ஆண்டாள் அருளிய திருப்பாவையில்10 கேள்விகள் (Post.16,145)

Written by London Swaminathan

Post No. 16,145

Date uploaded in London – 30 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

ஆண்டாள் மார்கழியில் எந்த நாளில் திருப்பாவையை பாடத் துவங்கினாள்? எப்போது முடித்திருப்பாள் ?

2

ஆண்டாள் ஏன் யாதவப் பெண்மணியாக இதில் தன்னைக் கற்பனை செய்துகொண்டாள்?

3

மார்கழியில் நோன்பு துவங்கிவிட்டது ;அப்போது என்ன என்ன செய்யமாட்டோம் என்று ஆண்டாள் உறுதி எடுத்தார்

4

யாப்பிலணக்கப்படி இது எந்த வகைப்பாடல் ?

5

இந்தப் பாடல்களை ஆராய்ச்சியாளர்கள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கிறர்கள்?

கிருஷ்ணனை எத்தனை பெயர்களால் கூப்பிடுகிறாள் அல்லது குறிப்பிடுகிறாள் ?

முகம் பார்க்கும் கண்ணாடிக்கு ஆண்டாள் கொடுத்த பெயர்  என்ன ?

6

ஆண்டாள் குறிப்பிடும் நகைகள் யாவை ? நோன்புக் காலத்தில் சாப்பிடாமல் இருந்த ஆண்டாள் என்னென்ன தின்பண்டங் களை பின்னர் குறிப்பிடுகிறார் ?

7

சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்து — பாடலைச் சொல்ல முடியுமா ?

8

ஆண்டாள் குறிப்பிடும் இரண்டு கிரகங்கள் யாவை ? அதை எந்தப்பாட்டில் குறிப்பிடுகிறார் ?

9

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை…………..  என்று கடைசி பாடலில் பாடுகிறார் . இதில் வாங்க கடல் என்ற சொற்களின் பொருள் என்ன ?

10

முதல் திருப்பாவையில் வரும் மார்கழி மாதம் வேறு எந்தப்பாடலில் வருகிறது ?

**********************

விடைகள்

1.மதி நிறைந்த நந்நாள் என்று சொல்வதால் பெளர்ணமி யன்று அவள் பாடத் துவங்கியது தெரிகிறது; ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் பாடியிருந்தால் அதற்கடுத்த தை மாத பெளர்ணமியில் அவர் பாடல் முடிந்திருக்கும். மார்கழி மாதம் முதல் நாள் பௌர்ணமி திதியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆண்டாள் தமது திருப்பாவையின்  முதல் பாசுரமான ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்’ என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடியருளியுள்ளார் என்பது ஒரு கருத்து. இது சரியென்றால் அவர் முப்பது பாடல்களையும் பாடி முடிக்கும் நாளன்று அடுத்த பௌர்ணமி திதி வந்திருக்க வேண்டும் அது தைப்பூச பௌர்ணமி திதியாக இருக்கவேண்டும் ; இதற்கிடையில் பொங்கல் என்னும் மகர சங்கராந்தி முடிந்திருக்கவேண்டும் 

***

2.ஆயர்பாடி என்பது கண்ணன் பிறந்த மதுராவிலுள்ள இடைச் சேரியென்று கொண்டால், அவளை நாம் ஒரு கோபிகையாக எண்ணலாம்; அவள் மற்ற கோபியரையும் அழைத்துக் கொண்டு யமுனை நதிக்கு நீராடச் செல்வதாகக்கருதலாம் 

***

3.இரண்டாவது பாடலில் என்ன செய்யலாம் என்ன என்ன செய்யக்கூடாது என்ற பட்டியலை ஆண்டாள் தருகிறாள்;

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்

பையத் துயின்ற பரமன் அடி பாடி,

நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,

மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,

செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி

உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.

நெய், பால் சாப்பிட மாட்டோம்;

கண்ணுக்கு மையும் கூந்தலுக்குப் பூவும் பயன்படுத்த மாட்டோம்.

(குழாயடியிலும் கிணற்றடியிலும் வம்பளக்க மாட்டோம்)).

கோள் சொல்லமாட்டோம் .

தடைசெய்யப்பட்ட விஷயங்களையும் செய்யமாட்டோம்.

செய்யக்கூடியது

பரமனடி பாடுவோம் ;

அதிகாலையில் நீராடுவோம்;

பிரம்மச்சாரிகளுக்கும் சன்யாசிகளுக்கும் வறியோருக்கும் வேண்டும் அளவுக்கு  உணவு இடுவோம்

***

4.பாவை வகை நூல்களில் இப்பொழுது நமக்கு கிடைத்திருப்பது இரண்டே  நூல்கள்தான்; அவை திருப்பாவை, திருவெம்பாவை .

தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைப் பாடல்களை உள்ளன. அவற்றுள் கலிப்பாவானது ஒத்தாழி சைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி,   என மூன்றுவகையாம்.

கொச்சகக்கலிப்பாவானது  தரவு கொச்சகக்கலிப்பா, தரவிணை கொச்சகக்கலிப் பா,  சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா என ஐந்து வகையாம்.

திருப்பாவையின் பாசுரங்கள் தனிச் சொல்லும் சுரிதரமும் இன்றி  வந்த தரவு கொச்சகக்கலிப்பாக்களே. இவற்றுள் ஒவ்வொன்றும் எட்டடி கொண்டுவந்திருக்கின்றது . இப்பாசுரங்களில் பெரும்பாலன முழுதும் வெண்டளை வரப்பெற்றுள்ளன. சில பாசுரங்கள் கலிப்பாவிற்குரிய கலித்தளையும் வெண்டளையும் கலந்தும் ,  சில பாசுரங்கள் வெண்டளையும், நேரென்றோராசிரியத்தளையும் கலந்தும் வரப்பெற்றிருக்கின்றன என்று தமிழ் வித்துவான் திருமலை அய்யங்கார் விளக்குகிறார்.

