பாண்டியர் செப்பேடுகள் பற்றி மேலும் 10 கேள்விகள் (Post.16,092)

Darkest Period of Tamil History 400 CE to 550 CE

Pandya Flag; London Swaminathan Creation.

Written by London Swaminathan

Post No. 16,092

Date uploaded in London – 15 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பாண்டிய மண்ணுக்கு முன்னால், கண்ணகி போல, துணிச்சலாக ஒரு பிராமணன் மனம் கொதித்துக் கூச்சல் போட்டதால் நமக்கு ஆறு பாண்டிய மன்னர்களின் வரலாறு கிடைத்தது. 1500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அந்தப் பார்ப்பானின் பெயர் என்ன ?

2

ஒரு பாண்டிய மன்னன் தலையை வெட்டி பலி கொடுத்தைக் கூறும் செப்பேடு எது ?

3

அதர்வண வேதமுறைப்படி முடி சூட்டிக்கொண்டான் பாண்டிய மன்னன் என்று பெருமைப்படும் கூறும் செப்பேடு எது?

4

வரகுணன் என்று புகழப்படும் இரண்டு பாண்டிய மன்னர்கள் எப்போது ஆண்டார்கள் ? இவர்களில் ஒருவரை மாணிக்கவாசகர் திருக்கோவையாரில் பாடியதாகச் சொல்லுவார் கள்.

5

சிவஞான போதம் என்ற சைவ சித்தாந்த நூலை இயற்றிய மெய்கண்டார் பற்றிய புதிர் என்ன ?

6

பெரியாழ்வார் தொடர்புள்ள பாண்டியன் யார்?

7

சேர சோழ பாண்டிய மன்னர்களை களப்பிர மன்னன் எந்த ஊர் சிறையில் அதைத்தான் அப்போது 3மன்னர்களும் பாடிய வெண்பாக்களை நமக்கு அளிக்கும் நூலின் பெயர் என்ன?

8

வால்மீகி ராமாயணம் சிலப்பதிகாரம்  மணிமேகலை குறிப்பிடும் இந்திரவிழா  பற்றிச் சொல்லும் பாண்டியர் செப்பேடு எது ?

9

ராவணனை சமாதான உடன்படிக்கை செய்யும்படி வலியுறுத்திய செய்தி எங்கே கிடைக்கிறது?

10

சின்னமனூர் பெரிய செப்பேடு சொல்லும் செய்திகள் என்ன?

சிவகாசிச் செப்பேடு தரும் புதிய பாண்டிய வம்சம் பற்றி என்ன அறிகிறோம்?

**************************

Agastya and Tolkappian?

விடைகள்

1. கொற்கைகிழான் காமக்காணி நற்சிங்கன். மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் மீட்டுக் கொடுத்த நிலத்தில் மூன்று பாகம் போட்டு ஒரு பாகத்தைத் தனக்கு வைத்துக்கொண்டு எஞ்சிய இரண்டு பாகங்களை ஐம்பது அந்தணர்களுக்கு  நற்சிங்கன், நீர்வார்த்துக் கொடுத்தான் . ஆண்டு CE 770. அவனுடைய முன்னோர்களுக்கு வேள்விக்குடியைத் தானம் கொடுத்தவன் புறநானூறு புகழும் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி ஆவான்.

****

2.சின்னமனூர் பெரியசாசனம் இரண்டாம் இராஜ சிம்மன் காலத்தியது; முதல் ஏடும் கடைசி ஏடும் கிடைக்கவில்லை. ஒரு பாண்டியன் தன்னுடைய குருவைக்காப்பதற்காக தன் கழுத்தை அரிந்துகொண்ட செய்தி காணப்படுகிறது

***

3.தளவாய்புர சானத்தின் ஸம்ஸ்க்ருதப்பகுதி  கூறும் செய்தி –

அதர்வண வேத விதி ப்படி முடி சூட்டப்பெற்ற தன் தலையை தானே அறுத்துக் கவந்தங்களின் கூத்தை நிறுத்தினான் . இது பாண்டியர்களின் முன்னோன் செய்த செயல்

