அறப்பளீச்சுர சதகம் பற்றி 10 கேள்விகள் (Post.16,046)

Written by London Swaminathan

Post No. 16,046

Date uploaded in London – 2 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

அறப்பளீச்சுர சதகம் நூலை இயற்றியவர் யார் ? எப்போது எங்கே இயற்றினார் ?

2

அந்தணர் பற்றி அறப்பளீச்சர   சதகம் செப்புவது என்ன?

3

அரிது அரிது  மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று அவ்வையாரும், ஆதி சங்கரரும் சொன்னார்கள் ; இவர் என்ன சொன்னார் ?

4

நல்ல புதல்வன் யார் ?

5

மனைவியின் குணநலன்கள்  பற்றி அறப்பளீச்சுர சதகம்கூறுவது என்ன ?

 6

நாய் வாலை நிமிர்த்த முடியாது அதே போல முட்டாள்களும் என்று எங்கே சொல்கிறார் ?

 7

இல்லறத்தார் சன்யாசிகளைவிட மேலானவர்கள்  என்று அறப்பளீச்சர சதகம்சொல்கிறதா ?

8

கள் குடித்து, தேள் கொட்டி, பேயும் பிடித்த குரங்கு பற்றி அறப்பளீசுர சதக நூலில்   அம்பலவாணக்கவிராயர் பகிர்வது என்ன ?

9

நல்லவர்களின் பட்டியலில் யார் யாரை அம்பலவாணக் கவிராயர் சேர்த்துள்ளார்?

10

பயனற்ற இடங்கள், ஆட்கள், செயல்கள் பற்றி  அறப்பளீச்சர சதகப் பாடல் தரும் பட்டியல் என்ன ? 

****************************************************************************************

விடைகள்

1.அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.. இவர் சோழநாட்டிலே தில்லையாடி என்னும் ஊரிலே வேளாளர் குலத்திலே பிறந்தவர். இவர் தந்தையார் இராம நாடகம்சீர்காழித் தலபுராணம் என்னும் அரிய நூல்களை இயற்றிப் புகழ் பெற்ற அருணாசலக் கவிராயர் ஆவார். அவருடைய மூத்தமகன் இவர். இவர் காலம் ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது

***

2.ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி

     ஒன்றுதப் பாது புரிவார்;

  உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்

     ஒருமூன்றி னுக்கும் மறவா

தாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்

     அதிதிபூ சைகள்பண் ணுவார்;

  யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்

     இன்றியே செய்து வருவார்;

பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே

     பிழையா திருக்கும் மறையோர்

  பெய்யெனப் பெய்யும்முகில்;அவர்மகி மையெவர்களும்

     பேசுதற் கரித ரிதுகாண்!

(அந்தணர் தமக்கு உரித்தான ஆறு தொழிலையும் (ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர்) கைவிடார்.

கடமைகளைத் தப்பாமல் செய்வார்

சூரியன் தோன்றும்போது நீராடுவார்

3 காலத்திலும் காயத்திரி மந்திரம் சொல்லுவார்

நாள்தோறும் இரவலர்க்கு வழங்குவார்

யாகம் செய்வார்

மந்திரம் சொல்லுவார்

பேராசை கொள்ளமாட்டார்

வைதிக மார்க்கம் பிழையாமல் கடைப்பிடிப்பார்

இப்படிப்பட்டவர் பெய் என்றால் மழை பெய்யும்)

***

3.கடலுலகில் வாழும்உயிர் எழுபிறப் பினுள்மிக்க

     காட்சிபெறு நரசன் மமாய்க்

  கருதப் பிறத்தலரி ததினும்உயர் சாதியிற்

     கற்புவழி வருதல் அரிது;

வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது

     வருதலது தனினும் அரிது;

  வந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்றெண்ணி

     மாசில்வழி நிற்றல் அரிது;

நெடியதன வானாதல் அரிததின் இரக்கம்உள

     நெஞ்சினோன் ஆதல் அரிது;

  நேசமுடன் உன்பதத் தன்பனாய் வருதல்இந்

     நீள்நிலத் ததினும் அரிதாம்;

****

4.தங்குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு

     தருமங்கள் செய்து வரலும்,

  தன்மமிகு தானங்கள் செய்தலும், கனயோக

     சாதகன் எனப்படுதலும்,

மங்குதல் இலாததன் தந்தைதாய் குருமொழி

     மறாதுவழி பாடு செயலும்,

  வழிவழி வரும்தமது தேவதா பத்திபுரி

     மார்க்கமும், தீர்க்கா யுளும்,

இங்கித குணங்களும், வித்தையும், புத்தியும்,

     ஈகையும், சன்மார்க் கமும்

  இவையெலாம் உடையவன் புதல்வனாம்.

