
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,129
Date uploaded in London – 26 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
23-8-2026 தினமணி கதிர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
வெளி உலகத் தொடர்பு இல்லாமல் வாழும் பழங்குடி மக்கள்!
ச. நாகராஜன்
பெத்தி என்ற தெலுங்கு திரைப்படம் 2026ல் அதிக அளவில் வசூலைப் பெற்ற திரைப்படம் என்று குறிப்பிடப்படுகிறது.
இதில் வரும் ஒரு உண்மை அனைவரையும் திடுக்கிட வைக்கிறது.
1996ல் உள்ள நிலவரத்தின்படி சுமார் 18000 இந்திய கிராமங்களுக்குப் பெயரே இல்லை என்றும், அவை அரசாங்க ஆவணங்களில் இடம் பெறவில்லை என்றும், அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு ஓட்டுரிமைக்கான கார்டு உள்ளிட்டவை இல்லை என்றும் அது குறிப்பிடுகிறது. படம் ஒரு ரயில் நிலையத்திற்காக அந்த கிராமம் நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வெற்றியைப் பெற்றுள்ளது.
இது ஒருபுறமிருக்க உலகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகின் இதர பகுதிகளிடமிருந்து தொடர்பில்லாமல் தனியே வாழ்கிறார்கள் என்னும் மலைக்க வைக்கும் உண்மை இப்போது தெரியவருகிறது.
உலகெங்கும் இப்படி 196 பகுதிகள் உள்ளன. தென் அமெரிக்கா, ஆசியா, பசிபிக் பகுதிகளில் உள்ள பிரேஜில் மற்றும் இந்தோனேஷியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இப்படி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தனித் தீவுகள், பாலைவனங்கள், அடர்ந்த காட்டுப் பகுதிகள் ஆகியவற்றில் இந்தக் குழுவினர் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு வெளி உலகத் தொடர்பே இல்லை என்றாலும் எண்ணெய் வளம், காட்டு மரங்களை வெட்டுதல், கனிம வளங்களுக்காக சுரங்கத்தைத் தோண்டுதல் உள்ளிட்ட காரணங்களால் அரசு ஊழியர்களுடனும் பல்நாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுடனும் இவர்கள் மோத வேண்டியுள்ளது.
அறிவியல் இதழான லைவ் ஸயின்ஸ் இது பற்றி ஒரு பெரிய கட்டுரையையே வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை இது பற்றி நன்கு அறிந்துள்ளது. இவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புபவர்கள், மறைந்து வாழ்வதையே விரும்புபவர்கள் என்று அது இவர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
சர்வைவல் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்
ஹை ரஸ்ஸல் இவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், “முற்றிலும் தொடர்பை விரும்பாதவர்கள், எதிர்பாராத விதமாக வெளி உலகத்துடன் தொடர்பைக் கொள்பவர்கள்” என்று பல்வேறு விதமாக இந்தக் குழுக்கள் உள்ளன” என்று தெரிவிக்கிறார்.
இந்தியாவில் அந்தமான் நிகோபர் தீவுகளில் செண்டினெஸ் என்ற தீவு ஒன்றில் வாழ்ந்து வருபவர்கள் தங்களை 55000 ஆண்டுகள் பழமை உள்ளவர்வர்களாக நம்புகிறார்கள். இந்தக் குழு 150 பேர்களையே கொண்டுள்ள குழுவாகும். இவர்கள் மீன் பிடிப்பது, கத்தியால் மிருகங்களை வேட்டையாடிக் கொன்று உண்பது உள்ளிட்டவற்றால் வாழ்ந்து வருகின்றனர்.
படகுகளோ அல்லது ஹெலிகாப்டரோ தங்கள் தீவுக்கு அருகில் வரும் போது தங்கள் வில்லை எடுத்து அம்பைத் தொடுத்து அவற்றைத் தடுப்பது இவர்களது வழக்கமாகும்.
மூன்று மைல் சுற்றுவட்டாரத்திற்கு இந்தத் தீவுக்கு அருகே யாரும் போகக் கூடாது என்று இந்திய அரசு தடை விதித்துள்ளது. இங்கு சென்று தீவுக்குள் நுழைய முயன்ற ஜான் ஆலன் சா என்பவரை 20018ல் இந்தக் குழுவினர் அம்பை எறிந்து கொன்றனர்.
அமேஸான் பகுதியை ஆராயச் சென்ற பெண்மணியான ஹ்யூயர்டாஸ் என்பவர் ககாடைபூ என்ற காட்டினுள் சென்றார். இங்குள்ளவர்கள்வெளியுலக மக்கள் யாரும் தங்களைப் பார்ப்பதை விரும்புவதில்லை என்பதை அவர் ஆய்வு மூலம் கண்டார்.
கவாஹிவா என்ற ஒரு குழு தங்களை யாருமே காண முடியாத விதத்தில் 1999 முடிய வாழ்ந்து வந்தது. யதேச்சையாக இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று ரஸ்ஸல் குறிப்பிடுகிறார்.
பிரேஜிலில் வாழ்ந்து வரும் ஒரு மக்கள் குழு 2021ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பெருவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் குழுவான மஸ்கோ பிரோ என்ற குழுவில் 750 பேர் உள்ளனர்.
இவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு நவீன வாழ்க்கை முறையை இவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறும் போது இவர்களை நன்கு ஆராய்ந்து வரும் சர்வைவல் இண்டர்நேஷனல் நிறுவனம் இவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் அவர்களைத் தங்கள் போக்கில் வாழ விடுவதே அவர்களுக்கு நாம் செய்யும் பெரிய நன்மையாகும் என்று தெரிவிக்கிறது.
நவீன நாகரிகத்தின் செல்வாக்கு இல்லாமல் வாழும் இவர்களை மனித குலத்தின் முதல் பக்கம் என்றே கூறலாம்!
**