WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,175
Date uploaded in London – 8 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்!
நல்ல மனைவி யார்?
ச. நாகராஜன்
அறிவு, தர்மம். செல்வம் வளரும் விதம்!
ஜலதிபிந்துநிபாதேன க்ரமஷ: பூர்யதே கட: | ஸ ஹேது: சர்வவித்யானாம் தர்மஸ்ய ச தனஸ்ய ச ||
ஒவ்வொரு துளியாக விழும் போது பானை நிரம்பி வழிகிறது. இதே போலத்தான் அறிவும், தர்மமும், செல்வமும் துளித்துளியாக சேர்ந்து வளர்கிறது.
அறிவாளியின் தொடர்பு மந்தனையும் அறிவாளியாக்கும்!
மந்தோப்யமந்ததாமேதி சம்சர்கேன விபஷ்சித: | பங்கச்சித: பலஸ்யேவ நிகஷேணாவிலம் பய: ||
ஒரு அறிவாளியுடன் தொடர்பு கொள்வதால் ஒரு மந்த புத்தி உள்ளவன் கூட கற்றவனாகிறான். சகதி நீரையும் தனது தொடர்பினால் சுத்தமாக்கும் ஒரு நல்ல பழம் போலத் தான் இதுவும்.
பெரியோரின் தொடர்பு தரும் நன்மைகள்!
நிதானம் சர்வரத்னானாம் ஹேது: கல்யாணசம்பதாம் | சர்வஸ்யா உன்னதேர்மூலம் மஹதாம் சங்க: உச்யதே ||
ரத்னங்களின் அடிப்படை, வளத்திற்கான காரணம், எல்லா முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைவது ஆகியவை எல்லாம் பெரியோருடைய தொடர்பால் வருவதேயாகும்.
தர்மசாரிணி – நல்ல மனைவி – யார்?
வஷ்யபாவேன சுமனா: சுவ்ரதா சுசமாஹிதா | அனன்யசித்தா சுமுகீ பர்த்து: நா தர்மசாரிணி ||
எந்த அழகிய மனைவி புண்யவதியாகவும் கணவனுக்குக் கட்டுப்பட்டவளாகவும் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அமைதியான மனதுடனும் இருக்கிறாளோ அவளே நல்ல மனைவி.
லோகாசாரமே முக்கியம்!
யத்யபி ஸ்யாத்ஸ்வயம் ப்ரஹ்மா த் ரைலோக்யாகர்ஷணக்ஷம: | ததாபி லௌகிகாசாரக் மனஸாபி ந லங்கயேத் ||
மூன்று உலகங்களையும் கவரும் ஆற்றல் கொண்டவனாக இருந்தாலும் கூட ஒருவன் லோக ஆசாரங்களை – உலகின் அன்றாடப் பழக்கவழக்கங்களை மனதால் கூட மீறக்கூடாது.
நல்ல காரியத்திற்காகவே செல்வம் சேர்க்கப்பட வேண்டும்!
சந்த: குர்வந்தி யத்னேன தர்மஸ்யார்தே தனார்ஜனம் | தர்மாசாரவிஹீனானாம் த்ரவிணம் மலசஞ்சய: ||
நல்ல காரியங்களுக்காகவே மகான்கள் செல்வத்தைச் சேர்க்கிறார்கள். புண்ணிய காரியங்களுக்காக செலவழிக்கப்படாத ஒருவனின் செல்வம் மலக்குவியலுக்குச் சமானமாகும்.
விதியே அனைத்திற்கும் காரணம்!
குணோபி தோஷமாயாதி வக்ரீபூதே வித்யாதரி | சானுகூலே புனஸ்தஸ்மிந்தோஷோபி ச குணாயதே ||
ஒருவனுக்கு விதி எதிராக இருக்குமானால் குணங்களும் கூட தோஷமாகி விடும். விதி அநுகூலமாக இருக்குமானால் தோஷங்களும் கூட நற்குணங்களாகிவிடும். (அதாவது நல்லதைச் செய்யும்.)
**