பார்ப்பனரை வசைபாடிய பாரதிதாசன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,123)

Written by London Swaminathan

Post No. 16,123

Date uploaded in London – 24 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாரதிதாசன் (29 April 1891 – 21 April 1964 ) தமிழ்நாட்டின் புரட்சிக் கவிஞர். தமிழ் மொழி, இயற்கை, சமத்துவம், பெண்ணுரிமை மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல பாடல்களை எழுதியுள்ளார். பெயர்- கனக சுப்புரத்தினம், தாய் பெயர் -லெட்சுமி அம்மாள், தந்தை பெயர் -கனகசபை முதலியார்.

இயற்கை பற்றி பாரதிதாசன் அழகான கவிதைகளை இயற்றியுள்ளார்; அவற்றை இன்னொரு பதிவில் தருகிறேன் ; அவருடைய நல்ல பாடல்களும், கெட்ட பாடல்களும் ப்ராஜெக்ட் மதுரை வெப்சைட்டில் உள்ளன.

***

Please go to Project Madurai website to read all his poems.

1

பாரதிதாசனின் குரு சுப்பிரமணிய பாரதியார். பாரதி பற்றி பாரதிதாசன் எப்படி வருணித்தார்?

2

பாரதிதாசனின் புகழ்பெற்ற ஒரு பாடலுக்கு இசை அமைப்பதற்கு தண்டபாணி தேசிகர் இரண்டு வருஷம் கஷ்டப்பட்டார். அது என்ன பாடல் ?

3.

கவிஞரின் முக்கியப்படைப்புகள் என்ன ?

4

தமிழ் மொழி அமுதம் போன்றது என்று கவிஞர் பாடியது என்ன ?

5

திரு ஞான சம்பந்தர் முதலிய பார்ப்பனர்களை புரட்சிக் கவி எப்படி வசை பாடுகிறார் ?

6

பாரதிதாசன் எதற்காக சங்கே முழங்கு என்று பாடினார் ?

7

கவிஞர் கண்ட புதிய உலகம் எப்படி இருக்குமாம் ?

8

கொலை வாளினை  எடடா — என்று தமிழர்களை எதற்காகத் தூண்டிவிட்டார் ?

9

தீபாவளிப் பண்டிகையைக் கவிஞர் எப்படி வசை பாடுகிறார் ?

10.

பாரதி சொன்னவுடன்  பாரதிதாசன் இயற்றிய முதல் பாட்டு எது ?

****************************

விடைகள்

1.“ செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை !

குவிக்கும் கவிதைக் குயில் ! இந் நாட்டினரைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு !

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா !

காடு கமழும் கற்பூரச் சொற்கோ !

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் !

திறம் பாட வந்த மறவன்; புதிய

அறம் பாட வந்த அறிஞன்: நாட்டிற்

படரும் சாதிப்படைக்கு மருந்து !

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் !

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் !

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் !

தமிழால் பாரதி தகுதி பெற்றதும்

தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்

எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்”

****

2.புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று “துன்பம் நேர்கையில்…………..” என்ற பாடல். இது திரைப்படத்திலும் இடம் பெற்றுள்ளது. இதற்கு இசை அமைத்தவர் திக்கெட்டும் தமிழ் இசை மணம் கமழ வைத்த M M தண்டபாணி தேசிகர் ஆவார். இதற்கு இசை அமைக்க அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆயிற்றாம். இது அவரே சொன்ன செய்தி. இதற்கு மிகவும் பொருத்தமான ராகம் ‘தேஷ்’ என்னும் ராகம்தான் என்கிறார் தேசிகர்.

தண்டபாணி தேசிகர் சொல்கிறார்:

“இந்த பாட்டுக்கு சரியான ராகத்தைக் கண்டுபிடித்து இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு. இதற்கு தேஷ் ராகம்தான் பொருத்தம். பாருங்கள்! நான் இதையே அடானா ராகத்தில் பாடுகிறேன் (தேசிகர் பாடியும் காட்டுகிறார்). இப்படி அடானா ராகத்தில் பாடினால், வருத்தமுற்ற பெண் ‘அம்மா, அப்பா’ என்று அழுதுகொண்டு ஓடிப் போய்விடும். பொருளுக்கேற்ற ராகம் இருக்க வேண்டும். இதை வள்ளுவர் அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்தார்:-

பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண் — குறள் 573

பொருள்:-

பாடலின் பொருளோடு இயைந்து வராத பண்ணால் (ராகத்தால்) என்ன பயன்?  அதைப்போல கண்ணோட்டத்துடன் (இரக்கம், அருள்) பொருந்தாத கண்ணால் என்ன பயனுண்டாகும் ?”

இதிலிருந்து வள்ளுவனுக்குள்ள சங்கீத ஞானமும் புலப்படும்.

