சர்ச்சைக்குரிய விவேக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,118)

Written by London Swaminathan

Post No. 16,118

Date uploaded in London – 22 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 விவேக சிந்தாமணி  நூலின் ஆசிரியர் யார் என்று தெரியாது; தமிழ் நடையைப் பார்க்கையில் அண்மைக்காலத்தில் 200, 300 ஆண்டுகளுக்குள் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று  தெரிகிறது . பெண்களை இவர் தாக்கி எழுதியிருப்பதைக் காணலாம் சிலர் அதை குடும்பப்  பெண்களைக் குறிக்காது என்பர். இந்தக் காலத்தில் மழை குறைந்ததற்குப் புலவர் கூறும் காரணமும் கலியுகம் இது என்று காட்டுகிறது. குறைந்தது 135 பாடல்கள் உள்ளன. சில பதிப்புகளில் கூடுதல் பாடல்களும் காணப்படுகின்றன .

இதை ஆதி சங்கரர் இயற்றிய விவேக சூடாமணியுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது .

Full book is available in Project Madurai website.

***

1

புலவரே! பெண்களை நம்பலாமா ?

2

புலவரே! முன்னொரு  காலத்தில் மாதம் மும்மாரி மழை பெய்ததாம் ; இப்போது வருஷத்துக்கு மூன்று முறைதான் மழை பெய்கிறது; ஏனோ ?

3

அச்சாணி இல்லாத வண்டி போல எவை அழியும்?

4

பாம்பாட்டிக்கும், யானைப்பாகனுக்கும் ஆயுள் குறைவா ?

5

பெண்ணின் மனது எவ்வளவு ஆழமானது ?

6

புத்தியுள்ளவனே பலமானவன் என்பதற்கு நீவீர் சொல்லும் எடுத்துக்காட்டு என்னவோ?

7

ஏதோ ஒரு 13 பெயர்களைச் சொல்லி அவை போல குணம் இருக்க வேண்டும் என்று பாடுகிறீர்; அவை யாவை ?

8

உமது கருத்தில் பேயன், மூடன், கசடன் யார் யார்? அப்படியே பயனில்லாத ஏழு பொருட்களையும் சொல்லுங்கள்.

9

பெண்களின் அழகு எப்போது குறையும் ?

10

நரகத்துப் போவோர் யார் யார் என்று அருணகிரி நாதர் பாடிய திருப்புகழில் நீண்ட பட்டியல் உள்ளது. உங்கள் கருத்து என்ன புலவரே ?

**********************************

விடைகள்

1.ஆல கால விடத்தையும் நம்பலாம்

      ஆற்றை யும்பெருங் காற்றையும் நம்பலாம்

கோல மாமத யானையை நம்பலாம்

      கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்

கால னார்விடு தூதரை நம்பலாம்

      கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்

சேலைகட்டிய மாதரை நம்பினால்

      தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.       12

(ஆலகால விஷம், ஆறு, பிரசண்ட காற்று, அழகிய பெரிய மதயானை, கொல்லத்தக்க வேங்கைப்புலி, யமனால் விடும் தூதர்கள், கள்ளர், வேடர், மறவர் இத்யாதி பேர்களையும் நம்பலாம். [ஆனால்] சேலைகட்டிய மாதரை (வேசியரை??) [நம்பொணாது] நம்புவரேல் தெருவில் நின்று தவிப்பார்கள்)

***

அந்தக் காலத்தில்

2.வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர்மழை

நீதி மன்னர் நெறியினுக்கு ஓர்மழை

மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே       26

வேதம் ஓதுகின்ற அந்தணர்க்கு ஒரு மழை; நீதிநெறி தவறாத அரசர்க்கு ஒரு மழை, அழகிய கற்பிற் சிறந்த மங்கையர்க்கு ஒரு மழை. ஆக ஒவ்வொரு மாதத்திலும் மூன்று மழை என்று சொல்லும்படி வருஷிக்கும் .

