

Written by London Swaminathan
Post No. 16,155
Date uploaded in London – 2 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
T Words Continued………………….
English version posted yesterday
துர்வாசு
யயாதிக்கும் தேவயானிக்கும் பிறந்த இளைய மகன்; அவனுடைய தந்தை முன்கூட்டியே முதுமை களையைப் பெற்றதால் யார் இளமையைத் தருகிறீர்கள் எண்டு மகன்களை வினவினார்; அவனுடைய அண்ணன் யது என்பவனைப் போலவே, துர்வாசுவும் தந்தைக்கு இளமையைக் கொடுக்க மறுத்துவிட்டான் . உடனே தந்தை யயாதி சாபமிட்டார்: நீ ஆளக்கூடிய மக்கள் எல்லோரும் பாவம் செய்த கும்பலாக இருக்கும்; அவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்பது அந்த சாபம் ஆகும்.
***
த்வஷ்டா
ஒரு நல்ல குணமுள்ள பிராமணன் இவன்; விஸ்வரூபா என்ற மூன்று தலையுள்ள மகனைப் பெற்றார் .இந்திரன் பொறாமையால் அவனைக் கொன்றான் . இந்திரனைப் பழிவாங்குவதற்காக த்வஷ்டா, மீண்டும் ஒரு மகனை உருவாக்கினார் . அவன் பெயர் விருத்ராசுரன் ;அவனையும் இந்திரன் கொன்றான்; பிராமணனைக் கொன்ற பாவம் – பிரம்மஹத்தி– இந்திரனைப் பீடித்தது ; ஒவ்வொரு புனிதத் தலமாகச் சென்று தனது பிராமணக் கொலை பாவம் தீர வேண்டும் என்று மன்றாடினான் . இந்தக் கதை தமிழ்நாட்டின் பல கோயில்களின் தல புராணத்திலும் உள்ளது
சிலர், இது பருவ நிலை பற்றிய கதை என்று வியாக்கியானம் செய்வார்கள்; அதாவது விருத்திரன் என்னும் வறட்சியை, இந்திரன் என்னும் மழை அழித்தது என்பது அவர்களுடைய விளக்கம் ; இதில் கவனிக்க வேண்டிய விஷயம்: இந்திரனின் உணவை அவனுக்கு அளிக்க வேண்டாம் என்று இடையர்களிடம் கிருஷ்ணன் கூறியதால் இந்திரன் கோபம் கொண்டு மழையைக் கொட்டினான் ; அப்போது கோபாலர்களைக் காப்பதற்காக கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கினான் என்ற கதைக்கு விளக்கம் தருவதாகச் சொல்லிக்கொண்டு இது யாதவர்- இந்திரன் இன மோதல் என்று இனபேதம் கற்பிக்கும் வெள்ளைக்காரர்கள் இந்த சம்பவம் பற்றி வாய்மூடி மெளனியாகி விடுவார்கள்; இந்திரன் ஏன் காரணமில்லாமல் பிராமணனைக் கொன்றான் என்று விளக்க மாட்டார்கள் ; சம்பவமே நடக்காதது போல நடிப்பார்கள்.