இதோ பாரதிதாசனின் முழுப்பாடல்:–

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

இன்பம் சேர்க்கமாட் டாயா? — எமக்

கின்பம் சேர்க்கமாட் டாயா? — நல்

லன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ

அல்லல் நீக்கமாட் டாயா? — கண்ணே

அல்லல் நீக்கமாட் டாயா?     …… துன்பம்…

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே

வாழ்வில் உணர்வு சேர்க்க — எம்

வாழ்வில் உணர்வு சேர்க்க — நீ

அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்

ஆடிக் காட்டமாட் டாயா? — கண்ணே

ஆடிக் காட்டமாட் டாயா?   — துன்பம்…

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே

அறிகி லாத போது — யாம்

அறிகி லாத போது — தமிழ்

இறைவ னாரின்திருக் குறளிலே ஒருசொல்

இயம்பிக் காட்டமாட் டாயா? — நீ

இயம்பிக் காட்டமாட் டாயா?       —துன்பம்…

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே

புலவர் கண்ட நூலின் — தமிழ்ப்

புலவர் கண்ட நூலின் — நல்

திறமை காட்டிஉனை ஈன்ற எம்உயிர்ச்

செல்வம் ஆகமாட் டாயா? — தமிழ்ச்

செல்வம் ஆகமாட் டாயா?   துன்பம்…

——-பாவேந்தர் பாரதிதாசன் (Poem is taken from Project Madurai website)

***

3.முக்கியப் படைப்புகள் புரட்சிக் கவிசஞ்சீவி பர்வதத்தின் சாரல்அழகின் சிரிப்புகுடும்ப விளக்குஇருண்ட வீடு

****

4.தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்

தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! இன்பத்

தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

                   (பாரதிதாசன் கவிதைகள்)

****

5.குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்
குருநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்
கொல்வித்த தமிழர் நெஞ்சும்
படியேறும் சமண் கொள்கை மாற்றிடச் சம்பந்தப்
பார்ப்பனன் சூழ்ச்சி செய்து
படுகொலைப் புரிந்திட்ட பல்லாயிரங்கொண்ட
பண்புசேர் தமிழர் நெஞ்சும்….

**

இராசாசி வயிற்றெரிச்சல்

இராசாசி வயிற்றெரிச்சல்‌

உம்‌ நாடகம்‌ செல்லுமா நரியாரே?

சென்னை விலங்கு மருத்துவம்‌ செய்முறைக்‌

கல்லூரியின்‌ தமிழ்க்‌ கழகந்‌ தன்னைத்‌

தொடக்கம்‌ செய்த இராசாசி சொன்னார்‌?

“வெறுங்‌ கூச்சலிடுவதால்‌ சாதிவோர்‌ அறாது”*

பெரியார்‌ தாமும்‌, பெரியார்‌ கொள்கைக்‌

குரியார்‌ தாமும்‌, சாதிக்‌ கொள்ளை நோய்‌

ஒழிக்கும்‌ பணியில்‌ ஒய்விலா துழைப்பது

வையம்‌ அறியும்‌! மறுக்க ஓண்ணாது! —

வெறுங்கூச்ச லிடுவதாய்‌ இராசாசி விளம்பினா்ல்‌

ஆரைப்‌ பற்றி விளம்பிய தாகும்‌?

வெல்லும்‌ பெரியார்‌ வெறும்‌ பேச்சுக்காரரா?

வீரத்‌ தமிழர்‌ வெறும்‌ பேச்சுக்‌ காரரா?

முன்னாள்‌ நீர்‌ ஒரு முதலமைச்சராய்‌

இருந்தீர்‌ இந்தியைக்‌ கொண்டு வந்தீர்‌!

உமது வாலை ஒட்ட அறுத்தது

……………………………

பார்ப்பான்‌ என்ற பேர்ப்‌ பலகைதான்‌

போனதா புகலுக௧! இல்லையே! இல்லையே!

…………………………………………..

**மக்கள்‌ நிகர்‌”£* எனும்‌ மிக்க சிறிய

பாடமும்‌ அறியாக்‌ குள்ள |

நாடகம்‌ செல்லுமோ நரியாரே? |

***

வலை விரித்தான் ஆச்சாரி

போகாதே சாகாதே

வலைவிரித்தான் பார்ப்பானடா

மக்களெலாம் வருகஎன்பான்

கலையழித்தான் கண்ணிவைத்தான் போகாதே — நாம்

கண்டபயன் போதுமினிச் சாகாதே!

நலிவுசெய்வான் பார்ப்பானடா

நாலுசாதி வாழ்க என்பான்

புலியடிப்பான் கறிக்காகப் போகாதே — நீ

போனமட்டும் போதும் இனிச் சாகாதே!

