

Written by London Swaminathan
Post No. 16,131
Date uploaded in London – 26 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருணாசலக் கவிராயர் (Arunachala Kavi) (1711–1779) சீர்காழியிலே வாழ்ந்து பல பாட்டுகள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பினார். தில்லையாடி என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் நல்ல தம்பி – வள்ளியம்மை ஆகியோரின் நான்காவது புதல்வராகப் பிறந்தார்.] தருமபுர ஆதீனத் தலைவர் கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்துக் குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார். இவர் படைப்புகளில் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது.

1
அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடல்களில் பத்து மாத பந்தம் திரைப்படம் மூலம் பிரபலமான பாடல் எது?
2
இவருடைய நூல்களை யாவை?
3
இவருடைய நூல் திருவரங்கத்தில் அரங்கேறியது ; அந்தக் கடவுள் மீது அவர் இயற்றிய பாடல் கர்நாடக சங்கீத இசைக் கச்சேரிகளில் மிகவும் விரும்பிக் கேட்கப்படுகிறது; அது என்ன பாடல்?
4
இவருடைய நூல்களில் “இராம நாடகக் கீர்த்தனை” என்ற நூல் சிறப்படையாக் காரணம் என்ன ?
5
கச்சேரிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு இவர் இயற்றிய பாடல் என்ன?
6
பொதுவாகப் பிரபல பாடகர், பாடகிகளால் பாடப்படும் பாடல்கள் எவை ? என்ன ராகத்தில் அவை உள்ளன ?
7
தஞ்சசைக் கோட்டையை ஆற்காட்டு நவாபின் படைகள் முற்றுகையிட்டபோது இவரை உபன்யாசத்துக்கு அழைக்க, படை வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்கு இவர் பாடியது என்ன பாடல் ?
8
ராமசாமி தூதன் நான்அடா-அடட ராவணா- என்ற பிரபல பாடலின் முழு வரிகள் என்ன ?
9
அனுமன் இலங்கைக்கு வைத்த தீ என்ன செய்தது ?
10
கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்- என்ற பாடல் கம்ப ராமாயணத்தில் மிகவும் முக்கியப்பாடல்; அதை அருணாசலக் கவிராயர் எப்படிப்பாடினார்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்
1. “இராமனுக்கு மன்னன்” என்ற கீர்த்தனை திரைநடிகையும் பாடகியுமான பானுமதியால் பிரபலமடைந்தது.
ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே
நன்மை உண்டொருக்காலே
பாமரமே உனக்கென்னடி பேச்சே
பழம் நழுவித் பாலிற் விழுந்தார் போலாச்சே
பரசுராமன் கர்வம் தீர்த்தவண்டி
நம்மையெல்லாம் காத்தவண்டி
பட்டம் கட்ட ஏற் றவண்டி
நாலுபேரில் மூத்தவண்டி
அவன் என் கண்மணி
***
2.அசோமுகி நாடகம், சீர்காழித் தலபுராணம், சீர்காழிக் கோவை, சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம்,
சம்பந்தர்பிள்ளைத் தமிழ், அநுமார் பிள்ளைத் தமிழ், இராம நாடகக் கீர்த்தனை, ஆகியவை கவிராயரது படைப்புகள், இவற்றுள் ஓர் இசை நாடக நூலாக, “இராம நாடகக் கீர்த்தனை” உள்ளது. கைவல்ய நவநீதம் – தாண்டவராய சுவாமிகள் இயற்றியது இதற்கு முதலில் உரை எழுதியுள்ளார்.
***
3.ஏன் பள்ளி கொண்டீர் ஐயா – ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.
இராகம் : மோகனம், தாளம் : ஆதி
பல்லவி
ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதரே நீர்
(ஏன்)
அனுபல்லவி
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-
அவதரித்த இரண்டாற்று நடுவிலே
(ஏன்)
சரணம் 1
கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ?
அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ?
பரசுராமனுரம் பரித்ததர்க்கோ?
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே
வழி நடந்த இளைப்போ?
தூசில்லாத குஹனோடத்திலே
கங்கை துறை கடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின்
மிசை கிடந்த இளைப்போ?
காசினிமேல் மாரீசனோடிய கதி
தொடர்ந்த இளைப்போ?
ஓடிக்களைத்தோ தேவியை தேடி
இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?
கடலை கட்டி வளைத்தோ?
இலங்கை என்னும் காவல் மாநகரை
இடித்த வருத்தமோ?
ராவணாதிகளை முடித்த வருத்தமோ?
