HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 89; இந்து மத கலைச்சொல் அகராதி-89(Post.16,031)
Written by London Swaminathan
Post No. 16,031
Date uploaded in London – 29 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில எழுத்து எஸ் –ஸில் துவங்கும் எழுத்துக்கள்
சபா – சபை
ரிக் வேத காலம் முழுதும் அதே பொருளில் சங்கத் தமிழ் நூல்களிலும் பிற்காலத்து திருக்குறளிலும் பயிலப்படும் சொல். தொல்காப்பியர் ச எழுத்துக்களுக்குத் தடை விதித்ததால் தமிழில் அவை என்று வரும்.
லோக்சபை , ராஜ்ய சபை, சட்ட சபை என்பன எல்லோரும் அறிந்த சொற்கள் .
***
சசி- இந்திரனின் மனைவி ; இன்னொரு பெயர் இந்திராணி ; தமிழில் அயிராணி; ரிக் வேதம் முதல் தொடர்ந்து வரும் பெண்மணி; இன்றுவரை பெண்கள் சூட்டிக்கொள்ளும் பெருமைமிகு பெயர் .
***
சாத்யர்கள்
ஒருவகை தெய்வீக புருஷர்கள் . பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இடைப்பட்ட உலகத்தில் வசிப்பவர்கள்; வேதத்தின் சடங்குகளும் பிரார்த்தனைகளும் இவர்களின் உருவங்களாக விளங்குகின்றன. அவர்களின் எண்ணிக்கை 12 அல்லது 17 என்று நூல்கள் விளம்பும்; தட்சனின் மகளான சாத்யாவுக்கும் தர்மனுக்கும் பிறந்தவர்கள் என்று புராணங்கள் பகரும்.
***
சகரர் – சாகரம்
சாகரம் என்றால் கடல் ; இந்தப்பெயர் சகரர்கள் மூலம் ஏற்பட்டது .
சூர்ய வம்ச அரசனான பாஹு என்பவன் அயோத்தியில் ஆளுகையில் அவனை ஹேஹய வம்சத்தினர் தோற்கடித்துக் காட்டுக்கு அனுப்பினார்கள்; பாஹு, காட்டில் இரண்டு மனைவியருடன் வசித்த காலையில், ஒரு மனைவி கருவுற்றாள்; இன்னொரு மனைவி பொறாமை கொண்டு அவளுக்கு மருந்து கொடுத்து பிள்ளை வெளியே வராமல் தடுத்தாள். இதற்கிடையில் பாஹு இறக்கவே கர்ப்பவதியும் சிதைத் தீயில் ஏறி உயிர்விட விரும்பினாள்; ஆனால் ஒளர்வ முனிவர் அவளைத் தடுத்து, பிறக்கப்போகும் குழந்தை உலகையே ஆளும் என்றார் அவ்வாறே சகரன் என்னும் குழந்தை பிறந்தது; அவன் வளர்ந்து அரசன் ஆகியவுடன் ஹேஹய வமசத்தை அழித்தான்; அவனுக்கும் இரண்டு மனைவிகள் ; சகர மன்னன் யவனர்களையும் சகர்களையும் வென்று அவர்களை இனம் காட்ட ஒவ்வொரு வெளிநாட்டு எதிரிகளும் தலையில், முகத்தில், வெவ்வேறு இடங்களில் மயிர்களை மழிக்கும் முறையை அமலுக்கு கொண்டுவந்தான் சகரனுக்கு சுமதி, கேசினி இரண்டு மனைவியர். கேசினிக்கு அசமஞ்சன் என்ற ஒரே புதல்வன் ; சுமதிக்கு 60,000 புதல்வர்கள் . இந்த எண் சம்ஸ்க்ருத மொழியில் பயன்படுத்தப்படும் மரபுச் சொல்; இதன் பொருள் எண்ணற்ற புதல்வர்கள் என்பதே.
சகர மன்னன், அஸ்வமேத யாகம் செய்தபோது அந்த அஸ்வம்/ குதிரை காணாமற்போனது ; சகரனின் புதல்வர்கள் 60,000 பேரும் பூமியைத் தோண்டி பாதாள உலகம் சென்றபோது தவம் செய்யும் கோலத்தில் இருந்த கபிலர் அருகில் குதிரை நின்று கொண்டிருந்தது சகர புத்திரர்கள் அவரை ஏசினார்கள்; கபிலர் கண்ணைத் திறந்தவுடன் தவ வலிமையில் 60,000 பேரும் சாம்பலாயினர்.
அயோத்தியில் சகரனுக்கு அடுத்து ஆட்சி புரிந்த அசமஞ்சனுக்கு அனுமத் என்ற ஒரே புதல்வன் ; அவன் ஆட்சிக்காலத்தில் கபிலரை அணுகி இறந்த புத்திரர்களை சொர்க்கத்துக்கு அனுப்பும்படி வேண்டினான்; அவரும் அருள்கூர்ந்து அப்படி நடக்கும்; ஆனால் அது அனுமத்தின் பேரன் பகீரதன் கங்கை நதியை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு கொண்டுவரும்போது நடக்கும் என்றார் ; அவர் சொன்னபடியே அனுமத்துக்குத் திலீ பன் பிறந்தான் அவனுக்கு மகனாக பகீரதன் அவதரித்தான் . அந்த பகீரதன், கடும் தவம் இயற்றி கங்கை நதியை கைலாசத்தில் உறையும் சிவபெருமான் முடியிலிருந்து இறக்கவே அது வங்கக்கடலிலும் ஏனைய கடல்களிலும் பாய்ந்து சகர புதல்வர்களின் அஸ்தியைக் கரைக்கவே அவர்கள் சுவர்க்கம் ஏகினர்; அன்று முதல் கங்கைக்கு பாகீரதி என்ற பெயரும் கடலுக்கு சாகரம் என்ற பெயரும் ஏற்பட்டது .
