கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,085)

Written by London Swaminathan

Post No. 16,085

Date uploaded in London – 13 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கவிமணி’ தேசிக விநாயகம் (1876 – 1954)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்… என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

1

ஆயிரம் ஆண்டுகளும் முன்னர் வாழ்ந்த பாரசீகக் கவிஞன் உமர் கய்யாம் எழுதிய கவிதைகளை தழுவிப் பாடினார் கவிமணி; அதில் ஒரு பாடல் கள்வனின் காதலி திரைப்படத்தில் வெற்றி நடை போட்டது. அது என்ன பாடல்?

****

2

கவிமணி எழுதிய நூல்கள் எவை?

3

பாரதியின் கவிதைகளில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்த கவிமணி, பாரதி பற்றி என்ன சொன்னார்

4

கவிதை பற்றி அவர் பாடியது என்ன ? கவிச் சக்ரவர்த்தி கம்பனைக் கவிமணி எவ்வாறு புகழ்ந்தார்?

5

பசுவும் கன்றும் என்று சிறுவர் பாட அவர் எழுதிய கவிதை எது?

6

ஒரு காகம் தண்ணீர் தேடச் சென்று தன் புத்திசாலித்த தனத்தால் தண்ணீரைக் குடித்த கதையை அவர் எப்படி பாட்டில் அமைத்தார் ?

7

காந்தி அடிகள் பற்றி ?

8

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக அவர் எழுதிய கவிதை என்ன?

9

கவிமணி தேசிக விநாயகம்,  தீபாவளிப் பண்டிகைப்பற்றி என்ன பாடினார் ?

10

வெள்ளையனை எதிர்த்த வ உ சி.வீர பாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் குறித்து அவர் பாடிய எழுச்சி மிகு கவிதைகள் எவை?

***********************************************

விடைகள்

1.உமர் கய்யாம் பாடலைத் தழுவி எழுதியபாடல் (திரைப்படம்- கள்வனின் காதலி)

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

கையில் கம்பன் கவியுண்டு கையில் கம்பன் கவியுண்டு

கலசம் நிறை அமுதுண்டு கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

தெய்வ கீதம் பலவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு

தெரிந்து பாட நீயுண்டு தெரிந்து பாட நீயுண்டு பாட நீயுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வையந்தரும் இவ்வனமன்றி வையந்தரும் இவ்வனமன்றி

வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ

ஸ்வர்க்கம் வேறுண்டோ

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

****

2.கவிமணியின் நூல்கள்

அழகம்மை ஆசிரிய விருத்தம்

ஆசிய ஜோதி , (1941)

மலரும் மாலையும், (1938)

மருமக்கள்வழி மான்மியம், (1942)

கதர் பிறந்த கதை, (1947)

உமார் கய்யாம் பாடல்கள், (1945)

தேவியின் கீர்த்தனங்கள்

குழந்தைச்செல்வம்

கவிமணியின் உரைமணிகள்

****

3.“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா – அவன்

பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா ! – அந்தக்

கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா.”

அமரகவி பாரதியார்

ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்
     ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன்,
ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்.
     அமரகவி யென்றெவரும் புகழப் பெற்றோன்,
சீருயரும் தமிழ்மக்கள் செய்த வத்தால்
     தென்னாடு சிறக்க வந்த சுப்ரமண்ய
பாரதியார் பெயர்போற்றி ஏத்து வோமே
     பாமாலை புனைந்தவற்குச் சாத்துவோமே.

***

4.உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை.

                  (மலரும் மாலையும், 45)

கம்பன்

9.ஆரியம் நன்குணர்ந்தோன் – தமிழின்

     ஆழம் அளந்து கண்டோன்;

மாரி மழைபோலக் – கவியின்

     மழைபொ ழிந்திடு வோன்.1

உலக உண்மைகளை – எவரும்

     உணரக் கூறிடு வோன்;

அலகி லாக்கலைகள்-உறையும்

    ஆலய மாகிடு வோன்.

