

Written by London Swaminathan
Post No. 16,156
Date uploaded in London – 2 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Go to Project Madurai to get his 280 poems
பாக்கள் வகையில் காளமேகப் புலவரின் சிறப்புகள் என்ன ? கவிதைகளைத் தவிர ஏதெனும் நூல்களை எழுதினாரா ?
2
பிள்ளையாரையும் முருகப்பெருமானையும் இவர் கிண்டல் தொனியில் பாடிய பாடலின் வரிகள் என்ன ?
3
இவர் யாருடைய பக்தர்? எப்படிக் கவி மழை பொழிந்தார் ?
4
ஒரு விபச்சாரி மேல் காளமேகப் புலவர் பாடிய நகைச் சுவை பாடல் என்ன ?
5
திருமலை ராயன் பட்டினத்தை இவர் அழித்தது எப்படி ?
6
வைணவராக இருந்த இவரை சைவத்துக்கு தாவச் செய்த சம்பவம் எது?
7
புலவர்களை குரங்கு என்று எப்படிக் கவி பாடினார்?
8
சிவபெருமானைக் கேலி செய்வது போலப் புகழ்ந்தது எப்படி?
9
நம் புலவர் ஒரு நொடியில் ஆயிரம் பாடல்களை எப்படிப்பாடினார்?
10
‘முற்றவும் “த”கரவருக்க எழுத்துக்களே அமைந்து வருமாறு இயற்றுக’ என்று கேட்ட ஒருவருக்குச் சொல்லியது என்ன பாடல் ?
********************


விடைகள்
1.காளமேகப்புலவர் இரு பொருள் தரும் சிலேடைப் பாடல்களை பாடுவதில்வல்லவர் ; அவைகளில் பல புகழ்வது போல இகழ்வதாகவும் இகழ்வது போலப் புகழ்வதாகவும் இருக்கும் (நிந்தாஸ்துதி) . மேலும் ஒரு நொடியில், சொன்ன பொருளில் பாடும் வல்லமை படைத்த ஆசு கவி ஆவார் . அரிகண்டம் என்னும் பாடல் வகையைப் பாடி எதையும் அழிக்கும் வல்லமை படைத்தவர். காளமேகம் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூரில் பிறந்ததால் காளமேகம் என்று பெயர்; திருவரங்கத்தில் கோவில் பரிசாரகராக வேலை செய்தபொழுது காதல் வலையில் விழுந்தார். திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.
****
2.(காஞ்சிபுரம் விநாயகர் உற்சவத்தைப் பழிப்பதுபோலப் புகழ்ந்து பாடியது)
மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? – மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!
எலி இழுத்துப் போகின்றது, ஏன்? 6
**
(முருகக் கடவுளைத் தரிசித்துப் பழிப்பதுபோலப் புகழ்ந்து பாடியது)
அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பரிய மாமன் உறிதிருடி; – சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத் தானுக்குஇங்கு
எண்ணும் பெருமை இவை.. 7
****
3.இவர் பிறப்பில் வைணவர்; பின்னர் காதல் காரணமாக சைவராக மாறினார் ; காளிதாசன் காளியின் அருளைப்பெற்று கவிஞன் ஆனது போல இவர் அகிலாண்டேஸ்வரியின் அருளால் பாடல்களை பாடும் வல்லமை படைத்தார்.
****
4.(நாகைப்பட்டினம் தாசி ஒருத்தி பாடிய பாட்டைக் கேட்டு அப்பாட்டு இனிமையாய் இல்லாதபடியால் அவளைப் பழித்துப் பாடியது)
வாழ்த்து திருநாகை வாகுஆன தேவடியாள்
பாழ்த்த குரல்எடுத்துப் பாடினாள் – நேற்றுக்
கழுதைகெட்ட வண்ணான்கண் டேன்கண்டேன் என்று
பழுதைஎடுத்து ஓடிவந்தான் பார்.
***
5.காரைக்கால் பகுதியில், புலவர் அதிமதுரகவி அகம்பாவத்துடன் பல்லக்கில் சென்றதை இவர் வெறுப்புடன் கண்டார். பின்னர் அதிமதுரகவி பணிசெய்யும் திருமலைராயன் (1453 – 1468) சபையில் பாக்கள் வடிவில் நடந்த மோதல்கள் முற்றின ; ஆட்களையே கொல்லும் அரிகண்டம் பாடும்படி அவைப்புலவர் வலியுறுத்தினார் ; அரிக்கண்டம் என்ன எம கண்டமே பாடி உங்களை அவனிடம் அனுப்புகிறேன் என்று சொல்லிப் படவே அந்த ஊரில் மண்மாரி ( மண் மழை) பெய்து ஊரே மணல் மேடிட்டது.
