

Written by London Swaminathan
Post No. 16,077
Date uploaded in London – 11 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

1
மணிமேகலைக் காப்பியத்தை சிலப்பதிகாரத்துடன் சேர்த்து இரட்டைக்காப்பியம் என்று அழைப்பது ஏன்?
2
மணிமேகலை காப்பியத்தை எழுதியவர் யார் ? அது இந்தக் காலத்தைச் சேர்ந்தது?
3
எந்த சமயத்தைப் போதிக்க இதை எழுதினார்கள் ?
4
நாரதர் வீணையை சிலப்பதிகாரத்தில் முதல் தடவையாகக் கண்டோம். அதே போல இதில் முதல் முதலாகத் தமிழ் மொழியில் வரும் ரிக்வேத முனிவர் , மஹாபாரத ஆசிரியர் பெயர்கள் என்ன?
5
மணிமேகலை என்றால் என்ன பொருள் ?
6
மணிமேகலை சென்ற தீவின் பெயர் என்ன ? அது எங்குள்ளது ?
7
மஹாபாரத அக்ஷய பாத்திரத்தைக் காப்பியடித்த புலவர், அதற்கு சூட்டிய பெயர் என்ன ? ஆபுத்திரன் யார் ?
8
மஹா குழப்பம் நிறைந்த மணிமேகலைக் கதையின் சுருக்கம் என்ன ?
9
மணிமேகலையின் காலத்தைக் கணிக்க அறிஞர்கள் சொல்லும் வாதங்கள் என்ன ?
10
மணிமேகலை பொன்மொழிகள் பற்றி லண்டன் சுவாமிநாதன் தொகுப்ப்பில் என்ன உள்ளது ?

