

Written by London Swaminathan
Post No. 16,070
Date uploaded in London – 9 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

1
சீவக சிந்தாமணி நூலை எழுதியவர் யார் ? அது எந்தக் காலத்தைச் சேர்ந்தது ?
2
இதிலுலுள்ள விமான(பறக்கும் வாகனங்கள் ) அதிசயங்கள் என்ன ?
3
இந்தக் கதைக்கு மூலம் எங்கே இருக்கிறது ?
4
இலக்கியத்தில் என்ன புதுமையைக் கையாண்டார் இதன் ஆசிரியர் ?
5
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான இதில் யார் கதை இடம்பெறுகிறது ?
6
சிந்தாமணி என்றால் என்ன ?
7
சீவக சிந்தாமணியை ‘மணநூல்’ என்றழைக்கக் காரணம் என்ன ?
8
சீவக சிந்தாமணி நூலில் கனவுகள் பற்றி என்ன அரிய செய்திகள் உள ?
9
சீவக சிந்தாமணியில் என்ன சிறப்பான உவமைகள் வருகின்றன ?
10
சீவக சிந்தாமணியில் உள்ள சோதிட குறிப்புகள், நம்பிக்கைகள் என்ன?
*************************************

விடைகள்
1.சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்தைப் படைத்தவர் திருத்தக்க தேவர். சோழர் குலத்தில் அரச மரபைச் சார்ந்தவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். தீபங்குடியில் பிறந்தவர். இவருடைய காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும்.
***
2.பறக்கும் வாகனம் பற்றி சீவக சிந்தாமணி : வால்மீகி ராமாயணத்தில் பறக்கும் விமானம் பற்றிய அதிசயச் செய்திகளும் மஹாபாரத வனபர்வத்தில் வானுலகுக்குச் சென்ற ஸ்பேஸ் ஷட்டில் பற்றியும் நம்மாழ்வார் பாடலில் நொடிப்பொழுதில் விண்ணுலகம் சென்று திரும்பிய ஸ்பேஸ் ஷட்டில் பற்றியும் உள்ளது. சீவக சிந்தாமணி காப்பியத்தில், வான்வழிப் பறக்கும் இயந்திரமாகிய ‘மயில்பொறி’ (செயற்கை மயில் வடிவிலான பறக்கும் வாகனம்) பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அரசன் சச்சந்தன் தன் மனைவி விசயையை ஆபத்தில் இருந்து காப்பாற்ற இந்த வானூர்தியைப் பயன்படுத்தினான். போர்க்கால ஆபத்துகளின் போது, கருவுற்றிருந்த தன் மனைவி விசயமாதேவியை பறக்கும் ஊர்தியில் ஏற்றிப் பாதுகாப்பாக அனுப்பினார்.
3.சிந்தாமணி ஒரு சமயக் காப்பியமாகும். வட மொழியிலுள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் ஆகிய நூல்களில் சீவகன் கதை காணப்படுகிறது. அவற்றைத் தழுவித் தமிழில் சீவக சிந்தாமணி என்னும் பெரு நூலாகத் தந்துள்ளார் திருத்தக்க தேவர்.
***
4.விருத்தம் என்னும் புதிய பாஇனம்-இந்நூலில் முதன் முறையாகக் கையாளப்பட்ட து. அதனால் இக்காப்பியம் பிற்காலத்தில் எழுந்த கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய காப்பியங்களுக்கு அடிப்படையாகவும், முன்னோடியாகவும் அமைந்தது.
***
5.சச்சந்தன் விசயை என்போர் சீவகனின் பெற்றோர் ஆவர். கட்டியங்காரன் என்னும் அமைச்சன் சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனைக் கொன்று, ஏமாங்கத நாட்டினைக் கைப்பற்றினான். குழந்தைப் பருவம் முதற்கொண்டு சீவகனைக் கந்துக்கடன் என்னும் வாணிகன் வளர்த்து வந்தான். உரிய பருவம் எய்தியதும் தன் நாட்டைப் பெறுவதற்குத் தாயின் அறிவுரையோடு, மாமன் கோவிந்தனின் துணைக்கொண்டு போரிட்டு வென்றான், சீவகன். அச்செய்திகளை விரிவாக விளக்கிக் கூறும் நூலே சீவக சிந்தாமணி ஆகும்
***
6.தெய்வீக மணி: நாம் எதை நினைக்கிறோமோ அதை அப்படியே தரும் கற்பகக் கல் அல்லது சிந்தனைக்கு ஏற்ப வரம் தரும் மணி.
அரிய கல்: பிரகாசமான, ஒளி கெடாத ஒரு தனித்துவமான மணிவகை.
