பட்டினத்தார் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,055)

Written by London Swaminathan

Post No. 16,055

Date uploaded in London – 5 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

சைவத் திருமுறைகளில் பட்டினத்தார்   பாடல்கள் எந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது ; அவை யாவை?

2

அலெக்ஸாண்டர் மாமன்னன். 2300 ஆண்டுகளுக்கு முன் மாசிடோனியாவில் இருந்து புறப்பட்டு இந்தியா வரை வந்து உலகின் பல நாடுகலை வென்ற மாவீரன். சாகும் தருவாயில் அவனுக்கு ஞானோதயம் வந்தது. தன்னுடைய அமைச் சர்களை அழைத்தான். நான் இறந்த பின்னர் என்னுடைய உடலை அடக்கம் செய்யுங்கள். ஆனால் என்னுடைய உடல் முழுவதையும் மூடிவிட்டு இரண்டு கைகளும் திறந்த நிலையில் வெளியே தெரியும்படி விட்டுவிடுங்கள் என்றான். அவன் உலகிற்கு அளிக்க விரும்பிய செய்தி இதுதான்: வரும்போது எதையும் கொண்டுவரவில்லை. போகும்போது எவ்வளவு பெரிய மன்னனாலும் வெறும் கைகளோடுதான் போக வேண்டும்.இதை பட்டினத்தார் எப்படிச் சொன்னார் ?

3

ஆதிசங்கரர் துறவறம் பூண்டபோதும் தாய் இறக்கும்போது சொன்னபடி வந்து சேர்ந்தார் ; பட்டினத்தாரும் அதே போல வந்து என்ன செய்தார்?

4

சிறுத்தொண்டர், திருநீலகண்ட நாயனார், கண்ணப்பர் ஆகியோர் பற்றி அவர் சொன்னது என்ன?

5

சிவநேசருக்கும், ஞானகலாம்பிகைக்கும் மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்தார். இயற்பெயர் திருவெண்காடர்.  ரத்தின வியாபாரி, பல கப்பல்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தன. சிவகலையை என்ற பெண்ணை  திருமணம் செய்தார். குழந்தைகள் இல்லை. திருவிடைமருதூரில் சிவனடியாரான சிவசருமர் என்ற அந்தணரின் மகனான மருதவாணரைத் தத்தெடுத்தார். அவர் என்ன எழுதிவைத்ததால் அடிகள் துறவறம் பூண்டார் ?

6

தமது தங்கை விஷம் கலந்த அப்பத்தைக் கொடுத்தவுடன் அதை வீட்டின் கூரை மீது எறிந்தவுடன் அது எரிந்தது ; அது என்ன பாடல் ?

7

ஆப்பில் மாட்டிக்கொண்ட குரங்கின் கதை பஞ்ச தந்திரக்கதைகளில் உளது ; அந்தக் கதையைச் சொல்லும் இவரது பாடல் என்ன?

8

நமது கிராமத்துப் பெண்மணிகள், ஒன்றன் மீதொன்றாக நாலைந்து தண்ணீர்ப் பானைகளைத் தலையின் மீது வைத்துக்கொண்டு நடந்து செல்லும்போது ஒருவரோடொருவர் தங்களுடைய சுகதுக்கங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு போகின்றனர். ஆயினும் ஒரு சொட்டுத் தன்ணீரைக்கூட சிந்த விடுவதில்லை. அது போலவே தர்ம மார்கத்தில் நடக்கும் மனிதனும் நடக்க வேண்டும். எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்தாலும் , அவனுடைய மனம் உண்மை நெறியை விட்டுக் கொஞ்சமேனும் விலகாமல், அவன் சதா ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்- என்று — ராமகிருஷ்ணரின் பரமஹம்சர் சொன்னார்  ; பட்டினத்து அடிகள்?

9

நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே? அரசனும் எங்கே?

ஆண்டி எங்கே? அரசனும் எங்கே?

அறிஞன்  எங்கே அசடனும்  எங்கே

ஆவிப்போனபின் கூடுவார் இங்கே– என்ற திரைப்படப் பாடல் பட்டினத்தார் பாடலை ஒட்டி வந்ததா?

10

செத்தாரைப் போலத் திரி என்று பட்டினத்தார் பாடியது என்ன ?

**********************************************************************************

விடைகள்

1.பதினோராம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது; அந்த நூல்களின் பெயர்கள்: கோயில் நான்மணிமாலை , திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது. இவருடைய காலம் , அதாவது நூல்கள் தோன்றிய காலம் –பத்தாம் நூற்றாண்டு

***

2. பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்

இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்

குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா

திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

***

3.பச்சை வாழை மரங்களில் உடலை வைத்து அவர் பாடியவுடன் தீ மூண்டது :

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்ட தீ தென் இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

***

4. வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன்; மாது சொன்ன

சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்; தொண்டு செய்து

நாள் ஆறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன்; நான் இனிச் சென்று

ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே.

***

5.காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே

***

6.‘தன்வினை தன்னைச் சுடும்! ஓட்டப்பம் வீட்டைச் சுடும்!’ என்று சொல்லி அந்த அப்பத்தை அவள் வீட்டின் ஓட்டுக் கூரைமேல் எறிந்தார்.

***

7.நாப்பிளக்கப் பொய்யுரைத்து, நவநிதியம் தேடி

   நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி

பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போல

   பொலபொலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்!

காப்பதற்கும் வகையறியீர்! கைவிடவும் மாட்டீர்!

   கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

   அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!’

***

8.எத்தொழிலைச் செய்தாலும் ஏது அவத்தைப் பட்டாலும்

முத்தர் மனம் இருக்கு மோனத்தே — வித்தகமாய்க்

காதி விளையாடி இரு கைவீசி வந்தாலும்

தாதி மன நீர்க்குடத்தே தான்.

***

9.ஆம்; பட்டினத்தார் முன்னரே பாடிவிட்டார்:

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவில் ஒரு

பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்தப்

படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்

அடி சார்ந்து நாம் உய்யவேண்டுமென்றே அறிவாரில்லையே

***

10.ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்

பாவி என்று நாமம் படையாதே — மேவிய சீர்

வித்தாரமும் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே

செத்தாரைப் போலே திரி

–subham—

Tags- பட்டினத்தார்   பாடல்கள் , 10 கேள்விகள்  ,

Leave a comment

Leave a comment