ஆமாம்’ என்பவர்களுக்கு நான் ‘ஆமாம்’ தான்;

‘இல்லை’ என்பவர்களுக்கு நான் ‘இல்லை’ தான்; – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!(Post.16,172)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,172

Date uploaded in London – 7 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

5-8-26 கல்கி ஆன் லைன் இதழில் வெளியான கட்டுரை!               

‘ஆமாம்’ என்பவர்களுக்கு நான் ‘ஆமாம்’ தான்;

‘இல்லை’ என்பவர்களுக்கு நான் ‘இல்லை’ தான்; – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!

 ச. நாகராஜன்

கடவுள் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறார். கடவுளே தான் எல்லாம்.

 நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் தெய்வீகமானது சாஸ்திரங்களுக்கு உள்ள பெருமதிப்பை மீட்டுக் கொண்டுவரவும் அறநெறியைக் கடைப்பிடிக்கச் செய்யவும் 

எப்படிப்பட்ட வழிமுறையையும் மேற்கொள்ளும். அந்த வழிமுறைகளைப் பற்றி விவாதித்தோ அல்லது அவற்றின் மீது உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தோ உங்களால்  ஒரு லாபத்தையும் பெற முடியாது. நீங்கள் நம்பிக்கையை  மட்டுமே வளர்த்துக் கொண்டு பெரும் ஆனந்தத்தை அடைய வேண்டும்.

இறைவனின் பெயரான ‘விஷ்ணு’ என்பதற்கான அர்த்தம் ‘எல்லா இடத்திலும் இருப்பவர்’ என்பதாகும்.

இப்போது ஒரு கேள்வி எழுகிறது. அப்படி என்றால் அவரை ஏன் பார்க்க முடியவில்லை??

ஆனால் நம்மைச் சுற்றி இருக்கின்ற காற்றை நாம் பார்க்கிறோமா? அப்போது காற்றே இல்லை என்று சொல்லி விட முடியுமா கடவுளும் கூட அணுவை விட நுண்மையானவர். பெரியதை விட பெரியவர் என்று சொல்லப்படுகிறது.

தைத்திரீய உபநிடதம் கடவுளை ‘அணோரணீயான் மஹதோ மஹீயான்” என்று கூறுகிறது. (அணுவிற்கும் அணுவானவர். பெரிதுக்கும் பெரிதானவர்).

இந்தக் கூற்றை ஒட்டியே தியாகராஜ ஸ்வாமிகள் இப்படி பாடினார்:  “பிரம்மாவாகவும் சிவனாகவும் கேசவனாகவும் இருக்கிறாய் நீ, ராமா!”

 வேதங்களும் கூட அவனை நெடுந்தூரத்தில் இருப்பதாகவும் மிக மிக அருகில் இருப்பதாகவும் விளக்குகின்றன. உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் அமெரிக்காவில் இருக்கலாம், ஆனால் உங்கள் அன்பு அவரை மிகவும் அருகில் இருப்பது போல வைக்கிறது. உங்களது அண்டைவீட்டுக்காரர் உங்களுக்கு ஒரு எதிரி என்றோ அன்னியமானவர் எனறோ இருந்தால் அவர் உங்களுக்கு ‘நெடுந்தொலைவில்’ இருக்கிறார்.

மனமே தள்ளி விடுகிறது, இழுக்கிறது, வெறுக்கிறது, அன்பு செலுத்துகிறது.

எதை உணர்கிறாயோ அதுவாகவே நீ இருக்கிறாய்.

 என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

 ‘ஆமாம்’ என்பவர்களுக்கு நான் ‘ஆமாம்’ தான்;

‘இல்லை’ என்பவர்களுக்கு நான் ‘இல்லை’ தான்;

‘இல்லை’ என்பதும் ‘ஆமாம்’ என்பதும் நீங்கள் பேசும் வார்த்தைகள்.

சாயிக்கு எப்போதுமே ‘ஆமாம்’, ‘ஆமாம்’, ‘ஆமாம்’ தான்!

(எஸ் ஏஸ் எஸ் தான் SSS – SRI SATYA SAI )

நாம் நமது உடலில் அடைபட்டிருப்பதால் அகங்காரம் வெகுவாக வளர்கிறது, ஆத்மா நம்பப்படுவதில்லை. தெலுங்கு மொழியில் ஒரு பழமொழி இருக்கிறது: “பால் பொங்கி எழும் போது அது தீயில் விழுகிறது”.

அது சொல்லும் பாடம் இது தான்: “கர்வம் ஒருவனை சாம்பலாக்குகிறது”.

 தர்மம், பற்றற்ற தன்மை ஆகியவற்றிலிருந்து தான் எளிமை எழுப்பப்பட முடியும்.

தியாகம் மனிதனுக்கு அளப்பற்ற ஆனந்தத்தைத் தருகிறது.

மற்றவருக்கு உதவுவதற்காக எவர் ஒருவர் தனது சௌகரியங்களை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறாரோ, அவரே உண்மையான பக்தர். மனிதர்கள் வசதியையும் சொகுசையும் உயர்ந்த வாழ்க்கையையும் பற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் எவ்வளவு நாளைக்குத் தான் அவர்கள் அதைப் பற்றிக்கொண்டு இருக்க முடியும்?  பெரிய மலை எதிர்ப்படும் போது உங்களால் ஓட்டப்பந்தயத்தில்  ஓட முடியாது.  உலகமானது காலத்தாலும்  இடத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் உங்கள் இருப்பும் கூட எல்லைக்கு உட்பட்டிருக்கிறது. லோகாயதப் பொருள்கள் நிரம்பி இருக்கும் உலகில் சந்தோஷத்தை எதிர்பார்ப்பதானது தாமரை இதழிகளில் துளிர்க்கும் பனித்துளிகளை வைரங்களாகத் தவறாக நினைப்பதற்குச் சமமான முட்டாள்தனமாகும். அல்லது கானல்நீரில் கஷ்டப்பட்டு சென்று வாளியில் நீரை நிரப்ப நினைப்பதற்குச் சமமாகும்.

சுத்தமான, அதிக அளவு ஆனந்தம் கடவுளிடமிருந்து மட்டுமே பெற முடியும்; தெய்வீக சட்டங்களுக்கும் வழிகளுக்கும் அடிபணிந்தே அதைப் பெற முடியும். 

27-1-1982 விஜயதசமி அன்று  பகவான் பாபா ஆற்றிய உரை

**********

Leave a comment

Leave a comment