பல்லவர் செப்பேடுகள் பற்றி ஏழாவது 10 கேள்விகள் (Post.16,207)


Written by London Swaminathan

Post No. 16,207

Date uploaded in London – 17 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

61

ஒரு முஸ்லீம் கொண்டுவந்த சாசனம் எப்படி வியப்பை உண்டாக்கியது ?

62

அவந்தி சுந்தரி கதை மூலம் நாம் அறியும் பல்லவர்கள் யார் ?

63

பல்லவ மன்னர்கள் விதித்த விசித்திர வரிகள் யாவை?

64

பல்லவர்களைக் குறிக்கும் போத்தரையன் பற்றிக் காஞ்சிப் பெரியவர் சங்காராச்சார்யார் கூறுவது என்ன ?

65

கிழமையைக் குறிப்பிடும் செப்பேடு எது ?

66

நிலைதாங்கி என்றால் என்ன ? நிலைதாங்கி = மார்த்தாண்டன்= சூரியன் ?

.

67

பல்லவ மஹாராணிகளில் ரங்க பதாகா (பறக்கும் வர்ணக்  கொடி) , சாரு தேவி ஆகியோரை முன்னர் கண்டோம் ; அக்கள நிம்மடி,  சங்கா தேவி , கோண தேவி பற்றி செப்பேடுகள் செப்புவது என்ன?

68

ஐந்து குடுமி வைத்து செம்புள்ளி கரும்புள்ளி வைக்கும் தண்டனை என்ன ?

69

எந்த  நாலு பேருக்கு மட்டும் சிம்ம வர்மன் வணக்கம் செலுத்துவான் என்று ஆந்திர மாநில பீகிராச் செப்பேடுகள் விளம்புகின்றன ?

70

அஸ்வமேத யாகம் பற்றிச் செப்பேடுகள் தரும் செய்தி என்ன ?

***

விடைகள்

61.நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முஸ்லீம் இதோ பாருங்கள் எனக்குதான் இந்த நிலம் சொந்தம் என்று அதற்கு ஆதாரமாக ஆந்திர பிரதேச குண்டூர் ஜில்லா உதவி கலெக்டரிடம் சில செப்புப்பட்டயங்களைக் கொடுத்தார் . அந்த முஸ்லீம் நர்ஸார்ப்பேட்டையில் தனக்குச் சொந்தமான நிலத்தின் பட்டயம் என்று நினைத்துக்கொண்டு அதைக் கொண்டு வந்திருக்கிறார் . அவர் அதை வாங்கி  தென் இந்திய சாசன ஆராயச்சித் துறைக்கு அனுப்பி வைத்தார். அதில் முழுக்க முழுக்க பிராமணர்களு க்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பிரம்மதேயம் கொடுத்த — நிலத்தானம் — செய்திதான் இருந்தது!அவைகள் 1913 ஆம் ஆண்டில் சுரஞ்ச் செப்பேடுகள் என்ற பெயரில் வெளியிட்டனர் ; அது விஜய விஷ்ணு கோப வர்மன் என்ற பல்லவ மன்னர் அழைத்த செப்பேடு ;அதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என்று தெரிகிறது ஆயினும் அதை யாரோ 200 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுத்துப் பிற பிழைகளுடன் நகல் எடுத்ததும் தெரிகிறது.

காண்க- பக்கம் 341 , பல்லவர் செப்பேடுகள் முப்பது.

***

62.அவந்தி சுந்தரி கதை (Avantisundari Katha) என்பது வடமொழியில்  தண்டி யென்ற புலவர் இயற்றிய  ஒரு புகழ்பெற்ற உரைநடை காப்பியமாகும்.தண்டி (Dandin) காவ்யதர்சம் போன்ற நூல்களையும் எழுதியவர். இது ராஜவாஹனன் மற்றும் அவனது நண்பர்களான தசகுமாரர்களின் சாகசங்களைக் கூறும் ‘தசகுமாரசரிதம்’ போன்ற கதைகளின் தொடர்ச்சியாகவும், தண்டியின் வாழ்க்கை மற்றும் வரலாற்றுத் குறிப்புகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை; பல பகுதிகள் சிதைந்த நிலையில் ஒரு உரைநடைத் துண்டாகவும், பின்னர் கவிதை வடிவிலும் மீட்கப்பட்டுள்ளது. தமிழில் பிரேமா பிரசுரம் போன்ற பதிப்பகங்கள் இந்நூலை வெளியிட்டது.

