
Written by London Swaminathan
Post No. 16,030
Date uploaded in London – 29 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
குற்றாலக் குறவஞ்சி நூலைஎழுதியவர் யார் ? எப்போது எழுதினார் ?
2
இந்த நூலில் குற்ரால அருவி பற்றிய புகழ் பெற்ற பாடல் உள்ளது; அது என்ன?
3
குறவஞ்சி என்றால் என்ன ?
4
மலைவளம் பற்றி குறத்தி என்ன சொல்கிறாள் ?
5
குறத்தியை மக்கள் நாடுவது ஏன் ?
6
எந்தக் கடவுளை போற்றும் பாடல் இது ?
7
இந்த நூலில் வரும் கதாநாயகி யார்?
8
இந்த நூலில் சொல்லப்படும் கதை என்ன?
9
குறத்தி கூறும் மலைகளின் பட்டியல் என்ன ?
10
இந்த நூல் எங்கே அரங்கேறியது?
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
விடைகள்

1.இதனை எழுதியவர் திரிகூட ராசப்பக் கவிராயர் ஆவார். இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்.
வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய கவிராயர் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்)
**
2.திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியில் வரும் அழகான காட்சி:
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே
இது போன்ற பாடல் குறுந்தொகை 278 லும் உண்டு. தந்தைக் குரங்கு சிந்தும் கனிகளைக் குட்டிக் குரங்குகள் உண்டு உண்டு மகிழ்ந்தனவாம்.
**
3. குறவஞ்சி, சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. இதில் ஒரு பெண் கொள்ளும் காதல் , அந்த காதல் நோயைத் தீர்க்க குற்றத்தில் சூழும் ஆரூடம் , அப்போது அந்த நாட்டின் மலை வளம் , இயற்கை வனப்பு முதலியானவற்றைக் குறத்தி வருணிப்பாள்.
**
4. முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்
முற்றம்எங்கும் பரந்துபெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்
கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வேம்புதினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும்
தேன்அலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்குகொடை மகராசர் குறும்பலவின் ஈசர்
வளம்பெருகும் திரிகூட மலைஎங்கள் மலையே;
கிம்புரி= யானைத் தந்தம்
**
6.குற்றாலநாதர் என்னும் சிவபெருமானைப்போற்றும் நூல் இது.
**
7.இந்த நூலில் வரும் கதாநாயகி யின் பெயர் வசந்தவல்லி; அவள் குற்றாலத்தில் உறையும் சிவபெருமான் மீது காதல்/பக்தி கொள்கிறாள் .
**
8.குற்றாலநாதரின் திருவுலா தொடங்குகிறது குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார். இறைவனின் பவானியைக் காண காண பெண்கள் எழுந்து வருகின்றனர். அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி (கதைத்தலைவி) என்பவளும் வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூதனுப்புகிறாள். அப்போது குறிசொல்லும் குறத்தி தெருவழியே வருகிறாள். தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் வசந்தவல்லி கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் மீது காதல் கொண்டுள்ள செய்தியையும், (தலைவனின்) குற்றாலநாதரின் புகழ்பற்றியும் எடுத்துச்சொல்லி வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்று குறி சொல்லி பரிசு பெறுகிறாள்; குறத்தியின் பெயர் சிங்கி. அந்த நேரத்தில் அவள் கணவன் சிங்கன் avalaith தேடிவருகிறான். குறத்தியைக் கண்ட சிங்கனிடம் குறத்தி நடந்ததைச் சொல்ல இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர். இவ்வாறு கதை முடிகிறது.
9.குறத்தி கூறும் மலைகளின் பட்டியல்:
கயிலைஎனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே
கனகமகா மேருஎன நிற்குமலை அம்மே
சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை அம்மே
சகலமலை யுந்தனக்குள் அடக்குமலை அம்மே
வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை அம்மே
வான்இரவி முழைகள்தொறும் நுழையுமலை அம்மே
துயிலுமவர் விழிப்பாகி அகிலமெங்கும் தேடும்
துங்கர் திரி கூடமலை எங்கள்மலை அம்மே;
கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே
கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே
எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே
இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே
சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே
தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே
செல்இனங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும்
திரிகூடமலை யெங்கள் செல்வமலை அம்மே;
சயில மலை என்பது சஹ்யாத்ரி என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையாக இருக்கலாம். இது வடக்கில் மகாராஷ்டிரா மாநிலம் வரை ஆயிரம் மைல்கள் நீண்டது.
விந்தை மலையென்பது இந்தியாவின் நடுவில் செல்லும் விந்திய மலையாக இருக்கலாம். (பழையவுரைகாரர்களின் விளக்கம் சரியில்லை)
வேள்விமலை (தற்காலத்தில் வேளிமலை அல்லது குமாரகோவில் என அழைக்கப்படுகிறது) என்பது முருகப் பெருமான் வள்ளிக்குத் திருமணம் நடந்தபோது வேள்வி செய்த இடமாகும். இது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் தக்கலை அருகில் உள்ளது
**
10. தென்காசிக்கு அருகிலுள்ள திருக்குற்றாலநாதரின் முன்னிலையில் இந்நூல் அரங்கேற்றப்பட்டது அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.
–subham—
Tags- குற்றாலக் குறவஞ்சி , 10 கேள்விகள் , மலைகள் பட்டியல் , திருக்குற்றாலநாதர் , திரிகூட ராசப்ப கவிராயர்,வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு, தேனருவி.