WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,069
Date uploaded in London – 9 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தாஜ்மஹாலா அல்லது தேஜோ மஹாலயமா? (சிவன் கோவிலா) – 1
ச. நாகராஜன்
பிரயாக்ராஜிலிருந்து Times News Network – TNN தனது 7-7-2026 இதழில் அலகாபாத் உயர்நீதி மன்றம் 6-7-26 திங்கள்கிழமையன்று மத்திய அரசுக்கும் ஆர்கலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவிற்கும் பிறப்பித்த உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. ஆக்ரா நீதிமன்றம் தாஜ்மஹாலை சர்வே செய்ய அனுமதி மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவு இது.
தாஜ்மஹாலை போட்டோ எடுக்கவும். வீடியோ எடுக்கவும், மேற்பார்வையிட்டு சோதனை செய்யவும் ஒரு அட்வகேட் கமிஷனரை நியமிக்குமாறு மனுதாரர்கள் வேண்டியிருந்தனர்.
இந்த மனுவானது பகவான் ஶ்ரீ அக்ரேஷ்வர் மஹாதேவ் நாகநாதேஸ்வர் விராஜ்மான் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இதை அவரது “நண்பரான” அட்வகேட் ஹரி சங்கர் ஜெயின் மற்ற பல பக்தர்களுடன் சேர்ந்து தாக்கல் செய்தார்.
மனுதாரர்கள் இந்த இடமானது சிவனுக்கான தேஜோ மஹாலயம் என்ற ஹிந்து ஆலயம் என்று கூறினர்.
ஜஸ்டிஸ் ரோஹித் ரஞ்சன் அகர்வால் அட்வகேட் ஹரி சங்கர் ஜெயின் அவர்களின் வாதத்தைக் கேட்ட பின்னர் மேலே கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.
மனுதாரர்கள் தாஜ் மஹால் ஒரு ஹிந்து ஆலயம் என்று அறிவிக்க வேண்டுமென்றும், ஹிந்து சமூகத்தினர் அனைவரோடும் சேர்ந்து அங்கு வழிபாடு, பிரார்த்தனை உள்ளிட்டவற்றை நடத்த அனுமதி வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
அரசியல் சட்டத்தின் 25வது பிரிவின் படி அங்கு சென்று தரிசிக்கவும் பூஜை செய்யவும் அடிப்படை உரிமை உண்டு என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
2019ம் ஆண்டு ஆக்ரா நீதிமன்றத்தில் ஒரு அட்வகேட் கமிஷனரை இதற்கென நியமிக்க வேண்டுமென்று வேண்டினர். ஆனால் அடிஷனல் சிவில் நீதிபதி இதை மறுத்து விட்டார். கஸ்ரா அல்லது கடானி போன்ற ரெவின்யூ ஆவணங்கள் காட்டும் எல்லைகள் சொத்தின் எல்லைகளோடு சரியாகப் பொருந்தவில்லை என்றும் அவர் கூறினார்.
பிறகு இன்னொரு அடிஷனல் மாவட்ட நீதிபதி மறு ஆய்வு பெடிஷனை இந்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் ‘டிஸ்மிஸ்” செய்தார்.
இந்த இரண்டு தீர்ப்புகளையும் எதிர்த்து இப்போது மனுதாரர்கள் உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளனர்.
மனுதாரர்கள் தங்கள் மனுவில் கூறுவது: தேஜோ மஹாலய ஆலயமானது ராஜா பரமார்தி தேவ் என்ற மன்னரால் கி.பி. 1155-56ம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் இது பின்னால் ராஜா மான்சிங் மற்றும் ஜெய்பூர் ராஜா ஜெய் சிங் ஆகியோரது கட்டுப்பாட்டில் வந்தது. ராஜா ஜெய்சிங்கிடமிருந்து இதைப் பறித்த முகலாய மன்னர் ஷாஜஹான் இதை தனது மனைவியான மும்தாஜ் மஹாலுக்கான நினைவுச் சின்னமாக இஸ்லாமிய கட்டுமானத்தின் படி இதை உருவாக்கி விட்டார்
இது ஹிந்து ஆலயம் என்பதற்காக குறைந்த பட்சம் 109 அகழ்வாராய்வு மற்றும் வரலாற்று ஆதாரங்கள் உள்ளன என்பதையும் மனுதாரர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
சலவைக் கூம்பில் உயரத்தில் ஒரு கலசம் தாமரை இதழ் பீடத்தில் இருக்கிறது. தென்கிழக்கில் ஒரு கோசாலை இருந்திருக்கிறது. இதற்கான கட்டிட அமைப்பு இதை நிரூபிக்கிறது. ஆர்கலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா முஸ்லீம்களை இங்கு நமாஸ் செய்ய தவறாக அனுமதித்திருப்பதோடு பல அடுக்குகளில் உள்ள அறைகளைப் பூட்டி வைத்திருக்கிறது என்பதையும் மனு சுட்டிக் காட்டுகிறது.
இதையொட்டி இது பற்றிய முந்தைய ஆய்வுகளையும் சற்று பார்ப்போமா?
**