முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,180)

Written by London Swaminathan

Post No. 16,180

Date uploaded in London – 9 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

முத்து சுவாமி தீட்சிதருக்கு காசியில் கங்கை நதியில் கிடைத்த அற்புத வீணை இப்பொழுது எங்கே உள்ளது ?

2

தீட்சிதர் எத்தனை கிருதிகளை பாடினார்? இப்போது அவைகளை எங்கே பெறலாம்?

3

தீட்சிதர் பிறந்தது எங்கே? இசை பயின்றது எங்கே ?

4

இவர் பாடிய வாதாபி கணபதிம் பஜே என்ற பாட்டை முதல் முதலில் கற்றுத் தருகிறார்கள் ;  முழுப் பாடல் தெரியுமா ?

5

இவர்  இயற்றிய  எந்தப் பாடலினால் வறண்ட எட்டயபுரத்தில் அற்புத மழை  பெய்தது ?

6

இவர் பாடல்களை எளிதில் கண்டுபிடிக்க உதவும் முத்திரை என்ன?

7

திருவாரூரில் இவர் செய்த அற்புதம் என்ன ?

8

இவரைப் பற்றிய சுருக்கமான தகவலை எங்கே பெறலாம் ?

9

இவர் இயற்றிய பாடல்களில் மிகவும் சிறப்பிடம் பெறுபவை எவை ?

10

சங்கீத மும்மூர்த்திகளில் இவருக்குள்ள தனிச் சிறப்பு என்ன?

****************************

விடைகள்

1.அந்த வீணைகோயம்புத்தூரில் வசிக்கும் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் வழிவந்த ஏழாம் தலைமுறை வாரிசான ஆடிட்டர் முத்துசாமியிடம் இருப்பதாக தினமலர் இணையதளம் (நவம்பர் 23, 2025) கோவையில் பூஜிக்கப்படும் முத்துசாமி தீட்சிதர் வீணை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. கோவையில் ஆண்டுதோறும், சத்காரியா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் முத்துசாமிதீட்சிதர் ஜெயந்தி கீர்த்தனாஞ்சலி இசைவிழாவில், அந்த வீணை எடுத்து வரப்பட்டு ஆராதிக்கப்படுவதாகவும் அது செய்தி வெளியிட்டிருந்தது. நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தினமலருக்கு நன்றி தெரிவித்து டிவிட்டர் மெஸேஜ் வெளியிட்டார். காசி சங்கமத்தில் இளையராஜா இந்த விஷயம் பற்றிப் பேசியவுடன் இது பேசுபொருளாகியது. அதன் விளைவே இந்த தினமலர் செய்தி. 

***

2.அவருடைய 525 கிருதிகளை கர்னாடிக்.காம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. ஒரு கிளிக்கில் அதனை பாடல்களையும் இலவசமாகப் பெறலாம்.

Royal Carpet Carnatic Composers: MuthuswAmy Dikshithar

 

karnATik

***

3. தீட்சிதர் வாழ்ந்தகாலம் 1775- 1835. பிறந்தது திருவாரூர், சமாதி அடைந்தது எட்டயபுரம். காசியில் சிதம்பரநாத யோகியுடன் வசித்தது 5 ஆண்டுகள். திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், எட்டயபுரத்திலும் பல ஆண்டுகள் வாழ்ந்தார்.

·  பிறப்பு: மார்ச் 24, 1775, திருவாரூர்.

·  இறப்பு: அக்டோபர் 21, 1835, எட்டயபுரம்.

தீட்சிதர் சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்ற பின்னர் அவருடனே காசிக்குச் சென்று விசுவநாத தரிசனம் செய்தார். அவர் சொற்படி திருத்தணி முருகனை தரிசிக்கச் சென்றார் .மலை ஏறும் போது ஒரு கிழவர் எதிரில் வந்து “முத்துஸ்வாமி வாயைத் திற” என்று சொல்லி ஒரு கற்கண்டைப் போட்டு ஆசீர்வதித்து மறைந்து விட்டார். அப்போதே முருகனைத் தரிசித்து பரவசமுற்ற தீட்சிதர், முருகனின் அருளால் பாடல்களை மழையெனப் பொழிந்தார்.