*************************
விடைகள்
1.சிலப்பதிகாரத்தில் முக்கிய இடம்பெற்ற கோவலனும் நாட்டியக்காரி மாதவியும் அறத்துக்குப் புறம்பான குடும்பம் நடத்தியபோது பிறந்த பெண் மணிமேகலை ; அவளுடைய மற்றும் அவள் தாய் மாதவி பற்றிக் கூறுவதால் இதையும் சிலம்பையும் இரட்டைக்காப்பியங்கள் என்பார்கள். இது ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று
***
2.மணிமேகலை காப்பியத்தை எழுதியவர் கூலவாணிகன் சீழ்தலைச் சாத்தனார் என்று நம்புகிறார்கள் ; இவர் சங்க காலப் புலவர் இல்லை ; தொல்காப்பிய காலம் பற்றித் தமிழில் எவ்வளவு கூற்றுகள் உண்டோ அவ்வளவு கூற்றுகள் இந்த நூலைப் பற்றியும் உண்டு ; இரண்டாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை வைக்கிறார்கள் ; பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை சொல்லுவது போல எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்ரா புறா ஆண்டில்தான் வைக்கமுடியும் ; காதைகள் 27 முதல் 30 வரை படித்தால் இது புரியும். இந்தத் தமிழ் ஆசிரியரிடம் கொடுத்தாலும் பொருள் சொல்ல முடியாமல் திணறுவார்கள் . சங்க இலக்கியத்துக்கும் இதற்கும் ஆயிரம் மைல் இடைவெளி!
***
3.பெளத்த சமயத்தைப் போதிக்க இந்தக் காப்பியத்தை எழுதினார்.
***
4. அகத்தியரையும் பாண்டியர்களையும் முதல் முதலில் தொடர்புபடுத்தி எழுதியவர் 2100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உலகப்புகழ்பெற்ற காளிதாசன் ஆவான் ; தமிழில் முதலில் அகத்தியன் என்ற சொல்லை மணிமேகலையில்தான் முதலில் காண்கிறோம்; வேத வியாசர் பெயரும் முதலில் வரும் நூல் மணிமேகலைதான்! காவிரி கதையை அகத்தியன் உருவாக்கிய கதை இதில் வருகிறது .
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகங் கவிழ்த்த காவிரிப்பாவை
அதாவது சோழ மன்னன் காந்தமன் வேண்டிக்கொண்டபோது , அகத்திய முனிவன் தனது கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரி நதியை உண்டாக்கினார்.
***
5.மணிமேகலை என்பது கடல் தெய்வத்தின்பெயர்; இது ஸம்ஸ்க்ருதச் சொல். இந்தப் பெயர் ஜாதகக் கதைகளில் வருகிறது ; கப்பல் உடைந்தால் அதிலுள்ள நல்லோரைக் காப்பாறும் தேவதை அவள்; மஹாஜனக என்ற இளவரசனை அந்தத் தேவதை காப்பாற்றி கரை சேர்த்தாள்.தாய் லாந்திலும் கம்போடியாவிலும் மணிமேகலை ஸ்படிகப் பந்தினைக் கையில் ஏந்தி மின்னலை உருவாக்குவதாக எழுதியுள்ளனர்; அவ்விரு நாடுகளிலும் மழையை வருவிக்க மணிமேகலா நாட்டியம் ஆடுகின்றனர் . அக்கபோதி என்பவன் மகாவலி கங்கா நதி மீது கட்டிய அணைக்கு மணிமேகலா என்று பெயரிட்டான் . ஒருகாலத்தில் இலங்கையில் ஒரு மாவட்டத்தின் பெயர் என்றும் சூளவம்சம் கூறும்.
***
6.மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு மணிபல்லவத் தீவு ஆகும். இத்தீவு இலங்கையின் வடக்கே காங்கேசன்துறைக்கு அருகில் கடலில் உள்ள நயினாதீவு என்று சொல்லுவார்கள்.
***
7.வாரணாசியில் வாழ்ந்த அந்தணர் அபஞ்சிகனுக்குப் பிழை செய்த பாவம் நீங்க அவன் மனைவி சாலி, குமரிக்கு வந்து நீராடிவிட்டு மீளும்போது தனக்குப் பிறந்த குழந்தையை வழியில் விட்டுச் சென்றுவிட்டாள். அந்தக் குழந்தையைப் பசு ஒன்று நாவால் தடவிக் கொடுத்து பாலூட்டி ஏழு நாள் வளர்த்தது. அங்கு தன் மனைவியுடன் வந்த இளம்பூதி என்னும் மறைகாப்பாளன் குழந்தையைத் தன் ஊருக்கு எடுத்துச்சென்று வளர்த்து ஆபுத்திரன் (= பசு மகன்) எனப் பெயர் சூட்டி கல்விகேள்விகளில் வல்லவனாக்கினான். சிந்தாதேவி (பௌத்த கோயில் தெய்வம்) அவன்முன் தோன்றித் தன் கையிலிருந்த அமுத சுரபி என்னும் பாத்திரத்தைக் கொடுத்தது. பின்னர் இது மணிமேகலையை அடைந்தது. அவள் அதைக்கொண்டு திரவுபதி போல எல்லோருக்கும் அமுது படைத்தாள்.
***
8.மணிமேகலையும் அவளுடைய தோழியும் வனத்திற்குப் பூப்பறிக்கச் சென்றபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முற்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, மணிமேகலாதெய்வம், மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை ‘அமுத சுரபி’ என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவைப் புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்திக் காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுநர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினைப் பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகி தவத்தில் ஆழ்ந்தாள்.
***
9.காஞ்சிப் பல்லவர்கள்பற்றிய குறிப்பு மணிமேகலையில் இல்லை .சிலம்பிலும் மேகலையிலும் கூறப்படும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகியோர் சங்க இலக்கியத்திலும்அதற்குப்பிந்தைய தமிழிலக்கியங்களிலும் இடம் பெறவில்லை .‘கின்று’ என்ற நிகழ்கால இடைநிலையும், ‘உண்ணாத’ என்ற ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமும்; ‘நான்’ என்ற பெயர்வழக்கும்; ‘அந்த’, ‘இந்த’, ‘அது’, ‘இது’ என்ற சுட்டுகளும், தான்–தன்-தம் என்றபல சொல்லாட்சிகளும் சிலம்பிலும், மணிமேகலையிலும் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மணிமேகலையில் வடமொழிச் சொற்களும், வடமொழிப் பெயர்களும் மிகுதியாகக் கலந்துள்ளன. வடநாட்டுக் காசியும், தென்னாட்டுக் குமரியும் இடம்பெற்றுள்ளன. சம்பாபதி, சம்பாதி, சண்பை, சமந்தம், சந்திரதத்தன், சரவணம், சனமித்திரன், சங்க தருமன், சங்கமன், சக்கரவாளக் கோட்டம், சந்திரன், சமயக் கணக்கர், சடை, சம்பு, சரண், சங்கு, சங்கம், சலம், சதுக்கம், சமம், சலாகை, சக்கரக்கை, சந்தி, சமண், சண்பகம், சரணாகதி போன்ற சங்க காலத்தல்லாத சகர முதற்சொற்களைப் பெருவழக்காகச் சாத்தனார் பயன்படுத்தி உள்ளார் .மணிமேகலை, மதுராபதி, வசு, குமரன், மாதவி, சுதமதி, விசாகை, துச்சயன், காயசண்டிகை, அத்திபதி, வயந்தமாலை, காகந்தி, சாலி, சித்திராபதி, தீவதிலகை, நீலபதி, அபஞ்சிகன் எனப் பல வடமொழிப் பெயர்களை பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை சுட்டிக்காட்டுகிறார் . தமிழில் மணிப்பிரவாள நடையைத் தோற்றுவித்தவர் சாத்தனார் என்பதை கடைசி நான்கு காதைகளை படித்தால் புரியும் ; மொத்தமுள்ள காதைகள் முப்பது
***

10.மணிமேகலை பொன்மொழிகள்:
ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)
xxx
காவிரி நதி ஜீவ நதி
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை
xxxx
அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின் மறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல் (மணி 25-228)
XXX
யவனர்களும் தமிழர்களுடன் வேலை
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி
XXX
குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்; பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;
நாண் அணி களையும்;மாண் எழில் சிதைக்கும்; பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி (மணி 11-76)
XXX
அரசன் இல்லாவிடில் நாட்டில் என்ன நடக்கும்?
கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங்கூரும்
மாரிவறங்கூரின் மன் உயிர் இல்லை.
XXX
ஆறு அறிவு படைத்த மனிதன்
பல்லுயிர் அறுவகைத் தாகும்
மக்களும் தேவரும் நரகரும் பிரமரும்
தொக்க விலங்கும் பேயுமென்றே (30-56)
XXX
மாதவியை அறவண அடிகள் எப்படித் தேற்றினார்?
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் உறுவது முன்னது பின்னது அற்றோர் உறுவது அறிக (2-64)
XXX
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
**
“தீவினை என்பது யாது?” என வினவின்
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ முன்றும்….3
பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்…..4
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப் …3= 10
–subham—
Tags- மணிமேகலை, பொன்மொழிகள், 10 கேள்விகள்