சிதம்பரம் சிறையில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாடிய பாடல்கள் (Post.16,091)

Written by London Swaminathan

Post No. 16,091

Date uploaded in London – 15 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சிதம்பரம் சிறையில் மூவேந்தர் பாடிய வெண்பாக்கள்

அச்சுத  களப்பாளன் (இந்து விரோத களப்பிரன்)  என்ற மன்னன் சேர, சோழ, பாண்டிய  மன்னர்களை  வென்று அவர்களை சிதம்பரத்தில் சிறையில் அடைத்தான்; அவர்களின்  கை,கால்களில் விலங்கு மாட்டினான். அப்போது மூவரும் மனம் நொந்து பாடிய பாடல்களை   யாப்பருங்கல விருத்தியுரை நமக்கு அளிக்கிறது . இந்தக் களப்பிரனை புத்த மதத்தினர் புகழ்கின்றனர்; அவன் ஏராளமான புத்த விகாரங்களை எழுப்பவும் அவர்கள் நூல்களை எழுத உதவி செய்ததையும் பெளத்தர்கள் கூறுகின்றனர்; பூத மங்கலம் என்ற பிராமணர் ஊரை பெளத்தர்கள் ஆக்ரமித்தனர்; திருஞான சம்பந்தர் அவர்களை வாதில் வென்று அதை மீட்டார் . சங்க கால பாண்டியர் பிராமணர்களுக்கு அளித்த வேள்விக்குடியையும் சமணர்கள் எடுத்துக்கொண்டனர் ; பராந்தக நெடுஞ்சடையன் அதை மீட்டு பிராமணர்களுக்கு மீண்டும் கொடுத்தான் ; பல ஊர் சிவன் கோவில்களை அவர்கள் ஆக்ரமித்ததையும் அவைகளை அப்பர் பெருமான் மீட்டுக்கொடுத்ததையும் தேவாரப் பாடல்களில் காண்கிறோம் ; அச்சுத  களப்பாளனு க்கு சாவு மணி  அடித்தது கடுங்கோன் என்ற பாண்டியன் ஆவான்; அதே நேரத்தில் சிம்ம விஷ்ணு என்ற பல்லவ மன்னனும் அவர்களைத் தமிழ் நாட்டுக்கு வெளியே துரத்தினான்; இவைகளை பாண்டியர் கல்வெட்டு, செப்பேடுகளிலிருந்து அறிய முடிகிறது ; பெரிய புராணம் சொல்லும் மூர்த்தி நாயனார் என்ற பாண்டிய மன்னன் கடுங்கோன் தானா என்பது ஆராய வேண்டிய விஷயம் . 

யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலின் கி. பி. 10ஆம் நூற்றாண்டு விருத்தியுரையில் காணப்படும் செய்யுட்கள் :

சேர சோழ பாண்டிய மன்னர்களின் கால்களில் தளை (விலங்கு) மாட்டியபோது  சேர அரசன் பாடியது 

தினை விதைத்தார் முற்றந் தினை யுணங்கும், செந்நெல்

தனை விளைத்தார் முற்ற மதுதானாம் – கனைசீர்

முரசுணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த் தானை

அரசுணங்கும் அச்சுதன்தன் முற்றத்து

****

சோழ அரசன் பாடியது:

அரசர்குல திலகன் அச்சுதன் முற்றத்தில்

அரச ரவதரித்த வந்நாள் – முரசதிரக்

கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை

வெட்டிவிடு ஓசை மிகும்

***

பாண்டிய மன்னன் பாடியது:

குறையுளார் எங்கிரார் கூர்வே லிராமன்

நிறையறு திங்கள் இருந்தான் – முறைமையால்,

ஆலிக்குத்தானை யலங்குதார் அச்சத! முன்

வாலிக் கிளையான் வரை

இதைக் கேட்ட அச்சுதக் களப்பாளன் பாண்டியனுக்கு இன்னொரு தளை இட்டான். அப்போது பாண்டியன் இன்னொரு வெண்பாவைப் பாடினான்.

