Post No. 14,736
Date uploaded in London – 7 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
news
Collected from popular dailies and edited for broadcast)
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை ஆறாம் தேதி 2025-ம் ஆண்டு .
முதலில் இந்தியச் செய்திகள்!


சித்த ஆயுர் வேத மருத்துவப் பல்கலைக் கழகம் ! ஜனாதிபதி முர்மு துவக்கிவைத்தார்







குடியரசுத்தலைவர் முர்மு, ஜூலை முதல் தேதியன்று மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார்
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகம் உள்ளது
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த பல்கலைக்கழகம் நாட்டின் வளமான பண்டைய மரபுகளின் நவீன மையமாகும் என்று கூறினார். இந்தப் பல்கலைக்கழகம் உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 100 ஆயுஷ் கல்லூரிகளும் இதன் சிறப்பால் பயனடைந்து வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பொது வாழ்வில் மக்களுக்கு சேவை செய்வதில் சுய தேவைகளை விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத் தலைவர் தனது சொந்த வாழ்க்கை குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார்.
ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அவரை வரவேற்றார்கள்.
சோன்பர்சாவில் உள்ள மகாயோகி கோரக்நாத் பல்கலைக்கழக ஆரோக்யதாம் வளாகத்தில் கல்விக் கட்டிடம், அரங்கம், பஞ்சகர்மா பிரிவுகள் உள்ளன பஞ்சகர்மா என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சுத்திகரிப்பு மற்றும் புத்துணர்ச்சி சிகிச்சை முறையாகும்
****
ஜைன துறவி வித்யானந்த் மகாராஜ் நூற்றாண்டு விழாவில்..
பிரதமர் மோடிக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டம்
ஜைன துறவி ஆச்சார்ய வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு, தர்ம சக்கரவர்த்தி என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதை பிரசாதம் போல ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜைன ஆன்மிகத் தலைவர்களில் ஒருவரும், சமூக சீர்திருத்தவாதியுமான ஆச்சார்ய வித்யானந்த் ஜி மகாராஜின் 100வது பிறந்தநாளைக் கௌரவிக்கும் ஒரு வருட கால விழா தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் அகிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜ் ஏப்ரல் 22, 1925 அன்று கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் கிராமத்தில் பிறந்தார். நவீன காலத்தின் தலைசிறந்த ஜைன அறிஞர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். இவர் 8,000-க்கும் மேற்பட்ட ஜைன ஆகம வசனங்களை மனப்பாடம் செய்தவர்.
‘ஜைன தர்ஷன்’, ‘அனேகாந்த்வாத்’, மற்றும் ‘மோக்ஷமார்க் தர்ஷன்’ உள்ளிட்ட ஜைன தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்து 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். இவரது நூற்றாண்டு தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போதுதான் அவருக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்டது.
****
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் இருவர் கைது
ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு, அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பைப் குண்டு’ வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், மதுரையில் பால் வியாபாரி சுரேஷ், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பூசாரி முருகன், வேலுாரில் பா.ஜ., மருத்துவ பிரிவு செயலர் அரவிந்த் ரெட்டி, பா.ஜ., மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
மேலும், மாநிலம் முழுதும் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இது, போலீசாரை அதிர்ச்சியடைச் செய்தது. இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., பிரிவின் எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்தனர்.
இது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த அல் – உம்மா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர், ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத கும்பலின் தளபதியாக செயல்பட்டு வந்த, நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்; திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஆகியோர் தப்பிவிட்டனர்.
மொத்த கொலைகளுக்கும் மூளையாக செயல்பட்டது அபுபக்கர் சித்திக் தான். தொடர் விசாரணையில், தெரியவந்தது.
அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் பதுங்கி இருக்கும் தகவல், மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. அவர்கள், அத்தகவலை உறுதி செய்த பின், தமிழக போலீசாருக்கு தகவலை தெரியப்படுத்தினர். ஆந்திராவுக்கு சென்ற தமிழக காவல் துறையின் ஏ.டி.எஸ்., பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
****
ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும் ; ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு
ராமேஸ்வரம்; ”கிராம கோயில் பூஜாரிகள் ஆன்மிக போதனைகள்மூலம் மதமாற்றத்தை தடுக்க வேண்டும்” என தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தெரிவித்தார்.
ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் ஜூன் 15ல் தமிழ்நாடு வி.எச்.பி., சார்பில் கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு பயிற்சி முகாம் துவங்கி தொடர்ந்து 15 நாட்கள் நடந்தது. நேற்று நிறைவு விழாவையொட்டி கோசுவாமி மடத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பூஜாரிகள் பூணுால் அணிந்தனர். பயிற்சிக்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியதாவது:
மதசார்பற்ற நம்நாட்டில்அதுவும் தமிழகத்தில் ஹிந்து கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதுதான் நம் பலவீனம். இதனை மீட்க நாம் போராட வேண்டும். அக்காலத்தில் கோயிலுக்கு ஆன்மிக பெரியோர்கள் தானமாக கொடுத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இன்று அரசியல்வாதிகள் கபளீகரம் செய்கின்றனர்.
ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலம் முதல் தற்போது வரை மதமாற்றம்நடக்கிறது. இது ஹிந்து சமூகத்திற்கு பேரழிவு ஆகும். எனவே கிராமங்களில் ஆன்மிக போதனைகள் மூலம் மக்களிடம் ஹிந்து மதத்தின் புனிதம், கடவுளின் வரலாற்று கதைகளை விளக்கி தெய்வ நம்பிக்கை ஏற்படுத்தி மத மாற்றத்தை தடுக்க வேண்டும். மதம் மாறியவர்களை தாய்மதமான இந்து மதத்திற்கு அழைத்து வரவேண்டும். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சென்னையில் உள்ள விசுவ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் ஏராளமானோர் தாய்மதம் திரும்புகின்றனர்.
கிராம கோவில் பூஜாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்; ரூ.4 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதை, ரூ.5 ஆயிரமாக்க வேண்டும். இப்போது ஊக்கத்தொகையாக ரூ.1,500 கொடுப்பதாக அறிவித்துள்ளதை அதை செயல்படுத்தவேண்டும். இவ்வாறு ஆர்ஆர். கோபால்ஜி பேசினார்.
பயிற்சி முகாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் பூஜை, கும்பாபிஷேகம் ஆகம முறைப்படி நடக்க வேண்டும். அதை மீறி மொழி அரசியல் கூடாது. மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும்.
குழந்தை பிறப்பில் நாட்டின் சராசரி 1.9ஆக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அது, 1.4ஆக குறைந்திருப்பது அபாய எச்சரிக்கை. இதனால், குடும்ப அமைப்பு சீரழியும்.
இந்து பெண்கள் குறைந்தது 3 குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வேண்டும்.
கோவில்களில் கட்டண தரிசன முறையை கைவிட வேண்டும். பென்ஷன் பெறும் கிராமக் கோவில் பூஜாரிகள் மறைவுக்கு பிறகு, அவர் மனைவிக்கு வழங்க வேண்டும்.
எல்லா கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இந்து கோவில் சொத்துக்களில் மாற்று மதத்தவருக்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்ய வேண்டும். கோவில் தொடர்புடைய பணிகளில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். மாற்று மதத்தினரை பணியமர்த்தக்கூடாது.
****
சுருக்கமான செய்திகள்
நாளை ஜூலை ஏழாம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஜூலை 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை விடப்படும் .முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடு தான் திருச்செந்தூர். இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் பிஆர்டிசி சார்பில் 600 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
*****
திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 20 லட்சம் ரூபாய், ஆயிரத்து 30 கிராம் தங்கம் மற்றும் 15 கிலோ 405 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வசந்த மண்டபத்தில் சுமார் 8 மணிநேரம் நடைபெற்றது.
****
ஜெர்மனியில் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு “புளூ டங்” விருது
ஜெர்மனியில் நடைபெற்ற Greator ‘கிரேட்டர் விழா 2025’ நிகழ்ச்சியில் சத்குருவிற்கு “புளூ டங்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நடைபெற்ற ‘கிரேட்டர் விழா 2025’ எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு “புளூ டங்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக கிரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ஜெர்மனியில் செயல்பட்டு “கிரேட்டர் (Greator)” எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
****
இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சை கருத்து… வைகோவின் முன்னாள் உதவியாளர் கைது
சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்பு நாத்திக பிரசார கருத்துகளைப் பதிவிட்டுவந்த சமூக ஆர்வலரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் முதன்மை உதவியாளருமான அருணகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் அருணகிரி 60. இவரது தந்தை பழனிச்சாமி சங்கரன்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர்.. சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்பு நாத்திக பிரசாரத்தை தீவிரமாக செய்து வந்தார். இதனால், சங்கரன்கோவில் போலீசில் ராஜா என்பவர், இந்து கடவுள்களை அருணகிரி அவதூறு செய்து பதிவிட்டு வருவதாக புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் அருணகிரியிடம் ஏற்கனவே, போலீசார் விசாரணை நடத்தினர். அருணகிரியை ஜூலை 1-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.. அவர் மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..
****************
அமெரிக்காவில் கோவில் மீது தாக்குதல்
அமெரிக்காவில் உள்ள இஸ்கான் கோவில் மீது துப்பாக்கி சூடு – இந்தியா கண்டனம்
அமெரிக்காவின் உட்டா UTAH மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் மீது துப்பாக்கி சூடுசூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்கான் கோவிலின் உள்ளே பக்தர்கள் மற்றும் விருந்தினர்கள் இருக்கும்போது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. 20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை கோவிலின் கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள்மீது பாய்ந்துள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவத்துக்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு ஜூலை மாதம் 13 –ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags- Gnanamayam, World Hindu News, Tamil, 6th July 2025, Broadcast, Latha, Vaishnavi.






