Written by London Swaminathan
Post No. 16,042
Date uploaded in London – 1 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
குயில் பாட்டில் வரும் குயில் பறவையைப் பாரதியார் எங்கே கண்டார் ?
2
இந்தப் பாட்டில் மீண்டும் மீண்டும் வரும் செய்யுள் வரிகள் என்ன ?
3
குயிலைக் காண புலவர் எத்தனை நாள் தோப்புக்குச் சென்றார் ?
4
முதல் நாள் முதல் கடைசி நாள் வரை அவர் கண்ட மிருகங்கள் யாவை?
5
இந்தப் பறவைப் பாட்டினை எந்த ஆங்கிலக் கவிஞர் பாட்டுடன் அறிஞர்கள் ஒப்பிடுகின்றனர்?
6
குயில் பாட்டினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் ?
7
இந்தப்பாட்டில் பாரதியார் என்ன சொல்ல வருகிறார் ?
8
குயிலின் பூர்வ ஜன்மக் கதை என்ன ?
9
குயில் பாட்டின் இறுதியில் பாரதியார் என்ன சொல்கிறார்
10
குயில் பாட்டு எவ்வளவு நீளமானது ? அவர் கொடுத்த தலைப்புக்கள் என்ன ? அது எங்கே முதலில் வெளியானது ?
************************************
விடைகள்
1.புதுச்சேரி நகரின் மேற்கில் ஒரு மாஞ்சோலை. முத்தியாலுப்பேட்டை என்றொரு பகுதியில் இருந்த அந்த இயற்கை எழில் மிகுந்த சோலை கிருஷ்ணசாமிசெட்டியார் என்பவருக்கு ச் சொந்தமாக இருந்தது. அந்தத் தோப்பிற்குச் சென்ற பாரதியார் குயில் கூவுவதைக் கேட்டார். அப்போது உதித்ததே இந்தக் குயில் பாட்டு.
***
2.இந்தப் பாட்டில் மீண்டும் மீண்டும் வரும் செய்யுள் வரிகள் :
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.
***
3.குயிலைக் காண புலவர் நான்கு நாட்களுக்குத் தோப்புக்குச் சென்றார்.
***
4.குரங்கும் கிழட்டுக் காளை மாடும்; பிற பறவைகளும் அங்கே இருந்தன.
***
5.இந்தப் பறவைப் பாட்டினை ஆங்கிலக் Keats Ode to a Nightingale கவிஞர் கீட்ஸ் எழுதிய நைட்டிங்கேல் பாடல் , ஷெல்லி எழுதிய ஸ்கைலார்க் என்னும் வானம்பாடிப் பாடலுடன் அறிஞர்கள் ஒப்பிடுகின்றனர்.
***
6. குயில் பாட்டினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் N.V. சுப்பாராமன். பின்னர் மேலும் பலர் மொழிபெயர்த்தனர்
***
7.பாரதியார் குயில் பாட்டின் இறுதியில் கவிஞர் மூன்று அடிகளில் ஒரு வினாவை எழுப்புகின்றார்.
ஆன்ற தமிழ்ப் புலவீர்! கற்பனையே ஆனாலும்
வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ!
அவரே வேதாந்தம் என்று சொல்லிவிட்டதால் அத்வைத தத்துவத்தை இதில் காணலாம் .வேதாந்த நெறிப்படி இறைவனும் உயிரும் வேறு வேறு அல்ல. இரண்டையும் வேறு வேறாகக் காட்டுவது மாயையின் செயல். இந்த மாயை பக்தி, ஞான, கர்மயோகங்களால் விலகும். இதன்படி நோக்கக் குயில் நாத வடிவான இறைவன் குறியீடு என்பது விளங்கும். கவிஞன் பாட்டின் பொருள், குயில் அப்பாட்டின் நாதம். இரண்டும் ஒன்றுபடத் தடையாயிருப்பது மாயை. மாயை மாடாகவும் குரங்காகவும் வந்து பொய்த் தோற்றங்களைப் படைக்கின்றது. அறிவு என்ற வாளின் வீச்சிலே பொய்த் தோற்றம் கலைகிறது.
குயில்பாட்டின் தத்துவ உள்ளுறை
குயில்-சீவான்மா (உயிர்) (Soul)-கவிஞன்;
பரமாத்மா (கடவுள்) (God)-குரங்குமனம் (mind);
மாடு-ஐம்பொறி (Senses);
உடைவாள்-ஞானம் (மெய்யறிவு) (Real Knowledge);
ஏனைய பறவைகள்-உலகியல் (Worldly life);
சோலை-பிரபஞ்சம் (Universe);
நான்குநாள்-சீவன்பக்குவம்
பெறுவதற்குரியகாலம்(Timerequiredforthsoul to be fit)
இப்பாட்டில் குயில் – சீவான்மா, கவிஞன் – பரமாத்மா, குரங்கு- மனம், மாடு-ஐம்பொறி, உடைவாள்-ஞானம், ஏனைய பறவைகள்- உலகியல், சோலை-பிரபஞ்சம், நான்கு நாள்- சீவான்மா பக்குவம் பெறுவதற்குரிய காலம் என்ற வகையில் தத்துவம் அடங்கியதாகக் கருதுவர்.