***

5.மனைவியின் குணநலன்கள் 

கணவனுக்கினியளாய் ம்ருதுபாஷியாய் மிக்க

கமலை நிகர் ரூபவதியாய்க்

காய்சின மிலாளுமாய் நோய் பழியிலாத தோர்

கால்வழியில் வந்தவளுமாய்

மணமிக்க நாணம் மடம் அச்சம் பயிர்ப்பென்ன

வருமினிய மார்க்கவதியாய்

மாமி மாமர்க்கிதம் செய்பவளுமாய் வாசல்

வருவிருந் தோம்புபவளாய்

இணையின் மகிழ்நன் சொல்வழி நிற்பவளுமாய் வந்தி

யெனப் பெயரிலாத வளுமாய்

(ம்ருதுபாஷி = இன்சொல் உடையவள்; கமலை = திருமகள்; ரூபவதி = அழகி; கால்வழி = பரம்பரை; இதம் = அன்பு; மகிழ்நன் = கணவன்; வந்தி = மலடி)

***

6.நீர்மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!

     நெருப்பைநீர் போற்செய் யலாம்!

  நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!

     நீள்அர வினைப்பூ ணலாம்!

பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்

     பட்சமுட னேஉண்ண லாம்!

  பாணமொடு குண்டுவில கச்செய்ய லாம்! மரப்

     பாவைபே சப்பண் ணலாம்!

ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்

     எடுக்கலாம்! புத்தி சற்றும்

  இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே

     எவருக்கும் முடியா துகாண்!

***

7.  ஆமாம் . கிருஹஸ்தனே மேலானவன்.

தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்

     சன்மார்க்கம் உளமனை வியைத்

  தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்

     தனைநம்பி வருவோர் களைச்

சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்

     தென்புலத் தோர் வறிஞரைத்

  தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்

     தேனுவைப் பூசுரர் தமைச்

சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாது

     தான்புரிந் திடல்இல் லறம்;

  சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்

     தம்முடன் சரியா யிடார்!

அந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்

     கன்பனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

தந்தை ,தாய் ,விரும்பும் தெய்வம் ,மனைவி ,சுற்றத்தார் ,பெற்ற பிள்ளைகள் ,பாதுகாப்புக்காகத் தன்னை நம்பி வருவோர் ,பணியாளர் ,தென்புலத்தார் ,வறிஞர் ,

அதிதி ,துணைவர் (நண்பர்) ,பசு ,பூசுரர் (அந்தணர்) ,ஆகியோரைப் பேணுபவர் இல்லறத்தார். ,துறவறத்தார் இவருக்குச் சமமாகமாட்டார்.

***

8.வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டு

     வெங்காஞ் சொறிப்பு தலிலே

  வீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்

     மேவுமோ? மேவா துபோல்,

குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,

     கூடவே இளமை உண்டாய்க்,

  கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்க

     குவலயந் தனில்அ வர்க்கு,

நிறைகின்ற பத்தியும் சீலமும் மேன்மையும்

     நிதானமும் பெரியோர் கள்மேல்

  நேசமும் ஈகையும் இவையெலாம் கனவிலும்

     நினைவிலும் வராது கண்டாய்;

வெறி கொண்ட மற்கடம் – வெறி பிடித்த ஒரு குரங்கு, பேய் கொண்டு – பேயாற் பிடிக்கப்பட்டு, கள் உண்டு – (அதன்மேற்) கள்ளையுங் குடித்து, வெம் கரஞ்சொறிப் புதரில் வீழ்ந்து – (மேலும்) கொடிய பூனைக்காஞ்சொறிப் புதரில் விழுந்து, தேள்

கொட்டிட – (அவற்றுடன்) தேளாலும் கொட்டப்பெற்றால், எள்ளளவும்

சன்மார்க்கம் மேவுமோ – (அக் குரங்குக்கு) சிறிதளவேனும் நன்னெறியிலே செல்லும் நிலை உண்டாகுமோ? மேவாதுபோல் – (அவ்வாறு அக் குரங்குக்கு நன்னெறி) தோன்றாததுபோல்), குறைகின்ற புத்தியாய் – சிற்றறிவுடன், அதில் அற்ப சாதியாய் – மேலும் இழிசெயலுடைய குலத்தினராய், கூடவே இளமை உண்டாய்

