ஆலயம் அறிவோம்! திருக்கோகர்ணம் (Post No.14,474)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 474

Date uploaded in London –5 May 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

4-5-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பட்ட உரை

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.



பொற்கிரி வில்லியின் மெய்யொரு பாதி
      
பொருந்திய மெய்யுருவே
புண்ணிய அன்பர்தம் நெஞ்சக மாமலர்
      
பொழியு மதுத்தெளிவே
கற்குடி மங்கையர் வேண்டிய வாழ்வுகள்
      
நல்கு திருக்கவுரீ
காவலர் நாவினும் நெஞ்சினும் நின்று
      
நலந்திகழ் சேயொளியே
கற்பக நாடியர் உள்ள நிறைந்தருள்
      
கருணையின் வாரிதியே
கரிமுகன் வேலவன் எனும் இரு மதலையர்
      
கனிவொடு தழுவனையே
சிற்பரை கோகன சங்கரன் அம்பிகை
      
செங்கோ செங்கீரை
தென்தமிழ் நாடுடையாய் பெரு நாயகி
      
செங்கோ செங்கீரை.      

–    கவிராஜபண்டிதர் கனகராஜையர் புகழ் ஓங்குக!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கோகர்ணத் திருத்தலமாகும்

இது புதுக்கோட்டையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

மூலவர் : திருக்கோகர்ணேஸ்வரர்

இறைவி : பிரகதாம்பாள்

தல விருட்சம் : மகிழ மரம்

தீர்த்தம் : கபில தீர்த்தம்

இத்திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகளும் சரித்திர சம்பவங்களும் உண்டு.

ஒருமுறை இந்திரனால் சாபம் பெற்ற காமதேனு தன் சாபம் நீங்குவதற்காக கபில முனிவரின் உபதேசப்படி இத்தலத்தில் உள்ள சிவபிரானுக்கு தினமும் தன் காதுகளில் கங்கை நீரை நிரப்பி வந்து அபிஷேகம் செய்து வந்தது.

கோ என்றால் பசு. கர்ணம் என்றால் காது.

பசுவானது காதுகளில் கங்கை நீரைக் கொண்டு வந்ததால் இந்தத் தலம் திருக் கோகர்ணம் என்ற பெயரைப் பெற்றது.

ஒரு நாள் காமதேனுவை வழிமறித்து புலி ஒன்று அதைக் கொல்ல முயன்றது. காமதேனுவோ தான் சிவ வழிபாட்டிற்காகச் செல்வதாகவும் வழிபாட்டை முடித்து விட்டுத் தானே வந்து இரையாவதாகவும் புலியிடம் உறுதி கூறியது. தான் கூறிய படியே காமதேனு, வழிபாட்டை முடித்து விட்டு புலியிடம் வந்து தன்னை இரையாக்கிக் கொள்ளலாம் என்று கூறியது,  காமதேனுவின் இறை வழிபாட்டை மெச்சி சிவபிரான் தானே நேரில் காட்சி அளித்தார்.

வேங்கையானது காமதேனுவை வழிமறித்த இடமே இன்று வேங்கைவாசல் என்று அழைக்கப்படுகிறது.

காமதேனு தன் கொம்பால் பாறையைக் கீறி ஏற்படுத்திய சுனையில் எப்போதும் நீர் வற்றாமல் இருக்கிறது. இதுவே இன்றும் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தத் தலத்திற்கு கபில வனம்,மற்றும் வகுளாரண்ய க்ஷேத்திரம் என்ற பெயர்களும் உண்டு. வகுளாரண்யம் என்றால் மகிழ வனம் என்று பொருள்.

கோவில் தெற்கு நோக்கி இருக்கிறது. சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. மலையைக் குடைந்து உருவாக்கிய ஒரு குகையில் கோகர்ணேஸ்வரர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

இங்குள்ள ஏழடி உயரமுள்ள கங்காதரர் சிலை அழகுற அமைந்துள்ள ஒன்றாகும்.

இங்கு அறுகோண சுக்கிர வார மண்டபமும் அதில் 12 ராசிகளின் வடிவமைப்பும் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள அம்மனே தொண்டை மன்னர்களின் குலதெய்வமாகும். அம்மன் சந்நிதிக்கு எதிரே உள்ள மண்டபமும், சாலையிலிருந்து கோவிலுக்குள் செல்லும் நீண்ட பிரகாரமும் மதுரை நாயக்கர் பாணியில் அமைக்கப்பட்டவை. வெளி பிரகாரத்தின் தூணில் மன்மதன்,ராவணன் உள்ளிட்டோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தின் மேற்கூரையில் ராமாயணக்காட்சிகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.