எவரும் போற்றிடவே – தமிழில்

     இராம கதைபுனைந்தோன்;

புவனம் உள்ளளவும் – அழியாப்

     புகழ் பரந்திடு வோன்.3

மூவர் முடிவேந்தர் – போற்றும்

     முத்தமிழ்ப் பாவேந்தன்,

தேவி அருள்பெற்றான் – தமிழ்த்தாய்

     செய்தவத் தால்பிறந் தான்.4

கம்பன் கவிவாழ்க! – இராம

     கதை நிதம் வாழ்க!

அம்புவி மீதெங்கள் – அருமை

     அமுதத் தமிழ் வாழ்க!

***

5.தோட்டத்தில் மேயுது

வெள்ளைப் பசு – அங்கே

துள்ளிக் குதிக்குது

கன்றுக் குட்டி

அம்மா என்குது

வெள்ளைப் பசு – உடனே

அண்டையில் ஓடுது

கன்றுக் குட்டி

நாவால் நக்குது

வெள்ளைப் பசு – பாலை

நன்றாய்க் குடிக்குது

கன்றுக் குட்டி

முத்தம் கொடுக்குது

வெள்ளைப் பசு – மடி

முட்டிக் குடிக்குது

கன்றுக் குட்டி

            (மலரும் மாலையும், 265-268)

***

6.காகம் உடன்எழுந்து – சிறுசிறு

கற்கள் பொறுக்கிவந்து

ஊகமாய்ச் சாடியினுள் – அவற்றை

ஒவ்வொன்றாய் இட்டதம்மா.

இட்டிடவே நீரும் – மேலே

எழுந்து வந்ததம்மா!

சட்டமாகக் குடித்துக் – காகம்

தளர்ச்சி தீர்ந்ததம்மா!

ஊக்கமுடையவர்க்குத் – துன்பம்

உலகில் இல்லையம்மா!

ஆக்கம் பெருகும் அம்மா – இதை நீ

அறியவேண்டும் அம்மா.

                 (மலரும் மாலையும், 415)

***

7.சத்தியத்தால் மன்அரிச் சந்திரனைத் தண்ணருளால்

புத்தபெரு மானை யொத்த புண்ணியனை – உத்தமனாம்

அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு

சிந்தனைசெய் நெஞ்சே தினம்!

                    (மலரும் மாலையும், 1050)

***

8.தீண்டாதோர் விண்ணப்பம் என்ற தலைப்பில்

8விண்ணப்பம் செய்தோம் – விடையை

வேண்டிக் கொள்கிறோம்.

கண்ணப்பன் பூசை கொள்ளும்

கடவுள் திருக்கோயிலிலே

நண்ணக் கூடாதோ? நாங்கள்

நடையில் வரல் ஆகாதோ

நந்தனுக்குப் பதமளித்த

நடராசன் கோயிலிலே

வந்தனைகள் செய்து நாங்கள்

வழிபடுதல் முறை அலவோ

              (மலரும் மாலையும், 763,741)

என்று தன் விண்ணப்பத்தினை எடுத்துரைக்கின்றார்.

நாயனார் வந்த திருக்குலத்தை – உயர்

நந்தனார் வந்த பெருங்குலத்தை

தீய குலமெனத் தள்ளுவரேல் – அது

தெய்வம் பொறுக்குஞ் செயலாமோ?

                     (மலரும் மாலையும், 730)

காப்பாற்றி நம்மையாளும்

கடவுளரும் மக்களுள்ளே

பார்ப்பார்கள் பறையரென்றே

பகுப்பேதும் வைத்ததுண்டோ?