மேலைக் கங்க வம்சத்தில் அவிநீதன், துர்விநீதன் , நிர்விநீதன் என்ற மூன்று மன்னர்கள் ஆட்சி புரிந்தனர் ; அவர்களுள் அவிநீதன் என்பவன் ஆட்சியிலேதான் சிம்ம விஷ்ணுவின் தாயார் அருகக்கடவுளுக்கு ஒரு கோயிலைக் கட்டினார். அவிநீதன் மகன் துர்விநீதன் சம்ஸ்க்ருதத்தில் சிறந்த வித்வான் ; அவன் சப்தாவதாரம், வட்ட கதா நூல்களை ஆக்கியோன் ஆவான். அவந்திசுந்தரி கதையிலிருந்து பல்லவ விஷ்ணுவர்மன், சாளுக்கிய விஷ்ணுவர்த்தனன், கங்க வம்ச துர்விநீதன் சமகாலத்தர் என்று தெரிகிறது . அவந்தி சுந்தரி கதையை எழுதிய தண்டி யின் முப்பாட்டனான தாமோதரன்,  தீர்த்த யாத்திரையின்போது துர்விநீதன் சபையில் வந்து தங்கியிருந்தானாம் . அப்பால் அவன் பல்லவ மன்னனின் ஆதரவினைப்பெற்று காஞ்சீபுரத்துக்கு வந்து ஒரு பெண்ணை மணந்து அங்கேயே தங்கி விட்டானாம் . துர்விநீதன் ஆட்சிக் காலம் ஏழாம் நூற்றாண்டு ஆகும் . காண்க- பக்கம் 36 , பல்லவர் செப்பேடுகள் முப்பது.

***

63.பல்லவ மன்னன் சிம்மவர்மனுடைய விழாவெட்டிச் செப்பேடுகள் பல வகையான வினோத வரிகளைக் குறிப்பிட்டுள்ளது ; சாசனத்தைப் பதிப்பித்த சாசன இலாகா அதிகாரியான கிருஷ்ணமாசார்லு சொல்கிறார் :”உலோக வேலை செய்வோர், தோல் பதனிடுவோர், கடை வைத்திருக்கும் ஜவுளி வியாபாரி இறுக்கமில்லாத ஆடை அணிந்து சஞ்சரிக்கும் அதிகாரம் பெற்ற ஒற்றர்கள், கழைக் கூத்தாடிகள் , ஆஜீவகர்கள் ஆகியோர் செலுத்த வேண்டிய  வரிகளும், புறம்பானவர்கள் , மிலேச்சர்கள் போன்றவர்கள் , வேஷம் அணிபவர்கள், கிணறு வெட்ட நீரோட்டம் காண்பவர்கள் , துணி நெய்பவர்கள், சூதாடுவோர், திருமணம் நடத்துவோர்,  நாவிதர் முதலியோர்  செலுத்த வேண்டிய கடமைகளும் , எல்லா விலங்குகளையும் பெற்ற கைவினைஞர்கள்  செலுத்த வேண்டியவைகளும் இன்னும் நமக்குச் சேரவேண்டிய மற்ற வரிகள் அனைத்தும் இவருக்கு பிரம்மதேயமாக அளிக்கப்பட்டன . இது விஷ்ணுசர்மன் என்ற பிராம்மணனுக்கு பல்லவ மன்னன் அளித்த கொடை

. காண்க- பக்கம் 317 , பல்லவர் செப்பேடுகள் முப்பது.

(சாசனத்தின் வாசகங்களில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களும் உள்ளன; அவைகளை ஆராய்ந்து சரியான விளக்கம் பெறவேண்டும்)

பிரம்மதேயம்- பிராமணர்களுக்கு அளிக்கப்படும் தானம்;தேவதானம் – கோயில்களுக்கு  வழங்கப்படும் தானம்.