***

4.திருவாரூர் வாதாபி கணபதி ஷோடச கணபதி கீர்த்தனை

பல்லவி

வாதாபி கணபதிம் பஜேஹம் வாரணாஸ்யம் வரப்ரதம் ஸ்ரீ

அனுபல்லவி

பூதாதி ஸம்ஸேவித சரணம் பூதபௌதிக ப்ரபஞ்ச பரணம்

வீதராகிணம் வினதயோகினம் விச்வகாரணம் விக்னவாரணம்

சரணம்

புராகும்ப ஸம்பவ முனிவரப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம்

முராரி ப்ரமுகாத்யுபாஸிதம் மூலாதார க்ஷேத்ரஸ்திதம்

பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்

நிரந்தரம் நிடில சந்த்ரகண்டம் நிஜவாமகர வித்ருதேகக்ஷுதண்டம்

கராம்புஜபாச’பீஜாபூரம் கலுஷவிதூரம் பூதாகாரம்

ஹராதிகுரு ஹதோஷித பிம்பம் ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம்

XXXXXX

ராக³ம்: ஹம்ஸத்⁴வனி (ஸ, ரி2, க3³, ப, நி3, ஸ)

வாதாபி க³ணபதிம் பஜேஹம்

வாரணாஶ்யம் வரப்ரத³ம் ஶ்ரீ ।

பூ⁴தாதி³ ஸம்ஸேவித சரணம்

பூ⁴த பௌ⁴திக ப்ரபஞ்ச ப⁴ரணம் ।

வீதராகி³ணம் வினுத யோகி³னம்

விஶ்வகாரணம் விக்⁴னவாரணம் ।

புரா கும்ப⁴ ஸம்ப⁴வ முனிவர

ப்ரபூஜிதம் த்ரிகோண மத்⁴யக³தம்

முராரி ப்ரமுகா²த்³யுபாஸிதம்

மூலாதா⁴ர க்ஷேத்ரஸ்தி²தம் ।

பராதி³ சத்வாரி வாகா³த்மகம்

ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்ட³ம்

நிரந்தரம் நிகி²ல சந்த்³ரக²ண்ட³ம்

நிஜவாமகர வித்³ருதேக்ஷுக²ண்ட³ம் ।

கராம்பு³ஜ பாஶ பீ³ஜாபூரம்

கலுஷவிதூ³ரம் பூ⁴தாகாரம்

ஹராதி³ கு³ருகு³ஹ தோஷித பி³ம்ப³ம்

ஹம்ஸத்⁴வனி பூ⁴ஷித ஹேரம்ப³ம் ।

பொருள்:

யானை முகம் கொண்டவராகவும் வரங்களைக் கொடுக்கின்றவராகவும்

விளங்கும் வாதாபி கணபதியை நான் பஜனை செய்கிறேன்.

பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர். பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர். ஆசையில்லாதவர்.

வணங்கப்படும் யோகியவர்களை உடையவர். உலகங்களுக்குக் காரணபூதர்.

இடையூறுகளைப் போக்கடிப்பவர்.

முன்காலத்தில் கும்பசம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்னும்

சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.

மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர்.

விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர்.

மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்.

பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.

பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.

எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.

தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத்துண்டத்தை உடையவர்.

தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம்,

இவற்றை உடையவர். பாபமற்றவர்.

பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர்.

பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும்

சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர்.

ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்

***

5. எட்டயபுரத்தில்  வறட்சி நிலவிய காலத்தில் அங்கு சென்றார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய’ பெருமக்கள் வரிசையில், மரபில் வந்தவர் அவர். உடனே அமிர்தவர்ஷினி ராகத்தில் அம்பிகை மீது ‘ஆனந்தாமிர்தகர்ஷினி’ என்ற க்ருதியைப் பாடவே மழை ‘பெய்யெனப் பெய்தது’.

***

6. முருக பக்தன் என்பதால் தன்னுடைய பாடல்களில் குருகுஹ என்ற முத்திரையைச் சொல்லி ராகத்தின் பெயரையும் சொல்லி கிருதியை பூர்த்தி செய்வார்.

***

7. இவருடைய சீடர்களில் திருவாரூர் நடன மாது திருவாரூர் கமலமும் ஒருவர். அவர் கோவிலில் ஆடுவதற்காக 2 தெலுங்கு பாடல்களையும் இயற்றினார். அதைப் பார்க்க நாட்டியப் பேரறிஞர்களான தஞசாவுர் நால்வரான பொன்னையா, சின்னையா, வடிவேலு, சிவானந்தம் ஆகிய நால்வரும் வந்தனர். திருவாரூரில் தியாகராஜருக்கு வேண்டிய பூஜைகளைச் செய்யுமளவுக்கு பண வசதி இல்லையே என்று வருத்தம் அடைந்தார்; உடனே நடன மாது தன்னுடைய நகைகளை எல்லாம் அடகு  வைத்து பணம் பெற்றுவருவதாகச் சொன்னார்; அதை வாங்க மறுத்த தீட்சிதர் , இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து தியாகராஜம் பஜே என்று அந்த ஊர் ஆண்டவன் மீதே பாடல் இயற்றினார் ; அந்த ஊர் சத்திர மானேஜர் இடந்து வந்து நிறைய உணவுப்பண்டங்களை வீட்டில் கொண்டு இறக்கினார்.

