

WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 16,139
Date uploaded in London – 28 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம் ;ஓர் ஆய்வு – 25
(ஆர், சேஷாத்ரிநாதன்)
இராமன் சுக்ரீவன் சந்திப்பு
जब सुग्रीवः राम कहूँ देखा। अतिसय जन्म धन्य करि लेखा॥ ६॥
सादर मिलेड नाइ पद माथा। भेंटेड अनुज सहित रघुनाथा॥ ७॥
இராம இலக்ஷ்மணரை ஹனுமன் தூக்கி வருவதைப் பார்த்த சுக்ரீவனுக்கு நம்பிக்கையின் ஒளி தெரிந்தது. யாரால் தீங்கு வரப் போகிறது என்று நினைத்தானோ அவர்களால் நன்மை நடக்கப் போகிறது. இல்லை என்றால் ஹனுமன் அவர்களைத் தூக்கி வர மாட்டானே? இராமனைப் பார்த்த சுக்ரீவன் தான் பிறவிப் பயனை அடைந்ததாக எண்ணி மகிழ்ந்தான். இராமனின் உருவத்தில் லயித்து விட்டான். இராமனின் திருவடிகளில் தனது தலையை வைத்து வணங்கினான். இராமன் தம்பி இலக்ஷ்மணனுடன் சுக்ரீவனை மார்புறத் தழுவிக் கொண்டான்.
இங்கு துளசி தாசர் राम कहूँ देखा என்ற பதப் பிரயோகம் செய்துளார். ஒரு சிலர் உருவத்தால் மற்றவர்களை ஈர்த்துவிடுவர். இங்கு இராம் என்று சொல்வதன் பொருள் அதுதான். இராமனின் உருவ லாவண்யத்தைப் பார்த்தவர் அதால் ஈர்க்கப்பட்டு மேற்கொண்டு பேச இயலாதபடி நிற்பார். சுக்ரீவன் இராமனைப் பார்த்ததும் அந்த மன நிலையில் தான் இருந்தான் என்று சொல்ல வருகிறார் துளசிதாசர். இதற்கு எடுத்துக்காட்டாக இராமன் சரபங்க முனிவரின் குடிலுக்கு வந்தபோது
देखि राम मुख पंकज मुनिबर लोचन भ्रंग/
सादर पान करत अति धन्य जन्म सरभंग॥”
சரபங்கர் இராமனின் முகம் என்னும் தாமரையைப் பார்த்தார். அப்போது அவருடைய கண்கள் என்னும் வண்டுகள் இராமனின் முகம் என்னும் தாமரையில் உள்ள தேனை அருந்திக் கொண்டிருந்தன என்று துளசி தாசர் கூறி உள்ளார். பல உதாரணங்களைக் கொடுக்கலாம்.
மற்றொன்று இராம இலக்ஷ்மணர்களை ஹனுமன் முதுகின் மீது தூக்கிக்கொண்டு வந்தான் இராமன் முன்னால் அமர்ந்திருப்பான். அதனால் சுக்ரீவன் முதலில் இராமரைப் பார்த்தான் என்பதற்காகவும் துளசிதாசர் அவ்வாறு சொல்லி இருக்கலாம். அடுத்து नाड़ पद नाथा” என்ற பதப் பிரயோகம். ஏற்கனவே ஹனுமன் சுக்ரீவன் உங்களின் அடியார்களில் ஒருவன் என்று சொல்லியுள்ளான். அதை நிரூபிக்கும் விதமாக சுக்ரீவன் தலையை மட்டும் குனிந்து இராமனுக்கு வணக்கம் செலுத்தவில்லை. கீழே விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான் என்று சொல்லுகிறார்.