இலக்கியப் பெயர்: திருத்தக்க தேவரால் இயற்றப்பட்ட ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான ‘சீவக சிந்தாமணி’ காப்பியத்தின் பெயர்.
இது ஒரு ஸம்ஸ்க்ருதச் சொல் .
an imaginary diamond supposed to grant its possessor all desires; 2. a mantra of Saraswati yielding immense knowledge to the reciter.
***
7.சீவகனின் வீர தீரச் செயல்கள், பேரழகு, பேராற்றல், போராற்றல், அரச குடும்பத்தின் செயல்கள், அரசியல் நெறிமுறைகள், மனித குல மேம்பாட்டிற்குத் தேவையான அறக்கருத்துகள் கூறுதல் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. சீவகன் தன் ஆற்றலால் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு. திருத்தக்க தேவர் தம் நூலுக்குச் சிந்தாமணியின் சரிதம் என்றே பெயரிட்டனர்.
***
8.சீவகனின் தாயான விசயை கருவுற்ற காலத்தில் மூன்று கனவுகள் காண்கிறாள். இக்கனவுகள் மூலம் அவளது மகனின் எதிர்காலம் மற்றும் ராஜ வம்சத்தின் திருப்பங்கள் முன்னமே உணர்த்தப்படுகின்றன.விசயை கண்ட மூன்று கனவுகள்முதல் கனவு: பூத்த பிண்டிமரம் (அசோக மரம்) சாய்ந்து விழுவது.இரண்டாம் கனவு: அவளது முத்துமாலை அறுந்து காலடியில் விழுவது.மூன்றாம் கனவு: அந்த மரத்தின் பக்கத்தில் புதிய முளை ஒன்று தோன்றி வளர்வது. சச்சந்த மன்னன் தன் மனைவியான விசயைக்கு இக்கனவுகளுக்கான பலனைக் கூறுகிறான்.பூத்த மரம் சாய்வது அரசனின் (சச்சந்தனின்) வீழ்ச்சியையும் இழப்பையும் குறிக்கிறது.பக்கத்தில் முளைத்து வளரும் புதிய முளை, அவர்களுக்குப் பிறக்கப் போகும் மகனையும் (சீவகன்) அவன் பிற்காலத்தில் அடையவிருக்கும் மாபெரும் வெற்றியையும் குறிக்கிறது.
***
9.வயலில் களை பறிக்கும் உழவர் கண்களுக்கு அங்கே மலர்ந்திருக்கும் குவளை மலர்கள், மையல் கொண்ட பெண்களின் மை தீட்டிய கண்கள் போல உவமிக்கப்பட்டுள்ளன. பெண்களின் முகம் முழு நிலவுக்கும், அவர்களின் புன்னகை நிலவொளிப் பிழம்புக்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. பெண்களின் நடையும் தோரணையும் தோகை விரித்தாடும் மயிலின் நளினத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. காந்தருவ தத்தையின் குரல் வளம் யாழிலிருந்து எழும் இன்னிசைப் பண்ணை விடவும் இனிமையானது என உருவகப்படுத்தப்பட்டுள்ளது.போர்க்களத்தில் சீறிப் பாயும் சீவகனின் வேகம், மதயானையைத் தாக்கும் இளஞ்ச சிங்கத்தின் பாய்ச்சலுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.
***
10. சீவகன் பிறக்கும் பொழுதே அவனது நல்ல குணங்களும் எதிர்காலத்தில் அவன் அடையப்போகும் பெருமைகளும் சோதிட மற்றும் வானியல் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன. எங்குசென்றாலும் நல்ல நிமித்தங்கள் (பறவைகள் பறக்கும் திசை, எதிர்ப்படும் காட்சிகள்) மூலமாக வரவிருக்கும் ஆபத்துகளையும் நன்மைகளையும் முன்னரே உணரும் வழக்கம் காப்பியத்தில் உள்ளது. குழந்தையின் பிறப்பிலும் பெயரிடுதலிலும் தெய்வங்களின் ஒலியும் ஜோதிடக் குறிப்புகளும் இணைந்து குழந்தையின் எதிர்காலச் சிறப்பை முன்னறிவிக்கின்றன. காவியத் தலைவனான தன் மகனை விசய மாதேவியார் முதன் முதலாக இட்டு விளித்த பெயர் சிந்தாமணி என்பதாகும். பின்னர் வழிபடு தெய்வம் வானொலியாக ‘சீவ’ (நீடூழி வாழ்க) என்று வாழ்த்தியது. அதற்குப் பின் அக்குழந்தைக்குச் சீவகன் என்று பெயரிட்டனர்.

–subham—
Tags- சீவக சிந்தாமணி , 10 கேள்விகள், திருத்தக்க தேவர், சிந்தாமணி , பறக்கும் மயில்பொரி, ஜோதிடம், சகுனனம், மூன்று கனவுகள் , திருத்தக்கதேவர் , சமண காப்பியம்