மகிழவனேஸ்வரர், மங்களநாயகி, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தனி சந்நிதிகள் இங்கு உண்டு. நவகிரகங்களின் விக்ரஹங்கள் இங்கு இல்லை. மாறாக சூரியன் சந்திரன் சிலைகள் மட்டுமே இங்கு உள்ளன.

கோவிலின் மேற்குப் பகுதியில் சுப்ரமண்யர், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, பிரம்மா,பைரவர் ஆகியொருக்கு சந்நிதிகள் உள்ளன.

இங்குள்ள ஜுரேஸ்வரர் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று முகங்களுடன் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் எந்த வியாதியானாலும் குணமாகும் என்பதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபடுவது வழக்கம்.

பிரகதாம்பாள் சந்நிதியில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கும் இதைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

1912ம் ஆண்டு புதுக்கோட்டையை ஆட்சி செய்து வந்த மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஒரு முறை கடற்பயணம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது திடீரென கப்பலின் ஒரு பகுதி தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அப்போது உறக்கத்தில் ஆழ்ந்திருந்த மன்னரை சிறு பெண்ணொருத்தி எழுப்பி கப்பல் தீப்பற்றி எரிகிறது என்று கூறி அவரைக் காப்பாற்றினாள். தூக்கத்திலிருந்து தன்னை எழுப்பிக் காப்பாற்றியது தனது குலதெய்வமான பிரகதாம்பாளே என்று உணர்ந்த மன்னர் நன்றி தெரிவிக்கும் விதமாக அம்மன் சந்நிதியில் இந்த அணையா விளக்கை ஏற்றி தொடர்ந்து இது எரிந்து கொண்டிருக்குமாறு செய்தார். இந்த விளக்கில் 1912 ஶ்ரீ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. 

புதுக்கோட்டை அம்மன் காசுக்குப் பெயர் பெற்ற ஊர். 1738ம் ஆண்டு வாக்கில் அச்சிடப்பட்ட இந்த அம்மன் காசுகள் 1948ம் ஆண்டு வரை  பிரபலமாக புழக்கத்தில் இருந்தன. இந்தக் காசின் ஒரு புறம் பிரகதாம்பாள் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததால் இது அம்மன் காசு என்ற பெயரைப் பெற்றது. காசின் இன்னொரு பக்கத்தில் விஜய என்று தெலுங்கு மொழியில் பொறிக்கப்பட்டிருக்கும்.

விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயர் இத்தலத்திற்கு வந்து பிரகதாம்பாளை வணங்கி ஏராளமான நகைகளை அம்மனுக்குக் காணிக்கையாக அளித்திருக்கிறார். 

இங்கு அவதரித்த சதாசிவபிரம்மேந்திரர் பற்றிய ஏராளமான சுவையான செய்திகள் உண்டு. இவரை 1730 முதல் 1769 வரை தொண்டை மண்டலத்தை ஆண்டை விஜயரகுநாத தொண்டைமான்,

தான் பட்டத்திற்கு வந்த எட்டாம் ஆண்டு ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரைத் தனது குருவாக வரித்துக் கொண்டான். புதுக்கோட்டை மன்னருக்கு சதாசிவ பிரம்மேந்திராள் தட்சிணாமூர்த்தி மந்திரத்தை மணலில் எழுதிக் காட்டினார். இது இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் பாதுகாக்கப்படு வருகிறது. உரிய பூஜைகளும் நடத்தப்படுகிறது. அவரது கட்டளைப்படியே கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் என்பவரைத் தனது அரசவை குருவாக மன்னன் ஏற்றுக் கொண்டான். இவரால் தசரா விழா புதுக்கோட்டையில் விமரிசையாகக் கொண்டாடும் பழக்கம் ஆரம்பமானது.

சதாசிவபிரம்மேந்திராளின் உருவம் சுக்ர வார மண்டபத்தில் தூண் ஒன்றில் செதுக்கப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை சமஸ்தானம் கவிராஜபண்டிதர் நா.கனகராஜையர் அவர்கள் ‘திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை இயற்றி பிரகதாம்பாளைப் போற்றித் துதிக்கிறார்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னை பிரகதாம்பாளும் திருக்கோகர்ணேஸ்வரரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

Leave a comment

Leave a comment