***

4.தளவாய்புரச் செப்பேடுகள் பராந்தக வீரநாராயணனின் 895-907 புகழ்பாடுகிறது ; விஷ்ணுவின் வணக்கத்தோடு துவங்கும் இது அவனது ஆட்சி ஆண்டு 45ல் கரவந்த புரத்தில் தங்கியபோது சாசனம் வழங்கப்பட்டது . ஸ்ரீவல்லபமங்கலம் முதலிய பல கிராமங்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினான். அத்தகைய தானம் ஒன்று நாராயணன், ஈசானன் ஆகியோருடைய அர்ச்சனைக்காக வழங்கப்பட்டது. பாண்டியர்களின் 18 சாதனைகளை இது பட்டியலிட்டது  தென் மதுராபுரியை நிர்மாணித்து அங்கே சங்கம் நிறுவி தமிழை வளர்த்ததும் அவைகளில் அடக்கம் . மாணிக்கவாசகர் குறிப்பிடும் வகுணனின் தம்பி இந்த மன்னன் 895-907 CE. சிவபக்தன் . இவன் இரண்டாம் வரகுணன் . இவனுக்கு முன்னர் முதலாம் வரகுணன் 765-815 ல் ஆட்சி புரிந்தான்.

***

5.மெய்கண்டாரின் தந்தையின் பெயர் அச்சுத களப்பாளர்; ஆயினும் இவர் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ; ஆயினும் களப்பாளர் என்ற பெயர் ஆராய்ச்சிக்குரியது.

***

6.பரமவைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீள் முடி நிலமன்னவன்– என்று சீவரமங்கலச் சாசனம், பராந்தக நெடுஞ்சடையன், குருசரிதம் கொண்டாடிய செய்தியையும் அதே சாசனம் தெரிவிக்கிறது. பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தான்  என்று பெரியாழ் வார் திருமொழித் தனியனும் கூறுகிறது; ஆகவே பாண்டியன் நெடுஞ்சடையன் கொண்டாடிய பட்டர்பிரான் பெரியாழ்வார்தான் என்று துணியலாம் – மன்னனின் காலம் – 765-815 CE

***

7.மூவேந்தர்களையும் அச்சுதக் களப்பாளன், தில்லை என்னும் சிதம்பரத்தில் சிறைவைத்தான் ; பத்தாம் நூற்றாண்டு யாப்பருங்கல விருத்தி உரையில் மூன்று மன்னர்களும் பாடிய பாடல்கள் உள்ளன.

***

8. இந்திரவிழா பற்றிக்கூறும் சாசனம் சின்னமனூர்ப் பெரிய செப்பேடு ஆகும் .

தடம் பூதம் பணிகொண்டு  தடாகங்கள் பல திருத்தியும் அடும் பசிநோய் நாடகற்றி  அம்பொற் சித்ரமுயரியும் — என்ற வரிகளில் இந்திரவிழா வருகிறது . காளிதாசனின் ரகுவம்சத்தில் 4-3 இந்திர விழா கொண்டாடப்பட்ட செய்தி கிடைக்கிறது; இதற்கு மல்லிநாதர் எழுதிய உரைதான் நமக்கு முழு விவரங்களையும் தருகிறது. மல்லிநாதர் உரை  தரும்   தகவல்கள் ,

நகர வாயிலில் நான்கு  கம்பங்களில்  யானை உருவக்கொடிகள் ஏற்றப்படும்;

அரசனின் அரண்மனைக்கு எதிராக  சதுர வடிவ சக்ரத்வஜம் கட்டப்படும் ; சக்ர என்பது இந்திரனின் பெயர் ; அது நகர மக்களுக்கு மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கும் . இந்திர விழா நடத்தும் நாட்டில் வேண்டிய அளவு மழை பெய்யும் ; ஆகவே 2200 ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு காளிதாசனே விரிவான தகவல்களைத் தந்தான் எனலாம் தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா மகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. ஆனால் இதன் தோற்றம் வேதத்திலும் ராமாயண, மஹா பாரத இதிஹசங்களிலும் உள்ளது.

