ஆய் குல/ யாதவ குல செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,107)

TRAVANCORE KINGDOM INCLUDED MODERN KANYAKUMARI DISTRICT

Written by London Swaminathan

Post No. 16,107

Date uploaded in London – 19 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

கலியுகம் பற்றி இந்த செப்பேடுகள் சொல்லும் அதிசயச் செய்தி என்ன ?

2

பாண்டியர்களின் இரண்டு வரகுணன்களைக் கண்டோம்; இங்குள்ள வரகுணன் யார் ? ஆயர் குல வரகுணனின் மனைவி பெயர் என்ன ? யார் அந்தப் பெண்மணி ?

3

இந்த செப்பேடுகள் சொல்லும் பார்த்திவசேகரபுரம் எங்குள்ளது ?

4

கோ கரு நந்த அடக்கன் நிறுவிய வேத பாட சாலையில் என்னென்ன  பாடத்தைப் படிக்க எவ்வளவு மாணவர்கள் இருந்தார்கள்?

5

ஆய் மன்னர்களைக் குறிப்பிடும் யவன ஆசிரியன் யார் ?

6

வேத பாடசாலையில் அனுமதி பெற என்ன விதிகள் பின்பற்றப்பட்டன ?

7

வகுப்பறை விதிகள் என்ன ?

8

கோவில் குறித்து இந்த செப்பேடு நவில்வது என்ன ?

9

இந்தச் செப்பேட்டில் காணப்படும் மொழிகள் என்ன ? எழுத்துக்கள் என்ன ?

10

இந்த செப்பேடுகள் சொல்லும் நாழி , முக்குறுணி என்றால் என்ன அளவு ?

*****************************

விடைகள்

TRAVANCORE ROYAL FAMILY 

1.கலியுகம் பற்றி நாட்களில் சொல்லும் செப்பேடு

பாரதப் போர் – கலியுகம் துவங்கும் கி.மு 3102-க்கு முன் – 36 ஆண்டுகளுக்கு முன்னர் – 3138ல் நடந்தது என்பது இந்துக்கள் நம்பும் கொள்கை. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று பிரசுரித்து வருகின்றன.

இதில் வியப்பு என்னவென்றால் இரண்டு கல்வெட்டுகள் – சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே — கலியுகத்தைக் குறிப்பிட்டு கல்வெட்டு வெளியிட்டுள்ளனர். அதாவது அறியாத மக்கள் – கேள்வி கேட்பர் என்றோ, என்னவோ ஒரு தமிழ் செப்பேடும் இந்த ஆண்டை நாட்கள் கணக்கில் எழுதி தமிழன் உலக மகா கணித வல்லுநன் என்பதையும் காட்டி இருக்கிறது!

கோ கருநந்தடக்கனின் பார்த்திவ சேகரபுர செப்பேடு கூறுகிறது:

ஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்றநாள்

ஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளால் முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளை————————-

வேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோகருந்தடக்கன் இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு 14,49,087 என்று செப்புவது கலி 3967 ஆடி 15ஆம் தேதி ஆகும். சற்றேறக்குறைய கி.பி.865 ஆகும். ஆய் குல மன்னர்கள் தங்களை ஆயர்கள் என்றும் யாதவர்கள் என்றும் கண்ணன் வழிவந்தவர்கள் என்றும் கூறிக்கொண்டனர் .

தமிழர்களுக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே கலியுகத்தில் நம்பிக்கை இருந்ததும் அதை மக்கள் புரிந்துகொண்டு நடைமுறைப் படுத்தியதும் இதனால் தெரிகிறது. இதற்கு முந்தைய இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டும் கலி ஆண்டை 3735 (சக 556) என்று கூறும்.

பார்த்திவசேகரபுரம் முன்சிறைக்கு அருகிலுள்ளது .  கோ கரு நந்த அடக்கன் என்பவன்  அங்கிருந்து நிலத்தை வாங்கி விஷ்ணு கோவிலைக்கட்டி  அந்த  இடத்துக்கு பார்த்திப சேகரபுரம் என்று பெயரிட்டான் போலும் . அவனுக்கு மற்றோரு பெயர்  ஸ்ரீ வல்லபன் . அவன் யாதவ குலத்தைச் சேர்ந்தவன் என்று சாசனம் கூறுகிறது.

****

2.விக்ரமாதித்ய வரகுணனின் திரு நந்திக்கரை சாசனம் ஒரே ஏட்டில் முழு மையாயாக உள்ளது . இந்த மன்னன் தெங்காடுகிழவன் மகள் முருகஞ்சேந்தியை மணந்த செய்தி இதில் உள்ளது ;அவளை ஆய்குல மாதேவி என்று செப்பேடு குறிப்பிடுகிறது . ஆகவே கரு நந்த அடக்கனுக்குப் பின்னர் ,  விக்ரமாதித்ய  வரகுணன் ஆண்டான் என்பது தெரிகிறது . இதே காலத்தில் முதலாம் வரகுணன் பாண்டிய நாட்டை ஆண்டதால் இவன் மஹாராஜாவின்  பெயரை சூட்டிக்கொண்டவனாக இருக்கலாம்; ஏனெனில் அக்காலத்தில் அரசனுடைய பெயர்களை அதிகாரிகளும் , கப்பம் காட்டும் குறுநில மன்னர்களும் வைத்துக்கொள்வார்கள்.