कपि कर मन बिचार एहि रीती। करिहहिं बिधि मो सन ए प्रीती॥4॥
ஆனால் சுக்ரீவனின் மனதில் ஒரு சந்தேகம் தோன்றியது “வானரமாகிய தன்னுடன் இராமன் நட்புக் கொள்வானோ மாட்டானோ என எண்ணினான்”. இராமனுக்கு அவன் மனதில் உள்ள சந்தேகம் புரிந்தது.. துளசிதாசர் இங்கு येहि रीती என்று சொல்கிறார். அதாவது மேற்கண்ட முறைப்படி. அதாவது இராமன் சுக்ரீவன் இருப்பிடம் வந்தவுடன் தனது தம்பியையையும் சேர்த்து சுக்ரீவனைத் தழுவிக் கொண்டான். சுக்ரீவன் நினைத்தான் நான் அவரது கால்களில் விழுந்து வணங்கினேன். ஆனால் அவரோ என்னை ஆரத் தழுவிக் கொண்டார். ஆக இராமன் தன்னை ஒரு நண்பனாக ஏற்றுக் கொண்டான் என்று தெரிந்துவிட்டது.
ஏற்கனவே ஹனுமன் சுக்ரீவனைப் பற்றிய விவரங்களைச் சொல்லிவிட்டான். ஆனால் அதற்கு முன்பே சுக்ரீவனைப் பற்றிய முழு விவரங்களும் இராமனுக்குச் சொல்லப்பட்டுவிட்டன. யார் சொல்லி இருக்கக்கூடும். வேறு யார்? அன்னை சபரிதான்.
पंपा सरहि जाहु रघुराई। तहँ होइहि सुग्रीव मिताई॥
सो सब कहिहि देव रघुबीरा। जानतहूँ पूछहु मतिधीरा॥6॥
“இராமா! நீ பம்பா தீரத்திற்குச் செல். அங்கு சுக்ரீவனுடன் உனக்கு நட்பு உண்டாகும். அவன் எல்லா விவரங்களையும் உனக்குச் சொல்லுவான். உனக்கு எல்லாம் தெரிந்திருந்தும் என்னிடம் ஏன் கேட்கிறாய்” என்று சபரி சொல்கிறாள். சபரி சொன்னதை ஹனுமன் இராமனுக்கு நினைவூட்டுகிறான்.
“कारिहहिं बिधि” என்று சொல்வதன் மூலம் சுக்ரீவன் தனக்கு இராமனுடன் நட்புக் கொள்ளத் தகுதி இல்லை என்ற நினைக்கிறான். காரணம் நட்பு என்பது சம அந்தஸ்து உள்ளவர்களிடம் உண்டாகிறது. சுக்ரீவன் நினைக்கிறான் நான் வானரம் இராமனோ மனிதன். நான் நாட்டை இழந்தவன். இராமனோ அரசகுமாரன். நான் பயந்தவன். இராமனோ வீரன். நான் பயந்து இருக்கிறேன். இராமன் மகிழ்ச்சியாக எந்தவித பயமும் இல்லாமல் இந்தக் கொடிய வனங்களில் சுற்றுகிறான், அத்தகைய இராமன் தன்னுடன் நட்பு கொண்டதில் தன்னைப் பாக்யவானாகக் கருதுகிறான்.

तन् मम एव एष सत्कारो लाभः च एव उत्तमः प्रभो |
यत् त्वम् इच्छसि सौहार्दम् वानरेण मया सह || ४-५-१०
இதைத்தான் வால்மீகி இராமாயணத்திலும் மேற்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.
இதிலிருந்து தெரிகிறது இறைவன் எல்லா ஜீவராசிகளையும் தன் வயப் படுத்திக் கொள்ள விரும்புகிறான் என்று. அப்படி விரும்பும்போது எல்லா ஜீவராசிகளுக்கும் இறைவனிடம் சரண் அடையவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
வால்மீகி இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது
मित्रभावेन सम्प्राप्तं न त्यजेयं कथंचन।
दोषो यद्यपि तस्य स्यात् सतामेतदगर्हितम्॥३॥
“”எவன் ஒருவன் நட்புக் கரம் நீட்டி என்னிடம் வந்துவிடுகிரானோ நான் அவனைக் கைவிடுவதில்லை. அவனிடம் ஒரு சில குறைகள் இருந்தாலும் அவர்களுக்கு நல்லவர்கள் அடைக்கலம் அளிப்பதில் எந்தவித தவறும் இல்லை.” என்று இராமன் சொல்வதாக வால்மீகி கூறி உள்ளார்.