(ஏன்)
சரணம் 2
மதுரையிலே வரும் களையோ?
முதலை வாய் மகனைத்தரும் களையோ?
எதிர் எருதை பெருங்களையோ?
கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ?
புதுமை ஆன முலையுண்டு பேயின்
உயிர் போக்கி அலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவி வாயை
இரண்டாக்கி அலுத்தீரோ?
துதி செய் ஆயர்களை காக்க வேண்டி
மலை தூக்கி அலுத்தீரோ?
ஜதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி
தாக்கி அலுத்தீரோ?
மருதம் சாய்த்தோ? ஆடு மாடுகள் மேய்த்தோ?
சகடுருளை தேய்தோ? கஞ்சன் உயிரை மாய்த்தோ?
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர் விடுத்த வருத்தமோ?
போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ?
(ஏன்)
சரணம் 3
படி தனிலே மெத்தவும் நானே உம்மை
பரம் எனவே அடுத்தேனே
அடிமை கொள்வீர் என்னைத்தானே
செம்பொன் அணி அரங்கப்பெருமாளே!
ததம் உரைந்த கரும் பாறை சாபமது
தடுத்து ரக்ஷித்தீரே!
விட ஒண்ணாத காகாசுரனுக்கொரு
கண் விடுத்து ரக்ஷித்தீரே!
கொடுமை கொண்டழுத த்ரௌபதைக்குத்
துகில் கொடுட்த்து ரக்ஷித்தீரே!
மடுவில் ஆனை முன் ஓடி முதலையை
மடித்து ரக்ஷித்தீரே
அதுபோல்
வாரும் க்ருபை கண்ணாலே
பாரும் மனக்கவலை தீரும்
நினைத்த வரம் தாரும்
தாரும் என் சாமி
வக்ஷமேவும் மஹாலஷ்மியுடன்
பெரும் பக்ஷமாக என்னை
ரஷிக்க எழுந்திரும்
(ஏன்)
***

4.அருணாசலக் கவிராயர் 258 இசைப்பாடல்களில் இராமாயணக் கதையை நாடகவடிவில் வடிவமைத்தார். கீர்த்தனைகளால் தமிழில் முதன்முதலில் இசைநாடகம் படைத்தார். இது “சங்கீத இராமாயணம்” ஆக அமைந்ததால் மக்கள் கேட்டு மகிழ்ந்தனர். மேலும் ஒவ்வொன்றும் ஒரு புதிய ராகத்தில் அமைந்தது. அருணாசலக் கவிராயருக்கு “இராமாயணக் கவிஞன்” என்று பட்டம் வழங்கிப் பாராட்டினர். “இராம நாடகக் கீர்த்தனை” என்னும் நூல் பின்னர் “இராம நாடகம்” என்றும், தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பழமையான இராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் பிரபலமாயின. மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடப்பெற்றன. இக்கால இசைக் கச்சேரிகளிலும் நாட்டியக் கச்சேரிகளிலும் ஒரு சில இராம நாடகக் கீர்த்தனைகளை பிரபல பாடகர்கள் பாடி வருகின்றனர்.
***
5.பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக ‘நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்’ அல்லது ‘பவமான சுதடு படு பாதார விந்த முலகு’ பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு
கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு
ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
(மத்யமாவதி சரணம்)
பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
***
6 சில பாடல்கள்
1. யாரோ என்றெண்ணாமலே சங்கராபரணம் ஆதி தாளம்
2. யாரோ இவர் யாரோ பைரவி, சாவேரி ஆதி தாளம்
3. ராமனுக்கு மன்னன் இந்தோளம் ஆதி தாளம்
4. யாரென்று ராகவனை யதுகுலகாம்போதி ஆதி தாளம்
5. ஸ்ரீராம சந்திரனுக்கு மத்தியமாவதி ஆதி தாளம்
6. எனக்குன்இரு இராகமாலிகை ஆதி தாளம்
7. ஏன் பள்ளி கொண்டீர் மோகனம் ஆதி தாளம்
8. தில்லைத் தலம் போல சௌராஷ்டிரம் ஆதி தாளம்
9. துணை வந்தருள் புரிகுவாய் மேசகல்யாணி மிஸ்ரசாப்பு தாளம்
10. வந்தனர் எங்கள் கலியாண மத்தியமாவதி அடசாப்பு தாளம்
***
7. தஞ்சைப் படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, ‘அனுமன் விஜயம்’ என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, ‘அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?’ என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,
‘அடிக்காமலும், கைகளை
ஒடிக்காமலும், நெஞ்சிலே
இடிக்காமலும், என் கோபம்
முடிக்காமலும் போவேனோ?’