இப்போதோ

அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர்மழை

வரிசை தப்பிய மன்னருக்கு ஓர்மழை

புருஷணைக் கொன்ற பூவையருக்கு ஓர்மழை

வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே.       27

 (தற்காலம்] அரிசிவிற்பனை செய்கின்ற பிராமணர்களுக்கு ஒருமழை, நியாயந் தவறிய இராஜாக்களுக்கு ஒரு மழை, கணவனைக்கொன்ற பெண்களுக்கு ஒரு மழை. ஆக ஒவ்வொரு வருஷத்திலும் மூன்றுமழை என்று சொல்லும்படி பொழிகின்றன.

***

3.மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனிவிலா அரசன் வீரம்

காப்பிலா விளைந்த பூமி கரையிலா திருந்த ஏரி

கோப்பிலான் கொண்ட கோலம் குருவிலான்கொண்டஞானம்

ஆப்பிலாச் சகடு போலே அழியுமென் றுரைக்க லாமே.       36

தனக்கு மூத்தோர் இல்லாமல் தனியே வாழும் பாலியப்பெண் வாழ்வும், கோபம் இல்லாத அரசன் வீரமும் காத்தல் இல்லாமல் விளைந்த பூமியும், கரையில்லாதிருந்த ஏரியும், தன்னிடம் வேண்டியவைகள் அமைதல் இல்லாதவன் கொள்ளும் டம்பமும், ஆசிரியன் இல்லாதவன் கொண்ட ஞானமும் [ஆகிய இவை யாவும் ] அச் சாணியில்லாத வண்டிபோல் அழிந்துபோம் என்று சொல்லலாம்.

****

4.அரவினை ஆட்டு வாரூம் அருங்களி றோட்டு வாரும்

இரவினில் தனிப்போ வாரும் ஏரிநீர் நீந்து வாரும்

விரைசெறி குழலி யான வேசியை விரும்பு வாரும்

அரசனைப் பகைத்திட் டாரும் ஆருயிர் இழப்பர் தாமே.     

பாம்பாட்டுகிறவர்களும், அரிய யானைப்பாகர்களும், இராத்திரியில் தனிவழி செல்கின்றவர்களும், தடாக ஜலத்தில் நீந்துகின்றவர்களும், வாசனை நிறைந்த கூந்தலையுடைய வேசியரை இச்சிக்கின்றவர்களும், அரசர்களைப் பகைத்துக் கொண்டவர்களும் தங்கள் அருமையான உயிரை இழப்பார்கள்.

****

5.அத்தியின் மலரும்வெள்ளை ஆக்கைகொள் காக்கை தானும்

பித்தர்தம் மனமும் நீரில் பிறந்தமீன் பாதந் தானும்

அத்தன்மால் பிரம தேவ னாலள விடப்பட்டாலும்

சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவரில்லை கண்டீர்;       44

அத்திமரத்தின் பூவையும், வெள்ளை நிறம் கொண்ட காக்கையும், பைத்தியக்காரர் மனத்தையும், ஜலத்தில் பிறந்த மச்சங்களின் பாதத்தையும், சிவன் விஷ்ணு பிரம்மதேவன் முதலியவர்களால் அளவிடப்பட்டு ஒருவேளை கண்டறிந்தாலும், சித்திரத்தை யொத்த கண்களையுடைய மாதரின்  நெஞ்சத்தின் அளவைக் கண்டு தெளிந்தவர்கள் உலகத்தில் இல்லை.

***

6.புத்திமான் பலவா னாவான் பலமுள்ளான் புத்தி யற்றால்

எத்தனை விதத்தி னாலும் இடரது வந்தே தீரும்

மற்றொரு சிங்கந் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே

உற்றதோ கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலாம்.     

ஒரு சிங்கத்தை ஒரு முயல் கூட்டிக்கொண்டு போய் ஒரு கிணற்றில் அதன் சாயலைக்காட்டிக் கொன்ற உவமைக் கதை போல் எவ்வளவு வீரத்தன்மையுள்ளவனும் புத்தியில்லாவிடில் எந்த விதத்தினாலும் அவனுக்குத் துன்பமே வந்து சேரும். ஆதலால் புத்தி யுள்ளவனே பலவான் ஆவான். (இக்கதை பஞ்சதந்திரத்தில் உள்ளது.)