                    (மலரும் மாலையும்,746)

******

9.தீபாவளிப் பண்டிகை

பண்டிகை தீபாவளிப் பண்டிகையாம் – இந்தப்

     பாரத நாட்டுக்கோர் பண்டிகையாம்;

தண்டிகை மன்னவர், ஏழை எளியவர்,

     சந்தோஷம் கொண்டாடும் பண்டிகையாம்.1

ஆண்டிலோர் தீபா வளியாம், அடா! – அதை

     ஆண்டியும் கொண்டாட வேண்டும்.அடா!

தீண்டு துயர்போகும் நாள் இதடா!-உள்ளம்

     தேடித் தவித்திடும் நாள் இதடா!

உற்றார் உறவினர் யாவருமே – கூடி

     ஒன்றாக உண்டிடும் நாள் இதடா!

வற்றாத செல்வம் படைத்தவர்போல் -நாம்

     வாழ்வின் நலம்பெறும் நாள் இதடா!3

வாழத் தயங்கும்இக் காலத்திலே – துளி

     வாழ்வை அளித்திடும் நாள் இதடா!

ஏழைக் கிரங்கி நரகாசுரன் – முன்னம்

     ஈசனை வேண்டிய நாள் இதடா!4

நல்லெண்ணெய் பூசிக் குளிப்போம், அடா! – நல்ல

     நல்ல உணவுகள் உண்போம்,அடா!

அல்லும் பகலும் உழைப்பதெல்லாம்-வயிறு

     ஆரப் புசிப்பதற் கல்லவோடா!5

இட்டெலி வீரர்தென் னிந்தியராம் – என்பது

     இன்று நாம் காட்டி விடுவோம்,அடா!

சட்டினி நண்பன் துணையிருக்க – அதில்

     சந்தேகம் உண்டோ? நீ சொல்வாய், அடா!6

பெண்டுகள் பிள்ளைகள் நெய்த கதருடை

     பீதாம் பரத்தினும் மேலாம், அடா

கொண்டாடிப் பண்டிகை நாளில் அணிந்திடில்

     கோடி கோடிப்புண்யம் உண்டாம். அடா!

***

10. வ.உ.சிதம்பரம் பிள்ளை     

கைநோவக் கால்நோவக் கல்லுடைத்து செக்கிழுத்து

மெய்சோர்ந்தும் ஊக்கம் விடாதுநின்ற – ஐயன்

சிதம்பரம் அன்றுசிறை சென்றிலனேல், இன்று

சுதந்திரம் காண்பாயோ? சொல்.

அஞ்சுவனோ வெள்ளையரின் ஆட்சியொழிப் பேன்என்று

வஞ்சினம் கூறிநின்ற மாவீரன் – விஞ்சுபுகழ்

செந்தமிழ்ச் செல்வன் சிதம்பரப்பே ரண்ணலை நாம்

வந்தனை செய்வோம் மகிழ்ந்து,

கப்பலை ஒட்டிக் கடுங்காவதற்கு ஆளாகி

உப்பிலாக் கூழ்உண் டுடல்மெலிந்தோன் – ஒப்பிலாத்

தென்னாட்டு வீர திலகன் சிதம்பரத்தின்

நன்னாமம் வாழ்த்துகவென் நா.

***

வீரபாண்டியக் கட்டபொம்மன்

மீசை முறுக்கிநின்று வெள்ளையரே உங்களுக்கோர்

காசும் தாரோமென்று கர்ஜித்த – கேசரியாம்

பாஞ்சைப் பதிவீர பாண்டியனை நெஞ்சமே

வாஞ்சையொடு பாடுவோம் வா.

                        வேறு

செந்தில் முருகன் சேவடியைத்

     தினமும் போற்றித் தொழுதிடுவோன்;

சந்தக் கவிகேட் டுளமகிழ்ந்து

     தரளம் வாரி அளித்திடுவோன்;

—subham—

Tags– கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள் , 10 கேள்விகள், வீரபாண்டியக் கட்டபொம்மன் ,பாரசீகக் கவிஞன் உமர் கய்யாம்

Leave a comment

Leave a comment