Written by London Swaminathan
Post No. 15,976
Date uploaded in London – 12 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வேதங்களை மனிதர்கள் இயற்றவில்லை; அவை எப்போதும் வானத்தில் ஒலி அலைகளாக உலவிக்கொண்டு இருக்கும் ; சில ரிஷிகள் ரேடியோ ஸ்டேஷன் RADIO STATION போல அந்த ஒலி அலைகளை ஈர்த்து உலகுக்கு அளிப்பார்கள் என்று இந்துக்கள் நம்புகின்றனர் ; மேலும் அவை 24 மணி நேர பிராட்காஸ்ட் BROADCAST போல – ஒலிபரப்பு போல — எப்போதும் பிரம்மாவின் வாயிலிருந்தது வந்து கொண்டிருக்கும் என்றும் நம்புகிறோம்.
இதே போல வேறு மொழிகளிலும் இறைவன் கொடுத்த பாடல்கள் இருக்கின்றன. தமிழில் இறைவனால் உருவாக்கிய பாடல்கள் நிறைய உள்ளன ; சில பாடல்களை அவரே எழுதிக் கொடுத்தார் அல்லது முதலடியை எடுத்துக் கொடுத்தார் என்று நம்முடைய இலக்கியங்கள் இயம்புகின்றன .(கட்டுரையின் துவக்கத்தில் பட்டியலும், இறுதியில் பாடல்களும் உள்ளன )
1
கடவுள் தந்த பாடல்களின் பட்டியல் இதோ:
பித்தா பிறை சூடி பெருமானே – சுந்தரருக்கு சிவ பெருமான் கொடுத்த வரிகள் !
2
கொங்குதேர் வாழ்க்கை — தருமி என்ற ஏழைப் பிராமண புலவருக்கு சிவ பெருமான் கொடுத்த பாடல் .
3
மதிமலி புரிசை மாடக் கூடல்– பாண பட்டருக்கு சிவ பெருமான் கொடுத்த பாடல் . இது ஒரு சிபாரிசுக் கடிதம்; உலகில் கடவுள் எழுதிய முதல் RECOMMENDATION LETTER ரெக்கமண்டேஷன் லெட்டர் என்றும் சொல்லலாம்.
4
திகடச் சக்கரம் – கந்த புராண முதல் பாடல்
5
முத்தைத்திரு — அருணகிரிநாதரின் முதல் திருப்புகழ்
6
நம்பியாண்டாரின் திரு இரட்டைமணி மாலை – என்னை நினைத்தடிமை … என்பது பிள்ளையார் கொடுத்த வரி
7
பொன்பூத்த குடுமி- குமர குருபரரின் முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ்
8
தமிழில் கடவுள் தனது சொந்தக் கரத்தால் எழுதி, கையொப்பமிட்டதாக நம்பப்படும் நூல் திருவாசகம் ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். அவர் பாட, சிவபெருமானே ஒரு அந்தணர் வடிவில் வந்து ஓலைச்சுவடிகளில் எழுதினார்
9
உலகம் உவப்ப – திருமுருகாற்றுப்படை
10
உலகெலாம் – சேக்கிழார் பெரிய புராண முதல் பாடல்
சில பாடல்கள், இறையருளால் ஊக்குவிக்கப்பட்டவை என்றும் சொல்லலாம் .
ஸம்ஸ்க்ருதத்தில் ஆதி சங்கரின் செளந்த ய லஹரி, மூக கவியின் ‘மூக பஞ்ச சதீ’ முதலிய துதிகள் பற்றியும் இப்பட பல கதைகள் உண்டு.
***
சில பாடல்களைக் காண்போம்

சிவபெருமான் தருமி என்ற ஏழைப் புலவருக்காக நேரில் வந்து எழுதிக் கொடுத்த புகழ்பெற்ற பாடல்
“:கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பரியது கூஉய்ப் பிரிதுஓர் படிவம்
அறியாது அளியள் நீயும் ஆயின்
நறியது ஆர்அமர் நறுங்கண்ணி
வேய்புரை பணைத்தோள் கிழவோன்
மார்பே! — குறுந்தொகை பாடல்
****
மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதப் பெருமானே (ஆலவாயண்ணல்), தனது பக்தரான பாணபத்திரர் என்ற யாழிசைப் புலவருக்கு உதவ வேண்டி, சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதிய திருமுகம் (கடிதம்) தான் இந்தப்பாடல்:
மதிமலி புரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிறகு
அன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக்கொண்மூப் படியெனப் பாவலர்க்கு
ஒருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே
***
அருணகிரி நாதரின் முன்னால் முருகப்பெருமானே நேரில் தோன்றி (முத்தைத்தரு) முதலடியைஎடுத்துக்கொடுத்ததாக வரலாறு கூறுகிறது:
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.
****
பித்தா பிறைசூடி என்ற வரிகளை சுந்தரருக்கு சிவ பெருமானே கொடுத்தார் :
பித்தாபிறை சூடீபெருமானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
***
‘திகடச் சக்கரம்’ (திகழ் தசக்கரம்) என்பது கந்த புராணத்தின் தொடக்கப் பாடலில் விநாயகரைப் போற்றப் பயன்படும் புகழ்பெற்ற சொல்லாகும். கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை இயற்றத் தொடங்கியபோது, முருகனின் அருளால் விநாயகர் “திகடச் சக்கரச் செம்முக ஐந்துளான்” என்ற முதல் அடியை நேரில் அருளியதாக வரலாறு கூறுகிறது.
:”திகடச் சக்கரச் செம்முக ஐந்துளான்
சகடச் சக்கரத் தாமரை நாயகன்
அகடச் சக்கர விண்மணி யாவுறை
விகடச் சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!”
***
நம்பியாண்டார் நம்பிகள் அருளிய ‘ஆளுடைய பிள்ளையார் திருவிரட்டை மணிமாலை’ நூலின் முதல் பாடல் இதுவாகும்.
:என்னை நினைத்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் – புன்னை
விரவுமகிழ் சோலை வியனாரையூர் முக்கண்
அரசுமகிழ் அத்தி முகத்தான்.
***
பெரிய புராணத்தின் தொடக்கச் செய்யுள் – ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்…’. சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்த பாடல் இது :
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
****
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்(கு)
ஓவற இமைக்குஞ் சேண்விளங்(கு) அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்
5. செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்(து)—- திருமுருகாற்றுப்படை
முருகன் அருள் பெற்ற பின்னர் நக்கீரர் பாடிய பாடல் இது . சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் முதல் நூல் இது
****
குமரகுருபரரால் இயற்றப்பட்ட முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் நூல்:-
குமரகுருபரர் முத்துக்குமாரசுவாமியைப் பாடத் தொடங்கியபோது, இறைவனே நேரில் தோன்றி “பொன்பூத்த குடுமி…” என்று பாடலின் முதல் அடியை அடியெடுத்துக் கொடுத்ததாக ஐதீகம்
—SUBHAM—
TAGS- தமிழில் ,கடவுள் இயற்றிய பாடல்கள், சிவபெருமான் , எழுதியவை , முருகன், பொல்லாப் பிள்ளையார், அருணகிரிநாதர், சுந்தரர், பாணபட்டர், கந்த புராணம் , முதல் பாடல்