***
தியாகராஜர் (1767-1847)

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்; ஏனைய இருவர் சியாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீட்சிதர். திருவாரூரில் த்ரிலிங்க வைதிக தெலுங்கு பிராமணரான ராம ப்ரம்மம் என்ற பெரியாருக்கு மூன்றாவது மகனாக தியாகராஜர் அவதரித்தார். இவரது 18 வயதிற்குள்ளே வேதாத்யயனம், ஸம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகியவற்றில் நல்ல பயிற்சியைப் பெற்றுத் தேர்ந்தார். 18வது வயதில் திருமணமும் நடைபெற்றது. அவரது மனைவியார் காலமானார்.;அவர்களுடைய மக்களின் பெயர் சீதம்மா. சோந்தி வெங்கடராமையர் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். 79 வருடம் வாழ்ந்த அவர் சுமார் 24000 கிருதிகளை இயற்றியதாகவும் இப்போது சுமார் 730 கிருதிகள் மட்டுமே கிடைப்பதாகவும் சங்கீத விற்பன்னர்கள் கூறுவர். அவரது வாழ்வில் ஏராளமான அற்புத சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒவ்வொரு கிருதியின் பின்னாலும் ஒரு சம்பவம் இருக்கும் . 96 கோடி முறை ராம நாமத்தை ஜபித்து ராமபிரானின் தரிசனம் பெற்றார். சியாமா சாஸ்திரிகள் அடிக்கடி திருவையாறு சென்று அவரை சந்தித்து இசை பற்றி விவாதிப்பது வழக்கம். தன்னுடைய மகன் சுப்பராய சாஸ்திரியை தியாராஜரிடம் அனுப்பி சங்கீதம் கற்கவும் செய்தார் திருவையாறு என்னுமிடத்தில் தியாகராஜருடைய சமாதி உள்ளது ஆண்டுதோறும் அவர் சமாதி ஆன நாளில் தியாகராஜ ஆராதனை நடத்தப்படுகிறது அப்போது அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை பிரபல இசைக் கலைஞர்கள் கீழே தரையில் உட்கார்ந்து பக்தி சிரத்தையுடன் இசைப்பார்கள்.
1847ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதிக்குச் சமமான பராபவ வருடம் தை மாதம் பகுள பஞ்சமி நாளன்று திருவையாறு தலத்திலேயே அவர் சித்தியாகி மோக்ஷம் அடைந்தார் சுமார் 212 ராகங்களில் அவரது கிருதிகள் அமைந்துள்ளன. அவரே உருவாக்கிய சுமார் 66 புதிய அற்புத ராகங்களில் அவர் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.
***
தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி (பிப்ரவரி 19, 2012-ல் இதே பிளாக்கில் வெளியான என்னுடைய படைப்பு )
(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்- மஹான் தியாகராஜரின் பாடல்களிலிருந்து)
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்று எங்கள் சுப்ரமணிய பாரதி சொன்னது உங்கள் கீர்த்தனைகளைக் கேட்டுத்தானோ! 13 வயதில் நீவீர் பாடிய முதல் பாட்டு என்ன?
நமோ நமோ ராகவாய
**
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரே, 96 கோடி தடவை ராம நாமம் ஜபித்தீர், எழுதினீர். “ஓ ராம, நீ நாமமு ஏமி ருசிரா ,ஸ்ரீ ராம, நீ நாமமு எந்த ருசிரா” என்று பத்ராசலம் ராமதாசர் பாடினார். நீங்கள் ராமனை எப்படிப் பாடினீர்கள்?
மேலு மேலு ராம நாம சுகமு ஈதரலோ
நிண்டு தாஹமு கொன்ன மனுஜுலகு நீருத்ராஹின சுகம் புகண்டே
சண்ட தாரித்ர மனுஜுலகு தன பாந்தமு அப்பின——–
( பொருள்: ராம, இந்தப் பூமியில் உன் நாமமே சுகம் தரும். தாகத்தால் தவிக்கும் மனிதனுக்கு தண்ணீர் கிடைத்ததைவிட, ஏழைக்குப் பணம் கிடைத்ததைவிட, வெப்பம் தாங்காதவனுக்கு குளிர்ந்த குளம் கிடைத்ததைவிட, பயத்தால் நடுங்குபவனுக்கு துணிவு கிடைத்ததைவிட, தீராப் பசியுடையவனுக்கு பாயசத்துடன் அறுசுவை விருந்து கிடைத்ததைவிட———– ராமா, உன் நாமமே சுகம் தரும்)
**
அருமையான பாட்டு. ஆழமான பொருட்சுவை. உங்களைத் திருடர்கள் தாக்கி வழிமறித்த போது ராம லெட்சுமணனே வந்து காப்பாற்றினார்கள். என்ன பாட்டு பாடியவுடன் அவர்கள் வந்தார்கள்?