டாங்கே, மெயர் போன்ற வேத நூல் அறிஞர்கள் இந்திரவிழா பற்றிய குறிப்பு உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலும், அதர்வ வேத்திலும் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திர த்வஜம் (இந்திரன் கொடி) பற்றி அதர்வ வேதம் பேசுகிறது. ரிக் வேதத்தில் மறை மொழியில் இதே விஷயம் உள்ளது. “மருத்துக்கு முன் இந்திரன் நடுங்கியதாக” ஒரு இடத்தில் வருகிறது. இதன் பொருள்—காற்றில் இந்திரன் கொடி படபடத்தது என்பதாகும். மருத் என்பது காற்றுக் கடவுள். அதிலிருந்தே அனுமனைக் குறிக்கும் மாருதி என்ற சொல் வந்தது. ரிக் வேதத்தில் இன்னும் ஒரு இடத்தில் , “ஏ இந்திரனே உன்னை புரோகிதர்கள் உயரே ஏற்றிவிட்டார்கள்” என்ற வரிகள் வருகின்றன. இது இந்திரன் கொடி ஏற்றப்பட்டுவிட்டது என்பதாகும்.

இந்திர விழாவில் முக்கிய அம்சம் கொடி ஏற்றம். அதற்கு முன் வள்ளுவன் பறை அறிவிப்பான். உடனே ஊர் முழுதும் அலங்கரிக்கப்படும். 28 நாட்களுக்கு நாடே விழாக்கோலம் பூணும். ஆடலும் பாடலும் புத்துயிர் பெறும். அதைக் கொண்டாடாவிடில் இயற்கையின் கோபத்துக்கு நாடு உள்ளகும். இறுதி நாளில் இந்திரன் கொடிக்கம்பம் வீழ்த்தப்படும். மணி மேகலையும் சிலப்பதிகாரமும் இது பற்றி நிறைய தகவல் தருகின்றன.

இதை அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் துவக்கியதாக இரட்டைக் காப்பியங்கள் கூறும். ஆனால் உபரிசார வசு துவக்கியதாக மகா பாரதம் கூறும்.

இன்றும்கூட குச்சிப்புடி முதலிய நடனங்களில் மேடையில் இந்திரன் கொடி வைக்கப்படுகிறது. சிலப்பதிகார, மணிமேகலை புகழ் மாதவிக்குக் கொடுக்கப்பட்ட தலைக் கோல் இந்திரன் மகன் ஜயந்தனுடன் தொடர்புடையது.

இன்றுவரை இந்திர விழாவை  பழந்தமிழ்நாடு போலக் கொண்டாடும் நாடு நேபாளம். அதன் தலை நகரமான காத்மண்டுவில் ஆண்டுதோறும் அரசாங்கத் திருவிழாவாக நடைபெறுகிறது. தமிழ் நாடு போலவே கொடி ஏற்றி ஆடல் பாடலுடன் இந்திர தேவன் ஊர்வலத்துடன் விழா நடைபெறுகிறது.

***

9.ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை !

Written by London Swaminathan, June 24, 2014 in tamilandvedas.com

swamiindology.blogspot.com

தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!!

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:- 1127; தேதி:- 24th June 2014

அகத்திய முனிவருடன் அமர்ந்து பாண்டியர்கள் தமிழ் ஆராய்ந்த செய்தி பாண்டியர் செப்பேடுகளில் வருகிறது. மற்றொரு புதுமையான செய்தியும் பாண்டியர் செப்பேடுகளில் காணப்படுகிறது.

“அகத்தியனோடு தமிழாய்ந்தும் மிகத் திறனுடைய வேந்தழித்து

தசவதனன் சார்பாகச் சந்து செய்துந் தார்தராஷ்ட்ரன்

படை முழுதுங் களத்தவிய பாரதத்து பகடோட்டியும்

……………………………………………….. “

இது பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடு (ஒன்பதாம் நூற்றாண்டு) கூறும் செய்தி.

