
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,057
Date uploaded in London – 6 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
116 வயதான பாட்டி திருமலையில் படியேறி செய்த தரிசனம்!
ச. நாகராஜன்
திருப்பதி வெங்கடேச பெருமாள் நடத்தும் லீலைகள் அனந்தம்.
தன் பக்தர்களை அவர் காக்கும் விதமும் பிரமிப்பூட்டும் ஒன்றாகும்.
சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அவரது அருளுக்குச் சான்றாக விளங்குகிறது.
நவநீதம்மா என்ற 116 வயது பாட்டி திருமலைக்குக் கால்நடையாகச் சென்ற சம்பவம் பக்தர்களிடையே பிரமிப்பையும் பரவசத்தையும் ஊட்டுகிறது.
தனது குடும்பத்துடன் வெங்கடாஜலபதியின் அருள் வேண்டி அவர் திருமலை யாத்திரைக்குப் புறப்பட்டார்.
அவரது யாத்திரையை காணொளியாக எடுத்த அன்பர்கள் அதை சமூக ஊடகங்களில் காண்பிக்க இது உலகெங்கும் பரவி விட்டது.
இதை அறிந்து கொண்ட ஆந்திர பிரதேச முதன்மந்திரி திரு என். சந்திரபாபு நாயுடு சமூக ஊடகத்தில் இந்தப் பதிவை இட்டுள்ளார்: “உண்மையான பக்திக்கு முன்னர் வயது என்பது வெறும் ஒரு நம்பர் தான்! இந்த 116 வயது பாட்டி திருமலைக்குக் கால்நடையாகச் சென்று வெங்கடேஸ்வர சாமியை தரிசனம் செய்தது பிரமிப்பை ஊட்டுகிறது.”
அனைவரும் அவரது யாத்திரை உத்வேகம் ஊட்டும் ஒன்று என்று கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். பலரும் மனிதனின் உறுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று என்றும் தெரிவித்துள்ளனர்.
நவநீதம்மாளுக்கு அவரது குடும்பம் முழு ஆதரவையும் தந்துள்ளது. அவருடன் கூடவே நடந்து சென்று அவரது சங்கல்பத்தை நிறைவேற்ற உதவியது. சந்திரபாபு நாயுடு அவரது குடும்பத்தினரின் ஆதரவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அவரது வருகையை அறிந்த திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஒரு விசேஷமான வி ஐ பி தரிசன ஏற்பாட்டை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செய்தது. ஆலய அதிகாரிகள் அவருடன் இருந்து அவரது பூரண திருப்தியுடனான தரிசனத்திற்கு உதவி செய்தனர்.
பின்னர் அவருக்கு ஒரு பட்டாடையைப் போர்த்தி அவரை கௌரவித்தனர். தீர்த்த பிரசாதம் உள்ளிட்டவை அவருக்கு வழங்கப்பட்டது.
நம்பிக்கையையும் உள்ளார்ந்த மன உறுதியையும் வெளிப்படுத்தும் இந்த சம்பவம் இப்போது பக்தர்களின் முக்கிய பேசுபொருளாகி விட்டது.
சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்த நிலையில் நீங்கள் இருக்கும் போது உங்களுக்கு முக்தி நிச்சயம் என்று மைத்ரேயி உபநிடதம் கூறுவதை இங்கு நாம் நினைவு கூரலாம்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது 7-7-2026 இதழில் விவரமாக வெளியிட்டுள்ளது.
கோவிந்தா, கோவிந்தா, அனைவரையும் காக்க வேண்டும் கோவிந்தா!
**