முந்து வெனுக இரு பக்கல தோடை முரகர ஹர ராரா (தர்பார் ராகத்தில்)
(பொருள்: முர, கரகளை வதம் செய்தோனே, எனக்கு இருபக்கத்திலும் துணையாக வாரும் ஐயா—-)
**
ஒரு முறை ஒரு கிழ தம்பதியர் வந்து உம் கையில் காசையும் கொடுத்துவிட்டு ராமனும் சீதையுமாய் மறைந்தார்களே.என்ன பாடினீர்?
பவனுத நா ஹ்ருதயமுன (மோகன ராகத்தில்)
**
திருவாரூரில் அவதரித்த த்யாகப்ரம்மமே, உமது தந்தை ராமப்ரம்மத்தின் ராமாயண கதாகாலச்சேபத்தை கேட்டுத்தான் ராம பக்தி ஏற்பட்டிருக்க வேண்டும்.உமது குரு ராமக்ருஷ்ணானந்தா நாரத மந்திரம் உபதேசித்தார். ராமன் மட்டுமின்றி சிவன் முதலியோர் மீதும் கிருதிகள் பாடினீரா?
சிவ சிவ சிவ யனராதா, பவ பய பாதலனண சுகோராதா (பந்துவராளி ராகம்) பொருள்: சிவ சிவ சிவ என்று சொல்லக் கூடாதா? உங்கள் பிறவி என்னும் துயரைப் போகக்கூடதா?)
**
உமது சங்கீத குரு வேங்கடரமணய்யா உமது கிருதிகளை வியந்து அவருடைய பதக்கங்களையே எடுத்து உம் மீது சூட்ட அதை பெருந்தன்மையுடன் அவரது மகள் கல்யாணத்தில் கொடுத்தீர்கள்..
சரபோஜி மன்னன் அழைத்தபோது போக மறுத்து “பணம் சுகம் தருமா, ராமா உன் முன்னிலையில் இருப்பது சுகமா” என்று பாடினீரே, அந்தப் பாட்டைக் கொஞ்சம்………
நிதி சால சுகமா ராமுனி சந்நிதி சேவ சுகமா (கல்யாணி ராகம்)
**
இதனால் உங்கள் தமையனார் கோபத்தில் நீர் பூஜித்த விக்ரகங்களை ஆற்றில் போட்டார். அதையும் கண்டுபிடித்தீர். 2000க்கும் அதிகமான கிருதிகளை எழுதினீர், 200க்கும் அதிகமான ராகங்களைப் பயன் படுத்தினீர்கள். எங்களுக்குக் கிடைத்ததோ 700 கிருதிகள்தான்.உங்கள் தமையன் செய்த அநியாயங்களை ராமனிடம் முறையிட்டீராமே!
அநியாயமு சேயகுரா ராம நன்னன்யுனிகா……..
(ராமா, எனக்கு அநீதி இழைக்காதே, என்னை வேற்று மனிதனாகப் பார்க்காதே………..என் அண்ணன் தரும் தொல்லைகள் தாங்கவில்லை.)
**
உங்களுக்குக் கோபம் அதிகமாமே. ஒருமுறை உங்கள் மனைவி இதைச் சுட்டிக் காட்டியவுடன் கோபத்தின் தீமையை உணர்ந்து ஒரு பாடல்…….
சாந்தமுலேக சவுக்கியமுலேது —–(சாந்த குணம் இல்லாவிடில் சௌக்கியமும் இல்லை).
**
நாதத்தின் தோற்றம், சப்தஸ்நரங்களின் பிறப்பு, ராகங்களின் குணம் பற்றியே 15 கிருதிகள் எழுதினீர். அவைகளில் சில……
சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே
நாபி, ஹ்ருத், கண்ட, ரசன நாச ஆதுலயந்து
சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே
(பொருள்: ஏழு ஸ்வரங்கள் எனப்படும் சுந்தரர்களை வழிபடுவாய். கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றில் திகழும் சுந்தரர்களை வழிபடுவாய். ருக் சாம முதலிய வேதங்களிலும் காயத்ரி மந்திரத்திலும்,வானோர், அந்தணர் உள்ளங்களிலும், தியாகராஜனின் கீர்த்தனைகளிலும் நடமாடும் சப்தஸ்வரங்களை வழிபடு).