என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.
“ராமசாமியின் தூதன் நானடா ராவணா!”, என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், ‘பாய்ந்தானே அனுமான்’, என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.
***
8.மோகனராகம் அடதாளசாப்பு
பல்லவி
ராமசாமி தூதன் நான்அடா-அடடராவணா
நானடா என்பேர் அனு மானடா (ராமா)
அநுபல்லவி
மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும்
மறைந்துநின்று தந்தநான் அல்லடா
புறம்பே நின்று வந்தநான் அல்லடா (ராமா)
சரணங்கள்
1. கொடுத்த வரமும் தனமும் கனகமும் வீணிலே ஏன் போக்கிறாய்
குடிக்கும்பாலை ஐயையோ கமர் வெடிக்குளேஏன் வார்க்கிறாய்
துடுக்குடன் பரஸ்திரி செனங்களைத் தொடர்ந்தேன்பழி ஏற்கிறாய்
தூக்கி ஏறவிட் டேணியை வாங்கும் தூர்த்தர் வார்த்தையைக்கேட்கிறாய்
தடைபடாமல்என் அய்யன்கால் மீதே
சரண்என்றால் பிழைப்பாயே இப் போதே
அடக்கஉன்தரம் அல்லடா சீதை
அவன்இவன்விட வந்தான்என் னாதே (ராம)
2. காலமும் பலமும் தெரியாமல் குதிக்கிறாய்என்ன மாயமோ
காமத்தாலே தர்மபுத்தியை கடக்கிறாய்இதுஉ பாயமோ
சாலமோ கேடு காலமா அடாஉனக்கும் தெய்வச காயமோ
தங்கை மூக்கறுப் புண்டதல்லவோ சண்டாளாஇது ஞாயமோ
வாலியும் போனான் உன்னைச் சிறை வைத்த
வாலும் போய்விட்டது அஞ்சாதே மெத்த
சீலராகவன் அம்பால் அவன் செத்த
சேதியை நீயறி யாயோடா பித்த (ராம)
3. கீதம் தெரிந்தும் வேதம் தெரிந்தும் பாதங்களைச் சூழ்கிறாய்
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாமல் படுநரகத்தில் மூழ்கிறாய்
மாதர் மோகத்திலே துவண்டு தாழாதவரைத் தாழ்கிறாய்
மயக்கமோ கைக்குள் விளக்கைப் பிடித்துக்கிணற்றிலேஏன்வீழ்கிறாய்
ஆதிமூர்த்திதானே உத்தண்ட
மாகவந்தான் அரக் கரைமண்ட
சீதையை விட்டுப்பிழை அடாகண்ட
சேதியைச்சொன்னேன்வீர கோதண்ட (ராம)
***
9.அனுமார் இலங்கையைக் கொளுத்துதல்
தோடிராகம் ஆதிதாளம்
பல்லவி
பற்றிக் கொண்டது அனுமான் இட்டஅனல்
சுற்றிக்கொண்டது லங்கையை (பற்றி)
அநுபல்லவி
வெற்றிப்பெண் சானகி உறைமரம் ஒன்றும்
விட்டுநீங்கித் திசை எட்டும் ஓங்கி முட்டி (பற்றி)
சரணங்கள்
1. எடுத்தபொற்கோ புரங்களும்-மலர்
படுத்த பூஞ்சப் பரங்களும்-எரி
அடுக்களையும்தா வரங்களும்-சுவர்
கொடுத்த மணியுத் தரங்களும்
உன்னதஉப் பரிகையும்-தங்கத்தாலே
மின்னிய கொடி வகையும்-ஆனை சேனை
மன்னும் விமானத் தொகையும்-நவரத்தினம்
பொன்னறைகளும் குகையும்-திகுதிகென
கொண்டல் கொண்டலாப் புகை ஏறவே-அத்தை
கண்டவர் சீவன்விட்டு மாறவே-அவர்
பெண்டுபிள்ளைகள் பழி கூறவே-பெண்கள்
கொண்டைகள் எல்லாம்சுறு நாறவே
உருவங்கள் தாறுமாறாப் பருவங்கள் வேறுவேறா