இப்பாடலைச் சைவ சித்தாந்த நோக்கில் கணிப்பவர்,”ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களில் காதலை மாயா சக்தியாகவும் ஆணவம், கன்மம், என்பவைகளை மாடனும் குரங்கனுமாகப் பாவித்து, குயிலைப் பசுவாக ஆன்மாவாகப் பாவித்து மன்னவன் மகனைப் பதியாகப் பாவித்துப் பொருள்கொள்ளுவதே பொருத்தமுடைத்தாம்
***
8.குயிலின் பூர்வ ஜன்மக் கதை :
குயிலின் முந்தைய பிறப்பு:
ஒரு நாள் பொதியமலையின் அருகேயுள்ள ஒரு சோலையில் ஓர் முனிவர் வந்தார். மற்ற குயில்களைப் போலன்றி என் மனம் மானுடரைப் போல் எண்ணுகிறது, அவர்கள் பேசும் மொழி எனக்குப் புரிகிறது. இதன் காரணம் என்ன? இதன் உண்மையை எனக்கு விளக்கியருள வேண்டும்” என்று வணங்கிக் கேட்டேன்.
“அப் பெருமுனிவர் பேசினார். “குயிலே! கேள். சேரவள நாட்டின் மலையில் வாழும் வேடர்களுக்கு வீரமுருகன் என்பவன் முன்பு தலைவனாக இருந்தான். முற்பிறப்பில் அந்த வீரமுருகனின் மகளாகப் பிறந்திருந்தாய். அப்போது உன்னைச் “சின்னக்குயிலி” என்ற பெயரால் அழைப்பர்.
உன்னுடைய மாமன் மகன் மாடன் என்பவன் உன்னை மணக்க விரும்பி உன் நினைவாகவே சித்தம் வருந்தினான். அவனுடைய பெருந்துன்பத்தைக் காணச் சகிக்காமல் அவனை மாலையிட நீ வாக்களித்தாய். . தென்மலையின் வேடர் தலைவன் மொட்டைப்புலியனின் மகனான நெட்டைக்குரங்கனுக்கு, உன்னை மணமுடிக்க நிச்சயித்தான் அந்த மொட்டைப்புலியன். உனது அப்பனும் சம்மதித்தான்
செய்தி கேட்டு மாடன் மனம் புகைந்தான். உன்னிடம் வந்தபோது, நெட்டைக் குரங்கனுக்கு நான் பெண்டாட்டியாக நேர்ந்தாலும் மூன்று மாதங்களுக்குள் ஏதாவது மர்மம் செய்து வேற்றுமையை விளைவித்து இங்கே நான் வந்தடைவேன். தாலியை மீண்டும் அவர்களிடமே கொடுத்து விடுவேன். நான்கு மாதத்தில் நாயகனாக உன்னை நான் மணம் புரிவேன். என் பேச்சு தவறமாட்டேன். மாடா! என்னை நம்பு” என்று இரக்கத்தினால் உரைத்தாய்.
ஒரு நாள் சேரமன்னனின் மகன் வேட்டையாட காட்டிற்கு வந்தவன், நீங்கள் இருக்குமிடம் வந்தான். உன்னைக் கண்ட அந்த அரசகுமாரன் உன் மீது மாளாக் காதல் கொண்டான். நீயும் அவனைக் கண்டாய், அவன்மீது ஆறாக் காதல் கொண்டாய், இருவரும் ஆவி ஒன்றென தழுவி நின்றீர்.
அவ்வேளையில் ஊரிலிருந்து நெட்டைக் குரங்கன் வந்து இளவரசனும் நீயும் நெருக்கமாக இருப்பதைக் கண்டான்.
நெட்டைக்குரங்கன் வந்த செய்தியை யாரோ இதற்குள் மாடனுக்குத் தெரிவித்தார்கள். அவனும் சின்னக் குயிலியைத் தேடிக்கொண்டு காட்டிற்கு ஓடிவந்தான். . இருவரும் தத்தம் உடைவாளை உருவிக்கொண்டு முன்னே பாய்ந்தனர்.
