பஜ கோவிந்தம் பாடல் பற்றி 10 கேள்விகள் (Post.16,062)
Written by London Swaminathan
Post No. 16,062
Date uploaded in London – 7 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
பஜகோவிந்தம் என்பது என்ன ? அந்த நூலை யார் இயற்றினார் (கள்)?
2
இந்த நூலின் ஒரிஜினல்/ உண்மைப்பெயர் என்ன ?
3
இந்தத் துதி தோன்றக் கருவாக அமைந்த சம்பவம் என்ன ?
4
இந்தத் துதியின் முதல் பாடல் எது ? அதன் பொருள் என்ன?
5
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)- என்று வள்ளுவன் சொன்னதை பஜகோவிந்தம் துதியில் எங்கே காணலாம் ?
6
ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற கங்கை, கோவிந்தன், காயத்ரி ஆகிய மூன்று ‘க’ காரங்களை (மூன்று க) மிகவும் முக்கியமானவையாகக் குறிப்பிட்டார். பஜகோவிந்தம் துதியில் இது உள்ளதா ?
7
அப்பர் பாட்டில் ஜய ஜய சங்கரயென்றும் ஆதி என்றும் சொல்கிறார் ; அப்படியானால் காஞ்சி மஹா சுவாமிகள் சொல்வது போல ஆதி சங்கரர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்தானே?
8
முப்பது வருஷம் ஜாலியாக இளைஞராக வாழ்ந்தோம்; அடுத்த முப்பது வருஷம் மனைவி யோடு ஜாலியாகச் சுற்றினோம்; அடுத்த முப்பது வருஷம் வாக்கிங் ஸ்டிக்குடன் நடந்தோம்; கடவுளை எங்கு நினைத்தோம்? என்று அப்பரும் ஆதிசங்கரரும் சொன்னார்களா?
9
தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார், தாரம், ஆர்?
புத்திரர் ஆர்? தாம் தாம் ஆரே?
வந்த ஆறு எங்ஙனே? போம் ஆறு ஏதோ? மாயம்
ஆம்; இதற்கு ஏதும் மகிழ வேண்டா!
சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்: திகழ்
மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் “நமச்சிவாய” என்று எழுவார்க்கு
இரு விசும்பில் இருக்கல் ஆமே– அப்பர் பாடல் இதே கருத்து பஜகோவிந்தத்தில் எங்கு வருகிறது ?
10
நல்லோருடன் சேர்ந்தாலே பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல முக்தி கிடைத்துவிடும் என்று சொல்லும் சத் சங்கம் பாடல் எது ?
***************************
விடைகள்
1.கோவிந்தனைத் துதி = பஜ கோவிந்தம் என்பது பொருள் ; இதை ஆதிசங்கரரும் அவருடைய சீடர்களும் இயற்றினார்கள் என்பது ஐதீகம்; 31 ஸ்லோகங்கள் உடைய இந்த துதியில் முதல் 12 ஆதி சங்கரரால் இயற்றப்பட்டவை, ஏனையவை அவருடன் சென்ற சீடர்கள் 14 பேராலும் மற்றோராலும் பாடப்பட்டவை.
***
2. எளிய ஸம்ஸ்க்ருதத்தில் அரிய கருத்துகளைக் கொண்ட இந்த பாட்டின உண்மையான பெயர் பஜ கோவிந்தம் அல்ல!
‘மோகத்துக்கு (ஆசை) சம்மட்டி அடி’ கொடுக்கும் பாடல் என்பதால் இதை ‘மோக முத்கர’ என்றும் அழைப்பர்.
***
3
3.இந்துக்களின் புனித நகரான காசியில் ஆதி சங்கரர் தனது சீடர்களுடன் நடந்து கொண்டிருந்தார். வயதான ஒருவர் ஸம்ஸ்க்ருத இலக்கண பாடத்தை ‘டுக்ருஞ்கரணே’, ‘டுக்ருஞ்கரணே’ என்று நெட்டுரு போட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஆதி சங்கரருக்குக் கருணை பிறந்தது .மூட புத்தியுளவரே! சாகப் போகும் தருணத்தில் இந்த இலக்கண விதிகள் உமக்கு உதவிக்கு வருமா? சாகும் நேரத்தில் சங்கரா, சங்கரா என்றாலாவது போகும் வழிக்கு புண்ணியம் சேர்க்கலாமே என்று 12 துதிகளில் அறிவுரை பகன்றார்.