****

8.: ஷண்மதமும் முத்துசுவாமி தீக்ஷிதரும், எழுதியவர்: என். பார்த்தசாரதி, ஆண்டு 2002.

சென்னை மேற்கு மாம்பலம் பார்த்தசாரதி அவர்கள் எழுதிய 24 பக்க புத்தகத்தில் ஒரு கலைக்களஞ்சிய அளவுக்கு தகவல்கள் உள்ளன. சங்கீத ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

 டி.எஸ்.பார்த்தசாரதி எழுதிய   ‘Muthuswami Dikshitar’ ( in the book Great Composers ) என்ற ஆங்கிலக் கட்டுரையையும் படிக்கவும்.

 ****

9.இவர் அம்பாள் மீது பாடிய பாடல்களை ஸ்ரீசக்ரம், மந்திர, யந்திர, தந்திரங்கள் அறிந்தவர்களே பூரணமாக விளங்கிக் கொள்ள முடியும். பரம ரகசியங்கள் நிறைந்தவை. அதே போல பலன்களும் கொடுக்க வல்லவை. இதில் மிகவும் முக்கியமானது நவாவரணக் கீர்த்தனைகள் 9 ஆகும். இதே போல நவக்கிரஹங்கள் பற்றிய 9 பாடல்களில் கிரஹ பீடைகள் விலக மந்திரபூர்வ பாடல்களைப் பாடியுள்ளார். பிள்ளையார் மீது சுமார் 24, சிவன் மீது 100, சக்தி மீது 150, முருகன் மேல் 30, ராமர், கிருஷ்ணர், விஷ்ணு மீது 60, நவக்கிரகங்கள் மீது 9 கிருதிகள் என்று ஷண்மத தத்துவங்களையும் பாடி இருக்கிறார்..

தமிழ்சம்ஸ்கிருத மொழிகளில் வேற்றுமைகள் (விபக்தி) எட்டு ஆகும். இவைகளை வைத்துப் பாடினால் விபக்தி கிருதிகள் என்பர். இவ்வகையில் 32 கீர்த்தனைகள் இயற்றினார். ஒரு குறிப்பிட்ட கீர்த்தனையில் அதே வேற்றுமையில் வரிகள் அமையும். அபயாம்பிகை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பிகை, மதுராம்பிகை பெயர்களில் (4 x 8=32) இப்படிப் பாடினார். 

 சிவன் மீது பாடிய ‘ஸ்ரீ விஸ்வநாதம்’ என்ற கிருதி சிகரமாக அமைந்தது. 14 ராகங்களைக் கொண்டு சிவனின் பெருமைகளை விளக்குகிறார். ஒரே பாட்டில் 14 ராகம்

***

10. கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் இவர்தான் இளையவர்; இவரைப்போல எல்லா கடவுளர் மீதும் இவ்வளவு பாடல்களை ஏனைய இருவரும் பாடவில்லை இவர் சங்கீதம், யோக சாஸ்திரம், மந்திரம், உபநிஷதம், சம்ஸ்கிருதம், தெலுங்கு முதலியவற்றில் கரை கண்டவர். சம்ஸ்கிருத சொற்களை அடுக்கு மொழியில் அள்ளித் தெளித்திருக்கிறார். அவைகளில் அழ்ந்த  மந்திர தந்திரங்கள் நிறந்திருக்கின்றன. இவர் பாடல்களில் வரும் புராணஇதிஹாச நிகழ்ச்சிகள் எண்ணற்றவை. அதிகமாகக் கேள்விப்படாத விஷயங்கள் சில: ஒரு பாடலில் குபேரனின் மகன்கள் நளகூபரனும் ,மணிக்ரீவனும் நாரதர் சாபத்தால் மருத மரங்களாகப் பிறந்து கிருஷ்ணனின் உரலால் சாப விமோசனம் பெற்றதைக் குறிப்பிடுகிறார். இன்னொரு பாடலில் தானம் கொடுத்த பசுவையே மீண்டும் தானம் கொடுத்த ந்ருக மகாராஜன் ஓணாயாகப் பிறந்து கண்ண பெருமானால் முக்தி அடைந்ததைப் பாடுகிறார்.

 —subham—

Tags- முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள் , 10 கேள்விகள், வாதாபி கணபதிம் பஜே , சங்கீத மும்மூர்த்திகள் , நவாவர்ணக் கிருதிகள் , முருகன் அருள் 

Leave a comment

Leave a comment