குடகர் குணகடலென் றார்த்தார் குடகர்க்

கிடகர் வடகடலென் றார்த்தார் – வடகடலர்

தென்கடலென் றார்த்தார் தில்லையச் சுதானந்தன்

முன்கடை நின்றார்க்கும் முரசு

***

களப்பிரரின் போர்க்கள வெற்றியைப் பழைய வெண்பா ஒன்று கூறுகிறது. மிகத் தொன்மை வாய்ந்த அந்த வெண்பா கி. பி. 10ஆம் நூற்றாண்டு நூலாகிய யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கண நூலின் விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

படுபருந்தும் சூர்ப்பேயும் பல்லிலங்கும் நாயும்

கொடியும் கழுகுமிவை கூடி – வடிவுடைய

கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு

போமாறு போமாறு போம்

என்பது அந்தப் பாடல். களப்பாள (களப்பிர) அரசனுடைய யானை சேனைகள் போர்க்களத்துக்குப் போகும்போது, பேய்களும், நரி, ஓநாய், நாய், பருந்து, கழுகு முதலான பிணந்தின்னிப் பிராணிகளும் அந்தச் சேனையோடு போயின என்று இச்செய்யுள் கூறுகிறது. அதாவது, போர்க் களத்தில் போர்வீரர்களும் யானை, குதிரைகளும் செத்துமடியு மாகையால் இந்தப் பிணந்தின்னிப் பிராணிகளுக்கு இறைச்சி விருந்து கிடைத்தது என்பது இதன் கருத்து. களப்பாள அரசன் மற்ற அரசர் களோடு போர்செய்து வெற்றி பெற்றான் என்பது இதன் திரண்ட பொருள்.

இந்தக் களப்பிர அரசனை இப்பாடல்கள் அச்சுதன் என்று கூறுகின்றன. அச்சுதன் என்பது களப்பிர அரசர்களின் பொதுப் பெயர் என்று ஒரு  சாரார் கருதுகின்றனர் .

அந்தப் பழம் பாடல்கள், பிற்காலத்தில் தனிப்பாடற்திரட்டுபுலவர் புராணம் முதலான நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

***

ஆசார்யர் புத்த தத்த தேரர் என்னும் புத்த பிக்கு சோழ நாட்டில்  ஐந்தாம் நூற்றாண்டில் அச்சுத விக்கந்தன் என்னும் களப்பிர அரசன் காலத்தில் இருந்தவர் . கவீர பட்டினம் / காவிரிப் பூம்பட்டினம் , உரகபுரம்/உறையூர் , பூதமங்கலம் முதலிய ஊர்களில் வாழ்ந்தவர் . கண்ணதாசர் /வேணுதாஸர்  என்ற பெயருள்ள அமைச்சர்  ஒருவர் கட்டிய புத்த விகாரையில் இந்த புத்த தத்தர் தங்கி விநயவினிச்சயம் என்ற பாலி மொழி நூலை எழுதினார் . அதில் அச்சுதவிக்கந்தனை களபகுல  நந்தன என்று கூறுகிறார்.

விளக்கத்தனார் இயற்றிய  விளக்கத்தார் கூத்து என்னும் நூலிலுள்ள செய்யுளும், இவன் மூன்று நாடுகளையும் வென்றவன் என்று புகழ்கிறது

ஆதார நூல்

பாண்டியர் செப்பேடுகள் பத்து ,

தமிழ் வரலாற்றுக் கழகம், 1967

****

எனது கருத்து

இவை கட்டாயம் அச்சுத களப்பாளனிடம் பரிசு பெற எவரோ ஒருவர் பாடியிருக்க வேண்டும் ; மூவேந்தர்களும் இந்த அளவுக்குத் தாழ்ந்திருக்க மாட்டார்கள் .

***

புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்

தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்

சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்

அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ. ⁠– என்று மாணிக்கவாசகர் தில்லையில் பாடியதை ஒப்பிட்டு ஆராய வேண்டும்.

அப்பர் சம்பந்தர் போல சமணர்களை, மாணிக்கவாசகர் தாக்காதது, அவரை களப்பிரர் காலத்துக்கு முன்னரோ அல்லது தொடக்கத்திலோ வைக்கிறது.

–SUBHAM—

TAGS- சேர, சோழ, பாண்டிய, மன்னர்கள்,  சிதம்பரம், சிறையில், மூவேந்தர், பாடிய, வெண்பாக்கள்

Leave a comment

Leave a comment