இதை மூன்று பெரும்பிரிவுகளாகவும் பிரிக்கலாம். முதல் ஐந்து பாசுரங்கள் ஒரு களத்திலும், ஆறு முதல் பதினைந்து பாசுரங்களில் பாடியவை வேறொரு களத்திலும், பதினாறு முதல் இருபத்தொன்பது வரை பாடியவை வேறொரு களத்திலும் அமைந்துள்ளன.

***

5.முப்பது பாசுரங்களில் கண்ணனை, அவனது அவதாரங்களை 56 வகையாக அழைக்கிறார்; நப்பின்னையை எட்டு விதமாகத் துதி பாடுகிறார். நந்த கோபாலனையும் யஸோதையையும் கொண்டாடுமிடத்து     ஐந்தைந்து வெவ்வேறு சொற்களைக் கையாளுகிறார். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக நில்லாமல் சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என்ற பாரதியார் வகுத்த இலக்கணப்படி பாடியுள்ளார். கண்ணாடிக்கு தட்டொளி என்ற அழகான புதுச் சொல்லை உருவாக்கியுள்ளார்.

***

6.திருப்பாவை நோன்பு முடிந்தவுடன் என்ன செய்வோம் என்பதை – 27-ஆவது பாடலில் வரிசைப்படுத்துகிறார்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா *உன் தன்னைப்-

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்*

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே*

பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்*

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

கையில் சூடகம் அணிவோம்

தோள் ல் பாஹுவலயம் அணிவோம்

காதுகளில்    தோடு ம் கர்ணப் பூவும் அணிவோம்

காலில் பாடகமும் அணிவோம்

பல்கலன் என்று சேர்த்திருப்பது மேலும் பல ஆபரணங்களையும் …. என்பதைக் காட்டும் 

முழங்கையில் நெய் வழியும் அளவுக்கு பால் சோறு, அக்கார அடிசில் ஆகியவற்றையும் சாப்பிடுவோம் என்கிறார் ஆண்டாள்.

***

7.சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

***

8.வியாழன் என்றால் ஜூபிடர் JUPITER  என்னும் பிருஹஸ்பதி/ குரு கிரகம். வெள்ளி என்றால் சுக்ரன் என்னும் வீனஸ் VENUS அல்லது வெள்ளி கிரகம்.  இந்த இரண்டையும் வானத்தில்  காணலாம். இதில் வெள்ளி மட்டும் சில காலத்தில் விடி வெள்ளியாக சூரிய உதயத்துக்கு முன்னரும் சில காலத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னரும் தோன்றும். ஆண்டாள் அதிகாலைப் பொழுதில் தோழிகளை எழுப்பச் சென்றபோது வெள்ளி உதயமாகி வியாழன் அஸ்தமனமானதைக் கண்டார்  உடனே இதை பாடலில் குறிப்பிட்டுத் தோழிகளே எழுந்திருங்கள் என்று பாடுகிறார். வானவியல் தெரிந்தவர்கள் இது கிபி. 600 முதல் கி.பி 900 வரை 4 முறை நிகழந்ததைக் கொண்டு அவரை  300 ஆண்டு கால வட்டத்திற்குள் வைக்கின்றார்கள்.

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;

வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;

புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.- பாடல் 13

****

வங்கம் என்றால் பெரிய படகுகள் , கப்பல்கள் ; அவை செல்லும் கிழக்கு கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் ஆண்டாள் வாழ்ந்தாள்; கப்பல்கள் செல்லும் கடலை அவள், கடல் கடைந்த கதையுடன் ஒப்பிட்டுப் பாற்கடலாக நினைக்கிறாள்; இந்து மஹா சமுத்திரத்தின்  சிறிய  கடற்பகுதியை நாம் இப்போது வங்காள விரிகுடா என்று அழைக்கிறோம் ; இந்த வங்கம் என்ற சொல்லே வங்க தேசம், மேற்கு வங்காளம்,  வங்காள விரிகுடா  ஆகிய அனைத்திலும் வந்துள்ளது.

***

10.திருப்பாவையில் மார்கழி என்ற சொல் 1-வது, 4-வது மற்றும் 26-வது பாசுரங்களில் வருகிறது. [123]

  • பாடல் 1 (முதல் வரி):

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்”

  • பொருள்: மார்கழி மாதத்தின் முழுநிலவு நிறைந்த நன்னாளில் நோன்பிருக்கத் தொடங்குதலைக் குறிக்கிறது. [12]
  • பாடல் 4 (நான்காவது வரிகள்):

“நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்”

  • பொருள்: உலக மக்கள் நலமாக வாழ மழை பெய்ய வேண்டும், நாங்களும் மார்கழி நீராடி மகிழ வேண்டும் என்ற வேண்டுதல். [1]
  • பாடல் 26 (முதல் வரி):

“மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்”

  • பொருள்: மார்கழி நோன்பினை நோற்று நீராடுவதற்கான வழிமுறைகளையும், அதற்குத் தேவையான பொருட்களையும் பெருமாளிடம் கேட்பது

–subham—

Tags– ஆண்டாள், திருப்பாவை,10 கேள்விகள், வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று, வங்கம்,

Leave a comment

Leave a comment