– அவற்றுடன் இளமைப் பருவமும் உடையவராய் (இருந்து) அவர்க்கு –

அவர்கட்கு, கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் – சிறிது

தலைமைப்பதவி கிடைத்தாலும், குவலயந்தனில் – உலகத்தில், நிறைகின்றபத்தியும் – நிறைந்த கடவுள் அன்பும், சீலமும் – ஒழுக்கமும், மேன்மையும்– பெருந்தன்மையும், நிதானமும் – அமைதியும், பெரியோர்கள்மேல் நேசமும் – அறிஞரிடம் நட்பும், ஈகையும் – கொடைப்பண்பும்,இவையெலாம் நினைவிலும் கனவிலும் வராது – (ஆகிய) இவைகள் யாவும் நினைவிலேயன்றிக் கனவிலும் உண்டாகா.

***

9.நல்லவர்களின் பட்டியலில்  சற்புருடர்யார் ?

செய்ந்நன்றி மறவாத பேர்களும், ஒருவர்செய்

     தீமையை மறந்த பேரும்,

  திரவியம் தரவரினும் ஒருவர்மனை யாட்டிமேல்

     சித்தம்வை யாத பேரும்,

கைகண்டு எடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்

     கையில்கொ டுத்த பேரும்,

  காசினியில் ஒருவர்செய் தருமம்கெ டாதபடி

     காத்தருள்செய் கின்ற பேரும்,

பொய்ஒன்று நிதிகோடி வரினும் வழக்குஅழிவு

     புகலாத நிலைகொள் பேரும்.

  புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்

     பொய்ம்மைஉரை யாத பேரும்,

ஐய, இங்கு இவரெலாம் சற்புருடர் என்று உலகர்

     அகமகிழ்வர்!

(செய்நன்றி மறவாதவர்கள், ஒருவர் செய்த தீமையை மறந்து, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற ‘பாலிசி’யைப் பின்பற்றுவோர் உத்தமர்கள். 

பணமே கொடுத்தாலும் மாற்றானின் மனைவியின் மீது ஆசை வைக்காதவனும், பிறர் பொருளைக் கீழே கண்டு எடுத்தாலும் அதன் உரிமையாளரைத் தேடிக்கண்டு பிடித்து கொடுப்பவரும்,  கோவிலுக்கும் அறப்பணிகளுக்கும், பிராமணர்களுக்கும் கல்வெட்டுக்களில், உயில்களில் எழுதி வைத்த தர்மத்தைக் காப்பவர்களும்  உத்தமர்கள்.

எவ்வளவு பணம் கொடுத்தாலும் வழக்கில் பொய் பேசாமல், நடுவு நிலைமை தவறாறாதவர்களும் , அதாவது கோடிக்கணாக்காக பணத்தை அள்ளிவீசினாலும் பணத்துக்காக பொய்ச் சாட்சி, பொய்த் தீர்ப்பு சொல்லாதவர்களும்  உயிரே போகும் நிலைமை வந்தாலும் கனவிலும் கூட பொய் மட்டும் சொல்ல மாட்டேன் என்போரும் சத் புருஷர்கள்/ நல்லவர்கள் என்று உலகமே போற்றும்.)

***

10.அம்பலவாணர் சொல்வது :

கோவில் இல்லாத ஊர், நாசி இல்லா முகம்,

          கொழுநன் இல்லாத மடவார்,

     குணமது இல்லா வித்தை, மணமது இல்லாத மலர்,

          குஞ்சரம் இலாத சேனை,

காவல் இல்லாத பயிர், பாலர் இல்லாத மனை,

          கதிர் மதி இலாத வானம்,

     கவிஞர் இல்லாத சபை, சுதி லயை இலாத பண்,

          காவலர் இலாத தேசம்,

ஈவது இல்லாத தனம் நியமம் இல்லாத செபம்,

          இசை லவணம் இல்லாத ஊண்,

     இச்சை இல்லாத பெண் போக நலம், இவை தம்மின்

          ஏது பலன் உண்டு?

–subham—

Tags அறப்பளீச்சுர சதகம், 10 கேள்விகள்,  அம்பலவாணர், அந்தணர், நல்ல மனைவி , நல்லவர் பட்டியல் , கள் குடித்த குரங்கு

Leave a comment

Leave a comment