***
4
4.‘பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் மூடமதே
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
ந ஹி ந ஹி ரக்ஷதி டுக்ருஞ்கரணே’
“கோவிந்தனைத் துதி (கடவுளைத் துதி) , கோவிந்தனைத் துதி (கடவுளைத் துதி) மூடனே! குறித்த நேரம் (மரண காலம்) வரும்போது இலக்கண விதிகள் உன்னைக் காக்காது.”
பஜகோவிந்தத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் தமிழ் வேதமாகிய திருக்குறளில் இருந்து ஒவ்வொரு குறளை ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம். இதோ இந்த முதல் பாட்டின் கருத்தை இரண்டாவது குறளில் காணலாம்.
கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (2)
“அறிவே வடிவாய் விளங்கும் கடவுளின் திருவடிகளை ஒருவன் நாள்தோறும் வணங்கவில்லை எனில் கல்வியால் (டுக்ருஞ்கரணே) என்ன பயன்?”
***
5.மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)-
பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.
சங்கரரும் சாடுகிறார்:
தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.
“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :
காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :
பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:
ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”
—பஜகோவிந்தம்
( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).
பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.
***
6.ஆமாம். இதோ அந்தப் பாடல் :
பகவத்கீதா கிஞ்சித் அதீதா
கங்காஜல லவ கணிகா பீதா I
ஸக்ருதபியேந முராரி ஸமர்சா
க்ரியதே தஸ்ய யமேன நசர்சா II
பொருள்: கொஞ்சமேனும் பகவத்கீதை படித்திருந்தாலும், சொட்டு கங்கா ஜலம் குடித்திருந்தாலும், ஒரே தடவை நாராயணனை பூஜித்திருந்தாலும் போதும் அவன் விஷயத்தில் யமன் தீவிர சோதனை செய்வதில்லை
****
7. (ஆதீ சங்கர, செய செய சங்கர என்று ஒரே பாட்டில் வருவதைக் காண்க)
“நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே—-
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி
சங்கரா செய போற்றி போற்றி என்றும்
அலை புனல் சேர் செஞ்சடையெம் ஆதீ என்றும்
ஆரூரா என்று என்றே அலறா நில்லே” —அப்பர் தேவாரம்
***
8.பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
இது திருநாவுக்கரசர் (அப்பர்) பெருமான் அருளிய நான்காம் திருமுறையில் இடம்பெற்ற திருக்கொண்டீச்சரம் தேவாரப் பதிகப் பாடல் ஆகும்.
இதோ ஆதிசங்கரர் பாடல்
பாலஸ்தாவத்க்ரீடாஸக்த:
தருணாஸ் தாவத் தருணீஸக்த: I
வ்ருத்தஸ்தாவத் சித்தாஸக்த:
பரே ப்ரஹ்மணி கோsபி நஸக்த: II
பொருள்: சிறுவன் விளையாட்டில் ஈடுபடுகிறான். வாலிப இளமங்கையை நாடுகிறான். கிழவர் கவலையில் தோய்கிறார். ஆனால் பரப்ஹ்மத்தில் ஒருவர் கூட ஈடுபடுவதில்லையே!
***
9.காதே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரோsய மதீவ விசித்ர: I
கஸ்ய த்வம் க:குத ஆயாத:
தத்வம் சிந்சய யதிதம் ப்ராத: II
பொருள்: உனது மனைவி என்பவள் யார்?உனது மகன்தான் யார்? இந்த உலகியல் மிக விந்தையானது. c யாருக்கு உடைமையானவன்?நீ யார்? எங்கிருந்து வந்தாய்? இது மாதிரியான உண்மை நிலையை சற்று ஆராய்ந்து பாரேன்!
***
10.ஸத்ஸங்கத்வே நி:ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் I
நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்
நிஸ்சலிதத்வே ஜீவன் முக்தி : II
பொருள்: நல்லோரி இணக்கம் இருந்தால் உலக விஷயங்களில் பற்று இருக்காது. அவ்வாறு இருந்தால் மோஹமும் இராது. மோஹம் இல்லையேல் உறுதியான தத்வம் மேலிடும். அவ்வாறு உறுதியான கட்டுப்பாடு இருந்தால் ஜீவன் முக்தி கிடைக்கும்.
–subham—
Tags- பஜ கோவிந்தம் பாடல், 10 கேள்விகள், ஆதி சங்கரர்