***

64.பல்லவம் என்றால் துளிர். போதம் அல்லது போத்ரம் என்றாலும் துளிர் என்றே அர்த்தம். அச்வத்தாமாவிடம் ஒரு வனத்திலே தேவ ஸ்த்ரீ ஒருத்தி ஒரு பிள்ளையைப் பெற்றாள் என்றும், அதைத் துளிர்ப்படுக்கையிலே போட்டுவிட்டு தேவலோகம் போய்விட்டாள் என்றும், அந்தப் பிள்ளைதான் துளிரில் வளர்ந்ததால் ‘பல்லவன்’ என்று பெயர் பெற்று ராஜாவாக ஆட்சிக்கு வந்தான் என்றும் கதை இருக்கிறது. தெலுங்கு தேசத்தில் அமராவதி என்ற இடத்திலுள்ள ஸிம்ஹவர்ம பல்லவனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் இந்தக் கதையை விரிவாகச் சொல்லியிருக்கிறது. அரக்கோணத்திற்கு ஏழெட்டு மைலிலுள்ள வேலூர் பாளையம் என்கிற இடத்தில் அகப்பட்ட மூன்றாவது (விஜய) நந்தவர்மாவின் தாம்ர சாஸனத்திலும் இந்தக் கதையைக் குறிப்பிட்டிருக்கிறது. அச்வத்தாமா பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த ப்ராம்மணர். அவருடைய பிதாவான த்ரோணாசார்யாருக்கு பாரத்வாஜர் என்றே ஒரு பெயர். பல்லவ ராஜாக்கள் தங்களை பாரத்வாஜ கோத்ரக்காரர்களாகவே சாஸனங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பல்லவ ராஜாக்களே சாஸனங்களில் இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டாலும், பழைய தமிழ் இலக்கியங்களிலிருந்து ஆராய்ச்சி பண்ணித் தமிழபிமானிகள் பல்லவர்களின் ‘ஆரிஜின்’ (தோற்றுவாய்) பற்றி வேறே ஒரு கதை சொல்கிறார்கள். நாகப்பட்டினத்துச் சோழ ராஜா ஒருத்தனுக்கு நாக கன்னிகையிடம் ஒரு பிள்ளை பிறந்தது; அவள் தொண்டைக் கொடியைச் சுற்றி அந்தக் குழந்தையை ஸமுத்ரத்தில் மிதக்க விட்டுவிட்டாள்; அதுதான் கரையேறித் தொண்டைமான் என்ற பல்லவ ராஜா ஆயிற்று என்று இந்தக் கதை. காஞ்சீ மண்டலத்துக்கே தொண்டை மண்டலம் என்று பெயர். தொண்டைக் கொடியை ஸம்ஸ்க்ருதத்தில் ‘துண்டீரம்’ என்பார்கள். அதனால் ஸம்ஸ்க்ருத நூல்களில் துண்டீர மண்டலம், துண்டீர சக்ரவர்த்தி என்றெல்லாம் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.

குழந்தையை தேவ ஸ்த்ரீ படுக்கவிட்ட படுக்கையானாலும் ஸரி, நாக ஸ்த்ரீ அதன் இடுப்பில் சுற்றிய கொடியானாலும் ஸரி, இரண்டும் துளிர்களால் ஆனதுதான். துளிர்தான் பல்லவம். அதனால், எந்தக் கதைப்படி பார்த்தாலும் பல்லவர் என்ற பெயர் பொருத்தமானதாகிறது.

துளிருக்கேதான் இன்னொரு பேர் போதம், அல்லது, போத்ரம். தமிழிலும் சின்னஞ்சிறு கன்றாக உள்ள செடியைப் ‘போத்து’ என்றே சொல்கிறோம். ‘பல்லவ மஹாராஜா’ என்பதே இன்னொரு விதமான பத ப்ரயோகத்தில் ‘போத்ர அதிராஜன்’, ‘போத்ராதி ராஜன்’ என்றாயிற்று. அதனால்தான் ஸிம்ஹ விஷ்ணுப் பல்லவச் சக்ரவர்த்தி என்பது ‘சிம்ம விண்ண போத்ராதி ராஜன்’ என்றாயிற்று.

‘போத்ர ராஜன்’ என்பதைத் தமிழில் ‘போத்தராயன்’ என்று சொல்லியிருக்கும். ஒரு வேலையும் செய்யாமல் கொழுத்துப் போனவர்களை ‘போத் (த) ராசா’ என்று திட்டுகிற வழக்கம் இருக்கிறதே, இந்த ‘போத் (த) ராசா’ கூட ‘போத்ர ராஜா’ விலிருந்து வந்ததுதான்!

