப்பரங்குன்றத்தில் சிவ பூஜைக்கு அமர்ந்தார்; ஒரு ஆல மர இலை, குளத்தின் தண்ணீரில் விழுந்தது ; பாதி முழ்கிய நிலையில் ஒரு பாதி மீனாகவும் மறுபாதி பறவையாகவும்  இருக்கக் கண்டவுடன், சிவ பூஜையிலிருந்து மனம் நழுவியது ; அப்படி முறை தவறுவோரைப் பிடிக்கக் காத்திருந்த கற்கிமுகி என்ற குதிரை முகப் பூதம் அவரைப் பிடித்துச் சென்று குகையில் அடைத்தது. அங்கு ஏற்கனவே பிடிபட்டிருந்த 999 பெரும் வருத்தப்பட்டுக் கூச்சலிட்டனர் ஏனெனில் ஆயிரம் பேர் கிடைத்தவுடன் எல்லோரையும் சாப்பிடுவேன் என்று முன்னரே பூதம் அறிவித்திருந்தது அப்போது முருகப்பெருமானை வேண்டி இந்த நூலைப் பாடவே முருகன் வந்து பூதத்தைக் கொன்றார். அனைவரும் விடுதலை ஆனார்கள்

**

.3.ஆறு என்றால் வழி; படை என்றால் வழிப்படுத்தல்; பரிசு   தரும் செல்வந்தர் இடத்தில் புலவர்களை வழிப்படுத்தும் பொருநர் ஆற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை முதலிய நூல்கள் பத்துப்பாட்டில் உள்ளன ; ஆனால் இந்த நூல் மனிதர்களை இறைவன் அளிக்கும் மோட்சம் என்னும் பரிசைப் பெறும் ஆற்றுப்படை நூலாகும்.

**

4.இந்த நூலில் அறுபடைத் தலங்களும் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) , திருவாவினங்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி முதலிய குன்றுகள் என்றும் பொருள் கொள்ளலாம்),     பழமுதிர்ச்சோலை என்ற வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.

**

5.உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டா அங்கு

ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி – என்ற வரிகளுடன் பாடல் துவங்குகிறது .

இதில் உலகம் என்பது மங்கலச் சொல். கம்ப ராமாயணம், பெரிய புராணம் முதலிய நூல்களும் உலகம் என்ற சொல்லுடன் துவங்கும். ஞாயிறு / சூரியன் என்பதும் மங்கலச் சொல்; சிலப்பதிகாரம் அந்த வாழ்த்துடன் துவங்குகிறது ; ஒளி என்பது சூரிய ஒளியை மட்டும் குறிக்காது அக்கினி அம்சமான முருகனையும் கடவுளையும் குறிக்கும் ; தேவ என்ற சொல்லுக்கே ஒளி என்றே பொருள்.

**

6.சூரியனைச் சுற்றிவரும் குள்ள முனிவர்கள் பற்றி நக்கீரர் விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை என்று பாடுகிறார்.

இதன் பொருள்– வானில் வலம் வரும் சூரியன், அவனை எதிர்த்துப் போரிடும் அசுரர்களான மந்தேகாருணர் என்போரை மாய்த்துக்கொண்டு முன்னேறுகிறான் ; அவனது கதிர்வீச்சின் கொடுமையைக்  குறைக்க வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் சூரியனுடன் வலம் வருகின்றனர் என்று வேதம் சொல்கிறது . அவர்களுக்கு வேணாவியோர் என்ற பெயரும் உண்டு;  அந்த முனிவர்களை முருகனின் ஒரு கை பாதுகாப்பதை ,விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை என்ற வரிகள் காட்டுகின்றன. வாலகில்யர்களை புறம் .43, சிலப்பதிகாரம் 12-18 இடங்களிலும் காணலாம்.

**

7.நூலாசிரியர் நக்கீரர்,  இந்த நூலில் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் — சேண்விளங்கு, வாரணம், பிணிமுகம், பெரும்பெயர், திலகம், நிதி .

8.திருமுருகாற்றுப்படை நூலில் முருகனுக்கு வரும் வேறு பெயர்கள் — ஆல்கெழு கடவுட் புதல்வ , மலைமகள் மகன், கொற்றவை சிறுவன், பழையோள் குழவி,  மாலை மார்பன், நூலறி புலவன், பொரு விறல் மள்ள , அந்தணர் வெறுக்கை/ செல்வம், குன்றம் எறிந்தவன், குறிஞ்சிக் கிழவன், அறிந்தோர் சொல்மலை, மங்கையர் கணவ , போர்மிகு பொருநன் , அறுவர் பயந்த ஆறமர் செல்வன், வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ, பெரும்பெயர் முருக, புலவர் ஏறு, நெடுவேள், பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்.

**

9. இந்த நூலினில் 317 அடிகள் இருக்கின்றன.

**

10. நக்கீரரைப் பிடித்த பூதம் குதிரை முகம் உடையது ; இந்தக் கதையை திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்,

இவுளிமுகி யைப்பொருத  ராவுத்தனானவனும்

என்றும்

துரகமுகக் கோதைக்கிடை

புலவரின் நக்கீரருக்குதவியவனே வேளே

 என்றும் பாடியிருக்கிறார் .

–SUBHAM—

TAGS- குதிரை முக பூதம், திருமுருகாற்றுப்படை, 10 கேள்விகள், நக்கீரர், வாலகில்யர், அருணகிரிநாதர்

Leave a comment

Leave a comment