இளவரசன் மீது இருவர் வீசிய வாட்களும் பாய்ந்தன. சடாரென திரும்பினான் இளவரசன். உடைவாளை எடுத்து ஒரே வீச்சில் மாடனையும் குரங்கனையும் மண்ணிலே சாய்த்தான். அடுத்த கணமே அவனும் அடியற்ற மரம்போல் சாய்ந்தான். இளவரசன் “வஞ்சியே, நீ அஞ்சாதே. பிறப்பும் இறப்பும் இவ்வையகத்தில் புதுமையன்று. சாவிலே துன்பம் ஒன்றும் இல்லை. நாம் இருவரும் மீண்டும் இம்மண்ணில் பிறப்போம். அப்போது உன்னை மீண்டும் கண்டு அன்பு கொள்வேன். அப்பால் உடலும் உயிரும் ஒன்றென நாம் இல்லறம் காண்போம்” என்று புன்னகை பூக்கச் சொல்லி ஆவி நீங்கினான். இப்பிறப்பில் நீ குயிலாய் காட்சி கொடுக்கின்றாய்” என்று அந்த முனிவர் குயிலின் வரலாற்றைக் கூறி முடித்தார்.
“உன்னுடைய மன்னவன் இப்பிறப்பில் தொண்டை வளநாட்டில் கடற்கரைப் பட்டினம் ஒன்றில் பிறந்து வளர்கிறான். உன்னை ஒருநாள் சோலையினிடத்தே காண்பான். உள்ளம் உருக நீ பாடும் காதல் பாட்டினைக் கேட்பான். “ஐயனே! இப்பிறப்பில் நானோ குயில் உருவம் கொண்டுள்ளேன். என் கோமானோ பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்றுள்ளார். எங்கள் இருவருக்கும் நெஞ்சம் ஊடுருவிக் காதல் மலர்ந்தாலும், எங்ஙனம் எங்கள் திருமணம் நடக்கும்?” என்றேன்.
“பேதாய்! இப்பிறவியிலும் நீ விந்தியமலைச் சாரலில் உள்ள ஒரு வேடனுக்குக் கன்னியாகவே பிறந்தாய். தீவினைப் பயனாய் மாடன், குரங்கன் இருவருமே கொடும்பேய்களாக அலைகின்றனர். அவ்வாறு அவர்கள் காடு, மலை, மேடு, பள்ளமெல்லாம் சுற்றி அலைந்து திரிந்துவரும் வேளையிலே, உன்னைக் கண்டு விட்டனர். இப்பிறப்பிலும் நீ மன்னனையே மணப்பாய் என்றெண்ணி உன்னைச் சின்னக் குயிலாக்கி, நீ செல்லும் திசையெல்லாம் நின்னுடனே சுற்றி, சூழ்ச்சி பல செய்து வருகின்றனர். நீ இதனைத் தெரிகிலையோ?” என்றார் முனிவர்.” இதற்கு ஓர் மாற்று இல்லையா?” என்று மனம் மறுகி நான் கேட்டேன்.
மாமுனிவரும், “பெண்ணே! வேந்தன் மகன் உன்னைக் கண்டு நேசம் காட்டி நிற்கையில், இப்பேய் இரண்டும் மாயம் பல செய்யும். அவனும் அதன் பயனாய் உன்பால் ஐயம் கொள்வான். சினம் கொண்டு கன்னி உன்னை விட்டுவிட உறுதி கொள்வான். இதற்கப்பால் நேருவதையெல்லாம் நீயே அறிந்துகொள்வாய், எனக்கு சந்தியாவந்தனம் ஆற்றுகின்ற நேரம் வந்துவிட்டது” என்று சொல்லி அவரும் காற்றிலே மறைந்து போனார். இதுவே என்னுடைய பழம்பிறப்பின் கதை. இப்பிறப்பின் பின்னைப் பகுதியிலே நடந்தவற்றைப் பார்த்திபனே, நீர் முற்றிலும் அறிவீர்!
***
10. குயில் பாட்டு” சி. சுப்பிரமணிய பாரதி எழுதிய நீள் கவிதை நூல். 1914-ல் எழுதப்பட்டு 1923-ல் வெளிவந்தது. 1. சோலைக் குயில்,2. குயிலின் பாட்டு,3 குயிலின் காதற் கதை, 4. காதல் வேதனை, 5. குயிலும் குரங்கும், 6. இருளும் ஒளியும், 7. குயிலும் மாடும், 8. நான்காம் நாள்,- 9. குயில் தனது முன்பிறப்பின் கதையை மொழிதல்-என்ற 9 பிரிவுகளை உடையது. குயில் பாட்டின் மொத்த வரிகள் 745.
–subham—
Tags– பாரதி, குயில்பாட்டு , 10 கேள்விகள் , மொத்த வரிகள், ஆங்கில மொழிபெயர்ப்பு, புதுச்சேரி, மாந்தோப்பு , குயில், பாரதி