பள்ளிஇரு பத்தாயிரம்

படிப்பவர்கள் படிக்காமல்

கொள்ளிவைத்தான் ஆச்சாரிதான் போகாதே — அக்

கெள்ளைநோய்க்கு மருந்துமில்லை சாகாதே!

மதிதமிழர் ஒழியவேண்டும்

மடப்பார்ப்பான் வாழவேண்டும்

இதுதான்ஆச் சாரிஎண்ணம் போகாதே — நீ

இதுவரைக்கும் பார்த்துவிட்டாய் சாகாதே!

பன்னாடைக் கட்சிகளும்

பழிவாங்கும் சின்னவரும்

என்கூட்டம் என்றுரைப்பான் போகாதே — அவ்

வெறிமூட்டும் கூட்டத்தினாற் சாகாதே!

***

கழுகான தில்லியின் கண்ணைப் பிடுங்கு!

காம ராசனே போரைத் தொடங்கு

…………………………….

ஆட்சியின் அடிப்படை பார்ப்பனர் தந்நலம்;

ஆட்சியில் இருப்பதும் அதேபார்ப் பனகுலம்

காட்டி வந்துள மனப்பான்மை யாவும்

கருதும் நெஞ்சில் நெருப்பைத்தான் தூவும்.

(கழுகான தில்லியின்)

*****

6.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும் உடுக்களோடும்

மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்

பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்

சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு

ஞாபகம் செய் முழங்கு சங்கே!

சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்

தீராதி தீரரென்று ஊது சங்கே!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்

தோள் எங்கள் வெற்றித் தோள்கள்!

கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள்

ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!

வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற

தமிழ் எங்கள் மூச்சாம்!

****

7.புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்

புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்

இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்

இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்

****

8.கொலை வாளினை எடடா மிகு

கொடியோர் செயல் அறவே

குகைவாழ் ஒரு புலியே உயர்

குணமேவிய தமிழா!

அலைமா கடல் நிலம் வானிலுன்

அணி மாளிகை ரதமே

அவை ஏறிடும் விதமே யுன

ததிகாரம் நிறுவுவாய்!

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா?

உலகாள உனது தாய் மிக

உயிர் வாதை யடைகிறாள்;

உதவாதினி ஒரு தாமதம்

உடனே விழி தமிழா!

கலையே வளர் தொழில் மேவிடு!

கவிதை புனை தமிழா!

கடலே நிகர் படைசேர் கடு

விடநேர் கருவிகள் சேர்!

நிலமே உழு நவதானிய

நிறை யூதியம் அடைவாய்;

நிதி நூல் விளை! உயிர் நூல் உரை

நிச நூல் மிக வரைவாய்!

தலையாகிய அறமே புரி

சரி நீதி யுதவுவாய்!

சமமே பொருள் ஐனநாயகம்

எனவே முரசறைவாய்!

இலையே உணவிலையே கதி

இலையே எனும் எளிமை

இனி மேலிலை எனவே முரசறைவாய்

முரசறைவாய்!– -பாவேந்தர்.

***

9.நரகனைக் கொன்ற நாள் நல்விழா நாளா?

நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?

நரகன் என்பவன் நல்லனா? தீயனா?

அசுரன் என்றவனை அறைகின்றாரே?

இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?

இப் பெயரெல்லாம் யாரைக் குறிப்பன?

இன்றும் தமிழரை இராக்கதர் எனச் சிலர்

பன்னுகின்றனர் என்பது பொய்யா?

***

10.பாரதி சொன்னவுடன்  பாரதிதாசன் இயற்றிய முதல் பாட்டு :

எங்கெங்குக் காணினும் சக்தியடா! – தம்பி

ஏழுகடல் அவள் வண்ணமடா! – அங்குத்

தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்தத்

தாயின் கைப்பந்தென ஓடுமடா – ஒரு

கங்குகளில் ஏழு முகிலினமும் – வந்து

கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ ? – எனில்

மங்கை நகைத்த ஒலியெனலாம் – அவள்

மந்த நகையங்கு மின்னுதடா!

காளை ஒருவன் கவிச்சுவையைக் – கரை

காண நினைத்த முழுநினைப்பில் – அன்னை

தோளசைத்தங்கு நடம் புரிவாள் – அவன்

தொல்லறிவாளர் திறம் பெறுவான் – ஒரு

வாளைச் சுழற்றும் விசையினிலே – இந்த

வையமுழுவதும் துண்டு செய்வேன் – என

நீள இடையின்றி நீநினைத்தால் – அம்மை

நேர்படுவாள் உன்றன் தோளினிலே!

–subham—

Tags- பார்ப்பனரை வசைபாடிய, பாரதிதாசன் பாடல்கள், 10 கேள்விகள்

Leave a comment

Leave a comment