**
வெறும் வாய்ப்பாட்டு மட்டும் இறைவனிடம் அழைத்துச் செல்லுமா?
சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே
ப்ருங்கி, நடேச, சமீரஜ, கடஜ, மதங்க நாரத ஆதுலு உபாசிஞ்சே
சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே
(பொருள்: பக்தி இல்லாமல் பாடும் இசை, சன்மார்க்கத்துக்கு இட்டுச் செல்லாது. ப்ருங்கி முனிவர், நடேசன், வாயு மைந்தன், அகத்தியன், மதங்கர், நாரதர் முதலியோரால் உபாசிக்கப்பட்ட இசை ஞானம் (அவர்களைப் போல பக்தியுடன் பயிலப்பட வேண்டும்) பக்தி இலாவிடில் நல் வழிக்கு கொண்டுசெல்லாது.)
**
18 வயதில் பார்வதியையும் அவர் 5 ஆண்டுகளில் இறக்கவே அவர் தங்கை கமலாம்பாவையும் கல்யாணம் செய்தீர். ஒரு மகளை ஈன்றெடுத்தீர். நீங்கள் மூன்று நாடகங்கள் எழுதினீர்கள், அவை யாவை?
பிரஹலாத பக்தி விஜயம், நவ்க சரித்திரம், சீதாராம விஜயம்
**
புத்தூரில் கோவில் கிணற்றில் ஒருநல்ல மனிதர் தவறி விழுந்து இறந்தபோது என்ன பாட்டு பாடி அவரை உயிர்ப்பித்தீர்கள்?
நா ஜீவாதார நாநோமு பலமா
ராஜீவ லோசன ராஜராஜ சிரோமணி
நாஜீபு ப்ரகாசமா, நா நாசிகா பரிமளா
நா ஜப வர்ண ரூபமா, நாது பூஜாஸீமமா (பிலஹரி ராகம்)
(பொருள்: என் ஜீவனுக்கு ஆதாரமே, என் நோன்புகளின் பலனே, தாமரைக் கண்ணனே, ராஜ ராஜனே, என் கண்களின் ஒளியும் நீயே, மூக்கில் நறுமணமும் நீயே, என் ஜபங்களின் வடிவும் நீயே, என் பூஜை மலரும் நீயே)
**
திருவையாயாற்றில் சமாதி அடையும் முதல் நாளன்று பிரம்மாநந்தாவிடம் சந்யாசம் பெற்றீர். இறுதி நாள் நெருங்கிவிட்டதை அதற்கு சில நாட்களுக்கு முன் கனவில் கண்டு பாடிவிட்டீரே, அது என்ன பாட்டு?
கிரிபை நெல (சகானா ராகம்)
***
திருவையாற்றிலுள்ள உங்கள் சமாதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆராதனையில் பாடப்படும் (ஐந்து) பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் எவை?

நாட்டை ராகத்தில்- ஜகதாநந்த காரக;
ஆரபி ராகத்தில் – சாதிஞ்செனே, ஓ மனசா;
கௌளை ராகத்தில் – துடு குகல நன்னே தொர;
வராளி ராகத்தில் – கன கன ருசிரா;
ஸ்ரீ ராகத்தில் –எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கு வந்தனமுலு
***
கர்நாடக சங்கீத பிதாமஹர் புரந்தர தாசர் தனது பாடல்களில் புரந்தர விட்டல என்றும் சியாமா சாஸ்திரிகள் சியாம கிருஷ்ண என்றும் முத்து சுவாமி தீட்சிதர் குரு குஹ என்றும் முத்திரை வைத்து பாட்டு எட்டுக் கட்டினர். உங்கள் முத்திரை என்னவோ?
பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு
நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்
ப்ர்ஹ்லாத நரதாதி பத்லு பொகடி ஸண்டு
ராஜீவ நயன தியாகராஜாதி வினுதனமன
(தியாகராஜரின் சுந்தரத் தெலுங்கு வாழ்க, எங்கும் மங்களம் பொங்குக)
***
துளசி
Tulsi [तुलसी]
இந்துக்களின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று துளசி. இதை நாம் மூலிகைகளின் ராணி QUEEN OF HERBS என்று அழைப்போம் , வெளிநாட்டினர் இதை மூலிகைகளின் ராஜா KING OF HERBS என்பார்கள் .
துளசி- Holy Basil, Ocimum sanctum ; Family Lamiaceae
எந்தப் பெருமாள் கோவிலுக்கு எப்போது போனாலும் உத்தூரணியில் துளசி ஜலத்தைக் கொடுப்பார்கள் . அதை மரியாதையுடன் உறியாமல் குடித்துவிட்டு தலையிலும் தடவிக்கொள்ளும்போது கிடைக்கும் புத்துணர்ச்சியைச் சொல்லில் வடிக்க இயலாது . வைணவப் பெரியார்கள் இறந்தாலோ சமாதி அடைந்தாலோ அவர்கள் அடக்கம் செய்யப்பட இடத்தில் பிருந்தாவனம் என்ற பெயரில் ஒரு மடத்தை அமைப்பார்கள் . இந்தியா முழுதும் வீடுகளின் பின்புறத்தில் துளசி மாடங்களை அமைத்து அதை பய பக்தியுடன் பராமரித்து, தினமும் சில இதழ்களை பெருமாளுக்குப் படைத்துவிட்டு பிரசாதமாக உட்கொள்ளுவர். இதனால் இருமல் சளி , கபம் நோய்கள் வராது.இந்துக்கள் துளசி விவாஹம் நடத்திக் கொண்டாடுகிறார்கள் . துளசி மாலையை அணிகிறார்கள் . வட இந்தியாவில் துளசி டீ யைக் குடிக்கிறார்கள் ; இது ஒரு மூலிகை டானிக் போன்றது .
துளசிக்கு பிருந்தா என்ற பெயரும் உண்டு; கிருஷ்ணர் சின்னப்பையனாக இருந்தபோது விளையாடிய துளசி வனத்துக்கு பிருந்தாவனம் என்று பெயர் .xxxx
துளசி விவாஹம்


துளசி விவாகம் (Tulsi Vivah) அல்லது துளசி கல்யாணம் (Tulasi Kaḷyaṇam) என்பதை வட இந்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள் .கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி நாள் முதல் பதினொன்றாவது நாளுக்கு இடையில் வரும் நாட்களில் இந்த மங்கள விழா நடத்தப்படுகிறது.
இதில்சாளக்கிராமம் அல்லது நெல்லி மரக் கிளையுடன் துளசிக்கு சம்பிரதாயத் திருமணம் நடைபெறுகிறது.
இது திருமண பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு “பிருந்தாவன துவாதசி’ என்றும் பெயர்.
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.
துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். சிலர் சாளக்கிராமம் என்னும் கல்லினை வைத்து அதைக் கல்யாண மாப்பிள்ளையாக அலங்கரிப்பார்கள்; அதே நேரத்தில் துளசியை மணப்பெண்ணாகப் பாவித்து கல்யாணனப் பெண்ணைப்போல அலங்கரிப்பார்கள் ; இஷ்ட மித்ர பந்துக்களையும் நண்பர்களையும் அமர வைத்து சில துதிகளைப்பாடி ஆரத்தி எடுத்த பின்னர் பிரசாதம் வழங்குவார்கள்; வேத பண்டிதர்களை அழைத்து மந்திரமும் ஓதும்படி வேண்டுவார்கள் .
To be continued………………….
Tags– துளசி விவாஹம் HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 107; இந்து மத கலைச்சொல் அகராதி-107, தியாகராஜர்