(திருமலைராயன் பட்டினத்தில் மண்மாரி பெய்யப் பாடியது)
செய்யாத செய்த திருமலைரா யன்வரையில்
அய்யா! அரனே! அரைநொடியில் – வெய்யதழல்
கண்மாரி யான்மதனைக் கட்டுஅழித்தால் போல்தீயோர்
மண்மாரி யால்அழிய வாட்டு. 193
(இதுவும் அது)
கோளர் இருக்கும்ஊர் கோள்கரவு கற்றஊர்
காளைகளாய் நின்று கதறும்ஊர் – நாளையே
விண்மாரி அற்று வெளுத்து மிகக்கறுத்து
மண்மாரி பெய்கஇந்த வான். 194
****
6.வைணவராக இருந்த காளமேகப் புலவரை சைவத்துக்கு தாவச் செய்த சம்பவம்
வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோயிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார்.
****
7.கவி/ குரங்கு என்ற சிலேடைப்பாடல்
திருமலைராயன் (1453 – 1468) சபையில் தலைக்கனம்மிக்க புலவர்கள் நாங்கள் கவிராஜர்கள் என்று சொன்னார்கள்.
காளமேகம் உடனே கலகலவெனச் சிரித்தார். சிரித்தபடியே அவர்களை நோக்கிக்
கவிதையொன்றை உதிர்த்தார்.
வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக்கால்.
சம்ஸ்க்ருதத்தில் கபி ( தமிழில் கவி என்று மாறும் பி=வி); குரங்கு என்று பொருள் .
நீங்கள் குரங்குகளா? குரங்குகள் என்றால் உங்களின் வாலெங்கே? நீளமான வயிறெங்கே? முன்னங்கால்கள்
எங்கே? உட்குழிந்திருக்கும் கண்கள் எங்கே? நீங்கள் குரங்குத் தலைவர்களென்றால் இவையெல்லாம் இருக்கவேண்டுமே என்று ஏளனமாகப் பாடினார்.
****
8.(தில்லை நடராசர் மீது பழிப்பதுபோலப் புகழ்ந்து பாடியது)
வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டுஒருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கஇக் காசினியில்
அல்ஆர் பொழில்தில்லை அம்பல வாணற்குஓர் அன்னைபிதா
இல்லாத தாழ்வுஅல்ல வோஇங்ங னேஎளிது ஆனதுவே. 25
****
9.திருமலைராயரின் அரசவைப் புலவர் அதிமதுரக் கவிராயரின் பாட்டுக்கு எதிர்ப்பாட்டுப் பாடியது
அதிமதுரக் கவிராயர் பாடியது
மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும்
ஆச்சென்றா லாயிரம்பாட் டாகாதோ – பேச்சென்ன
வெள்ளக் கவிகாள மேகமே நின்னுடைய
கள்ளக் கவிக்கடையைக் கட்டு .(159)
மூச்சு விடும் முன்னே முந்நூறும், நானூறும், “ஆச்சு” என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ? பேச்சு என்ன வெள்ளக் கவி காளமேகமே நின்னுடைய கள்ளக் கவிக் கடையைக் கட்டு .(159)
காளமேகம் பாடியது
இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ –சும்மா
இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்
பெருங்காள மேகம் பிளாய் . (160)
“இம்” என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் “அம்” என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ? சும்மா இருந்தால் இருந்தேன் எழுந்தேனே ஆயின் பெரும் காளமேகம் (கரிய மழைமேகம்) பிளாய் . (59)
***
10.தத்தித்தா தூதுதி தாதுதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது? (71)
பொருள் :
வண்டே! தத்தி தாது ஊதுதி – தாவிச் சென்று பூந்தாதினை ஊதி உண்ணுகின்றாய்; தாது ஊதித் துத்தி – பூந்தாதினை ஊதி உண்ட பின்னர் மீளவும் தாவி எங்கோ செல்லுகின்றாய்; துத்தி துதைதி – துத்தி என ரீங்கார ஒலி எழுப்பியபடியே மற்றொரு பூவினை நெருங்குகின்றாய்; துதைந்து அத்தாது ஊதுதி – அப் பூவினை அணுகி அதனிடத்துப் பூந்தாதினையும் ஊதி உண்ணுகின்றாய். தித்தித்த தாது எது – நினக்கு இனிப்பாயிருந்த பூ எதுவோ? தித்தித்தது எத் தாதோ – இனித்திருந்தது எதன் மகரந்தமோ? தித்தித்த தாது – இதழாக அழகியதும் எப் பூவோ?
துதைந்து என்ற சொல் துதைத்து என விகாரமாயிற்று. தாது – பூந்தாது, பூவிதழ், பூ என மூன்றையும் குறிப்பதாம்.
—subham—
Tags-காளமேகப்புலவர் பாடல், 10 கேள்விகள், ஆசு கவி, சிலேடை, அரிகண்டம், நிந்தாஸ்துதி