***

65.ஆடி மாத வெள்ளிக்கிழமையை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறதுதிருஞான சம்பந்தரின் கோளறு திருப்பதிகம் ‘ஞாயிறு திங்கள் செவ்வாய்’- என்று துவங்கி  நவக்கிரகங்களையும் குறிப்பிடுகிறது ; பிராமணர்கள் தினமுமிதை மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் நவக்கிரக தர்ப்பணமாக சம்ஸ்க்ருதத்தில் சொல்லி வழிபடுகிறார்கள்; முதலாம் பரமேஸ்வர வர்மனின் உன்னக்குரவய பாளையம் செப்பேடுகள் ஞாயிற்றுக் கிழமையைக் குறிப்பிடுகிறது ; ஏனைய செப்பேடுகளில் பஞ்சாங்கத்தில் உள்ளதைப்போல மாதம்- பக்ஷம்- திதி ஆகியவற்றை மட்டும் காண்கிறோம். ஆந்திரத்தில் கிடைத்த இந்த செப்பேடு முதலாம் பரமேஸ்வர வர்மன், அவனுடைய ஆட்சியின் பத்தொன்பதாம் ஆண்டில் பெளஷ்ய மாதம் சுக்கில பக்ஷத் திரயோதசி கொண்ட ஞாயிற்றுக் கிழமை உத்தராயண நிமித்தம் குப்புநூறு என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவசர்மன் என்ற பிராமணனுக்கு தானம் அளித்த செய்தியைக் கூறுகிறது. இந்த தேதி கி பி 668 ஆம் ஆண்டினை ஒட்டி வருகிறது . வியப்பான விஷயம் ஏறத்தாழ ஞான சம்பந்தரின் காலம்!(கி.பி. 600 முதல் 630 வரை); ஆனால் சீர்காழிக்கும் ஆந்திரத்துக்கும் உள்ள தூரமோ நெடுந்தூரம்! (பெளஷ்ய மாதம்= தை மாதம்)

***

66.ந்ருப துங்க வர்மனின் பாகூர்ச் செப்பேடுகள் முப்பது ஸம்ஸ்க்ருதச் ஸ்லோகங்களை கொண்டுள்ளது; 18 ஆவது ஸ்லோகம் அரசனின் அதிகாரி அல்லது சிற்றரசன் மார்த்தாண்டனின் பெயரைக் குறிப்பிடுகிறது . 19 ஆவது ஸ்லோகம் சந்த்திர சூரியர்களைப்போல பாதுகாத்து அவன் உலகமக்களுக்கு இருப்பிடம் ( நிலையம்)  ஆனான்

பின்னர் 20 ஆவது ஸ்லோகம் பின்வருமாறு உள்ளது :

அதனால் நிலைதாங்கி என்ற பெயர் ஒரு தெய்வத்துக்கு ஏற்றது போல அந்த அரசனுக்கும் பொருத்தமாக அமைந்தது; அல்லது அவன் (அரசன்) இயற்பெயர் நேரிடையாக நன்கு தோற்றமளித்தது எனலாம்.”

இதில் நிலைதாங்கி என்பதன் பொருள் என்ன? சூரியனா ? அகராதியில் இல்லை . 18 ஆவது ஸ்லோகத்தில் வரும் மார்த்தாண்டன் என்பது சூரியனின் பெயர் . சம்ஸ்கிருத ஸ்லோகத்தைப் பார்த்தால் விடை கிடைக்கலாம்

உரைநடை விளக்கப்பகுதியில் குறுநில மன்னனான மார்த்தாண்டனுக்கு நிலைதாங்கி என்ற பெயரும் உண்டு – பக்கம் 264- காணப்படுகிறது . அப்படியானால் நிலை தாங்கி சூரியன் தானோ !

நிருப துங்க வர்மன் யார்?

