
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,216
Date uploaded in London – 20 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
16-8-26 தீபம் இதழில் வெளியான கட்டுரை!
ஒன்றில் பதினான்கு : ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!
ச. நாகராஜன்

நமது புராணங்கள் பதினான்கு லோகங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. (மேலே ஏழு லோகங்கள்; கீழே ஏழு லோகங்கள்). மக்கள் இதற்கான அர்த்தத்தை மேலெழுந்தவாரியாகப் புரிந்து கொண்டு புனித லோகங்கள், பாவ லோகங்கள் – தேவ லோகம், பாதாள லோகம் என்று கூறுகின்றனர். ஆனால் இந்த எல்லா லோகங்களும் நமது உடலிலேயே இருக்கின்றன. ஏழு மேல் பாகத்திலும் ஏழு கீழ் பாகத்திலும் உள்ளன.
உடலின் மேல் பாகம் எது? தலை! உயர்ந்த பகுதி திரிகூட சிகரம். அதில் ஏழு லோகங்களும் அமைந்துள்ளன. கருட லோகம், கந்தர்வ லோகம், யக்ஷ லோகம், கின்னர லோகம் மற்றும் கிம்புருஷ லோகம் என்பவையே அவையாகும். அவையெல்லாம் தலையில் உள்ளன. கருட லோகம் என்பது மூக்கு. சுவாசத்தை உள்ளிழித்து வெளியிடும் இடம். கந்தர்வ லோகம் என்பது கண்கள். யக்ஷ லோகம் என்பது நாக்கு. கின்னர லோகம் என்பது காது. கிம்புருஷ லோகம் என்பது தோல். தொடும் உணர்வைத் தரும் இடம்.
இந்த லோகங்களின் பெயர்கள் ஐந்து தான் என்றாலும் இந்தப் பெயர்கள் குறிப்பிடுவனவற்றில் ஏழு பகுதிகள் உள்ளன. மூக்கு முதலாவது, கண்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது, நாக்கு நான்காவது, காதுகள் ஐந்தாவது மற்றும் ஆறாவது, தோல் ஏழாவது. இவையே மேல் லோகங்கள்.
இந்த அங்கங்களை மேலான லட்சியத்திற்கானவை என்பதை உணர்ந்து இவற்றை எவர் ஒருவர் போற்றித் தொழுகிறாரோ அவரே மனிதப் பிறவி எடுத்ததற்கான தகுதி உடையவர் ஆவார். அதாவது, சுவாசத்தை உள்ளிழுக்கையில் மாசுபடாத சுத்தக் காற்றை சுவாசிப்பது, புனிதமானவற்றைப் பார்ப்பது,ஊக்கமூட்டும் ஒலிகளைக் கேட்பது முதலானவற்றைச் சொல்லலாம். இந்த லோகங்களை முறையாகப் பண்படுத்தும் போது ஒரு மனிதன் தெய்வீகமானவன் ஆகிறான்.
உனக்கு ஏன் கண்கள் கொடுக்கப்பட்டது தெரியுமா?
பார்க்கமுடிந்ததை எல்லாம் பார்ப்பதற்காகவா?
இல்லை, இல்லை.
எவர் கைலாய சிகரத்தில் அமர்ந்திருக்கிறாரோ
அந்தக் கடவுளின் தரிசனத்தைக் கண்களில் நிரப்புவதற்காகவே!
நாம் நமது கண்களை புனிதமான இடங்களைப் பார்க்குமாறு செய்ய வேண்டும். எவை நல்லவையோ எவை புகழ் பெற்றவையோ அவற்றில் மட்டிலுமே நாம் பார்வையைச் செலுத்த வேண்டும். கண்களை கடவுள் படைத்ததற்கான நோக்கம் அதுவேதானாகும்.
மற்றவர்களைப் பார்த்து அவர்களை மதிப்பீடு செய்வதற்காகவோ, சந்தையில் மற்றவரைப் பின் தொடர்ந்து செல்வதற்காகவோ பார்க்கக்கூடாத படங்களைப் பார்க்கவோ அவற்றைக் கடவுள் பரிசாகத் தரவில்லை.
உனக்கு ஏன் நாக்கு தரப்பட்டிருக்கிறது தெரியுமா?
சுவையான உணவு வகைகளை ருசிப்பதற்காகவா?
இல்லை, இல்லை!
உணவை மென்று விழுங்குவதானது முதல் நோக்கம் இல்லை. தெய்வீகமான வார்த்தைகளை உச்சரிப்பதே நோக்கமாகும். இப்போது, சிலர் நல்ல சம்பவங்களை விவரிக்கும் போது காதுகள் அவற்றைக் கேட்பதில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் ஒருவர் இன்னொருவரிடம் ரகசியமாக ஒன்றைக் கூறும் போது இரண்டு காதுகளும் இணைந்து அதை ஒட்டுக் கேட்க முனைகின்றன. இதற்காகவா கடவுள் காதுகளைப் படைத்து நமக்கு அளித்திருக்கிறார்?
ஆகவே ஏழு மேல் லோகங்களும் தெய்வீகத்தைக் குறித்தே பயன்படுத்தப்பட வேண்டும். அப்படிச் செய்யும் போது ஒருவன் தெய்வீகமயமாகிறான். அவன் முக்தி அடைகிறான்.
மீதியுள்ள லோகங்கள் உடலில் இருந்து உடல் வடிவத்தைப் பராமரிக்க உத்தேசிக்கப்பட்டவையாகும். வயிறு என்பது தான் பெட்ரோல் டாங்க். அது நிரப்பப்படும் போது ஒவ்வொரு அங்கத்திற்கும் திசுவிற்கும் சக்தி அளிக்கப்பட்டு அவை தர வேண்டிய நல்ல கடமைகளுக்காக அவை இயக்கப்படுகின்றன. இரண்டு கைகளும் இரண்டு கால்களும் சேர்க்கப்பட்டால் இப்போது இவை ஐந்து லோகங்களாகும். மற்ற இரண்டு – குதமும் சிறுநீர் கழிக்க உதவும் உறுப்புமாகும். இந்த ஏழு பாதாள லோகங்களும் உடலைப் பராமரிக்கின்றன.
மேல் லோகங்கள் ஏழும் கீழ் லோகங்கள் ஏழும் இன்றியமையாதவை. அவை பரஸ்பரம் ஒன்றுக்கொன்று உதவுகின்றன. கீழே உள்ளவை புராணங்களின் கூற்றுப்படி பாதாள லோகங்கள். அவையே அடிப்படையான அஸ்திவாரத்தை உருவாக்குகின்றன. எவர்கள் புஷ்பங்களுக்கும் பழங்களுக்கும் ஆசைப்படுகிறார்களோ அவர்கள் பார்க்க முடியாமல் இருக்கும் வேருக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். கீழே என்பதால் பாதாள லோகங்கள் அலட்சியப்படுத்தப்படக் கூடாது. சந்தோஷமானது துக்கத்திலிருந்தே கடைந்தெடுக்கப்பட வேண்டும். இன்பம் என்பது துன்பத்திலிருந்து விளையும் ஒன்றேயாகும்.
25-8-1982 அன்று Shri Sathya Sai Institute of Higher Learning இல் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை.
**