***
ஸஹதேவன்
பஞ்ச்ச பன்னாட்டவர்கள் என்னும் ஐவரில் கடைக்குட்டி ; பாண்டு மன்னனின் இரண்டாவது மனைவியாகிய மாத்ரி என்ற ராணி மூல ம் பிறந்தவர்; இவருடன் இரட்டையர்களாக நகுலனும் பிறந்தான் ; இவர்கள் இருவரும் ரிக் வேத இரட்டையர்களாக அஸ்வினி தேவர்களின் புதல்வர்கள் அல்லது அம்சம் உடையோர் என்பது கருத்து ; வான சாஸ்திரத்தில் வல்லவன் சகாதேவன்
***
சைரிந்திரி-
வனவாச காலத்தில் கடைசி ஆண்டான 13 ஆவது ஆண்டில் பாண்டவர்கள் மறைந்திருந்து வாழ வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விதி; இதனால் பாண்டவர்களைப் போலவே அவர்களுடைய மனைவி திரவுபதியும் சைரந்தரி என்ற புனைப்பெயர் கொண்டு விராட தேசத்தில் பணிப்பெண்ணாகப் பணி புரிந்தாள்; அப்போது மன்னனின் மைத்துனன் கீசகன் இவளிடம் வாலாட்டவே, பீமன் மூலம் அவளைத் தீர்த்துக் கட்டினாள் சைரந்தரி.
***
சக த்வீபம்
புராண பூகோளப்படி , இந்த பூமி ஏழு த்வீபங்களாகப் பிரிக்கப்பட்டது அதில் ஒன்று சக த்வீபம். இது எந்த இடம் என்பதில் குழப்பம் நிலவுகிறது வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு இடங்களைக் குறிப்பிட்டிருக்கின்றனர் . சகர்களுடன் தொடர்புடையது ஆகையால் மத்திய ஆசியாவின் ஒரு பகுதி அல்லது தேக்கு மரம் நிறைந்த பக்தி என்றெல்லாம் எழுதியுள்ளனர் . ஈரான் என்னும் பாரசீக நாட்டிலிருந்து வந்த மாக பிராமணர்கள் , இந்த இடம் ஈரான் என்று காட்டுகிறது . த்வீபம் என்றால் கடல்களுக்கு இடைப்பட்ட பெரு நிலப்பரப்பு என்பது பொருள்
***
சக சகாப்தம்
இது இந்தியாவின் தேசீய ஆண்டு ; வானொலி அறிவிப்பில் தினமும் கேட்கலாம் ; இது பொது ஆண்டு 78- ல் (78 CE) துவங்கியது தென் கிழக்கு ஆசிய கல்வெட்டுகளிலும் காணலாம் சாலிவாகன மன்னர்கள் துவக்கிய ஆண்டு இது
***
சாகல்ய, சாகடாயன
பாணினிக்கும் யாஸ்கருக்கும் முன்னர் வாழ்ந்த புகழ்பெற்ற இலக்கண வித்தகர்கள் ; இவர்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர்சம்ஸ்க்ருத இலக்கணத்தை எழுதினார்கள் ; பாணினியின் குறிப்புகளிலிருந்து இவர்களுடைய இலக்கணத்தை சிறிது அறிய முடிகிறது
***
சகரர்கள்
வெளிநாட்டு இனத்தினர் ; இந்தியாவுக்குள் புகுந்து இந்து மாயமா ஆனவர்கள் ; அதற்கு முன்னால், விக்ரமாதித்தன் போன்றோர் இவர்களை விரட்டி வெற்றி கண்டனர்; சகர மன்னனும் இவர்களை வென்றதாக புராணங்கள் புகலும் .
***
சாகா –
மரத்தின் கிளை அல்லது ஒரு பிரிவு என்பது பொருள்; வேதத்தை ஒவ்வொரு முனிவரும் சொல்லிக்கொடுத்த போது சில வேறுபாடுகள் பாணி, உத்தி, காணப்படுகிறது ; அதை அந்த முனிவரின் பெயரில் சாகை என்பார்கள் ; ஆர் எஸ் எஸ் இயக்கம் அதன் கிளைகளை ஷாகா என்று அழைக்கிறது .
***
சக்ர – இந்திரனின் இன்னும் ஒரு பெயர்.
***
சக்தி- சிவனின் மனைவி பெயர் ; பொதுவாக தேவி அல்லது விசை , ஆக்கம் என்ற பொருளும் உண்டு ; கிண்ண சக்தி கிரியா சக்தி இச்சா சக்தி பராசக்தி என்ற பொருளில் தேவீ மஹாத்ம்யயங்களில் காணலாம்; வசிஷ்ட முனிவரின் மகன் பெயரும் சக்தி .
***
சகுனி
காந்தாரியின் சகோதரன் ; சூதாட்டத்திலும் மோசடியிலும் வல்லவன் ; கெளரவர்கள் இவனைக்கொண்டு பாண்டவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்; அதன் விளைவாக அவர்கள் சூதாட்டத்தில் நாட்டை இழந்து 13 ஆண்டுகள் கனகத்துக்குச் செல்ல நேரிட்டது.
To be continued………….
Tags- சகுனி, சபா, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 89; இந்து மத கலைச்சொல் அகராதி-89