திருவனந்தபுரம் பழைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் தலை நகர் ; அங்குள்ள அலமாரியில் பல செப்பேடுகள் துண்டு துண்டாக்க கிடைத்தன. ஒரே ஒரு ஏடு மட்டும் விக்ரமாதித்ய வரகுணன்  என்ற பெயருடன் முழு ஏடாகக் கிடைத்தது .

***

3.பழைய தென் திருவங்ககூர்ப்பகுதிகள் இப்போது கன்யாகுமரி மாவத்தில் உள்ளன. ஆகவே முன்சிறை பார்த்திவ ஸ்சேகரபுரம் முதலியன  தற்கால கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ளது. பார்த்திவசேகரபுரம் பார்த்தசாரதி கோவில் (விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரம்), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், பார்த்திவபுரத்தில் அமைந்துள்ளது. ஆய்குல மன்னன் கருநந்தடக்கன் என்னும் கோகருநந்தடக்கன் (கி.பி. 857–885), ஸ்ரீ வல்லப பார்த்திபசேகரன் என்ற பாண்டியர் பெயரைச் சூடிக்கொண்டான். இவன் கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆட்சி செய்தான். “ஸ்ரீ வல்லபன்”, “பார்த்திவசேகரன்” ஆகிய பட்டங்களைச் சூடிக்கொண்டிருந்த கோகருநந்தடக்கன், இந்த கிராமத்திற்கு பார்த்திவசேகரபுரம் என்று தன் பட்டப்பெயரையே சூட்டினான். கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், முஞ்சிறைப் பஞ்சாயத்தில் பார்த்திவபுரம் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூர் மார்த்தாண்டம் தேங்காப்பட்டணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது

****

4. கருநந்தடக்கன் நிலம் கொடுத்து வேறு நிலங்களை மாற்றி வாங்கிக்கொண்டு அதில் திருமால் கோவில் கட்டினான். அங்கு ஒரு வேத பாடசாலையையும் நிறுவி சம்ஸ்க்ருத நூற்களை படிக்க ஏற்பாடு செய்தான் .

சாத்திரங்களை பயிலும் 95 சட்டர்கள், இவன் நிறுவிய வேதப்பள்ளிக்கூடத்தில் பயின்றார்கள்; அவர்களில் பவிஷ்ய சரணம் /ருக் வேதம் படித்தோர் 45 சட்டர்கள்; தைத்ரீய சரணம்  /யஜுர் வேதம் படித்தோர் 36 சட்டர்கள்; தலவகார சரணம் சாமவேதம் படித்தோர் 14 சட்டர்கள்.

சட்டர் என்று செப்பேடு சொல்லும் சொல் சாதாரண மாணவரைக்  குறிக்காது ; மேலும் சில துறைகளில் புலமை பெற்றவர் என்றும் வாழ்நாள் முழுதும் பிரம்மசரி ம் அனுஷ்டிப்போர் என்றும்  கருதப்படுகிறது.பார்த்திவ சேகரபுர  சாசனம் சொல்லும் செய்திகள் –

சட்டங்கள் சேர, சோழ, பாண்டிய ஆகிய த்ரைராஜ்ய விவகாரத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் ; சில கட்டுப்பாடுகளுடன் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம் .

***

5.ஆய் மன்னர்களைக் குறிப்பிடும் யவன ஆசிரியன் கிரேக்க எழுத்தாளன் வரலாற்று பூகோள அறிஞன் டாலமி.

Ptolemy usually refers to Claudius Ptolemy (c. 100 – c. 170 CE), a famous ancient Greek-Egyptian scientist who lived in Alexandria, Egypt. He wrote major books on astronomy, geography, and math. It can also refer to the Ptolemaic dynasty of Egyptian pharaohs, starting with Alexander the Great’s general, Ptolemy I Soter.

***

6.அட்மிஷன் ரூல்ஸ் / பிரவேச விதிகள்

படிக்க வருவோர் இலக்கணம் , மீமாம்சம், புரோகிதம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் . இதற்கு எதுவும் சர்ட்டிபிகேட் தேவை இல்லை ; இன்டெர்வியுவும் கிடையாது ; அங்கு பயிலும் ஐந்து மாணவர்களிடம் இவை எனக்குத் தெரியும் என்று சத்தியம் செய்துகொடுத்தால் போதும் ; சொன்ன சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு ; இதனால்தான் இந்திய அரசும் சத்யமேவ ஜெயதே என்னும் முண்டகோபநிஷத் வாக்கியத்தை தேசீய சின்னத்தில் பொறித்தது போலும்! அதைத் தமிழ் நாடு அரசும் தனது கோபுர சின்னத்தில் வாய்மையே வெல்லும் என்று மொழிபெயர்த்து போட்டுக்கொண்டுள்ளது!