அருகெங்கும் கீறுகீறாத் தெருவெங்கும் நீறுநீறாய் (பற்றி)
2. மூதெயில் வளைந்து சொலிக்கவே-படும்
வாதை கண்டமரர் சலிக்கவே-சொல்லும்
வேதசாஸ்திரங்கள் கெலிக்கவே-எங்கள்
சீதை சொன்னபடி பலிக்கவே
சாகரங்களும் குறைய-புகைப்படலம்
ஆகாயம் மட்டும் நிறைய-பாதாளத்தில்
நாகரும் கூட இறைய-ராவணனும்
மேகதலத்தில் மறைய-இலங்கையிலே
கிணற்று நீரும் சுண்டி வற்றவே-செத்த
பிணத்தின் வெடிநாற்றங்கள் சுற்றவே-வாலை
வணங்கி எழுந்தெழுந்து மெத்தவே-செந்
தணல் பொறியாக அய்யன் ஏற்றவே
புரவி எல்லாம் உவிய நிருதாரல்லாம் அவிய
எரிஎரியாக் கவிய கரிகரியாக் குவிய (பற்றி)
3. கைக்குழந்தைகளைப் போடுவார்-பெற்ற
மக்களை விட்டுவிட டோடுவார்-புகைச்
சிக்கினிலே தள்ள மாடுவார்-ஒரு
மிக்க அரக்கியர் வாடுவார்
மலர்ச்சோலை பொரிந்த தென்பார்-ராவணன்
கொலுக் கூடம் எரிந்த தென்பார்-வீட்டின்மேல்வீடா
நிலத்தோடே சரிந்த தென்பார்-வெட்டவெளியாத்
தலைக்கடை தெரிந்த தென்பார்-தவிதவித்து
வேலைக்குள் ஓடிவிழச் சொல்லுவர்-பெண்கள்
மூலைக்கு மூலைவாயை மெல்லுவார்-அனல்
மேலிட்டி டாமற்குழி கெல்லுவார்-அனுமான்
வாலுக்குத் தெண்டனென்று சொல்லுவார்
மாடகூடம் அனேக கோடி கோடி நீறாக
மேடுமேடாகிப் போகக் காடுகாடாகி வேக (பற்றி)
—–
10.முகாரி ராகம் அடதாளசாப்பு
‘
பல்லவி
கண்டேன் கண்டேன் சீதையைக்
கண்டேன் ராகவா (கண்)
அனுபல்லவி
அண்டருங் காணாத இலங்காபுரத்திலே
அரவிந்த வேதாவைத் தரவந்த மாதாவை (கண்)
சரணங்கள்
1. காவி விழிகளில் உன் உருவெளி மின்னக்
கனிவாய் தனிலேஉன் திருநாமமே பன்ன
ஆவித்துணையைப் பிரிந்த மட அன்னம்
ஆனாள்நான் சொல்லுவ தென்ன
பூவைத் திரிசடை நித்தம்நித்தம் சொன்ன
புத்திவழியே தன் புத்திநிலை மன்னப்
பாவி அரக்கியர் காவல் சிறைதுன்னப்
பஞ்சு படிந்தப ழஞ்சித்திரம் என்ன (கண்)
2. பனிக்கால வாரிசம் போல நிறங்கூசிப்
பகல்ஒரு யுகமாகக் கழித்தாளே பிரயாசி
நினைத் தங்கே ராவணன் அந்நான் வரச் சீசி
நில்லடா சன் டாளா என்றேசி
தனித்துத்தன் உயிர்தன்னைத் தான்விட மகராசி
சாரும்பொழுது காணும் சமய மிதுவே வாசி
இனித்தா மதம் செய்யல் ஆகாதென்றிடர் வீசி
ராமராம ராமா ராமஎன்றெதிர் பேசி (கண்)
3. அடல்சேரும் வாலியை வானுலகிலே கூட்டி
அவனியைச் சுக்கிரீவன் ஆளமுடி சூட்டி
உடனேநீ தூதுபோ என்றசொல் அமுதூட்டி
உன்எழில் … …. … பாராட்டி
விடவந்த அனுமந்தன் நான்என்று சீராட்டி
விவரம் சொல்ல உயிர்கொண் டிருக்கிறாள் சீமாட்டி
திடமா லட்சுமணன் செய்த பானசாலை வீட்டில்
தேவாதி தேவா உன் திருவாழிதனைக் காட்டி (கண்)
—-subham—
Tags அருணாசலக் கவிராயர், 10 கேள்விகள் , ராமனுக்கு மன்னன் முடி, ஏன் பள்ளி கொண்டீர், கண்டேன் சீதையை , ராமதூதன் நானடா