 பல்லவ வம்சத்தின் பிற்கால மன்னர்களில் ஒருவர் (ஆட்சிக் காலம்: கி.பி. 850–880). இவன் புகழ்பெற்ற மூன்றாம் நந்திவர்மனின் மூத்த மகன் ஆவான். பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணனுடன் இணைந்து அரிசிலாற்றங்கரையில் நடந்த போரில் பல்லவப் படை வெற்றி பெறக் காரணமானவன். இவனது ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற பாகூர்ப் பட்டயம் வெளியிடப்பட்டது.பல்லவ வம்சத்தின் இறுதி வாரிசுரிமைப் போரில் இவனுக்கும் இவனது தம்பி அபராசித வர்மனுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன

***

67.அக்கள நிம்மடி

பல்லவ அரசி: பல்லவ மன்னனான தந்திவர்மனின் (கி.பி. 796–846) பட்டத்தரசி ஆவார். இவர் கடம்ப மன்னர் குலத்தைச் சேர்ந்த இளவரசி ஆவார். கூரம் கல்வெட்டுகளில் இவரைப் பற்றியும், இவர் ஆற்றிய நிலக்கொடைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. தந்திவர்மன் என்பவன் நந்திவர்மப்‌ பல்லவமல்லன்‌ மகன்‌. கி. பி. 7231 மு தல்‌

கி. பி. 880 வரை ஆண்டவன்‌. இவன்‌ “ பாரத்துவாஜ கோத்திரத்‌

தின்‌ வழித்தோன்றிய பல்லவ திலக குலோத்பவன்‌ தந்திவர்மன்‌ ்‌

எனவும்‌, * கோவிசைய தந்திவிக்கிரமபர்மன்‌” எனவும்‌ கல்வெட்டுக்‌ களில்‌ குறிக்கப்‌ பெற்றுள்ளான்‌. இவனுக்கு மாற்பிடுகு என்னும்‌ பட்டப்பெயரும்‌, வைரமேகன்‌ என்னும்‌ வேறுபெயரும்‌ உண்டு. இவன்‌ கதம்ப மன்னர்‌ குலத்தில்‌ பிறந்த அக்கள நிம்மடி என்னும்‌ பெண்ணை மணந்து கொண்டவன்‌.

மூன்றாம் நந்திவர்மனின் வேளூர்ப் பாளையம் செப்பேடுகள் 31 சம்ஸ்க்ருத ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது அதில்  18 ஆவது ஸ்லோகம்-

“கதம்ப வம்சத்தின் திலகமாக பிரசித்தி பெற்ற அரசனுடைய மக்களும் , நற்குலத்தில் பிறந்தவளுமான அக்கள நிம்மடி என்பாள் முப்புரங்களை வெற்றிகொண்ட பரமசிவனின் தேவியான கெளரி- பார்வதி- யைப்போல , வீரர்களில் முதல்வனும் , ஒளி பொருந்தியவனும் , பூமியின் அரசனுமான , பல்லவ மகாராஜனுக்கு மனைவியானாள்” . அடுத்த ஸ்லோகம் அவளுக்கு நந்திவர்மன் பிறந்ததைக் கூறுகிறது.

(திருச்சிராப்பள்ளி தாலூகரவில்‌ ஆலம்பாக்கம்‌ என வழங்கும்‌ தந்திவர்ம மங்கலத்திலுள்ள கைலாசநாதர்‌ கோயிலை இவன்‌ கட்டியுள்ளான்‌. இங்கே ஒரு ஏரி – ஓன்றை வெட்டி அதற்கு மாற்பிடுகு ஏரி என்று பெயர்‌ வைத்துள்‌ளான்‌.)

கோஷ தேவி =கோண தேவி

பல்லவர்களில் தெள்ளாறெறிந்த நந்தி வர்மனை அங்க நாடன் என்று நந்திக்கலம்பகம் கூறுகிறது . இது பாகல்பூயூர் பிரதேசம். வங்காளத்தில் தேவகரில் கிடைத்த கல்வெட்டுக்கு தலையும் இல்லை; வாழும் இல்லை . இடைப்பட்ட பகுதியில் ஆதித்யசேனன் சோழநாட்டிலிருந்து திரும்பினான் என்றுள்ளது அவனுடைய மனைவி கோஷா தேவி என்றும் காணப்படுகிறது ; ஆனால் பாகல்பூரில் மந்தார கிரியிலுள்ள கல்வெட்டுகளில் ஆதித்யசேனன் மனைவி கோண  தேவி என்றுள்ளது . அதுதான் சரியான பெயர் . கூ ரம் செப்பேட்டில் முதலாம் பரமேச்வரனைக் கர்ணனுடன் (அங்க நாட்டரசன்) ஒப்பிட்ட விளக்கத்தில் இந்தச் செய்தி கூறப்படுகிறது – பக்கம் 44- பல்லவர் செப்பேடுகள் முப்பது .