***

7.வகுப்பறை விதிகள்

மாணவர்கள்/ சட்டர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போடக்கூடாது; குட்டிக் கொள்ளக் கூடாது; ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது; பணிப்பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது . கோயில் நிலத்தையும் வேதபாட சாலை நிலத்தையும் உழுவோரிடம் சம்திங் வாங்கக்கூடாது . அப்படி வாங்கினால் அது போல பத்து மடங்கு அபராதம்; மேலும் ஊர்ச் சபை சொல்லும்போதெல்லாம் கட்டாய சேவை செய்ய வேண்டும்; பிழைகள் செய்தால் அபராதமும் உண்டு .

***

8.இரண்டாவது ஏடு கோயிற் பணியாளர் கடமைகளையும் பூத்தொண்டு செய்பவனின் கடமையையும் தெரிவிக்கிறது ; கோயிலில் நுந்தா விளக்கு எரிப்பதற்காக நில தானம் செய்யப்பட்டதையும் சொல்கிறது . பங்குனி விசாக நாளில் முடியும்படி ஏழுநாள் திருவிழா நடத்தவேண்டிய வகையும் ஏழாவது நாள் ஆற்றில் தீர்த்தவாரி செய்வதும் குறிப்பிடப்படுகின்றன .

ஓவர்டைம் அலவன்ஸ்

இந்த விழாக்காலத்தில் கோயிற் பணியாளர்களுக்கும் சட்டங்களுக்கும் இரு மடங்கு ஊதியம் தர வேண்டும் என்கிறது .

மூன்றாவது ஏடு கோயிற் பணியாளர்களின் சம்பளத்துக்காக நிலங்கள் அளிக்கப்பட்டதைக் ;அவர்கள் சாந்தி செய்வான், அகநாழிகைப்பணி செய்வார், பஞ்ச்ச கவ்யம் தெளிப்பான், பூத் தொண்டு செய்வான், இசைக்காரர் முதலானோர்

நான்காவது ஏட்டிலே சட்டரகள் படிக்கும் பாடங்களும் பயில்வோர் எண்ணிக்கையும் நடத்தை விதிகளும் உள்ளன

கரு நந்த அடக்கநின் இன்னுமொரு பெயர் ஸ்ரீவல்லபன் என்பது ஒரு ஏட்டில் கிடைக்கும் தகவல் ஆகும்

***

9.தமிழ்ப்பகுதி பல்லவர் கால தமிழ் எழுத்துக்களிலும் சம்ஸ்க்ருத பகுதி நாகரி எழுத்திலும் உள்ளன. கரு நந்த அடக்கன் வெளியிட்ட இன்னுமொரு சாசனம் திருப்பரப்பு என்னுமிடத்தில் வெளியிடப்பட்டது ஸம்ஸ்க்ருதப் பகுதி கிரந்த எழுத்தில் உள்ளது.

ஆதார நூல்

பாண்டியர் செப்பேடுகள் பத்து ,

தமிழ் வரலாற்றுக் கழகம், 1967

***

10. பார்த்திவசேகரபுரம் சாசனத்தில் ஒவ்வொரு மாணாக்கருக்கும் நாள்தோறும் பத்து நாழி வீதம் நெல் அளிக்கப்பட்டது இவர்கள் அங்கேயே தங்கிப் படித்தவர்கள்.

  5 செவிடு = 1 ஆழாக்கு

  2 ஆழாக்கு = 1 உழக்கு

  2 உழக்கு = 1 உரி

  2 உரி = நாழி (படி)

  8 நாழி (அல்லது 4 நாழி வட்டார வழக்கில்) = 1 குறுணி (மரக்கால்)

  3 குறுணி = 1 முக்குறுணி (சுமார் 16.1 லிட்டர்) 21 லிட்டர் என்பது மதுரை வட்டாரக் கணக்கு

.

முக்குறுணி

மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள எட்டு அடி உயர பிள்ளையாருக்கு ஆண்டுதோறும் பிள்ளையார் சதுர்த்தியன்று 21 லிட்டர் அரிசிமாவால் செய்யப்படும் ராட்சத கொழுக்கட்டையை நைவேத்தியம் செய்வார்கள் . இதை பழைய அளவுகோலில் சொல்லவேண்டுமானால் முக்குறுணி என்று சொல்ல வேண்டும். ஒருகுறுணி என்பது நாலு பட்டணம் படிக்குச் சமம். 3 குறுணி என்பது 12 படி அல்லது 21 லிட்டருக்குச் சமம். பிள்ளையார் சதுர்த்தி நாளன்று இவ்வளவு பெரிய கொழுக்கட்டையை நைவேத்தியம்  செய்வார்கள். அதை ஒட்டியே இவருக்கு முக்குறுணி விநாயகர்/ பிள்ளையார் என்ற பெயர் வந்தது.

–subham—

ஆய்குல, யாதவ குல, செப்பேடுகள், 10 கேள்விகள், கோ கருநந்தடக்கன், பார்த்திவ சேகரபுர செப்பேடு,  நாட் கணக்கில் கலியுகம், பாண்டியர் செப்பேடுகள் பத்து

Leave a comment

Leave a comment