அமெரிக்க அழகிப் போட்டி அதிசயம்! இளம் தாய் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் போட்டியிடத் தேர்வு! (Post.16,181)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,181

Date uploaded in London – 10 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 6-9-26 தினமணி கொண்டாட்டம் பகுதியில் வெளியான கட்டுரை! 

அமெரிக்க அழகிப் போட்டி அதிசயம்! இளம் தாய் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் போட்டியிடத் தேர்வு! 

ச. நாகராஜன் 

2026ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி 2026 நவம்பர் மாதம் 24ம் தேதி போர்டோ ரீகோவில் நடக்க இருக்கிறது. 75வது ஆண்டு போட்டி இது. இதற்காக போர்டோ ரீகோவின் கவர்னர் 90 லட்சம் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி இருக்கிறார். இதில் 130க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இறுதித் தேர்வை முடிவு செய்வார்கள்.

இதையொட்டி அமெரிக்காவில் நடந்த அழகிப் போட்டியில் ஒரு அதிசயம்   27-8-26 வியாழன் அன்று நிகழ்ந்து சரித்திரம் படைத்து விட்டது.

மிஸ் வர்ஜீனியாவாகத் திகழ்ந்த ஜஸ்டஸ் கெல்லி (Justus Kelley)  மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்குப் போட்டியிட தேர்வு செய்யப்பட்டார். இவர் இரு குழந்தைகளுக்கான வளர்ப்புத் தாய்! மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு

 ஒரு தாய் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் தடவை!

இவருக்கு வயது 31. இவர் குழந்தைகளுக்கான புத்தகம் எழுதும் ஒரு எழுத்தாளரும் கூட! மணமானவர், முதல் முதலாக இப்படி தேர்வு செய்யப்படுபவர்.

2023ம் ஆண்டு இந்த  அழகிப் போட்டியை நடத்தும் குழு மணமானவர்களும், தாய்மார்களும் இதில் கலந்து கொள்ளலாம் என்று தங்கள் விதியைத் திருத்தி அறிவித்தது. 2024ம் ஆண்டு 18 வயதுக்கு மேற்பட்ட எந்தப் பெண்மணியும் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. முந்தைய விதிகளின் படி 28 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ள முடியாது.

அமெரிக்காவை பிரதிநித்வம் செய்யும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 51 அழகிகள் கலந்து கொண்டனர். நீச்சல் உடை, மாலை நேரத்தில் அணியும் கவுன் ஆகியவற்றுடன் இவர்கள் பேட்டிக்குத் தயாராயினர். இதில் முதல் 20 அழகிகள் நீச்சல் உடையுடன் கலந்து கொள்ள 10 பேர் மாலையில் நடந்த தேர்வில் கலந்து கொண்டனர்.

பின்னர் ஐந்து பேருக்கு மட்டும் கடைசியாக ஒரு கேள்வி வைக்கப்பட்டது.

கெல்லிக்கு வைக்கப்பட்ட கேள்வி: “75 வருடங்களாக மிஸ் யு.எஸ்.ஏ மாறி வரும் அமெரிக்கப் பெண்களின் முகத்தைக் காட்டி பிரதிபலிக்கிறது. 75வது வருடத்தில் நீங்கள் மிஸ் யுனிவர்ஸ் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இன்றைய அமெரிக்கப் பெண்மணிகளைப் பற்றி நீங்கள் என்ன கூறுவீர்கள்?”

இதற்கு கெல்லி அளித்த பதில்: “இன்று இதோ இந்த இரவில் நாம் மிஸ் யுனிவர்ஸின் 75வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறோம். அத்துடன் ஒரு வரலாற்றைப் படைக்கப் போகிறோம். எனக்கு வயது 31. எனது கல்லூரி காதலனை நான் மணந்து ஒன்பது வருடங்கள் ஆகி விட்டன. இரண்டு குழந்தைகளின் வளர்ப்புத் தாயாக மனமார நான் விளங்குகிறேன். நான் இந்த மேடையில் நான் நானாக இருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் தழுவிக் கொண்டு நிற்கிறேன்.”

சாதாரண அதிகம் விலை இல்லாத உடையை அணிந்து கொண்டு அவர் மேடையில் நடந்த போது நீதிபதிகள், “அட, நீங்கள் பிரமிக்க வைக்கிறீர்களே” என்று உடனடி விமரிசனம் செய்தனர்.

சிறந்த அழகியைத் தேர்ந்தெடுக்க பார்வையாளர்களின் ஓட்டுகளும் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது.

இதற்கான இணையதளத்தில் விசிறிகள் 12 நிமிடங்களுக்குள் தங்கள் தேர்வைச் செய்து ஓட்டை அளிக்க வேண்டும்.

ஆக அமெரிக்க அழகிப் பொட்டி சரித்திரத்தில் ஒரு புதிய வரலாற்றைப் படைத்த பெருமிதத்தில் அழகாக விளங்குகிறார் ஜஸ்டஸ் கெல்லி!

இறுதிப் போட்டி யாரை மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப் போகிறது என்பது நவம்பர் 24ம் தேதி தெரியவரும்.

அதுவரை பொறுத்திருப்போம்!

***

Leave a comment

Leave a comment