நினைவாற்றலை வலுப்படுத்த சில வழிகள்! (Post.16,147)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,147

Date uploaded in London – 31 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

5-8-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை

நினைவாற்றலை வலுப்படுத்த சில வழிகள்! 

ச. நாகராஜன்                                  

நினைவாற்றல் திறன் வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத ஒரு திறனாகும்.

அன்றாடம் நாம் பல்வேறு செயல்களைச் செய்கிறோம். பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறோம். அனைத்தையும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை.

நமது மூளையானது தேவையான இன்றியமையாத நினைவுகளை மட்டும் சேமித்து வைத்துக் கொள்கிறது. இதை நீண்டகால ஃபைலாக – கோப்பாக – அது வைத்துக் கொள்கிறது. டாக்டர் ஆண்ட்ரூ பட்ஸன் என்பவர் போஸ்டன் ஹெல்த்கேர் அமைப்பில் மூளையியல் நிபுணராகப் பணியாற்றுபவர். அவர் நினைவாற்றல் பற்றிய பல்வேறு தகவல்களைச் சேகரித்துத் தருகிறார்.

உணர்ச்சிகள் அடிப்படையிலான நினைவு: ஒருவரது வாழ்க்கையில் மிக முக்கியமான உணர்ச்சி சம்பந்தப்பட்டதான ஒரு சம்பவம் திருமணம் என்பதாகும். பற்பல கெமிக்கல்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அது சம்பந்தமான பல நினைவுகளைச் சேமித்து வைத்துக் கொள்கிறது” என்கிறார் டாக்டர் பட்ஸன்.

அன்றாட தனிநபர் முக்கியத்துவம் சம்பந்தமானவை:  இன்று காலை நாம் சாப்பிட்ட உணவு வகைகள் எவை, நேற்று எந்த உடையை நாம் அணிந்திருக்கிறோம் என்பதை சில நாட்கள் கழித்து ஒருவர் நம்மைக் கேட்டால் நாம் பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறோம். ஏனென்றால் நமது மூளை இந்த மாதிரி அம்சங்களுக்கு முக்கியத்துவமோ, முதலிடமோ அளிப்பதில்லை.

சில சமயம் மிக முக்கியமான வாழ்க்கை நினைவுகளைக் கூட நம்மால் உடனடியாக நினைவுக்குக் கொண்டுவர முடிவதில்லை.

இது ஏன்?

இங்கு தான் வயது என்ற காரணம் முக்கியமாக வருகிறது.

30 வயதுக்குப் பிறகு நினைவு மங்கலாகிறது: இருபதிலிருந்து முப்பது வயது வரை நமது நினைவாற்றல் உச்சகட்டத்தில் இருக்கிறது. முப்பது வயதுக்குப் பிறகு இது படிப்படியாக மங்க ஆரம்பிக்கிறது. ஐம்பது வயது ஆகும் போது ஃப்ரண்டல் லோப்ஸ் எனப்படும் நமது மூளையின் முன்மடலானது பழைய காலம் போல அவ்வளவாக வேலை செய்வதில்லை. இது தான் பழைய கால நினைவுகளைத் தேடி நமது நினைவுக்குக் கொண்டு வரும் வேலையைச் செய்யும் மூளையின் பகுதியாகும்.

பல வருடங்களாக நினைக்காத ஒரு பழைய கால அனுபவம் அதே வலிமையுடன் நமது நினவுக்கு வருவதில்லை. அடிக்கடி அதை நினைக்காததால் நீங்கள் உங்கள் மூளைக்கு அது அவ்வளவாக முக்கியம் இல்லை என்பதைச் சொல்லி விடுகிறீர்கள். ஆகவே மூளை அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மற்ற சில நினைவலைகளை அது மேலாக வைத்துக் கொள்கிறது.

சரி, நமது நினைவாற்றலை எப்படி மேம்படுத்தி பல பழைய நினைவுகளை அப்படியே வைத்துக் கொள்வது?

இதற்கு ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலைச் சேர்ந்த நிபுணர்கள் பதிலை அளிக்கிறார்கள்.

பழைய கால சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வர உதவும் வழிகள் இதோ:

உங்களது வீடு, குடும்பம், நண்பர்கள் பற்றிய பல போட்டோக்களைப் பாருங்கள்.

நீங்கள் இளமையாக இருந்த போது அடிக்கடி பாடும் ஒரு பாடலை நினவுபடுத்துங்கள்.

பழைய காலத்தில் நீங்கள் அணிந்து இப்போதும் வைத்திருக்கும் ஒரு ஆடையையோ அல்லது அணியையோ எடுத்துப் பாருங்கள்.

பழைய டைரி, கடிதம், பழைய காலத்தில் நீங்கள் படித்து சேமித்து வைத்திருக்கும் பத்திரிகை கட்டிங் – இவற்றை எடுத்துப் பாருங்கள்.

உங்களுக்குப் பிடித்த, குடும்பத்துடன் சேர்ந்து பாடும் பாடலை நினைத்துப் பாருங்கள்.

உங்களுக்குப் பிடித்த வாசனையை பழைய கால தலையணை, புத்தகம், உணவுவகை ஆகியவற்றில் முகர்ந்து பாருங்கள்.

இளமைக் காலத்தில் நீங்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று பாருங்கள்.

பழைய காலத்தில் பார்த்த ஒரு சினிமாவையோ அல்லது தொலைக்காட்சித் தொடரையோ மீண்டும் பாருங்கள்.

கண்களை மூடி கவனத்துடன் காட்சிகள், ஒலிகள், வாசனைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள். 

இவற்றை எழுதி வைத்து அடிக்கடி பார்ப்பதும் ஒரு வழியாகும். 

இவையெல்லாம் நினைவலைகளை மீண்டும் கொண்டு வரும் வழிகள் என்று கூறுகிறார் டாக்டர் ஆண்ட்ரூ பட்ஸன்.

**

Leave a comment

Leave a comment