பாண்டியர்களின் குல குரு அகத்தியன் என்றும் அவர் மூலமாகவே பாண்டியர்கள் முடி சூட்டப்பட்டதாகவும் வேறு சில பாண்டியர் கல்வெட்டுகளும் செப்புகின்றன.

ஆயினும் –தசவதனன் சார்பாகச் சந்து செய்வித்தும் — என்பதற்கு இதுவரை சரியான விளக்கம் கிடைக்கவில்லை என்றே அறிஞர்கள் எழுதி வந்துள்ளனர். “ஒரு பாண்டியன் இராவணனைச் சமாதானம் செய்துகொள்ளும்படிச் செய்தான் என்று சாசனம் கூறுகிறது. இந்தப் புராணக் கதையின் விவரம் சரியாகத் தெரியவில்லை” – என்று பாண்டியர் செப்பேடுகள் பத்து ( தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு, 1967 ) என்ற நூல் கூறும்.

‘உச்சி மேற் புலவர் கொள்’ நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் ஒரு சுவையான விஷயம் கூறுகிறார். இது உ.வே சாமிநாதைய்யர் பதிப்பித்த பத்துப் பாட்டு உரையில் சுருக்கமாக உள்ளது:–

“தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்திவந்த இராவணனை, அகத்தியர் பொதியின் மலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினரென்பது பண்டைய வரலாறு” – என்று சாமிநாதையர் குறித்துள்ளார்.

“தென்னவற் பெயரிய துன் அரு துப்பின்

தொன்முது கடவுள் பின்னர் மேய

வரைத் தாழ் அருவி பொருப்பின் பொருந

– என்ற மதுரைக் காஞ்சி பாடல் வரிகளுக்கு (வரி 40-42) எழுதப்பட்ட உரை இது.

இதற்குப் பின் வேறு சில நூல்களிலும் மிகவும் அறியப்படாத செய்திகள் வருகின்றன. திருவாசகத்தில் மண்டோதரிக்காக சிவன் கடலில் நடந்த வரலாறு ஒன்றும் வருகிறது. உத்தரகோச மங்கை தல புராணம் இதை விரித்துரைக்கிறது. ஆக பாண்டியர்—அகத்தியர் உறவும், தமிழ்நாடு—இலங்கை தொடர்பும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.

காளிதாசன் என்னும் உலக மஹா கவிஞன், அவனது ரகுவம்ச காவியத்தில் தரும் தகவலைக் கொண்டு ஆராய்கையில் பாண்டியன் – ராவணன் புதிருக்கு விடை கிடைக்கிறது.

ராவணன் அவ்வப்போது தென் இந்தியாவுக்குள் புகுந்து அட்டூழியம் செய்தது வேறு பல இடங்களிலும் வருகிறது. ராவணனை வென்று அவனை மடியில் கட்டிக் கொண்டு நாற்கடலில் நீராடி, வாலி, சந்தியா வந்தனம் செய்த செய்தி வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.

காளிதாசன் தரும் அரிய தகவல்

காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் இந்துமதி சுயம்வரத்தில் ஆறு ஸ்லோகங்களில் பாண்டியன் புகழ் பாடுகிறார். அதில் முக்கியமான செய்தி – அகத்தியர் – பாண்டியர் – இராவணன் தொடர்பு ஆகும். வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்தி காளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்) பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் சொல்கிறார். புற நானூற்றில் பெரிதும் போற்றப்படும் பலயாகசாலை முது குடுமிப் பெருவழுதி கி.மு. முதல் நூற்றாண்டு என்பது நிரூபணமானால் காளிதாசன் குறிப்பிடும் பாண்டியன் அவன் என்ற வரலாற்றுச் செய்தியும் கிடைக்கும்.