சங்கா  தேவி

பாகூர்ச் செப்பேடுகளில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் தந்தி வர்மனுக்கு நந்தி வர்மன் பிறந்தான்அவன் ராஷட்ரகூட வம்சத்தில் பிறந்த சங்கா என்ற தேவியை மணந்தான் . அவர்களுக்கு நிருபதுங்கன் என்ற மகன் பிறந்தான் என்று சொல்லப்படுகிறது .பக்கம் 264

***

பாகூர்ச் செப்பேட்டில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் விளக்கப் பகுதியில் – பக்கம் 273-  சுவையான செய்தி கொடுக்கப்பட்டுள்ளது

ஸ்லோகம் 11

யமனுடைய இருப்பிடத்தைப் பார்க்கவேண்டுமென்ற  ஆசையோடு தன்னிடம் சிறைப்பட்டவர்களோடு கூடியவர்களாக — அவர்களுடைய– வழிநடைக் கட்டுச்சோறு போல பேடிகளான எதிரிகளை செய்து அவன் அனுப்பிவைத்தான்

அடிக்குறிப்பு

சிறைப்பட்டோரையும் எதிரிகளின் தூதுவர்களையும் முன்னாளில் நம் அரசர்கள் பெண் வேடம் போட்டோ , ஐங்க்குடுமி வைத்தோ முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியோ  அனுப்புவது வழக்கம் ; சோழர்களுடைய ஆட்சிக் காலத்தில் அது வழக்கில் இருந்திருக்கிறது ..

எனது கருத்து

பெண்களுக்கு ஐம்பால் கூந்தல் இருந்ததாக சங்க இலக்கியம் முழுதும் காணப்படுகிறது ; அதனால்தான் ஐங்க்குடுமி வைத்தனரோ!  பதிற்றுப்பத்தில் சேர மன்னன்,   கடலில் சேட்டை செய்த யவனர்களைப்  பிடித்து, மொட்டையடித்து, தலையில் எண்ணெய் ஊற்றி, பின்னால் கைகளைக் கட்டி தண்டித்த செய்தியுடன் இதை ஒப்பிடலாம் .

***

69. தெய்வம், இரு பிறப்பாளர் ( பிராமணர்), ஆசான், முதியோர் ஆகியவர்களை உபசரிப்பான்; அவன் யுவ மஹாராஜா விஷ்ணு கோபனின் மகன் ; பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவன்; கலியுக தோஷத்தினால் கீழே விழுந்த தர்மத்தை உயர்த்தி நிறுத்துவதில் எப்போதும் தயாராக இருப்பவன் ராஜ ரிஷிகளின் கு ணங்கள் அனைத்தையும் உடையவன் .

(சமுத்திர குப்தன் கால பல்லவ மன்னன் விஷ்ணு கோபனை பிரயாகை பிரஸ்த்தி உறுதி செய்கிறது; அந்த விஷ்ணு கோபன் என்றால் 1700 ஆண்டுகளுக்கு முன்னரே கலி யுகம் பற்றிக் கவலைப்பட்டது தெரிகிறது!)

***

70.பல்லவர் செப்பேடுகளில் சம்ஸ்க்ருத ஸ்லோகப் பகுதிகளில் பொதுவாக பல்லவ மன்னர்கள் அஸ்வமேத யாகம் செய்பவர்கள் என்று வருகிறது; யுவராஜா விஷ்ணுகோப வர்மனின் செப்பேடுகளில் மன்னனின் சேனாபதியான விஷ்ணுவர்மன் எழுப்பிய விஷ்ணுவின் ஆலயத்துக்கு உருவப்பள்ளி கிராமத்தில் நில தானம் செய்த செய்தி வருகிறது ; கோயில் எழுப்பிய விஷ்ணு வர்மன் , கதம்ப வம்சத்து அரசனும் அச்வமேத யாகம் செய்தவனுமான முதலாம் கிருஷ்ண வர்மனின் மகன் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுவர் -பக்கம் 284 அவன் செய்த அஸ்வமேத யாகத்தை வேறு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.

Tags- பல்லவர் செப்பேடுகள், ஏழாவது 10 கேள்விகள் , பல்லவ மஹாராணிகள் , நிலைதாங்கி, போத்தரையன் , யாகம்

—subham—

Leave a comment

Leave a comment