***

7.மயில்குயில் செங்கால் அன்னம் வண்டுகண் ணாடி பன்றி

அயிலெயிற் றரவு திங்கள் ஆதவன் அத்தி கொக்கோடு

உயரும்விண் கமலம்பன்மூன் றுறுகுண முடையோர் தம்மை

இயலுறு புவியோர் போற்றும் ஈசனென் றெண்ண லாமே.

மயில், குயில், சிவந்த கால்களையுடைய அன்னம், வண்டு, கண்ணாடி, பன்றி, கூர்மைபொருந்திய பற்களையுடைய பாம்பு, சந்திரன், சூரியன், சமுத்திரம், கொக்கு, உயர்ந்த ஆகாயம், தாமரை யாகிய –இப்பதின் மூன்று பொருட்களினிடத்திலுமுள்ள குணங்களை வகித்தவர்களை உலகத்தவரெல்லாம் போற்றும் ஈசனென்று எண்ணலாம்.

***

8.கருதிய நூல் கல்லாதான் மூடனாகும்

      கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்

ஒருதொழிலும் இல்லாதான் முகடி யாகும்

      ஒன்றுக்கும் உதவாதான் சோம்ப னாகும்

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

      பேசாம லிருப்பவனே பேய னாகும்

பரிவு சொல்லித் தழுவினவன் பசப்ப னாகும்

      பசித்தவருக் கிட்டுண்ணான் பாவி யாமே    

மதிக்கத்தக்க நல்ல சாஸ்திரங்களைக் கல்லாதவன் மூடன்; அளவறிந்து பேசாதவன் கசடன்; ஒரு தொழிலும் இல்லாதவன் மூதேவி; ஒன்றுக்கும் உதவாதவன் சோம்பன்; மரம்போல வணங்காது அறிவுடையோர் முன்பாக நின்று பேசாமலிருப்பவனே பேயன்; (அன்பின்றி) அன்பு போல் காட்டித் தழுவுகின்றவன் பசப்பன்; பசியாளருக்குக் கொடுத்து உண்ணாதவன் பாவியாம்.

ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்

தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டீர்

கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும் தானே.      

ஆபத்துக்கு உதவாத பிள்ளையும், அரிய பசிக்கு உதவாத சாதமும், தாகவெப்பத்தைத் தீர்க்காத தண்ணீரும், வறுமை யறியாமல் (அதிக செலவு செய்யும்] மனைவியும், கோபத்தை அடக்காத அரசனும், ஆசிரியன் உபதேசித்த மொழிகளைக் கொள்ளாத மாணாக்கனும், பாவங்களைத் தீர்க்காத தீர்த்தமும், [ஆகிய] இந்த ஏழினாலும் பயன் இல்லை.

****

9.கெற்பத்தால் மங்கையருக் கழகு குன்றும்

      கேள்வியில்லா அரசனால் உலகம் பாழாம்

துற்புத்தி மந்திரியால் அரசுக் கீனம்

      சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கீனம்

நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்

      நன்மைசெய்யத் தீமையுடன் நயந்து செய்வார்

அற்பரோ டிணங்கிடில் பெருமை தாளும்

      அரியதவம் கோபத்தால் அழிந்து போமே.      

மங்கையருக்குக் கருப்பத்தால் அழகு குறையும் [நியாய முறை] வினவாத அரசனால் உலகு பாழாகும் இராஜாங்கத்துக்கு துர்ப்புத்தியுள்ள மந்திரிகளால் அரசுக்குக் கெடுதியுண்டாகும். அறிவில்லார்க்கு நல்ல புத்திகளைச் சொன்னாலும் கேளார். நன்மை செய்பவருக்கு உடனே தீமையையே பாராட்டிச் செய்வார். இவ்விதமான அற்பர்களோடு கூடினால் பெருமை குறையும். கோபத்தினால் அருமை யாகிய தவங்களும் சிதைந்து போகும்.

****

10.நரகம் அடைபவர்

தந்தையுரை தட்டினவன் தாயுரை இகழ்ந்தோன்,

அந்தமறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,

சந்தமுறு வேதநெறி மாறினவர் நால்வர்,

 செந்தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர்.

–subham—

Tags- விவேக சிந்தாமணி ,10 கேள்விகள்

Leave a comment

Leave a comment