பாண்டியன் புகழ் பாடும் முக்கிய ஸ்லோகம்:–

அஸ்த்ரம் ஹராதாப்தவதா துராபம் யேன இந்த்ரலோகாவ ஜயாய த்ருப்த:

புரா ஜனஸ்தான விமர்த்தசங்கீ சந்த்யாய லங்காதிபதி: ப்ரதஸ்தே (ரகு.6-62)

இதன் பொருள்:– தான் இல்லாத போது ஜனஸ்தானம் என்னும் இடத்தைப் பாண்டியர் அழித்துவிடுவரோ என்று பயந்த ராவணன், பரம சிவனைத் துதிபாடி பிரம்ம சிரஸ் என்ற அஸ்திரத்தைப் பெற்றுள்ள பாண்டியரோடு சமாதானம் செய்துகொண்டு இந்திரலோகத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டான் (ரகுவம்சம் 6-62).

ராவணனும் பயப்படும் அளவுக்கு பாண்டியர்களின் பராக்ரமம் இருந்தது!!

ரகுவம்சம் நாலாவது சர்க்கத்திலும் பாண்டியர்-அகத்தியர் புகழ் அடுத்தடுத்து வருகிறது. தமிழுக்கும் வெளியே இப்படி ஒரு அரிய சான்று கொடுப்பது காளிதாசனின் வடமொழிக் காப்பியம் ஒன்றே ஆகும்.

ஆக நச்சினார்க்கினியர், காளிதாசன் ஆகியோர் மூலம் பாண்டிய வம்சம் மிகப் பழமை உடையது என்பதும் ராமாயண கலத்திலேயே ராவணனை நடுங்கச் செய்தது பாண்டியர்களின் படைபலம் என்பதும் தெளிவாகிறது.

ராவணன், இலங்கையில் அரசும், தண்டகாரண்யப் பகுதியில் ஒரு ‘காலனி’யும் வைத்திருந்தான் என்பதும், அதைத் தளமாகக் கொண்டே இமயம் வரை சென்று சிவனின் கயிலாயத்தையும் அசைக்க முயற்சித்தான் என்பதும் இதனாற் பெறப்படும்!

***

Pandya Coin

10. சின்னமனூர் பெரியசாசனம் இராஜ சிம்மன் காலத்தியது; முதல் ஏதும் கடைசி ஏதும் கிடைக்கவில்லை. ஒரு பாண்டியன் தன்னுடைய குருவைக்காப்பதற்காக தன கழுத்தை அறிந்துகொண்ட செய்தி காணப்படுகிறது பல்கலைகளையும் கற்ற சுந்தர பாண்டியன் பெருமையும் பேசப்படுகிறது. இவன் இரண்டாவது இராஜ சிம்மன் ஆவான்.

சிவகாசிச் செப்பேடு ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பாண்டியர் வரலாற்றினைச் செப்புகிறது பாண்டிய வம்சாவளியைச் சொல்லும்போது  தீவிரகோபன்,  ஸ்ரீ வல்லபன், மணகுலாசலன், மானாபரணன் சுந்தர பாண்டியன், வீர பாண்டியன்  என்று சொல்கிறது. இந்த வம்ச பரம்பரை வேறு எந்த சாசனத்தில் இல்லை ;தீவிரகோபன்,   மான  குலாசலன் என்போரை முதல்முதலில் காண்கிறோம் . சங்க காலத்தில் ஆட்சி புரிந்த காய் சின  வழுதி, உக்கிரப் பெருவழுதி ரன்போரை இந்தப் பெயர் நினைவுபடுத்துகிறது.

ஆதார நூல்

பாண்டியர் செப்பேடுகள் பத்து ,

தமிழ் வரலாற்றுக் கழகம், 1967

–subham—

Tags- பாண்டியர் செப்பேடுகள், மேலும் 10 கேள்விகள்,  சிவகாசிச் செப்பேடு, இந்திரவிழா,  மெய்கண்டார், வரகுணன்

Leave a comment

Leave a comment